இரத்தினசோதி சரவணமுத்து
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சேர் இரத்தினசோதி சரவணமுத்து (Sir Ratnasothy Saravanamuttu) இலங்கைத் தமிழ் மருத்துவரும் அரசியல்வாதியும் ஆவார். இலங்கை அரசாங்க சபையின் உறுப்பினராக இருந்தவர். இவர் கொழும்பு மாநகரசபை முதல்வராகத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது இலங்கையர் ஆவார்.[1]
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
இரத்தினசோதி சரவணமுத்து அக்டோபர் 1886 இல் கொழும்பு மருத்துவர் வேதாரணியம் சரவணமுத்து, தங்கம்மா ஆகியோருக்குப் பிறந்தார்.[2][3] இவரின் தாயார் யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர்.[4] இவரது தந்தை-வழிப் பாட்டனார் வேதாரணியம் வட இலங்கையில் சுன்னாகம் என்ற சிற்றூரை அமைத்தவர் எனப் பெயர் பெற்றவர்.[5] இரத்தினசோதியுடன் உடன் பிறந்தவர்கள்: ஞானசோதி, தர்மசோதி, பாக்கியசோதி, மாணிக்கசோதி, சப்தரணசோதி ஆகியோர் ஆவர்.[3]
கல்கிசை புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்ற இரத்தினசோதி, பாடசாலையில் படிக்குப் போது பல பரிசில்களை வென்றுள்ளார்.[2][3][5] பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் இவர் சென்னைப் பல்கலைக்கழகம் சென்று அங்கு மருத்துவப் பட்டமும், அறுவை சிகிச்சையில் முதுகலைப் பட்டமும் பெற்றார். பின்னர் உயர்கல்விக்காக ஐக்கிய இராச்சியம் சென்று, அங்கு அறுவை மருத்துவத்தில் வேத்தியர் கல்லூரி உறுப்புரிமை பெற்றார்.[2][3] பட்டம் பெற்று இலங்கை திரும்பிய இரத்தினசோதி வட கொழும்பில் தனியார் மருத்துவமனை ஒன்றை ஆரம்பித்து மருத்துவராகப் பணியாற்றினார்.[3]
Remove ads
அரசியலில்
1931 அரசாங்க சபைத் தேர்தலில் கொழும்பு வடக்குத் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அரசாங்க சபை உறுப்பினரானார்.[3][6] ஆனாலும், தேர்தலில் முறைகேடுகள் செய்ததாக தேர்தல் நீதிபதி ஒருவரினால் குற்றம் சாட்டப்பட்டு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.[3][7] இவரது இடத்திற்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் இவரது மனைவி நேசம் சரவணமுத்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். அரசாங்க சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட இரண்டாவது பெண் உறுப்பினர் இவராவார்.[3][7][8]
மே 1937 முதல் திசம்பர் 1946 வரை இவர் கொழும்பு மாநகரசபை உறுப்பினராக இருந்தார்.[9] இக்காலப் பகுதியில் 1937 மே முதல் 1937 திசம்பர வரையும், பின்னர் சனவரி 1941 முதல் திசம்பர் 1942 வரை கொழும்பு மாநகர முதல்வராகவும் பணியாற்றினார்.[9]
இவர் சுதந்திர தொழிற் கட்சியை உருவாக்குவதற்கு முன்னர் தாராண்மைவாத முன்னணியின் உறுப்பினராவார். தொழிற் கட்சி பின்னர் இலங்கை தேசிய காங்கிரசினால் உள்வாங்கப்பட்டது.[2][10] 1942 ஏப்ரலில் சப்பானியர்களின் கொழும்பு மீதான குண்டுவீச்சின் போது நிவாரணப் பணிகள் ஆற்றுவதில் இவர் முன்னின்று உழைத்தார்.[5] 1943 இல் இவரது பொது சேவைக்காக பிரித்தானிய இலங்கை அரசு இவருக்கு சேர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.[11]
Remove ads
குடும்பம்
சரவணமுத்து நேசம் என்பவரைத் திருமணம் புரிந்தார்.[3] இவர்களின் பிள்ளைகள்: சீதா இராசநாயகம், சந்திரா என இரண்டு பெண்களும், வேதாரணியம் அருணாசலம் சரவணமுத்து, மரு. இரத்தினகுமார் சரவணமுத்து என இரண்டு ஆண்களும் ஆவர். இவரது மகள் சீதா இராசநாயகத்தின் பெயர்த்தி வனுஷி வோல்ட்டர்ஸ் நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
நினைவு
இவரது நினைவாக கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள வீதி ஒன்றிற்கு "சேர் இரத்தினசோதி சரவணமுத்து மாவத்தை" எனப் பெயரிடப்பட்டது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads