மலாக்கா மாநகரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலாக்கா மாநகரம் (ஆங்கிலம்: Malacca Historical City; மலாய்: Bandaraya Melaka) என்பது மலாக்கா மாநிலத்தின் தலைநகரமாகும். ஸ்ரீ நெகிரி என அழைக்கப்படும் மலாக்கா மாநிலத்தின் நிர்வாக மேம்பாட்டு மையம்; மலாக்கா முதலமைச்சரின் பணிமனை; மாநில அரசாங்கச் செயலாளரின் பணிமனை; மலாக்கா மாநில சட்டமன்றம் போன்றவை இங்கு உள்ளன.
யுனெஸ்கோ நிறுவனம், 2008 ஆம் ஆண்டு சூலை 7-ஆம் தேதி மலாக்காவை உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவித்தது.[1] அதே திகதியில், பினாங்கு மாநிலத்தின் ஜோர்ஜ் டவுன் மாநகரமும் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.[2]
Remove ads
வரலாறு
இப்போது மலாக்கா மாநகரம் அமைந்து இருக்கும் இடம்தான், முன்பு காலத்தில் மலாக்கா வரலாற்றின் மையமாக இருந்தது. அங்குதான் மலாக்கா சுல்தானகத்தின் தலைநகரமும் இருந்தது. 1511-ஆம் ஆண்டு, அந்த நகரத்தைப் போர்த்துகீசியர்கள் கைப்பற்றும் வரையில், தென்கிழக்காசியாவில் நுழைமுகத் துறைமுகமாக இருந்தது.
மலாக்கா சுல்தானகம் வீழ்ச்சியுற்ற பின்னர், சில நூறு ஆண்டுகளாக, போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரித்தானியர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். அவர்களுடைய ஆளுமையின் தாக்கங்களை இன்றும் மலாக்காவில் காண முடியும். அவர்கள் விட்டுச் சென்ற கலாசார பின்னணிகள், கட்டிட வடிவமைப்புகள் இன்னும் மலாக்கா மாநகரில் பிரதிபலிக்கின்றன.
மலாக்கா சுல்தானகம்
14-ஆம் நூற்றாண்டின் இறுதிவாக்கில், மஜாபாகித்[3] பேரரசின் தலைமைத்துவத்தில் போராட்டம் ஏற்பட்ட கால கட்டம். அந்தக் கட்டத்தில் இருந்துதான் மலாக்காவின் வரலாறும் தொடங்குகிறது. மஜாபாகித் பேரரசின் தலைமைத்துவத்திற்கு நடந்த போராட்டத்தில், சுமத்திரா, பலெம்பாங்கைச் சேர்ந்த இளவரசர் பரமேசுவராவுக்கும் பங்கு உண்டு.[4]
அந்தத் தலைமைத்துவப் போராட்டத்தில் பரமேசுவரா தோற்கடிக்கப்பட்டதும், பாதுகாப்பு கோரி துமாசிக்கிற்குத் தப்பிச் சென்றார். துமாசிக் என்பது இப்போதைய சிங்கப்பூர். அந்தச் சமயத்தில் துமாசிக் நிலப்பகுதி, சயாம் (தாய்லாந்து) நாட்டின் அதிகாரக் கீழ்மையில் இருந்தது. அந்தக் கட்டத்தில் துமாசிக்கை ஆட்சி செய்த உள்ளூர் தலைவர் கொல்லப்பட்டார்.[5] அதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட பரமேஸ்வரா, துமாசிக்கின் ஆளுநராகத் தம்மைப் பிரகடனப் படுத்திக் கொண்டார்.
சயாம் படையெடுப்பு
இறுதிக் கட்டமாக 1391-இல், துமாசிக்கின் மீது சயாம் படையெடுத்து வந்தது.[6] அந்தப் படையெடுப்பில் பரமேசுவரா தோற்கடிக்கப் பட்டார்.[5] 1396-இல், அவர் மூவார் பகுதிக்குப் பின்வாங்கிச் சென்றார். மூவார் பகுதியில் பியாவாக் பூசோக் (அழுகிப் போன உடும்பு) எனும் ஓர் இடம் இருக்கிறது.[7] அதற்கு அருகாமையில் கோத்தா பூரோக் எனும் மற்றோர் இடமும் இருக்கிறது.[5][8]
இந்த இரு இடங்களில் ஏதாவது ஓர் இடத்தில் தன்னுடைய புதிய அரசை உருவாக்கலாம் என்று பரமேசுவரா தீர்மானித்தார். நன்கு ஆராய்ந்து பார்த்ததில் அந்த இடங்கள் இரண்டுமே பரமேசுவராவுக்குப் பிடிக்கவில்லை. ஒரு புதிய அரசு அமைக்கப் பொருத்தமாகவும் அமையவில்லை. ஆகவே அவர் தொடர்ந்து வட திசையை நோக்கிப் பயணத்தை மேற்கொண்டார்.
செனிங் ஊஜோங்
அப்படி போய்க் கொண்டிருக்கும் போது செனிங் ஊஜோங் எனும் இடத்தை அடைந்தார். இந்தச் செனிங் ஊஜோங் இப்போது சுங்கை ஊஜோங் என்று அழைக்கப் படுகிறது. இந்த இடத்திலிருந்து, சற்று தள்ளி ஒரு மீன்பிடி கிராமம் தென்பட்டது. அந்தக் கிராமம் பெர்த்தாம் ஆற்றின் துறைமுகத்தில் இருந்தது. பெர்த்தாம் ஆறு இப்போது மலாக்கா ஆறு என்று அழைக்கப் படுகின்றது.[5][8] அந்த மீன்பிடி கிராமம்தான் இப்போதைய மலாக்கா மாநகரம் உருவான இடம்.[5]
மலாக்காவிற்குப் பெயர் வந்த வரலாறு
பரமேசுவரா ஒரு நாள் ஒரு மரத்தின் அடியில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி, அவரை அதிர்ச்சி அடையச் செய்தது. அவருடன் இருந்த வேட்டை நாய்களில் ஒன்றை ஒரு சருகு மான் எட்டி உதைத்து ஆற்றில் தள்ளியது.[9] சருகுமானின் துணிச்சலைக் கண்டு பரமேஸ்வரா பிரமித்துப் போனார்.
பலவீனமான ஒன்று வலிமையான ஒன்றை எதிர்கொள்வது நல்ல ஒரு சகுனம் என்று கருதினார். எனவே, அவர் ஓய்வு எடுத்த இடத்திலேயே ஒரு அரசை உருவாக்கலாமே எனும் ஓர் எண்ணம் எழுந்தது. அதன்படி மலாக்கா எனும் பேரரசு அதே இடத்தில் உருவானது.[5]
பரமேசுவரா சாய்ந்து ஓய்வு எடுத்த மரத்தின் பெயரும் மலாக்கா. அந்த மரத்தின் பெயரையே பரமேசுவரா அந்த இடத்திற்கும் வைத்து விட்டார். இதுதான் இப்போதைய மலாக்காவிற்குப் பெயர் வந்த வரலாறு.[10]
பரமேஸ்வராவின் சரியான முடிவு
பின்னர், முன்னதாக அங்கு வாழ்ந்த மீனவர்களையும், உள்ளூர் மக்களையும் பரமேஸ்வரா ஒன்றிணைத்தார். ஓர் ஒன்றுபட்ட குடியிருப்புப் பகுதியைத் தோற்றுவித்தார். அந்தக் கால கட்டத்தில் இந்தியா, இலங்கை, பாரசீக நாடுகளுக்கு வாணிகம் செய்யப் போகும் சீனக் கப்பல்கள் மலாக்கா நீரிணையைப் பயன் படுத்தி வந்தன. அந்தக் கப்பல்கள் மலாக்கா துறைமுகத்தில் அணைந்து போகும் வகையில், சில சிறப்பான சலுகைகள் வழங்கப்பட்டன. அதனால் நிறைய வணிகக் கப்பல்கள் மலாக்காவிற்கு வரத் தொடங்கின.
மிகக் குறுகிய காலத்தில், வணிகத் துறையில் மலாக்கா மேம்பாடு கண்டது. தென்கிழக்காசியாவில் ஒரு பிரசித்தி பெற்ற வணிக மையமாகவும் உருவெடுத்தது. பரமேஸ்வரா தன் உறைவிடமாக மலாக்காவைத் தேர்வு செய்தது மிகச் சரியான முடிவு என வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.[11]
மலாக்கா சுல்தான்கள் | ஆட்சி காலம் |
---|---|
பரமேசுவரா | |
மெகாட் இசுகந்தர் ஷா | |
சுல்தான் முகமது ஷா | |
பரமேசுவரா தேவ ஷா | |
சுல்தான் முசபர் ஷா | |
சுல்தான் மன்சூர் ஷா | |
சுல்தான் அலாவுதீன் ரியாட் ஷா | |
சுல்தான் மகமுட் ஷா | |
சுல்தான் அகமட் ஷா | |
சுல்தான் மகமுட் ஷா |
Remove ads
ஐரோப்பியர்களின் வருகை
அல்பான்சோ டி அல்புகர்க் என்பவர், 1511 ஏப்ரல் மாதம், இந்தியா, கோவாவில் இருந்து மலாக்காவிற்கு வந்தார். 18 கப்பல்களில் 1200 போர் வீரர்களையும் கொண்டு வந்தார்.[12] மலாக்கா பேரரசின் மீது போர் புரிவதற்காக வந்தார். அவர் வந்ததற்கும் காரணங்கள் உள்ளன.
அல்பான்சோ டி அல்புகர்க் வருவதற்கு முன்னர், 1509-இல், லோபெஸ் டி செக்குயிரா எனும் போர்த்துகீசிய மாலுமி, மலாக்காவிற்கு வந்து இருந்தார். மலாக்காவிலும் மடகஸ்கார் தீவிலும் வணிகம் செய்யும் வாய்ப்புகளைத் தேடி லோபெஸ் டி செக்குயிரா மலாக்காவிற்கு வந்தார்.[13] போர்த்துகீசியர்கள் வியாபாரம் செய்யும் எண்ணத்துடன் தான் முதலில் மலாக்கா வந்தனர்.[13]
மலாக்கா மீது அல்புகர்க் படையெடுப்பு
அப்போது சுல்தான் மகமுட் ஷா மலாக்காவின் சுல்தானாக மகமுட் ஷா இருந்தார். சுல்தானிடம் லோபெஸ் டி செக்குயிராவின் அணுகு முறை சரியாக அமையவில்லை. சுல்தான் மகமுட் ஷா கோபம் அடைந்தார். அதனால் லோபெஸ் டி செக்குயிராவைக் கொலை செய்ய சுல்தான் மகமுட் ஷா சூழ்ச்சி செய்தார். இதை லோபெஸ் டி செக்குயிரா ஒற்றர்கள் மூலமாகத் தெரிந்து கொண்டார்.
அதனால் இரவோடு இரவாக இந்தியாவிற்குத் தப்பிச் சென்றார். அந்தச் சூழ்ச்சியில் லோபெஸ் டி செக்குயிராவின் உதவியாளர்கள் சிலர் கொல்லப் பட்டனர். ஆகவே, பழி வாங்கும் திட்டத்துடன் தான் அல்பான்சோ டி அல்புகர்க், மலாக்காவின் மீது படை எடுத்தார்.[14]
மலாக்கா கடல்கரையில் ஒரு பெரிய போர் நடந்தது. போர்த்துகீசியர்கள் துப்பாக்கி, பீரங்கிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். சுல்தான் மகமுட் ஷாவிடம் அத்தகைய ஆயுதங்கள் எதுவும் இல்லை. அந்தப் போரில் சுல்தான் மகமுட் ஷா தோல்வி அடைந்தார். பின்னர் அவர் தன்னுடைய விசுவாசிகளுடன் பகாங் காட்டிற்குள் சென்று மறைந்து கொண்டார்.[13]
மலாக்காவைக் கைப்பற்றிய போர்த்துகீசியர்கள் தங்கள் கவனத்தை வியாபாரத்தில் செலுத்தினர். மலாக்கா மக்களின் உள் விவகாரங்களில் போர்த்துகீசியர்கள் அதிகமாகத் தலையிடவில்லை.
போர்த்துகீசியர்கள் கட்டிய ஆ பாமோசா கோட்டை பரப்புத் தொடர் காட்சி
டச்சுக்காரர்கள் ஆட்சி
1641-ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் மலாக்காவின் மீது படை எடுத்தனர். 130 ஆண்டுகள் போர்த்துகீசியர்களின் வசம் இருந்த மலாக்கா வீழ்ந்தது. இந்தத் தாக்குதலில் டச்சுக்காரர்களுக்கு ஜொகூர் சுல்தான் பெரிதும் உதவினார்.[15] 1798-ஆம் ஆண்டு வரை மலாக்காவின் வாணிகம் டச்சுக்காரர்களின் கைவசம் இருந்தது.
மலாக்காவை ஒரு வாணிக மையமாக உருவாக்க வேண்டும் என்பது டச்சுக்காரர்களின் நோக்கம் அல்ல. அவர்களுடைய பிரதான வாணிப இலக்குகள் இந்தோனேசியா பத்தேவியாவில் இருந்தன. 1795 வரையில் டச்சுக்காரர்கள் மலாக்காவை ஆட்சி செய்தனர். ஐரோப்பாவில் பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்றது. அதனால் சில ஆண்டுகள் மலாக்கா பிரித்தானியர்களின் கைவசம் இருந்தது.
மலாக்காவில் டச்சுக்காரர்கள் பல ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள், பொது மண்டபங்களைக் கட்டி உள்ளனர். மலாக்காவின் வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாக விளங்கும் ஸ்தாடைஸ் (Stadthuys) எனும் சிகப்புக் கட்டிடத்தைக் கட்டியவர்களும் டச்சுக்காரர்கள். மலாக்காவின் பிரதான சுற்றுலா மையமாக விளங்கும் மணிக்கூண்டு வளாகத்தில் சிகப்பு நிறக் கட்டிடங்கள் நிறைய உள்ளன. இவற்றைக் கட்டியவர்களும் மலாக்கா டச்சுக்காரர்கள் தான்.[16]
Remove ads
மலாக்கா மிடல்பர்க் பேசன் கோட்டை
1641 முதல் 1824 வரை மலாக்காவை டச்சுக்காரர்கள் ஆட்சி செய்த போது டச்சுக்காரர்களால் மிடல்பர்க் கோட்டை கட்டப்பட்டு இருக்கலாம் என்று மலாக்கா அரும்காட்சிய அமைப்பு (Malacca Museums Corporation) கூறுகின்றது. 2006-2007-ஆம் ஆண்டுகளில் மிடல்பர்க் கோட்டை மீட்டு எடுக்கப்பட்டது.
இதற்கும் முன்னதாக சூன் 2004-இல், டாத்தாரான் பாலவான் (Dataran Pahlawan) எனும் வீரர்கள் சதுக்கம் கட்டப்படும் போது மலாக்கா சாந்தியாகோ கோட்டை (Santiago Bastion) என்ற காவற்கோபுரம் கண்டுபிடிக்கப்பட்டது.[17][18]
ஆங்கிலோ-டச்சு உடன்படிக்கை
1824-ஆம் ஆண்டு ஆங்கிலோ-டச்சு உடன்படிக்கை கையெழுத்தானது.[19] அந்த உடன்படிக்கையின் படி சுமத்திராவில் இருந்த பென்கூலன் டச்சுக்காரர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. மலாக்கா நகரம் ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. ஆங்கிலேய வணிக நிறுவனமான பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி மலாக்காவை 1826-இல் இருந்து 1946 வரை நிர்வாகம் செய்தது.
அதன் பின்னர் மலாக்காவின் நிர்வாகம் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் வந்தது. 1946-இல் நீரிணை குடியேற்றங்கள் (Straits Settlements) உருவாகின.[20] இதில் சிங்கப்பூர், பினாங்கு பிரதேசங்களுடன் மலாக்காவும் இணைக்கப் பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு மலாயா ஒன்றியம் எனும் ஐக்கிய மலாயா அமைப்பின் கீழ் மலாக்கா இணைக்கப் பட்டது.
தட்பபெப்ப நிலை
Remove ads
படத்தொகுப்பு
- வரலாற்று மலாக்கா மாநகராண்மைக் கழகம்
- மலாக்கா கடற்கரை பள்ளிவாசல்
- ஜோங்கர் சாலை
- இப்போதைய மலாக்கா
- மலாக்கா கடல்சார் காட்சியகம்
- ஸ்ரீ பொய்யாத விநாயகர் ஆலயம்
- மலாக்கா ஆறு
- மலாக்கா ஆற்றோர நடைபாதை
- மலாக்கா ஆற்றோர இரவுக் காட்சி
- சீன இளவரசி ஹங் லீ போ கிணறு
- மலாக்கா நகரத்தார் தெரு
- மலாக்கா போர்வீரர்கள் கோபுரம்
- மலாக்கா பா ஆன் கோங் சீனர் ஆலயம்
- மலாக்கா டச்சுகாரர்கள் கல்லறை
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads