ஸ்ரீபுரம் இலட்சுமி நாராயணன் பொற்கோயில்
வேலூர் உள்ள கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிரீபுரம் பொற்கோயில் (Golden Temple Sripuram) இந்தியாவின் மாநிலமான தமிழ்நாட்டின் வேலூர் அருகே திருமலைக்கோடி (அல்லது மலைக்கோடி) எனப்படும் சிரீபுரத்தில் அமைந்துள்ள சிரீலட்சுமி நாராயணி பொற்கோயில் ஆகும்.[1] இத் திருத்தலம், திருப்பதியிலிருந்து 120 கி.மீ. தூரத்திலும், சென்னையிலிருந்து 145 கி.மீ. தூரத்திலும், புதுச்சேரியிலிருந்து 160 கி.மீ. தூரத்திலும் மற்றும் பெங்களூருவிலிருந்து 200 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. இக்கோயிலில் செல்வத்தின் அதிபதியாக இருக்கும் சிரீலட்சுமி நாராயணிக்கு குடமுழுக்கு வைபவம் 2007ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24ம் தேதி நடைபெற்றது. இங்கு அனைத்து சமயத்தினரும் வருகை புரிகின்றனர். இந்தக் கோயில் 1500 கிலோகிராம் சுத்த தங்கத்தை பயன்படுத்தி செய்த தங்கத்தகடுகளால் வேயப்பட்டுள்ளது. இது அமிர்தசரசில் இருக்கும் பொற்கோயிலின் உட்புற விமானத்தின் (750 கிலோகிராம் தங்கம்) அளவை விட இரட்டிப்பாக உள்ளது.[2]
Remove ads
கோயிலின் அமைப்பு
இக்கோயில் முழுவதும் 1,500 கிலோ தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது. இக் கோயிலில் உள்ள சிரீலட்சுமி நாராயணி சன்னதி விமானம் மற்றும் அர்த்த மண்டபம் முழுவதும் தூய தங்கத்தகடுகளால் வேயப்பட்டுள்ளது. இக்கோயில் 100 ஏக்கர் பரப்பளவுள்ள அழகிய பூஞ்சோலைகளின் நடுவில் சிரீசக்கரத்தில் உள்ள நட்சத்திர அமைப்பில் உள்ளது. இக் கோயில் வேலூரை மையமாகக் கொண்ட அறக்கட்டளையான நாராயணி பீடம் என்கிற அமைப்பால் கட்டப்பட்டுள்ளது. இதன் தலைவராக ஆன்மீகவாதியான சிரீ சக்தி அம்மா உள்ளார். இவர் "நாராயணி அம்மா" எனவும் அழைக்கப்படுகிறார். மேலும், இக் கோயில் நாட்டின் சிறந்த சுற்றுச்சூழல் வளாக விருதோடு "பசுமைக் கோயில்' விருதும் பெற்றுள்ளது.[3]
கோயிற்கலையில் நிபுணத்துவம் பெற்ற கைவினைஞர்களால், (1,500 கிலோ) தங்கத்தைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட இந்த கோயில், பல சிக்கலான பணிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு விவரமும் கைமுறையாக உருவாக்கப்பட்டது, இதில் தங்கக் கம்பிகளை தங்கத் தகடுகளாக மாற்றுவது, பின்னர் செப்புத் தகடுகளின் மீது தங்க படலங்களை ஏற்றுவது உட்பட பல நுண்ணிய வேலைகள் அடங்கும். பொறிக்கப்பட்ட செப்புத் தகடுகளில் 9 அடுக்குகள் முதல் 10 அடுக்குகள் வரை தங்கப் படலம் பொருத்தப்பட்டுள்ளது. கோயிற்கலையில் உள்ள ஒவ்வொரு விவரத்திற்கும் வேதத்திலிருந்து முக்கியத்துவம் எடுத்தாளப்பட்டுள்ளது.[4] இக் கோயில் நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் நட்சத்திர வடிவ பாதையின் இருபுறமும் ஆன்மீக செய்திகள் எழுதப்பட்டுள்ள பதாகைகள் உள்ளன. அதனால் பக்தர்கள் அனைவரும் அந்த பாதையில் நடக்கும்போது செய்திகளைப் படிக்க ஏதுவாக உள்ளது.
Remove ads
மருத்துவமனை
சிரீபுரம் கோயில் வளாகத்திற்கு அருகிலேயே சிரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆய்வு நிலையம் உள்ளது. இதுவும் நாராயணி பீடம் அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது.
சுற்றுலாத்தலம்
சிரீபுரம் பொற்கோயில் ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாக அமைந்துள்ளது. அதனால் நாள்தோறும் மக்கள் இக் கோயிலுக்குச் சென்ற வண்ணம் உள்ளனர். வேலூர் மையப் பகுதியாக இருப்பதால் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். மேலும், தங்கக் கோயிலை சுற்றியுள்ள அலங்கார வளைவுகள், மண்டபங்கள், முகப்புகள் ஆகியவை இரவு நேரத்தில் வேலூரின் முக்கிய சாலையில் செல்வோரைக் கவரும் வகையில் நவீன விளக்கு ஒளியில் பிரகாசிப்பது இதன் தனிச் சிறப்பாக உள்ளது.
விரிவாக்கம்
தற்போது சிரீலட்சுமி நாராயணி அம்மனுக்கு மட்டும் சந்நிதி உள்ளதால் பெருமாளுக்கு தனி கற்கோயில் உருவாக்கப்படுகின்றது.[5]
படத் தொகுப்பு
- ஸ்ரீபுரம் பொற்கோயில், வேலூர், தமிழ்நாடு, இந்தியா
- ஸ்ரீபுரம் மகாலட்சுமி பொற்கோயில்
- ஸ்ரீபுரம் பொற்கோயிலின் நுழைவாயில்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads