நேமிநாதம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நேமிநாதம் என்பது தமிழ் இலக்கண நூல்களில் ஒன்று. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூல் [1] பழைய இலக்கண நூல்களைப் போலன்றிச் சுருக்கமாக எழுதப்பட்டது. குணவீர பண்டிதர் என்பார் இந்நூலை இயற்றினார். சமண சமயத்தவர் முதன்மையாகக் கருத்தும் 24 தீர்த்தங்கரர்களில் இவர், 22-ஆவது நேமிநாதர் எனும் தீர்த்தங்கரர் மீது பக்தி கொண்டவர் இதனால் தனது நூலுக்கு நேமிநாதம் எனப் பெயரிட்டதாகக் கூறப்படுகின்றது. சுருக்கமான நூல் ஆதலால் சின்னூல் என்ற பெயரும் இதற்கு வழங்குகிறது.( நன்னூல் என்ற நூலுக்கும் சின்னூல் என்ற பெயர் அமைந்திருப்பது நினைவுகூரத்தக்கது.) [2] [3]

இன்று கிடைக்கக்கூடியதாகவுள்ள மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியத்துக்கும் பிற்காலத்தில் எழுதப்பட்ட விரிவான இலக்கண நூலான நன்னூலுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்நூல் எழுதப்பட்டதால் அக்காலப்பகுதியில் தமிழ் இலக்கண நிலையைப் புரிந்து கொள்வதற்கு இந்நூல் பெரிதும் உதவுகிறது. இந்நூல் மகடூஉ முன்னிலையாக எழுதப்பட்டுள்ளது.

Remove ads

அமைப்பு

இஃது எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எழுத்ததிகாரம் மேலும் துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்படவில்லை. ஆனால், சொல்லதிகாரத்தின் உட்பிரிவுகளாக ஒன்பது இயல்கள் உள்ளன. அவை:

  1. மொழியாக்க மரபு
  2. வேற்றுமை மரபு
  3. உருபி மயங்கியல்
  4. விளிமரபு
  5. பெயர் மரபு
  6. வினை மரபு
  7. இடைச்சொல் மரபு
  8. உரிச்சொல் மரபு
  9. எச்ச மரபு

சொல்லதிகாரம் பெரும்பாலும் தொல்காப்பியத்தையே அடியொற்றி அமைந்துள்ளது. உட்பிரிவுகளின் எண்ணிக்கை, அவற்றின் பெயர் என்பன உட்படப் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன.

இந்நூல் வெண்பாக்களால் அமைந்தது. வெண்பாக்களால் இயற்றப்பட்ட முதல் இலக்கண நூல் இதுவாகும். இந்நூல் 99 (பாயிரம் 4+24+1+70) வெண்பாக்களால் ஆனது.

எழுத்ததிகாரத்திற்கு முன் அமையும் - 4 வெண்பாக்கள்

  1. சிறப்புப் பாயிரம் - 2 வெண்பாக்கள்
  2. தற்சிறப்புப் பாயிரம் -1 வெண்பா
  3. அவையடக்கம் - 1 வெண்பா
  4. எழுத்ததிகாரம் - 24 வெண்பாக்கள்
  5. தற்சிறப்புப் பாயிரம் -1 வெண்பா (சொல் அதிகாரத்தின் இருக்கும் தற்சிறப்புப் பாயிரம்)
  6. சொல்லதிகாரம் - 70 வெண்பாக்கள்

என இந்நூல் அமைந்துள்ளது.

Remove ads

உரை

நூலாசிரியரே இதற்கு உரையும் எழுதியதாகவும், அவ்வாறு நூலாசிரியரே உரையையும் எழுதுவது இது முதல் முறை ஆகும் என்றும் சிலர் கருதுவர். ஆனால் உரையாசிரியர் யாரென அறிந்துகொள்ளத்தக்க வகையில் உரையில் குறிப்புகள் எதுவும் காணப்படவில்லை. இது பிற்காலத்தில் 14-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் எழுந்த உரை என்ற கருத்தும் நிலவுகிறது[4]. விளக்கவுரை, எடுத்துக்காட்டுகள் என்பவற்றை உள்ளடக்கி ஒரு விரிவான உரையாக இஃது அமைந்துள்ளது.

Remove ads

குறிப்புகள்

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads