அக்கம்மா செரியன்

கேரள அரசியில்வாதி From Wikipedia, the free encyclopedia

அக்கம்மா செரியன்
Remove ads

அக்கம்மா செரியன் என்பவர் இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனையாவார்.[1][2] இவர் முந்தைய திருவிதாங்கூர் (கேரளம்) பகுதியைச் சேர்ந்தவர். இவர் திருவிதாங்கூர் ஜான்சி ராணி என்று பிரபலமாக அறியப்பட்டார்.[3]

விரைவான உண்மைகள் அக்கம்மா செரியன்Accamma Cherian, பிறப்பு ...
Remove ads

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

இவர் 14 பிப்ரவரி 1909இல் தூய தாமசு கிறித்துவர்களான, நசரானி குடும்பத்தில் திருவாங்கூரின், கஞ்சிரப்பள்ளியில் தோமன் செரியன் மற்றும் அன்னம்மா கரிப்பப்பறம்பில் இணையருக்கு இரண்டாவது மகளாக பிறந்தார். இவர் கஞ்சிரப்பள்ளியில் உள்ள அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியிலும், சங்கனாச்சேரி புனித சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியிலும் தன் பள்ளிப்படிப்பை மேற்கொண்டார். எர்ணாகுளம் புனித தெரசாள் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலை பட்டம் பெற்றார்.

1931ஆம் ஆண்டு தனது கல்வியை நிறைவு செய்த பின்னர், இடக்கரை புனித மேரி ஆங்கிலவழிப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக உயர்ந்தார். ஆறு வருடங்கள் இந்தப் பள்ளியில் பணிபுரிந்தார். இக்காலகட்டத்தில் இவர் திருவனந்தபுரம் பயிற்சி கல்லூரியில் எல்.டி. பட்டம் பெற்றார்.

Remove ads

விடுதலைப் போராட்டத்தில்

1938 பெப்ரவரியில், திருவாங்கூர் மாநில காங்கிரஸ் கட்சி உருவானது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட தனது கற்பிக்கும் பணியிலிருந்து அக்கம்மா விலகினார்.[4][5]

ஒத்துழையாமை இயக்கம்

மாநில காங்கிரசின் ஒருங்கிணைப்பில் திருவாங்கூர் மக்கள் பொறுப்பான அரசாங்கத்திற்காக போராட்டத்தைத் தொடங்கினர். திருவாங்கூர் திவான், சி.பி. ராமசாமி ஐயார், இந்தப் போராட்டத்தை நசுக்க முடிவு செய்தார். இதையடுத்து 26 ஆகத்து 1938 அன்று ஒத்துழையாமை இயக்கத்தைத் தடை செய்தார். மேலும் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட மாநில காங்கிரசின் பட்டம் தாணு பிள்ளை உட்பட முக்கிய மாநில காங்கிரசு தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.[6] இதனால் மாநில காங்கிரசானது தனது போராட்ட முறையை மாற்றியது. அதன் செயற்குழு கலைக்கப்பட்டு தலைவருக்கு அனைத்து அதிகாரங்களும் அளிக்கப்பட்டன மேலும் தனக்கு அடுத்த தலைவரை நியமிக்கும் உரிமையையும் அளிக்கப்பட்டது. மாநில காங்கிரசின் பதினொரு 'சர்வாதிகாரிகள்' (தலைவர்கள்) அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். பதினான்காம் தலைவரான குட்டநாடு ராமகிருஷ்ண பிள்ளை, அவரது கைதுக்கு முன்னதாக, அக்கம்மா செரியனை பன்னிரண்டாவது தலைவராக்க பரிந்துரைத்தார்.

கௌடியர் அரண்மனைக்கு பேரணி

அக்கமா செரியன் தலைமையில், தம்பானூரிலிருந்து மகாராஜா சித்திரைத் திருநாள் பாலராம வர்மாவின் கௌடியர் அரண்மனையை நோக்கி மாபெரும் பேரணியை நடத்தினார்.[4] திவான் சி. பி ராமசாமி ஐயரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். சி. பி ராமசாமி ஐயருக்கு எதிராக மாநில காங்கிரசு தலைவர்கள் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். 20,000 க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்ட இந்தப் பேரணியினரை துப்பாக்கியால் சுடுக்குமாறு பிரித்தானிய காவல் துறைத் தலைவர் தனது ஆட்களுக்கு உத்தரவிட்டார். இதற்கு அக்கமா செரியன், "நான்தான் தலைவர், நீ மற்றவர்களை கொல்லுவதற்கு முன்னர் முதலில் என்னைத் துப்பாக்கியால் சுடு" என்றார். இவரது இந்தத் உறுதியான சொற்களானது காவல் அதிகாரிகள் தங்கள் உத்தரவை திரும்பப் பெறும் கட்டாயத்துக்கு உள்ளாக்கியது. இதையறிந்த மகாத்மா காந்தி இவரை 'திருவாங்கூர் ஜான்சி ராணி' என்று புகழ்ந்தார். 1939 ஆம் ஆண்டில் தடை உத்தரவுகளை மீறியதற்காக இவர் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார்.[7]

தேச்சேவகிகள் சங்க உருவாக்கம்

1938 அக்டோபரில் மாநில காங்கிரசு கட்சியின் செயற்குழுவானது, அக்கம்மா செரினை தேச்சேவகிகள் சங்கத்தின் (மகளிரணி) அமைப்பாளராக நியமித்தது. இவர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேச்சேவகிகள் சங்கத்தின் உறுப்பினர்களாக சேருமாறு பெண்களுக்கு அழைப்பு விடுத்தார்.

சிறைவாசம்

விடுதலைப் போராட்டத்தின் போது அக்கம்மா செரியின் இருமுறை சிறையில் அடைக்கப்பட்டார்.

மாநில காங்கிரசின் ஆண்டு மாநாடு

மாநில காங்கிரசின் முதல் ஆண்டு மாநாடானது தடையை மீறி, 1938 திசம்பர் 22, 23 நாட்களில் வத்தியூர்காவில் நடைபெற்றது. கிட்டத்தட்ட மாநிலத்தின் அனைத்துத் தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அக்கம்மா, தனது சகோதரி ரோசம்மா புன்னோசுடன் (இவரும் ஒரு விடுதலைப் போராட்ட வீராங்கனை. பிற்காலத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும், 1948 க்குப் பிறகு இ.பொ.க தலைவராக இருந்தரவர்), 1939 திசம்பர் 24 அன்று கைது செய்யப்பட்டார். இவர்களுக்கு ஓராண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் அங்கு அச்சுறுத்தளுக்கு ஆளாயினர். சிறை அதிகாரிகளின் தூண்டுதலினால், சில கைதிகள், இவர்களை தவறான, மோசமான சொற்களைக் கொண்டு வசைபாடினர். இந்த நிகழ்வு குறித்து பட்டம் தாணு பிள்ளையால் காந்திக்கு எழுதப்பட்டது.[8][9] இந்நிகழ்வை சி. பி. ராமசாவாமி அய்யர் மறுத்தார். அக்கம்மாவின் சகோதரரான, கே. சி. வர்கி கரிப்பாபரம்பிலும் விடுதலை இயக்கத்தில் கலந்து கொண்டார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

அக்கம்மா, சிறையில் இருந்து விடுதலையான பிறகு, மாநில காங்கிரசின் முழு நேர ஊழியர் ஆனார். 1942 இல், அதன் செயல் தலைவராக ஆனார். தனது தலைமை உரையில், 1942 ஆகத்து 8 அன்று இந்திய தேசிய காங்கிரசின் பம்பாய் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க வெள்ளையனே வெளியேறு இயக்கத் தீர்மானத்தை வரவேற்றார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட இவருக்கு ஓராண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது. 1946 இல், தடையை மீறியதற்காக கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டார். தனித் திருவாங்கூர் நாட்டைக் கோரிய சி. பி. ராமசாமி அய்யரின் கோரிக்கைக்கு எதிராக தனது குரலை உயர்த்தியதால் 1947 இல் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

Thumb
திருவனந்தபுரத்தில் வெள்ளியம்பலத்தி உள்ள அக்கம்மா செரியன் சிலை
Remove ads

சுதந்திர இந்தியாவில் வாழ்க்கை

1947 இல் விடுதலைக்குப் பிறகு, திருவாங்கூர் சட்டமன்றத்துக்கு காஞ்சிரப்பள்ளியில் இருந்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். விடுதலைப் போராட்ட வீரரும், திருவாங்கூர்-கொச்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வி. வி. வர்கி மன்னபிளாக்லை 1951 ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பொறியாளரான ஜார்ஜ் வி. வர்கி என்ற ஒரு மகன். 1950 களின் துவக்கத்தில், மக்களவைக்கு சீட்டு மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரசு கட்சியிலிருந்து அக்கம்மா விலகினார். 1952 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் மூவாட்டுப்புழா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1950 களின் முற்பகுதியில், கட்சிகளின் சித்தாந்தங்கள் மாறியதால், அக்கம்மா அரசியலை விட்டு ஒதுங்கினார்.[4] இவரது கணவர் வி. வி. வர்கி 1952-54 முதல் கேரள சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1967 ஆம் ஆண்டில் கஞ்சிராப்பள்ளி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட அக்கம்மா கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டார். பின்னர், இவர் விடுதலைப் போராட்ட வீரர்களின் ஓய்வூதிய ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்தார்.

இறப்பு

Thumb
அக்கம்மா செரியன் பூங்கா

அக்கம்மா செரியன் 5 மே 1982 அன்று இறந்தார். திருவனந்தபுரம், வெள்ளியபம்பலம் பகுதியில் இவருக்கு மரியாதை செய்யும் விதமாக ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது.[10] இவரது வாழ்க்கை குறித்து ஸ்ரீபால கே. மேனனால் ஒரு ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது.[11][12]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads