மறைமுதுவர் முதலாம் பர்த்தலமேயு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மறைமுதுவர் முதலாம் பர்த்தலமேயு (Patriarch Bartholomew I) (கிரேக்க மொழி: Πατριάρχης Βαρθολομαῖος Α', Patriarchis Bartholomaios A' , துருக்கியம்: Patrik I. Bartolomeos) என்பவர் கீழை மரபுவழி திருச்சபையின் உயர்தலைவரும், காண்ஸ்டாண்டிநோபுளின் 270ஆம் தலைமை ஆயரும், பொது மறைமுதுவரும் ஆவார்.[1]
இவர் 1940, பெப்ருவரி 29ஆம் நாள் பிறந்தார். 1991, நவம்பர் 2ஆம் நாளிலிருந்து அவர் மறைமுதுவர் பதவியை வகிக்கின்றார். கீழை மரபுவழி திருச்சபைக் குழுக்களுக்குள் “சம உழைப்பாளருள் முதல்வர்” ("first among equals") என்று கருதப்படுகிறார்.[2][3][4][5]
இவருடைய இயற்பெயர் “திமீத்ரியோஸ் ஆர்கொண்டோனெஸ்” (Dimitrios Arhondonis (Δημήτριος Αρχοντώνης, Dimítrios Archontónis). இவர் துருக்கி நாட்டிலுள்ள செய்த்தின்லி (Zeytinli) என்ற கிராமத்தில் பிறந்தவர். துருக்கி நாட்டுக் குடிமகன் என்றாலும், இவர் துருக்கி நாட்டில் உள்ள சிறிய கிரேக்க மரபுவழி திருச்சபை சார்ந்த பெற்றோருக்குப் பிறந்தவர். குருப்பட்டம் பெற்றபின் பிலடெல்பியா, கால்செதோனியா ஆகிய இடங்களில் மறைத்தலைவராகப் பணியாற்றினார்.
Remove ads
கல்வி
இவர் தாம் பிறந்த ஊரில் தொடக்கக் கல்வி பயின்று, பின்னர் இசுதான்புலில் மேல்நிலைக் கல்விக்கூடம் சென்றார். தொடர்ந்து இறையியல் படித்தார். ஹால்க்கி இறையியல் கல்லூரியில் பயின்ற அவர் அங்கு 1961இல் தலைசிறந்த மாணவராகத் தேர்ச்சிபெற்றார். அதைத் தொடர்ந்து திருத்தொண்டர் பட்டம் பெற்றார். அப்போது அவர் தேர்ந்துகொண்ட பெயர் “பர்த்தலமேயு”.
பர்த்தலமேயு துருக்கி நாட்டின் இராணுவ சேவையில் 1961-1963 காலத்தில் பங்கேற்றார். பின்னர் உரோமை நகருக்குச் சென்று அங்கு “திருத்தந்தை கீழைப்பகுதி பல்கலைக்கழகத்தில்” பயின்று முதுகலைப் பட்டம் பெற்றார். சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் “போசி கிறித்தவ ஒன்றிப்பு உயர்கல்வி நிறுவனத்தில்” பயின்றார். செருமனியின் மூனிச் நகரிலும் உயர்கல்வி பயின்ரார். திருச்சபைச் சட்டத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். இப்படிப்புகளையெல்லாம் 1963-1968 ஆண்டுக் காலத்தில் முடித்ததும் பர்த்தலமேயு உரோமை நகரில் “திருத்தந்தை கிரகோரி பல்கலைக்கழகத்தில்” பேராசியராகப் பணியாற்றினார்.
Remove ads
பணிகள்
1968இல் இசுதான்புலுக்குத் திரும்பிய பர்த்தலமேயு ஹால்க்கி குருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்தார். அங்கு அவர் 1969இல் குருப்பட்டம் பெற்றார். அவருக்குக் குருப்பட்டம் அளித்தவர் காண்ஸ்டாண்டிநோபுளின் பொது மறைமுதுவர் முதலாம் அத்தனாகோரஸ் ஆவர்.
1972இல் காண்ஸ்டாண்டிநோபுள் பொது மறைமுதுவராக முதலாம் திமீத்ரியுஸ் நியமனம் பெற்றதும், அவர் பர்த்தலமேயுவை மறைமுதுவர் செயலகத்தின் இயக்குநராக நியமித்தார். 1973 இயேசு பிறப்பு விழாவன்று பர்த்தலமேயு பிலடெல்பியா மறைமாவட்டத்தின் பேராயராக நியமனம் பெற்றார். அதன்பின் 1990இல் கால்செதோன் பேராயராகப் பொறுப்பேற்றார்.
1974 மார்ச் மாதத்திலிருந்து காண்ஸ்டாண்டிநோபுளின் பொது மறைமுதுவராகப் பணியேற்ற நாள்வரை (நவம்பர் 2, 1991), பர்த்தலமேயு கீழை மரபுவழி திருச்சபையின் உயர் மன்றத்தில் (Holy Synod) உறுப்பினராகச் செயல்பட்டார்.
2013, மார்ச் 19ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிசு உரோமையில் கத்தோலிக்க திருச்சபையின் உயர்தலைவராகப் பணியேற்ற நிகழ்ச்சியில் மறைமுதுவர் பர்த்தலமேயு பங்கேற்றார். உரோமன் கத்தோலிக்க திருச்சபையும் கீழை மரபுவழி திருச்சபையும் பிளவுபட்ட 11ஆம் நூற்றாண்டிலிருந்து (1054) (காண்க: பெரும் சமயப்பிளவு) எந்தவொரு மறைமுதுவரும் உரோமை ஆயரான திருத்தந்தையின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் கிறித்தவத்தின் இருபெரும் பிரிவுகளின் தலைவர்களும் அப்பதவியேற்பு விழாவில் அருகருகே அமர்ந்திருந்தது கிறித்தவ ஒன்றிப்பு முயற்சிக்கான நற்குறியாக உணரப்பட்டது.
மறைமுதுவர் பர்த்தலமேயு பன்மொழிப் புலவர். அவர் கிரேக்கம், துருக்கியம், இத்தாலியம், செருமானியம், பிரான்சியம், ஆங்கில மொழிகளை நன்கு அறிவார். மேலும் அவர் செம்மொழிகளான பண்டைக் கிரேக்கத்திலும் இலத்தீனிலும் தேர்ச்சிபெற்றவர்.
2013, மே 29ஆம் நாள் மறைமுதுவர் பர்த்தலமேயுவைக் குறிவைத்துக் கொல்வதற்காகத் தீட்டப்பட்ட திட்டம் முறியடிக்கப்பட்டது.[6] அம்முயற்சியில் ஈடுபட்டதாகக் கருதப்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.[6]

Remove ads
கிறித்தவ ஒன்றிப்பு, மனித உரிமை மேம்படுத்த முயற்சிகள்
மறைமுதுவர் பர்த்தலமேயு, மரபுவழி திருச்சபைகளுக்கு நடுவேயும், பிற கிறித்தவ சபைகளோடும் ஒற்றுமையை வளர்ப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். மேலும், உலக சமயங்கள் நல்லிணக்கத்தோடு வாழ வேண்டும் என்பதும் இவருடைய கொள்கையாகும். கத்தோலிக்க, மரபுவழி சார்ந்த மற்றும் இசுலாமிய நாடுகளுக்குப் பலமுறை பயணமாகச் சென்றுள்ளார்.
இவர் மனித உரிமைகளையும் சமய சுதந்திரத்தையும் மேம்படுத்துவதில் தீவிர ஆர்வம் கொண்டவர். மேலும் சுற்றுச்சூழல் தூய்மையைக் காப்பது சமயம் சார்ந்த ஒரு கடமை என இவர் வலியுறுத்துகிறார். எனவே, இவருக்கு “பச்சை மறைமுதுவர்” ("Green Patriarch") என்றொரு சிறப்புப்புப் பெயரும் உண்டு.[7]

2008, மார்ச்சு 6ஆம் நாள் மறைமுதுவர் பர்த்தலமேயு திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டை உரோமை நகரில் சந்தித்து, கிறித்தவ ஒன்றிப்பு முயற்சியில் ஈடுபட்டார்.
புனித பவுல் திருத்தூதர் பிறந்த இராண்டாயிரம் ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்ட தருணத்தில் (2008, சூன் 28-29), திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் மறைமுதுவர் பர்த்தலமேயுவை உரோமையில் வரவேற்றார். அப்போது மறையுரை ஆற்றுகையில் இரு தலைவர்களும் பங்கேற்றனர். திருச்சபைகள் பிளவுகளை அகற்றி ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தனர்.
திருத்தந்தை பிரான்சிசு இயேசு கிறிஸ்து பிறந்து வளர்ந்து இறந்த நாடாகிய திருநாட்டிற்குத் திருப்பயணமாகச் சென்றவேளையில் (மே 24-26, 2014) எருசலேமில் மறைமுதுவர் பர்த்தலமேயுவை சந்தித்தபோது இரு தலைவர்களும் உலகத்தில், குறிப்பாக நடு ஆசியாவில் போர்கள் முடிவுக்குவந்து அமைதி ஏற்பட அனைவரும் உழைக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.
அச்சந்திப்பைத் தொடர்ந்து, 2014, சூன் 8ஆம் நாள் உரோமை நகரில் திருத்தந்தை பிரான்சிசு “உலக அமைதிக்காக இறைவேண்டல் நாள்” ஏற்பாடு செய்தார். அப்போது பாலத்தீன நாட்டு அதிபர் அபு மாசென், இசுரயேல் அதிபர் சீமோன் பேரஸ் ஆகியோர் வத்திக்கான் சென்றனர். மறைமுதுவர் பர்த்தலமேயுவும் அழைக்கப்பட்டிருந்தார். இவ்வாறு அரசியல் தலைவர்களும் சமயத் தலைவர்களும் ஒன்றிணைந்து உலக அமைதிக்காக இறைவேண்டல் செய்தது ஒரு முக்கிய நிகழ்ச்சி.
மறைபணியின் சில கூறுகள்
பொது மறைமுதுவர் என்னும் வகையில் பர்த்தலமேயு உலக அளவில் சிறப்பான பணியாற்றியுள்ளார். கிழக்கு ஐரோப்பாவில் பொதுவுடைமை ஆட்சிக்காலத்தில் துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்ட கீழை மரபுவழி திருச்சபைகளைக் கட்டியெழுப்பும் பணியில் அவர் தீவிரமாகச் செயல்பட்டார். அதற்காக அவர் வெவ்வேறு தேசிய கீழை மரபுவழி சபைத் தலைவர்களோடு தொடர்புகொண்டு அவர்களுக்கிடையே உறவுகளையும் ஒத்துழைப்பையும் வளர்ப்பதில் ஈடுபட்டார்.
அதுபோலவே, தமக்கு முன்னால் பொது மறைமுதுவர்களாகச் செயல்பட்ட முதலாம் அத்தனாகோராஸ், முதலாம் திமீத்ரியஸ் போன்றோரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, பர்த்தலமேயு உரோமன் கத்தோலிக்க திருச்சபையோடு நல்லுறவுகள் ஏற்படுத்தவும், கிறித்தவ ஒன்றிப்பை வளர்க்கவும் பாடுபட்டார்.
மேலும், யூதம், இசுலாம் போன்ற பிற சமயங்களோடும் நல்லுறவுகள் வளர்க்க அவர் உழைத்தார்.[8][9]
சுற்றுச்சூழலைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளும் போற்றற்குரியன என்று பல அமைப்புகள் அவரைப் பாராட்டின.[2][10][11]
மிகப்பெரும்பான்மையாக முசுலிம்கள் வாழ்கின்ற துருக்கி நாட்டில் மிகச் சிறுபான்மையினராக உள்ள கிறித்தவர்களின் உரிமைகள் மீறப்படுவதை அவர் துணிச்சலோடு சுட்டிக்காட்டியுள்ளார்.[12][13]
Remove ads
திருத்தந்தை பிரான்சிசை சந்தித்தல்
2014, நவம்பர் மாதம் 28-30 நாள்களில் திருத்தந்தை பிரான்சிசு துருக்கி சென்றபோது அவர் மறைமுதுவர் பர்த்தலமேயுவை காண்ஸ்டாண்டிநோபுளில் சந்தித்தார். இருவரும் திருவழிபாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். சமய நல்லிணக்கம் பற்றியும், கிறித்தவ ஒன்றிப்புப் பற்றியும், நடு ஆசியாவில் கிறித்தவர்களும் சிறுபான்மையினரும் துன்புறுத்தப்படுவது பற்றியும் ஒரு கூட்டறிக்கை விடுத்தனர்.[14]
மேலும் காண்க
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
