அழகரந்தாதி
அட்டப்பிரபந்தங்களில் ஒன்றாகும் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழில் எழுந்த சிற்றிலக்கியங்கள் 96 வகைகளுள் பிரபந்தம் ஒரு வகையாகும். அழகரந்தாதி, அட்டப்பிரபந்தங்களில் ஒன்றாகும்.[1]
இயற்றியவர்
இதனை இயற்றியவர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் ஆவார். இவர் அரங்கனையன்றிப் பிற தெய்வங்களைத் தொழாதவர். இவர் தம் நூல்களில் திருமாலை பரம்பொருள் என்றும், மற்ற தெய்வங்கள் கரும வசப்பட்ட சீவர்கள் என்றும் வலியுறுத்துகிறார். [2]
அட்டப்பிரபந்தம்
அட்டப்பிரபந்தம் என வழங்கப்படும் திருவரங்கந்தாதி, திருவேங்கடத்தந்தாதி, திருவேங்கடமாலை, நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி, அழகர் அந்தாதி, திருவரங்கத்து மாலை, திருவரங்கக் கலம்பகம், சீரங்கநாயகரூசல் ஆகியன இவரால் இயற்றப்பட்டனவாகும். [2]
அமைப்பு
அந்தாதித் தொடையால் பாடப்பெற்ற இப்பிரபந்தம் தோத்திரம் போன்றது. இந்நூலில் உள்ள கலித்துறைகள் யாவும் பெரும்பாலும் திரிபு என்னும் சொல்லணியையும், சிறுபான்மை யமகம் என்னும் சொல்லணியையும் கொண்டவை. திரிபாவது-ஒவ்வோர் அடியிலும் முதல் எழுத்து மட்டும் வேறுபட்டிருக்க, இரண்டு முதலிய பல எழுத்துக்கள் ஒன்று நின்று பொருள் வேறுபடுவது. யமகமாவது-பல அடிகளிலேனும், ஓரடியில் பல இடங்களிலேனும் வந்த பத்துத் தொடர்களே மீண்டும் வந்து பொருள் வேறுபடுவது. இதனை தமிழில் மடக்கு என்பர்.
இந்நூலிலிருந்து ஒரு பாடல்- பொருளுடன்[2]:
"முதுவிருந் தாவனத் தானிரை மேய்த்தவர் முன்விதுரன்
புதுவிருந் தானவர் மாலலங் காரர் பொலங்கழலாம்
மதுவிருந் தாமரைக் காளா யிரார்க்கு மதிநுட்ப நூல்
எதுவிருந் தாலு மதனால் விடாவிங் கிருவினையே." (பாடல் எண்.48)
பொருள் : பழமையான பிருந்தாவனத்திலே பசுக் கூட்டங்களை மேய்த்தவரும், முன்னர் விதுரனுக்கு அதிசயித்தக்க விருந்தினருமாகிய பெருமையுடைய அழகரது அழகிய திருவடிகளாகிய தேன் கொண்ட பெரிய தாமரை மலர்களுக்கு அடிமைப்பட்டு இராதவர்களுக்கு, நுண்ணறிவை உண்டாக்குகின்ற சாத்திரங்களில் எது பயின்று தேறப்பட்டிருந்தாலும், அச்சாத்திரத் தேர்ச்சி மாத்திரத்தால் இவ்வுலகில் இருவகைவினைகளும் நீங்கமாட்டா.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads