மலாயா ஒன்றியம்
தீபகற்ப மலேசியாவின் மாநிலங்களும் நீரிணை குடியேற்ற மாநிலங்களும் ஒன்றாக இணைக்கப்பட்ட ஓர் ஒன்ற From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலாயா ஒன்றியம் அல்லது மலாயன் யூனியன் (ஆங்கிலம்: Malayan Union; மலாய் மொழி: Malayan Union; சீனம்: 马来亚联盟; ஜாவி: ملايان يونيان) என்பது 1946-ஆம் ஆண்டில், தீபகற்ப மலேசியாவின் மாநிலங்களும் (Malay States); மற்றும் நீரிணை குடியேற்ற மாநிலங்களும் (Straits Settlements) ஒன்றாக இணைக்கப்பட்ட ஓர் ஒன்றியமாகும்.
பிரித்தானிய மலாயாவில் (British Malaya); பிரித்தானிய நிர்வாகத்தை எளிமைப்படுத்த, ஒரே அரசாங்கத்தின் கீழ், தீபகற்ப மலேசியா மாநிலங்கள் ஒன்றிணைக்கப் பட்டன. அந்த ஒன்றிணைப்பை மலாயா ஒன்றியம் என்று அழைத்தார்கள்.
இந்த மலாயா ஒன்றியம் உருவாக்கத்திற்கு மலாய் இன மக்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, ஈராண்டுகள் கழித்து, 1948-இல், மலாயா ஒன்றியம் என்பது மலாயா கூட்டமைப்பு (Federation of Malaya) என மறுச் சீரமைப்பு செய்யப்பட்டது.
Remove ads
வரலாறு
மலாயன் ஒன்றியத்தின் உருவாக்கம்
இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் பிரித்தானியர்கள் மலாயாவுக்கு மறுபடியும் திரும்பினர். இரண்டாம் உலகப் போருக்கு முன்னர், பிரித்தானிய மலாயாவின் மாநிலங்கள் மூன்று அரசியல் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தன.
மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள்
- மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள்
(Federated Malay States) (FMS) - (Protectorate States)
மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்கள்
- மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்கள்
(Unfederated Malay States) - (Protected States)
நீரிணைக் குடியேற்ற மாநிலங்கள்
- நீரிணைக் குடியேற்ற மாநிலங்கள்
(Straits Settlements) (Crown Colony States)
சர் எட்வர்ட் ஜென்ட்
மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் (Federated Malay States); மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்கள் (Unfederated Malay States); பினாங்கு - மலாக்கா மாநிலங்களைக் கொண்ட நீரிணைக் குடியேற்ற மாநிலங்கள் (Straits Settlements) ஆகியவற்றை இணைத்து ஒரே நிர்வாகத்தின் கீழ் மலாயா ஒன்றியம் உருவானது.
1946 ஏப்ரல் 1-ஆம் தேதி, மலாயா ஒன்றியம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. அதன் ஆளுநராக சர் எட்வர்ட் ஜென்ட் (Sir Edward Gent) என்பவர் பதவி ஏற்றுக் கொண்டார். மலாயா ஒன்றியத்தின் தலைநகரம் கோலாலம்பூர் என்றும் அறிவிக்கப்பட்டது.
முன்னாள் நீரிணைக் குடியேற்ற மாநிலங்களில் ஒன்றான சிங்கப்பூர் தனி ஒரு முடியாட்சிக் காலனி (Crown Colony of Singapore) என்றும் அறிவிக்கப்பட்டது.
மலாய் ஆட்சியாளர்களின் ஒப்புதல்
மலாயா ஒன்றியம் அமைக்கப்படுவதற்கு முன்னர், மே 1944-இல், பிரித்தானியா போர் அமைச்சரவைக்கு மலாயா ஒன்றியம் பற்றிய திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. பிரித்தானிய அரசு சம்மதம் வழங்கியது.
மலாயா ஒன்றியம் அமைக்கப்பட வேண்டுமானால் மலாயாவை ஆட்சி செய்து வந்த மாநில ஆட்சியாளர்கள் சம்மதிக்க வேண்டும். அதன் தொடர்பாக, மலாய் மாநில ஆட்சியாளர்களின் ஒப்புதலைச் சேகரிக்கும் பணி சர் அரோல்ட் மெக்மைக்கேல் (Sir Harold MacMichael) என்பவரிடம் வழங்கப்பட்டது.[1]
பதவி நீக்க அச்சுறுத்தல்
குறுகிய காலத்தில், அவரால் (சர் அரோல்ட் மெக்மைக்கேல்) அனைத்து மலாய் ஆட்சியாளர்களின் ஒப்புதலையும் பெற முடிந்தது. இந்த ஒன்றிய அமைப்பினால் மலாய் ஆட்சியாளர்கள் தங்களின் அரசியல் அதிகாரத்தைப் பெரும் அளவில் இழக்க நேரிட்டது.
இருந்த போதிலும், அவர்களின் சம்மதம் கிடைத்தது. சம்மத்திற்கான காரணங்கள் ஆழமாய் விவாதிக்கப்பட்டன. மலாய் ஆட்சியாளர்கள் பதவி நீக்கம் செய்யப் படலாம் எனும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கலாம் என்பதே பலரின் கருத்து.[2]
குடியுரிமைச் சலுகைகள்
மலாயா ஒன்றியம் பற்றி அறிவிக்கப்பட்டபோது, குடியுரிமைக்கு விண்ணப்பிக்க விரும்பும் தீபகற்ப மலேசியாவில் வாழும் மக்களுக்கு மலாயா ஒன்றியம் சம உரிமைகளை வழங்கியது.
பிரித்தானிய மலாயா அல்லது சிங்கப்பூரில் ஏதேனும் ஒரு மாநிலத்தில் 15 பிப்ரவரி 1942-க்கு முன் பிறந்து, அங்கேயே வாழ்ந்தவர்களுக்கு குடியுரிமை தானாகவே வழங்கப்பட்டது.
பிரித்தானிய மலாயா அல்லது நீரிணைக் குடியேற்ற மாநிலங்களுக்கு வெளியே பிறந்தவர்களாக இருந்தால், அவர்களின் தந்தைமார்கள் மலாயா ஒன்றியத்தின் குடிமகன்களாக இருக்க வேண்டும். குடியுரிமை பெறுவதில் எளிமையான போக்கு கடைபிடிக்கப் பட்டது.[2]
குடியுரிமை முன்மொழிவுக்கு எதிர்ப்பு
இருப்பினும், குடியுரிமைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. குடியுரிமை முன்மொழிவுக்கு எதிரான எதிர்ப்பின் காரணமாக, அந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பல சீன மற்றும் இந்திய குடியிருப்பாளர்கள் மலாயா குடியுரிமையைப் பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்கினார்கள்.[3]
மலாய் மாநிலங்களின் பாரம்பரிய ஆட்சியாளர்களான சுல்தான்கள், மத விசயங்களைத் தவிர மற்ற அனைத்து அதிகாரங்களையும் பிரித்தானிய அரசிடம் ஒப்படைத்தனர். அதுவே மலாயா தீபகற்பத்தில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சி முறைப்படி தொடங்கப் படுவதை முன்னோட்டமாகக் காட்டியது.
கட்டாயமான முறைபாடுகள்
மலாயா சுல்தான்களின் அனுமதியைப் பெறுவதற்கு சர் அரோல்டு மெக்மைக்கல், பயன்படுத்திய கட்டாயமான முறைபாடுகள்:
- சுல்தான்களின் அதிகாரம் குறைக்கப் படுவது;
- சுல்தான் எனும் பாரம்பரிய பதவி அதிபர் என்று மாற்றம் காண்பது;
- மலாய்க்காரர்கள் அல்லாத குடியேறிகளுக்கு இனப் பாகுபாடு இல்லாமல், சரிசமமான உரிமைகளுடன் கட்டுப்பாடற்ற குடியுரிமை வழங்குவது;
- சீனக் குடியேறிகளின் வம்சாவளியினர் அனைவருக்கும் கட்டுப்பாடற்ற குடியுரிமை வழங்குவது
மலாயா ஒன்றியத்தின் மூலமாக மலாய் மாநிலங்கள் பிரித்தானிய முடியாட்சிக்குள் கொண்டு வரப் படுவதாக மலாய்க்காரர்கள் அச்சம் அடைந்தனர். மேலும் மலாய்க்காரர்களின் அரசுரிமையைப் பாதிக்கக்கூடிய அம்சங்களும் அந்தச் சட்டக் கட்டமைப்புகளில் இருந்தன. அவையே எதிர்ப்புகளுக்கு முக்கிய காரணங்களாகும்.[4]
சுல்தான்களின் அரசியல் அதிகாரத் தகுதி
மலாயா ஒன்றியம் ஒரு பிரித்தானிய ஆளுநரின் அதிகார வரம்பிற்குள் உட்படுத்தப்பட்டது. மாநில ஆளுநர்களாகப் பிரித்தானிய அதிகாரிகள் (British Residents) நியமிக்கப் பட்டதும் சுல்தான்களின் அரசியல் அதிகாரத் தகுதி வெகுவாகக் குறைக்கப்பட்டது.
1946-இல் ஓர் உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டது. அதில் அரோல்ட் கர்வென் வில்லன் (Harold Curwen Willan) என்பவர் மட்டுமே தலைமை நீதிபதியாக இருந்தார். உள்ளூர் நீதிபதிகள் நியமிக்கப்படவில்லை.[5]
மலாயாவில் இருந்த அனைத்து சுல்தான்களின் ஆளுமைகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, மத்திய அரசாங்கத்தைப் பிரித்தானியர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது பிரித்தானியர்களின் இலக்காகும். அதாவது மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுக்குள் பிரித்தானிய ஆளுமையைக் கொண்டு வருவது.
பிரித்தானியர் ஆதிக்கம்
மலாய்க்காரர்கள் மலாயா ஒன்றியம் உருவானதைப் பொதுவாக எதிர்த்தனர். சுல்தான்களின் அங்கீகாரத்தைக் குறைத்தல்; சுல்தான்களின் அதிகாரங்களைக் குறைத்தல்; அனைத்து உயர்ப் பதவிகளிலும் பிரித்தானியர் ஆதிக்கம்; போன்றவற்றுடன் சர் அரோல்ட் மெக்மைக்கேல் பயன்படுத்திய அதிகார அழுத்த முறைகள்தான் அந்த எதிர்ப்புக்குக் காரணம் ஆகும்.
புலம்பெயர்ந்தோருக்குக் குடியுரிமை எளிதில் கிடைப்பது மலாய்க்காரர்களுக்கு மனநிறைவை அளிக்கவில்லை. அதனால் தங்களின் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.
மலாய்க்காரர்களுக்கு அப்போதைய இந்தியர்கள் ஒரு மருட்டலாகத் தெரியவில்லை. சமயக் கோட்பாடுகளைத் தவிர, கலை, கலாசாரங்களின்படி இரு இனங்களும் சமரசமாய் ஒத்துப் போகக் கூடியதாய் இருந்தன. ஆனால், சீனர்களின் பொருளாதார ஆதிக்கத் தன்மைதான் மலாய்க்காரர்களை அச்சமடையச் செய்தது. சீனர்களின் தனிப்பட்ட பொருளாதார ஆதிக்கம் மட்டுமே மலாய்க்காரர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது.[6]
ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு
தவிர, மலாயா ஒன்றியத்தில் மலாய்க்காரர்கள் அல்லாத சீனர்களும், இந்தியர்களும் இடம் பெற வேண்டும் என்று பிரித்தானியர்கள் தீவிரம் காட்டினர். அதுதான் மலாயா ஒன்றியத்தை பிரித்தானியர்கள் உருவாக்கியதற்குத் தலையாய காரணம் ஆகும்.
மலாய்க்காரர்களின் அரசியல் கட்சியான ஐக்கிய மலாய் தேசிய அமைப்பை (UMNO), உருவாக்கியவர் டத்தோ ஓன் ஜாபார் (Onn Jaafar).
அரசியல் உரிமைகள்
இந்தக் கட்சி, 10 மே 1946-இல், மலாயா ஒன்றியத்திற்கு எதிரான எதிர்ப்பை வழிநடத்தியது. சுல்தான்கள் தங்களின் அரசியல் உரிமைகளை இழந்ததற்காக மலாய்க்காரர்கள் தங்கள் தலையில் வெள்ளை பட்டைகளை அணிந்தனர்.
மலாயா ஒன்றியத்தின் மூலமாக மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கு கட்டுப்பாடற்ற குடியுரிமை வழங்கப் படுவதைப் பல மலாய்க்காரர் அமைப்புகள் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்தன. அதன் பிறகு பல மலாய்க்காரர்கள் மாநாடுகள் நடைபெற்றன. அவற்றின்ன் நீட்சியாக 1946 மே 10-இல், வேறு ஒரு தேசியக் கட்சி, அம்னோ எனும் பெயரில் தோற்றம் கண்டது.
Remove ads
சுருக்கமான வரலாறு
1946 மார்ச் 1 இல், மலாயா, சிங்கப்பூரில் இருந்த மலாய் அமைப்புகள் கோலாலம்பூரில் ஒன்று கூடி ஒரு மாநாட்டை நடத்தின. அந்த மாநாட்டிற்கு அகில மலாயா மலாய் மாநாடு என்று பெயர். அதற்கு டத்தோ ஓன் ஜாபார் தலைமை தாங்கினார். ஒரு மாதம் கழித்து 1946 ஏப்ரல் 1-இல், பிரித்தானியர்களால் மலாயா ஒன்றியம் தொடக்கி வைக்கப்பட்டது.
அப்போதைய பிரித்தானியத் தலைமை ஆளுநர் எட்வர்ட் ஜெண்ட் மலாயா ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ஆனால், மலாய்க்காரர்களும் மலாய் ஆளுநர்களும் மலாயா ஒன்றியத்தை ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணிப்பு செய்தனர்.
1945 மே 11 இல் ஜொகூர் பாருவில் மற்றோர் அகில மலாயா மலாய் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் மலாய்க்காரர்களுக்காக ஓர் அரசியல் கட்சி தேவை என்பதால் அம்னோ எனும் தேசிய ஐக்கிய மலாய்க்காரர்கள் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. டத்தோ ஓன் ஜாபார் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார்.
மலாயா விடுதலைக் கட்சி
அம்னோ தோற்றுவிக்கப் பட்டாலும், மலாயா ஒன்றியத்தை டத்தோ ஓன் ஜாபார் ஆதரித்து வந்தார். ஆனால், அவருடைய நோக்கங்களை மலாய் அமைப்புகள் புறக்கணித்து வந்தன. தன்னுடைய நோக்கங்களுக்கு தொடர்ந்தால் போல எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டதால், விரக்தி அடைந்த டத்தோ ஓன் ஜாபார் அம்னோவில் இருந்து வெளியேறி மலாயா விடுதலைக் கட்சி (Independence of Malaya Party) (IMP) எனும் புதியக் கட்சியைத் தோற்றுவித்தார்.
டத்தோ ஓன் ஜாபார் வெளியேறியதும், அம்னோவின் தலைமைப் பொறுப்பிற்கு துங்கு அப்துல் ரகுமான் மாற்றுத் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.
Remove ads
மலாயா கூட்டமைப்பு தோற்றம்
மலாயா ஒன்றியம் தொடங்கப்பட்ட பிறகு, அம்னோவின் கீழ் மலாய்க்காரர்கள் தொடர்ந்து மலாயா ஒன்றியத்தை எதிர்த்தனர். பிரித்தானிய ஆளுநர்களின் பதவியேற்பு விழாக்களில் கலந்துகொள்ள மறுத்தனர். அதன் மூலம் அவர்கள் தங்களின் எதிர்ப்பைக் காட்டினர்.
பிரித்தானியர்களின் ஆலோசனைக் குழுக் கூட்டங்களில் (Advisory Councils) பங்கேற்க மறுத்தனர். அரசாங்க அதிகாரத்துவத்தில் மலாய்க்காரர்களின் பங்கேற்பு மற்றும் அரசியல் செயல்முறைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. பிரித்தானியர்கள் இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்ட முயற்சித்தனர்.
அரசியல் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கு முன் மலாயாவில் உள்ள முக்கிய இனங்களின் கருத்துக்களைக் கருத்தில் கொள்ள நடவடிக்கை எடுத்தனர். அதன் பின்னர் மலாயா ஒன்றியம் கலைக்கப்பட்டது. 1 பிப்ரவரி 1948-இல் மலாயா ஒன்றியம் என்பது மலாயா கூட்டமைப்பு (Federation of Malaya) என்று மாற்றம் கண்டது.
பரிணாமத்தை நோக்கி மலேசியா

மேற்கோள்கள்
சான்று நூல்கள்
மேலும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads