ஆர்மா மலைக் குகை

தமிழ்நாட்டு குகை From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆர்மா மலைக் குகை (Armamalai Cave) (கிராமவாசிகள் அரவான் மலை என்கிறார்கள், அரவன் அல்லது அருகன் என்ற சொல் தீர்த்தங்கரரைக் குறிக்கும்) என்பது தமிழ்நாட்டின், திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் இருந்து 25 கி,மீ (16 மைல்) தொலைவில் மலையம்பட்டு கிராமத்திற்கு மேற்கில் உள்ள மலைக் குகையாகும், இந்தக் குகை பழங்கால ஓவியங்களுக்காக அறியப்படுகிறது.[1][2] இந்தக் குகை பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக இந்திய தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.[3] இது தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலமாகவும் உள்ளது.[4]

விரைவான உண்மைகள் ஆர்மா மலைக் குகை Armamalai Cave, அமைவிடம் ...
Remove ads

தகவல்கள்

ஆர்மமலைக் குகை இயற்கையாக அமைந்த ஒரு குகையாகும். இது கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் சமணக் கோயிலாக மாற்றப்பட்டது. இந்தக் குகையில் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண சமயத்தைச் சேர்ந்த ஓவியங்கள், புடைப்புச் சிற்பங்கள் ஆகியவை உள்ளன.[5] இவை இராமாயணத்தையும், சமணப் புனிதர்களைப் பற்றியவையாகவும் உள்ளன.[2] சுவர் ஓவியங்கள் குகையின் விதானத்திலும், சுவர்களிலும் வரையப்பட்டுள்ளன.[2] சுவர்களில் பூசப்பட்ட மெல்லிய பூச்சு மற்றும் தடித்த மண் பூச்சின் மீது நிறங்களை பயன்படுத்துவதன் மூலம் ஓவியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.[5] இந்த ஓவியங்கள் சமணத்தைப் பண்டைய தமிழ் நாட்டில் பரப்ப, அக்காலகட்டத்தில் குகையில் தங்கியிருந்த சமணத் துறவிகளால் செய்யப்பட்டன. சுதை ஓவியம் மற்றும் பதவண்ணம் ஆகிய இரு தொழிற்நுட்பங்கள் கொண்டு இக்குகை ஓவியங்கள் செய்யப்பட்டுள்ளன.[6] இந்த ஓவியங்களை எல்லாம் காணும்போது தமிழ்நாட்டின் இன்னொரு குகை ஓவியங்களான சித்தன்னவாசல் குகை ஓவியங்கள் போன்றும், மத்தியப் பிரதேசத்தின் பாக் குகைக்கோயில் ஓவியங்களைப் போன்றும் காணப்படுகின்றன.[7] இக்குகை ஓவியங்கள் எல்லாம் இந்தியாவின் இடைக்கால ஓவியங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.[6]

இந்த குகைப் பாறை ஓவியங்கள் 1960 களின் பிற்பகுதியில் தொல்லியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. 1945 இல் இறந்த கேப்ரியல் ஜோவேவு-டுப்ரியூல் என்பவர் இந்த வட்டாரத்தில் ஏற்கனவே ஆய்வுகள் செய்து பல்லவர் காலத்தைச் சேர்ந்த சில தொல் பொருட்களைக் கண்டறிந்தார். மேலும் இங்கு கிடைத்த சில தகவல்களின் பேரில் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனால் வழங்கப்பட்ட உதயேந்திரம் செப்பேட்டைக் கண்டுபிடித்தார். மேலும் அவர் நடத்திய விசாரணையில் மூலம் இந்தக் குகை கண்டுபிடிக்கப்பட்டது.[8] இந்த ஓவியங்களில் சமண மதக் கதைகளும், அட்டதிக்குப் பாலகர்கள்,[2] என அழைக்கப்படும் எண்திசைக் காவலர்களான அக்னி, வாயு, குபேரன், ஈசானியன், இந்திரன், யமன், நிருரிதி, வருணன் ஆகியோரும், தாவரங்கள், சுவர்ண தீபிகை போன்றவையும் வரையப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாது, தமிழ்ப் பிராமி எழுத்துக்களும் சுவர்களில் காணப்படுகின்றன. பெரும்பாலான ஓவியங்கள் பல்வேறு காரணங்களினால் சேதமடைந்துள்ளன.

குகையில் உள்ள ஒரு ஓவியத்தின் பரப்பு ஏழு மீட்டர் நீளம், 3.5 மீட்டர் அகலமுடன் உள்ளது. அது ஒரு தாமரைக் குளத்தை சித்தரிக்கும் சித்திரம் ஆகும். அதில் வாத்துகள், பறவைகள், தாமரை இலைகள், மொட்டுகள் இடம்பெற்றுள்ளன. ஓர் ஓவியத்தில் ஆடு ஒன்றின் மேல் சவாரி செய்யும் அக்னி. இன்னொரு ஓவியம் எமன். இவை சித்தன்னவாசல் ஓவிய முறையை ஒத்துள்ளன. இந்த ஓவியங்களின் காலம் 10 அல்லது 11-ம் நூற்றாண்டு என்று ஆய்வாளர்கள் கணிக்கிறனர்.[9]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads