இடச்சு மலாக்கா

மலாக்கா நகரை டச்சுக்காரர்கள், 183 ஆண்டுகள் ஆட்சி செய்த காலம் From Wikipedia, the free encyclopedia

இடச்சு மலாக்காmap
Remove ads

2°11′20″N 102°23′4″E

விரைவான உண்மைகள் இடச்சு மலாக்காDutch Malacca, நிலை ...

இடச்சு மலாக்கா, (ஆங்கிலம்: Dutch Malacca; மலாய் மொழி: Melaka Belanda; இடச்சு மொழி: Nederlands-Malakka அல்லது De Stad en Kasteel Malacca; சீனம்: 荷属马六甲) என்பது தீபகற்ப மலேசியாவின் மலாக்கா நகரை டச்சுக்காரர்கள், 183 ஆண்டுகள் ஆட்சி செய்ததைக் குறிப்பிடுவதாகும். அதுவே மலாக்கா நகரம், வெளிநாட்டுக் கட்டுப்பாட்டில் இருந்த மிக நீண்ட காலமும் ஆகும்.

இடச்சுக்காரர்கள், 1641-ஆம் ஆண்டில் இருந்து 1825-ஆம் ஆண்டு வரையில், 183 ஆண்டுகள் மலாக்காவை ஆட்சி செய்தார்கள். நெப்போலியப் போர்கள் காலத்தில், 1818-ஆம் ஆண்டில் இருந்து 1825-ஆம் ஆண்டு வரையில், ஏறக்குறைய 7 ஆண்டுகள் மட்டும், பிரித்தானியர்கள் மலாக்காவை ஆட்சி செய்தார்கள். மற்ற இடைப்பட்ட காலங்களில், டச்சுக்காரர்களின் ஆட்சி தான் மேலோங்கி இருந்தது.

Remove ads

பொது

இடச்சுக்காரர்களின் ஆட்சிக் காலம் ஓரளவிற்கு அமைதியான காலம் என்று சொல்லப் படுகிறது. 1606-ஆம் ஆண்டில் இடச்சுக்காரர்களுக்கும், ஜொகூர் சுல்தானகத்திற்கும் இடையில் ஏற்பட்ட ஒரு புரிந்துணர்வு காரணமாக மலாய் சுல்தான்களின் தீவிரமான குறுக்கீடுகள் ஏற்படவில்லை.

அந்தக் காலக் கட்டத்தில், அனைத்துலக அளவில், மலாக்காவின் முக்கியத்துவமும் வீழ்ச்சி கண்டு வந்தது. அத்துடன் இடச்சுக்காரர்கள், பத்தேவியாவை (Batavia); (இன்றைய ஜகார்த்தா) தங்களின் பொருளாதார நிர்வாக மையமாக்குவதில் அதிகம் விருப்பம் காட்டினர்.

Remove ads

வரலாறு

17-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், டச்சு கிழக்கிந்திய நிறுவனம்; டச்சு மொழி: Vereenigde Oostindische Compagnie அல்லது VOC; ஆங்கிலம்: Dutch East India Company); கிழக்கிந்தியாவில் போர்த்துகீசிய அதிகாரத்தை அழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டது.

அந்த நேரத்தில், போர்த்துகீசியர்கள் மலாக்காவை ஓர் அசைக்க முடியாத கோட்டையாக (Fortaleza de Malaca) மாற்றி விட்டனர். அத்துடன் மலாக்கா நீரிணையின் கடல் பாதைகளையும்; கிழக்கிந்தியத் தீவுகளின் நறுமணப் பொருட்களின் வர்த்தகத்தையும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டனர்.

ரச்சாடோ முனை போர்

போர்த்துகீசியர்களுக்கு எதிராக டச்சுக்காரர்கள், சிறிய படையெடுப்புகளையும்; சண்டை சச்சரவுகளையும் தொடங்கினர். முதல் தீவிர முயற்சி 1606-இல் தொடங்கியது. அதுவே போர்த்துகீசியர்களுக்கு எதிரான முதல் மலாக்கா முற்றுகை.

டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் பதினொரு கப்பல்களுடன் கார்னெலிஸ் மேட்லீப் டி ஜோங்கே (Admiral Cornelis Matelief de Jonge) எனும் தளபதியின் தலைமையின் கீழ் அந்த முற்றுகை நடைபெற்றது. இதற்கு 1606 ரச்சாடோ முனை போர் (Battle of Cape Rachado) என்று பெயர்.

ரச்சாடோ முனை கலங்கரை விளக்கம்

போர் நடைபெற்ற அந்த இடத்தின் இப்போதைய பெயர் தஞ்சோங் துவான். மலாக்கா, அலோர் காஜா மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு கடற்கரை நகரம். இந்த இடத்திற்கு உடைபட்ட முனை (Broken Cape) என்று போர்த்துகீசியர்கள் பெயர் வைத்து இருக்கிறார்கள். மலாக்கா நீரிணையை எதிர்கொள்ளும் ரச்சாடோ முனை கலங்கரை விளக்கம் (Cape Rachado Lighthouse); இங்குதான் உள்ளது.

போர்த்துகீசிய கடற்படைக்கு கோவாவின் ஆளுநர் (Viceroy of Goa) மார்டிம் அபோன்சோ டி காஸ்ட்ரோ (Martim Afonso de Castro) என்பவர் தலைமை தாங்கினார்.[1]

மூன்று தரப்பு கூட்டணி

இந்தப் போரில் டச்சுக்காரர்கள் தற்காலிகமாக வீழ்ச்சி அடைந்தனர். இருந்த போதிலும், போர்த்துகீசிய கடற்படைக்கு அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. அடுத்தக் கட்டமாக, ஜொகூர் சுல்தானகத்தின் படைகள் டச்சுக்காரர்களின் உதவிக்கு வந்தன. பின்னர் அச்சே சுல்தானகத்தின் படைகளும் உதவிக்கு வந்தன. மூன்று தரப்பு கூட்டணியும் ஒன்றிணைந்து போர்த்துகீசியரை எதிர்த்துப் போரிட்டன.

1641-ஆம் ஆண்டு போர்த்துக்கீசிய மலாக்கா வீழ்ச்சி அடைந்தது. ஒருங்கிணைந்த டச்சு - ஜொகூர் கூட்டு முயற்சி போர்த்துகீசிய அதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. மலாய் தீவுக் கூட்டத்தில் போர்த்துகீசியர்களின் செல்வாக்கிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

Remove ads

மிடில்பர்க் கோட்டை


Thumb
மலாக்கா கோட்டை (1780)

1641 முதல் 1824 வரை மலாக்காவை டச்சுக்காரர்கள் ஆட்சி செய்த போது டச்சுக்காரர்களால் மிடில்பர்க் கோட்டை கட்டப்பட்டு இருக்கலாம் என்று மலாக்கா அரும்காட்சிய அமைப்பு (Malacca Museums Corporation) கூறுகின்றது. 2006-2007-ஆம் ஆண்டுகளில் மிடில்பர்க் கோட்டை மீட்டு எடுக்கப்பட்டது.

இதற்கும் முன்னதாக ஜூன் 2004-இல், டாத்தாரான் பாலவான் (Dataran Pahlawan) எனும் வீரர்கள் சதுக்கம் கட்டப்படும் போது சாண்டியாகோ பாஸ்டன் (Santiago Bastion) என்ற காவற்கோபுரம் கண்டுபிடிக்கப்பட்டது.[2][3]

டச்சுக்காரர்களின் கட்டுமானங்கள்

Thumb
கோட்டைக்கு முன்புறம் - போர்த்துகீசியர்கள் பயன்படுத்திய பீரங்கி

2006 நவம்பர் மாதம், மலாக்கா நகரத்தில் 110 மீட்டர் சுழலும் கோபுரம் கட்டும் போது, மிடில்பர்க் கோட்டை (Middelburg Bastion) என்று நம்பப்படும் கோட்டையின் ஒரு பகுதி தற்செயலாகச் கண்டுபிடிக்கப்பட்டது. கோபுரத்தின் கட்டுமானம் நிறுத்தப்பட்டது.

1670-ஆம் ஆண்டில் கோட்டையின் வாயிலை டச்சுக்காரர்கள் புதுப்பித்தனர். கோட்டை வாயிலின் வளைவில் அன்னோ 1670 (ANNO 1670) எனும் சின்னத்தைப் பதித்தனர். அதற்கும் மேலே டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் (Dutch East India Company) சின்னம் பொறிக்கப்பட்டது.[4]

கோட்டையை இடிக்க திட்டம்

Thumb
கோட்டைக்கு முன்புறம் - பண்டார் ஹிலிர் நகரப் பகுதி

இந்தக் கோட்டை, பல நூற்றாண்டுகளாகக் காலனித்துவக் கால மாற்றங்களைக் கண்டுள்ளது. டச்சுக்காரர்கள் மலாக்காவைக் கைப்பற்றிய போது, 1670-ஆம் ஆண்டில் நுழைவாயிலை மாற்றி அமைத்தனர்.

ஆனால் ஆங்கிலேயர்கள் கைப்பற்றியதும், கோட்டையை இடிக்க உத்தரவிட்டனர். நெப்போலிய போர்களின் முடிவில் கோட்டையை டச்சுக்காரர்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதை அறிந்த ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்களுக்கு இந்த நகரத்தைப் பயனற்றதாக மாற்றுவதில் உறுதியாக இருந்தனர். மக்களை இடம் மாற்றவும், கோட்டையை இடிக்கவும் திட்டமிட்டனர். கோட்டையை உடைப்பதற்கு தலைமை தாங்கியவர் வில்லியம் பார்குவார். இவர்தான் மலாக்காவின் முதல் பிரித்தானிய ஆளுநர்.[5]

சர் இசுடாம்போர்ட் ராபிள்ஸ் (Sir Stamford Raffles) தலையிட்டு, கோட்டையின் வாயிலை இடிக்காமல் விட்டுவிடுமாறு கேட்டுக் கொண்டார். இல்லை என்றால் அதுவும் உடைக்கப்பட்டு இருக்கும்.

Remove ads

ஜொகூர் சுல்தானகத்தின் ஆதிக்கம்

Thumb
பாஸ்டியன் மிடில்பர்க் புறச்சுவர். கட்டுமானம் 1660-இல் மேற்கொள்ளப்பட்டது. மலாக்கா ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்து உள்ளது.
Thumb
டச்சு சதுக்கம் 1753-இல் கட்டப்பட்டது

டச்சுக்காரர்களுக்கு மலாக்கா நகரம் பெரிய லாபகரமான மையமாகத் தோன்றவில்லை. மற்ற ஐரோப்பிய சக்திகளிடம் மலாக்கா நகரத்தை இழப்பதைத் தடுக்கவும்; இழந்த பிறகு இயற்கையாக வரும் போட்டியைத் தடுக்கவும்; மலாக்கா நகரத்தைத் தக்க வைத்துக் கொண்டனர்.[6]

அதன் விளைவாக, 17-ஆம் நூற்றாண்டில், மலாக்கா ஒரு முக்கியமான துறைமுகமாக இல்லாமல் போனது. அத்துடன், ஜொகூர் சுல்தானகத்தில் புதிதாகச் சில துறைமுகங்கள் திறக்கப் பட்டன. டச்சுக்காரர்களுடன் ஏற்பட்ட கூட்டணியால், தென்கிழக்காசியப் பிராந்தியத்தில், ஜொகூர் சுல்தானகம் ஆதிக்கம் செலுத்தும் ஓர் உள்ளூர் சக்தியாகவும் மாறியது.[7]

மலாக்காவை ஒரு பெரிய வாணிக மையமாக உருவாக்க வேண்டும் என்பது டச்சுக்காரர்களின் நோக்கம் அல்ல. அவர்களுடைய பிரதான வாணிக இலக்குகள் இந்தோனேசியா பத்தேவியாவில் இருந்தன. ஆகவே அவர்களுடைய சிந்தனை, சித்தாந்தம், செல்வாக்கு அனைத்தும் பத்தேவியாவைச் சுற்றிச் சுற்றியே வலம் வந்தன. மலாக்காவை இரண்டாம் பட்சமாகவே கருதினர்.

டச்சுக்காரர்கள் மலாக்காவின் மீது படையெடுப்பு

Thumb
1854 இல் பிரித்தானியரின் ஆட்சியில் மலாக்கா

1641 ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் மலாக்காவின் மீது படை எடுத்தனர். 130 ஆண்டுகள் போர்த்துகீசியர்களின் வசம் இருந்த மலாக்கா வீழ்ந்தது. இந்தத் தாக்குதலில் டச்சுக்காரர்களுக்கு ஜொகூர் சுல்தான் பெரிதும் உதவினார்.[8] 1825-ஆம் ஆண்டு வரை மலாக்காவின் வாணிகம் டச்சுக்காரர்களின் பிடிக்குள் இருந்தது.

ஆங்கிலோ-டச்சு உடன்படிக்கை

டச்சுக்காரர்கள் மலாக்காவில் பல ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள், பொது மண்டபங்களைக் கட்டி உள்ளனர். மலாக்காவின் வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாக விளங்கும் ஸ்தாடைஸ் (Stadthuys) எனும் சிகப்புக் கட்டிடத்தைக் கட்டியவர்களும் டச்சுக்காரர்கள். மலாக்காவின் பிரதான சுற்றுலா மையமாக விளங்கும் மணிக்கூண்டு வளாகத்தில் சிகப்பு நிறக் கட்டிடங்கள் நிறைய உள்ளன. இவற்றைக் கட்டியவர்களும் டச்சுக்காரர்கள் தான்.

1824 ஆம் ஆண்டு ஆங்கிலோ-டச்சு உடன்படிக்கை கையெழுத்தானது. அந்த உடன்படிக்கையின் படி சுமத்திராவில் இருந்த பென்கூலன் டச்சுக்காரர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. மலாக்கா நகரம் ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. ஆங்கிலேய வணிக நிறுவனமான பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி மலாக்காவை 1826 லிருந்து 1946 வரை நிர்வாகம் செய்தது.

பிரித்தானிய காலனித்துவ ஆட்சி

அதன் பின்னர் மலாக்காவின் நிர்வாகம் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் வந்தது. 1946-இல் நீரிணை குடியேற்றங்கள் (Straits Settlements) உருவானது. இந்த அமைப்பில் சிங்கப்பூர், பினாங்கு பிரதேசங்களுடன் மலாக்காவும் இணைக்கப் பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு மலாயா ஒன்றியம் எனும் மலாயன் யூனியன் அமைப்பின் கீழ் மலாக்கா சேர்க்கப் பட்டது.

Remove ads

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளிப்புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads