இடைச்செருகிய ஒலிம்பிக் விளையாட்டுகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இடைச்செருகிய ஒலிம்பிக் விளையாட்டுகள் (Intercalated Olympic Games) என்ற பன்னாட்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடர் ஒலிம்பியாட்டின் விளையாட்டுகள் என தற்போது அறியப்படும் ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு இடையேயான கால இடைவெளியின் நடுவில் திட்டமிடப்பட்டிருந்தது. ஒலிம்பிக் விளையாட்டுகளின் சுழற்சியில் இடைச்செருகிய இந்த விளையாட்டுகள் எப்போதுமே ஏதென்ஸ் நகரில் நடைபெறுவதாயிருந்தது. இதற்கு ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு இணையான நிலை தரப்படுவதாயிருந்தது. ஆனால் இத்தகைய போட்டிகள் 1906இல் ஒருமுறை மட்டுமே நடந்தது.[1]
Remove ads
தோற்றம்
முதல் இடைச்செருகிய விளையாட்டுகளை 1901இல் பன்னாட்டு ஒலிம்பிக் குழு நடத்தத் திட்டமிட்டிருந்தது. புதியதாக வடிக்கப்பட்ட நிரல்படி பல நாடுகளில் நடத்தவிருந்த ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கிடையே இடைச்செருகிய ஒலிம்பிக்கை ஏதென்சில் நடத்த திட்டமிடப்பட்டது. ஏதென்சு 1896 போட்டிகளின் வெற்றிகரமான நிகழ்வுக்குப் பின்னர் கிரேக்கர்கள் தங்களால் ஒவ்வொரு நான்காண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக்கை நடத்தவியலும் எனக் கூறினர். போட்டிகளுக்கு வேண்டிய கட்டமைப்புக்கள் தயாராக உள்ளதாலும் வெற்றிகரமாக போட்டிகளை நடத்திக் காட்டியதாலும் இதற்கு மற்றவர்களும் ஆதரவளித்தனர். இருப்பினும் அடுத்த ஒலிம்பிக்கை 1900இல் பாரிசில் நடத்த விரும்பிய பியர் தெ குபர்த்தென் இதனை ஏற்கவில்லை. இதனால் பாரிசு 1900 போட்டிகள் இரண்டாவது ஒலிம்பியாடாக நடந்தேறியது.
இந்த இரண்டாம் ஒலிம்பியாடு மிக கச்சிதமாக நடைபெறாததாலும் 1900இல் பாரிசில் அதே நேரம் நடந்த உலக கண்காட்சியால் மறைக்கப்பட்டதாலும் பன்னாட்டு ஒலிம்பிக் அவையில் கிரேக்க கருத்துருவிற்கு மேலும் ஆதரவு கிடைத்தது. பல நாடுகளில் நடத்த விரும்பிய குபர்த்தெனின் நோக்கத்தையும் சிதைக்காது இடைச்செருகிய ஒலிம்பிக் விளையாட்டுக்களை முன்மொழிந்தனர். இதன்படி இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பெறும். ஒன்று நான்காண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு நாட்டிலும் மற்றொன்று நான்காண்டுகளுக்கு ஒருமுறை எப்போதுமே ஏதென்சிலுமாக நடைபெறும். இது பண்டையக் கால ஒலிம்பிக்கின் நான்காண்டு தொடருடன் வேறுபட்டாலும் பண்டைக் காலத்தில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒழுங்குபடுத்த முடிந்தால் தற்காலத்தில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை ஒழுங்குபடுத்துவது கடினமல்ல என்றும் விவாதிக்கப்பட்டது. 1902ஆம் ஆண்டு மிக நெருக்கமாக இருந்தமையாலும் கிரீசின் உள்நாட்டுப் பிரச்சினைகளாலும் முதல் இடைச்செருகிய ஒலிம்பிக் ஏதென்சில் 1906இல் நடத்த திட்டமிடப்பட்டது.
செயின்ட் லூயிசில் நடந்த 1904 ஒலிம்பிக்கும் லூசியானா கண்காட்சியால் மறைக்கப்பட்டு 1900 பாரிசு ஒலிம்பிக்கைப் போலவே தோல்வியடைந்ததால் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. விரைவாக ஏதென்சு 1896இன் சக்தியை மீளப் பெறவேண்டியிருந்தது. மேலும் செயின்ட். லூயிசில் பங்கேற்காத நாடுகளுக்கு அடுத்த உரோமை 1908 எட்டு ஆண்டுகள் இடைவெளியில் ஏற்பட்டது. இத்தகைய நீண்ட இடைவெளி ஒலிம்பிக் ஆர்வத்தைக் குறைப்பதாக இருந்தது. மேலும் உரோமை நகரமும் உலகக் கண்காட்சியொன்றை நடத்த திட்டமிட்டிருந்தது. இக்காரணங்களால் ஏதென்சில் திட்டமிடப்பட்ட 1906 இடைச்செருகிய விளையாட்டுகள் ஒலிம்பிக் இயக்கத்தை காக்கும் நிகழ்வாக அமைந்தது. குபர்த்தெனின் எதிர்ப்புகளையும் மீறி ப.ஒ.கு கிரேக்க ஒலிம்பிக் குழுவிற்கு தனது முழு ஆதரவை அளித்தது.
Remove ads
இவற்றையும் காண்க
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads