விந்தன்

புதின எழுத்தாளர், இதழாசிரியர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

விந்தன் என்று அறியப்படும் கோவிந்தன் (செப்டம்பர் 22, 1916 - சூன் 30, 1975) தமிழகப் புதின எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார். இவர் ஏழு புதினங்களையும், 98 சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவர் சிறுவர்களுக்கான குட்டிக் கதைகளையும் எழுதியுள்ளார்.

வாழ்க்கைச் சுருக்கம்

கோவிந்தன் காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் வேதாசலம், ஜானகி ஆகியோருக்குப் பிறந்தார். சென்னை சூளைப் பகுதியில் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார்.

இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து சில ஆண்டுகள் ஓவியம் பயின்றார். அதையும் தொடர முடியவில்லை. ஜெமினி பட நிறுவனத்தில் பணியாற்றினார்.

1938ஆம் ஆண்டு லீலாவதி எனும் பெண்மணியை மணந்தார். இரண்டு குழந்தைகளை ( வரதராசன் , மோகனா) விட்டுவிட்டு அந்த அம்மையார் இறந்துபோக, பின் சரஸ்வதி என்ற பெண்ணை இரண்டாம் தாரமாக மணந்தார். ஆறு குழந்தைகள் பிறந்தன.

Remove ads

அச்சகத்தில் பணி

மாசிலாமணி முதலியார் நடத்திய "தமிழரசு" மாத இதழில் அச்சுக் கோப்பவராகச் சேர்ந்தார். தமிழரசுக்குப் பிறகு ஆனந்த விகடன் அச்சுக் கூடத்தில் வேலை கிடைத்தது. கையெழுத்துப் பிரதிகளிலிருந்து அச்சுக்கோக்கும் வாய்ப்பு ஏற்பட்டதால் தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார். தாமும் எழுத வேண்டும் என்ற அவா அவருக்கு ஏற்பட்டது.

கல்கி கிருஷ்ணமூர்த்தியால் 1941ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்கி இதழ், விந்தன் வாழ்க்கையில் புதுத் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஆனந்த விகடனில் இருந்து வெளியேறிய டி.எம்.இராஜா பாதர் என்ற அவரது நண்பர் விந்தனுக்கு கல்கி வார இதழில் அச்சுக் கோக்கும் பணியில் சேர உதவினார். கோவிந்தனுடைய அச்சுக் கோக்கும் திறமையை கல்கி பாராட்டியதோடு, அவர் கதைகளும் எழுதுவார் என்பதை அறிந்து, "கல்கி" இதழில் தொடர்ந்து எழுதுமாறு கூறினார். சில மாதங்களில் துணை ஆசிரியராகவும் நியமித்தார். கல்கியின் துணை ஆசிரியராகச் சேர்ந்த விந்தன், குழந்தைகளுக்கு (பாப்பா மலர் பகுதியில்) "விஜி" என்ற பெயரில் பல கதைகள் எழுதினார். விஜி என்ற பெயரை "விந்தன்" என்று பெயர் மாற்றிக் கொள்ளச் சொன்னவர் "கல்கி" கிருஷ்ணமூர்த்தி தான்.

Remove ads

எழுத்தாளராக

1946 இல் விந்தனின் மதல் சிறிகதை தொகுப்பான "முல்லைக் கொடியாள்" நூல் வெளிவந்தது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகம் அந்தத் தொகுதிக்கு முதல் பரிசை அளித்தது. விந்தனின் எழுத்துக்குத் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு ஏற்பட்டதால், "பொன்னி" மாத இதழ் ஆசிரியர், விந்தனைத் தொடர்களை எழுதுமாறு வேண்டினார்.

"கண் திறக்குமா?" என்ற கதையை 1947இல் "நக்கீரன்" என்ற புனைப்பெயரில் எழுதினார். "பாலும் பாவையும்" என்ற கற்பனையும் கருத்தும் நிறைந்த தொடர் ஒன்றை எழுதினார். "பாலும் பாவையும்" விந்தனுக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது. ஏ. வி. எம். நிறுவனத்தார், "பாலும் பாவை"யும் கதையைத் திரைப்படமாக்க விரும்பியதால், கல்கி அலுவலகத்திலிருந்து பதவி விலகி, திரைப்படம் நோக்கிப் பயணித்தார்.சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜி வைதீக மரபைத் தூக்கிப்பிடிக்கும் ‘பஜகோவிந்தம்’(1956) எழுதினார். இந்நூலுக்குப் புடைநூலாக ‘பசிகோவிந்தம்’ (1956) என்ற நூலை விந்தன் எழுதினார் . இவ்விரு நூல்களையும் வெளியிட்டவர் பெண்ணாடம் ராமசாமி .[1] இவர் தினமணிக் கதிரில் மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள் (1969) என்ற அபுனைவுத் தொடர் ஒன்றை எழுதினார். அது அப்போது பிரபலமாக இருந்த 32 பேர் குறித்த எள்ளல் பாணியில் அமைந்த அபுனைவு ஆகும். இது விக்கிரமாதித்தன் கதை அமைப்பைத் தழுவி எழுதப்பட்டது.[2]

திரைப்படவுலகில்

ஆர்.ஆர்.பிக்சர்ஸ் தயாரித்த வாழப் பிறந்தவள் படத்துக்கு வசனமும், "அன்பு" என்ற படத்துக்கு வசனமும், ஒரு பாடலும், கூண்டுக்கிளி என்ற படத்துக்கு வசனமும் எழுதினார். குழந்தைகள் கண்ட குடியரசு, பார்த்திபன் கனவு திரைப்படங்களுக்கு வசனமும் பாடல்களும் எழுதினார்.

கையில் கிடைத்த சொற்ப பணத்தைக் கொண்டு "புத்தகப் பூங்கா" என்ற பதிப்பகமும் "மனிதன்" என்ற மாத இதழையும் தொடங்கினார் விந்தன். மனிதன் பத்து இழகள் வெளியாகி நின்றுபோனது. "அன்பு அலறுகிறது", "மனிதன் மாறவில்லை" என்ற இரு நாவல்களை எழுதினார்.

Remove ads

இறுதிக் காலம்

பிரபல எழுத்தாளர் சாவி ஆசிரியராக இருந்த தினமணி கதிர் இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். மக்கள் எழுத்தாளர் விந்தன், 1975ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி காலமானார். அவர் மறைவுக்குப் பிறகு அவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

விந்தன் எழுதிய நூல்கள்

தமிழ்நாட்டரசு 2008 - 09 இல் விந்தன் எழுதிய நூல்கள் நாட்டுடமை ஆக்கியது. நாட்டுடமை ஆன நூல்களின் பட்டியல்.

  1. அன்பு அலறுகிறது
  2. இந்திய இலக்கியச் சிற்பிகள்
  3. இலக்கியப்பீடம் 2005
  4. எம்.கே.டி.பாகவதர் கதை
  5. ஒரே உரிமை
  6. ஓ, மனிதா
  7. கண் திறக்குமா?
  8. காதலும் கல்யாணமும்
  9. சுயம்வரம்
  10. திரையுலகில் விந்தன்
  11. நடிகவேல் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்
  12. பசிகோவிந்தம்
  13. பாலும் பாவையும்
  14. பெரியார் அறிவுச் சுவடி
  15. மனிதன் இதழ் தொகுப்பு
  16. மனிதன் மாறவில்லை
  17. மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்
  18. விந்தன் இலக்கியத் தடம்
  19. விந்தன் கட்டுரைகள்
  20. விந்தன் கதைகள் - 1
  21. விந்தன் கதைகள் -2
  22. விந்தன் குட்டிக் கதைகள்
  23. வேலை நிறுத்தம் ஏன்?
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads