தென்கோவை ச. கந்தையபிள்ளை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தென்கோவை ச. கந்தையபிள்ளை (25 சூன் 1880 – 18 நவம்பர் 1958) இலங்கைத் தமிழறிஞரும், தமிழாசிரியரும் ஆவார். புதுவையில் இருந்து வெளியான "வித்தகம்" வார இதழின் ஆசிரியர்.[1]
Remove ads
வாழ்க்கைச் சுருக்கம்
கந்தையபிள்ளை யாழ்ப்பாணம், கோப்பாய் என்னுமூரில் சபாபதிப்பிள்ளை, காமாட்சியம்மை ஆகியோருக்குப் பிறந்தவர். இவருக்கு ஒரு சகோதரரும் (ச. வேலுப்பிள்ளை), ஒரு சகோதரியும் இருந்தனர். தாயார் காமாட்சியம்மை மகாவித்துவான் சேனாதிராச முதலியாரின் மகள்-வழிப் பேரன் கந்தப்பொடியரின் மகள். கந்தையபிள்ளை சிறு வயதிலேயே தென்கோவை சின்னப்பாபிள்ளை, உதயபானு பத்திரிகாசிரியர் சு. சரவணமுத்துப் புலவர் ஆகியோரிடம் முறையாகத் தமிழ் மொழி, இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். ஆங்கிலக் கல்வியை கோப்பாய் சி. எம். எஸ். பாடசாலையிலும், பின்னர் சுண்டிக்குளி பரி. யோவான் கல்லூரியிலும் பயின்றார்.[2]
படிப்பை முடித்துக் கொண்டு கொழும்பு சென்று சில காலம் வசித்து வந்தார். பின்னர் மட்டக்களப்புக் கச்சேரியில் முதலியாராகப் பணியாற்றியவரும், தமிழறிஞரும், 'திருமலைக் கிழார்' என்ற புனைபெயரைக் கொண்டவருமான சிற். கைலாயபிள்ளை என்பாரின் அழைப்பிற்கிணங்க, மட்டக்களப்பு சென்று வாழ்ந்து வந்தார். அங்கு முதலியாரிடம் இருந்த சில தமிழ் நூல்களைக் கற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. முதலியாரிடம் இருந்து அகவற்பா இயற்றும் வன்மையையும், அதைச் சந்தத்தோடு படிக்கும் வகையினையும் கற்றார். அக்காலத்தில் முதலியாரின் முயற்சியினால் பல சைவப் பாடசாலைகள் மட்டக்களப்பில் அமைக்கப்பட்டன. அவற்றில் ஒன்றின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தும் பணி கந்தையபிள்ளைக்கு வழங்கப்பட்டது. அங்கு கல்வி கற்பித்ததோடு, சைவ, இலக்கியச் சொற்பொழிவுகளையும் நிகழ்த்தி வந்தார்.[2]
மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய கந்தையபிள்ளை சுன்னாகம் குமாரசாமிப் புலவரிடத்தில் மேற்கல்வி கற்றார். அப்போது புலவர் நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். புலவரிடம் தொல்காப்பியம் அகப்பொருள் விளக்கம், தண்டியலங்காரம்,இரகுவம்சம், தணிகைப் புராணம் போன்ற நூல்களைக் கற்றார். அத்துடன் தர்க்க நியாய சாத்திரத்தையும் பயின்றார்.[2]
கந்தையபிள்ளை தனது 28-ஆவது அகவையில், கந்தரோடையைச் சேர்ந்த உறவினர் க. தியாகராசர் என்பாரின் மூத்த மகள் செல்லம்மாளை பெற்றோரின் விருப்பில் திருமணம் புரிந்து கொண்டார். பின்னர் கொழும்பு ஆங்கில ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பண்டிதராக கந்தையபிள்ளை நியமிக்கப்பட்டார். இவரிடம் அங்கு கல்வி கற்றவர்களில் சுவாமி விபுலாநந்தர், மு. நல்லதம்பி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். மு. நல்லதம்பி தானியற்றி அரசின் பரிசு பெற்ற மருதன் பந்தயக் கவிகள் என்ற நூலைத் தமது தமிழாசிரியர் கந்தைய பிள்ளைக்குச் சமர்ப்பணம் செய்தார். கொழும்பில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வந்த தமிழாசிரிய வகுப்புகள் நிறுத்தப்பட்டு யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர் கந்தையபிள்ளை கொழும்பு வித்தியாபகுதி அலுவலகத்தில் மொழிபெயர்ப்பாளராகவும், தமிழ்ப் பாடத்திட்டங்களை வகுப்பதிலும், தமிழ்ப் பரீட்சகராகவும் பணியாற்றி வந்தார்.[2] கொழும்பில் இருந்த காலத்தில், குமாரசாமிப் புலவரின் இராமோதந்தம் நூலையும், சிசுபாலசரிதம், இரகுவம்ச சரிதாமிர்தம், இதோபதேசக் கதைகள் ஆகிய வசன நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். கொழும்பு விவேகானந்த சபை தொடங்கிய தமிழ் வகுப்புகளையும் இவர் நடத்தி வந்தார்.[2] ஆங்கிலேய மன்னரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஒட்டி "ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் இயன்மொழி வாழ்த்து" என்ற நூலை வெளியிட்டார்.[2] இவர் எழுதிய பல கட்டுரைகள் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடான செந்தமிழ் இதழில் வெளிவந்துள்ளன.[2]
Remove ads
'வித்தகம்' வார இதழ்
1922 ஆம் ஆண்டில் தமது அரசுப் பணியில் இருந்து இளைப்பாறி, தமிழாராய்ச்சி செய்யும் முடிவோடு சென்னை வந்தார். அங்கு சி. வி. ஜம்புலிங்கம் பிள்ளையுடன் வசித்து வந்தார். தமிழ்ப் பேரறிஞர் காலஞ்சென்ற தி. த. கனகசுந்தரம்பிள்ளையின் புதல்வர்களான இராஜராஜன், இராஜசேகரன் ஆகியோரின் நட்பைப் பெற்று, கனகசுந்தரம்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளியிட்டார்.[2] அங்கிருந்து அவர் குருதரிசனம் பெறவேண்டி புதுச்சேரி சென்றார். அங்கு அவரது குருவின் வேண்டுகோளிற்கிணங்க வித்தகம் என்ற வார இதழை வெளியிட்டு சைவ சமயத்தைப் பரப்புவதற்கு முடிவு செய்தார். அவ்வாறே இலங்கை திரும்பி 1934 வரை மூன்று ஆண்டுகள் வித்தகம் இதழை புதுச்சேரி நந்தி வெளியீட்டு மன்றத்தின் உரிமையாளர் இரா. நாகரத்தினம் என்பாரின் துணையுடன் வெளியிட்டு பல ஆய்வுக் கட்டுரைகளை அதில் எழுதினார்.[2] இக்காலத்தில் திருவாசக உண்மை, உண்மை முத்திநிலை ஆராய்ச்சி ஆகிய நூல்களையும் எழுதினார்.[2]
கந்தையபிள்ளை தாம் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் திருவாசக மணிகள் என்ற தலைப்பில் ஈழகேசரி பத்திரிகையில் தொடர் கட்டுரைகளை எழுதி வந்தார். தணிகைப் புராணத்திற்கு உரை எழுதும் பணியைத் தொடங்கினார், ஆனால் அது முற்றுப் பெறவில்லை.[2]
Remove ads
இறுதிக் காலம்
கந்தையபிள்ளையின் மனைவி செல்லம்மாள் பல ஆண்டுகளுக்கு முன்னரே காலமாகி விட்டார். இறுதிக் காலத்தில் இவரது பெறாமகள் ந. விசாலாட்சியம்மாளின் பராமரிப்பில் இருந்துள்ளார். பண்டிதர் கந்தையபிள்ளை 1958 நவம்பர் 18 செவ்வாய்க்கிழமை தமது இல்லத்தில் 78-ஆவது அகவையில் காலமானார்.[2]
எழுதிய நூல்கள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
