உயிரியற் பல்வகைமை
வாழ்க்கை வடிவங்களின் மாறுபாடு மற்றும் மாறுபாடு From Wikipedia, the free encyclopedia
Remove ads
உயிரியல் பல்வகைமை அல்லது பல்லுயிரியம் அல்லது உயிரினப் பன்மயம் (Biodiversity, இலங்கை வழக்கு: உயிர்ப் பல்வகைமை) என்பது பூமியில் உள்ள நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய கணக்கிலடங்காத உயிரினங்களில் காணப்படும் வேறுபாடு ஆகும். மரபுவழிப் பண்பில் பல்வகை, சிற்றினங்களில் பல்வகை, சூழல் அமைப்பில் பல்வகை, ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு உரித்தான பல்வகை, அறிமுகப்படுத்தப்பட்ட உயிரினங்களில் பல்வகை ஆகியவற்றை உயிரியல் பல்வகைமை என்பது குறிக்கும். உயிரியல் பல்வகைமை என்பது புவியின் எல்லாப் பகுதிகளிலும் பல்வேறு சூழல்களில் வாழும் பலவகையான உயிரினங்களைப் பற்றி விவரிக்கப் பயன்படுத்தும் ஒரு சொல்லாகும். இது புவியில் காணப்படும் அனைத்து, பல்வேறுபட்ட சூழல் மண்டலங்களையும் (சுழல் தொகுதி), அனைத்து உயிரினங்களையும், அவற்றின் வாழிடங்களையும், மரபணுக்களைப் பற்றியும் குறிக்கின்றது[1].

இன்றைய சூழ்நிலையில் பல மில்லியன் உயிரினங்கள் இப்புவியில் வாழ்கின்றன[2]. இந்த உலகிலே, பல வடிவங்களிலும், அளவுகளிலும் உயிரினங்கள் வாழுகின்றன. திமிங்கிலங்கள் போன்ற மிகப் பெரிய உயிரினங்களும், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களும் உள்ளன. பல நூறு ஆண்டுகளுக்கு நிலைத்திருப்பவைகள், முதல் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழுகின்ற உயிரினங்கள் வரை உள்ளன. சுட்டெரிக்கும் பாலைவனங்களில் உயிரினங்கள் வாழுகின்ற அதேவேளை, பனிபடர்ந்த கடுங் குளிர்ப் பிரதேசங்களிலும் அவை காணப்படுகின்றன. உணவு முறைகள், வாழிடங்கள் போன்ற பல்வேறு அம்சங்களில், கணக்கற்ற வகையில் வேறுபடுகின்ற ஏராளமான உயிரினங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டனவாக இப்புவியில் வாழ்ந்து வருகின்றன. உயிரியற் பல்வகைமை இவையனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
Remove ads
வரைவிலக்கணங்கள்
உயிரியற் பல்வகைமை என்பதற்குக் குறிப்பிட்ட ஒரு வரைவிலக்கணம் கிடையாது. மிகவும் நேரடியான வரைவிலக்கணம், உயிரினங்களின் பல்வேறுபட்ட தன்மை என்பதாகும். இது உயிரியல் ஒழுங்கமைப்பின் எல்லா மட்டங்களிலுமான வேறுபாடுகளைக் குறிக்கும். ஆயினும் புரிதலை இலகுபடுத்தும் நோக்கில் "உயிரினங்கள் அவற்றின் வடிவம், நிறம், பருமன், நடத்தை, உண்ணும் உணவுவகை, உணவூட்டல் முறை என்பவற்றில் வேறுபட்ட தன்மைகளைக் கொண்டிருத்தல்" உயிரியற் பல்வகைமை என வரைவிலக்கணப்படுத்தலாம்.
உயிரியல் பல்வகைமை என்பது சூழலியல் முறைகள் மரபணுக்கள் அல்லது புவியின் அனைத்து பகுதிகள் போன்ற வேறுபட்ட சூழ்நிலை முறைகளில் வாழுகின்ற உயிரினங்களாகும். உயிரியல் பல்வகையை உயிரியல் முறையின் நிலையை அளவிட உதவுகிறது. இன்றைய சூழ்நிலையில் மில்லியன் பல்வகை உயிரியனங்கள் புவியில் உள்ளது. அதாவது கிட்டதட்ட 3.5 பில்லியன் வருடங்களின் மதிப்பீட்டு படி உயிரினங்கள் உள்ளன. பல்லுயிர்ப் பெருக்கம் என்பது உயிரியியல் அமைப்பின் படி வேறுபட்ட வாழ்க்கை, சூழ்நிலை முறைகளைக் கொண்ட உயிரினங்களாகும்.[3]
இன்னொரு வரைவிலக்கணம் உயிரியற் பல்வகைமை என்பது, வேறுபட்ட சூழலியல் முறைமைகளில் வாழுகின்ற உயிரினங்கள் மத்தியில் காணப்படும் சார்புப் பல்வகைமையின் அளவீடு ஆகும் என்கிறது. வேறொரு வரைவிலக்கணம் இதனை ஒரு பிரதேசத்தின் மரபணுக்கள், வகைகள், சூழலியல்முறைமைகள் ஆகியவை அடங்கிய ஒரு முழுமை எனக் கூறுகின்றது.[4][5] மிகவும் எளிமையானதும், தெளிவானதுமான மேற்படி வரைவிலக்கணம், உயிரியற் பல்வகைமை என்பது பயன்படுகின்ற பெரும்பாலான சந்தர்ப்பங்களை விளக்குகின்றது. அத்துடன் உயிரியற் பல்வகைமை பொதுவாக இனங்காணப்படுகின்ற, மூன்று நிலைகளையும் ஒருங்கிணைக்கும் ஒன்றாகவும் காணப்படுகின்றது. இம் மூன்று நிலைகளாவன:

- மரபியற் பல்வகைமை (genetic diversity)
- இனப் பல்வகைமை (species diversity)
- சூழ்நிலைமண்டலப் பல்வகைமை (ecosystem diversity)[3][6]
1992 இல் ரியோ டி ஜனேரோவில் நடைபெற்ற, ஐக்கிய நாடுகள் புவி மேல்நிலை மாநாடு (United Nations Earth Summit) இன்னொரு வரைவிலக்கணத்தை வழங்கியது. இதன்படி, உயிரியற் பல்வகைமை என்பது, தாங்களும் ஒரு பகுதியாகவுள்ள நிலம், கடல், ஏனைய நீரியற் சூழல்கள், சூழலியற்றொகுதிகள் உட்பட்ட எல்லா இடங்களையும் சார்ந்த உயிரினங்கள் மத்தியிலான பல்வகைமை ஆகும். இது உயிர்வகைகளுக்குள்ளும், அவற்றுக்கு இடையிலும், சூழலியல் முறைமை சார்ந்தும் உள்ள பல்வகைமையை உள்ளடக்குகின்றது.[7]
ஐக்கிய நாடுகள் அவையின் உயிரியற் பல்வகைமை மகாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட காரணத்தினால், சட்டபூர்வமான அங்கீகாரம் பெறக்கூடிய நிலையிலுள்ளது கடைசியாகத் தரப்பட்ட வரைவிலக்கணமேயாகும்.
Remove ads
இன்றியமையாமை
நாம் உண்ணும் உணவில் 80 சதவீதம் இந்த உலகில் வாழும் தாவரங்களையும், விலங்குகளையும் சார்ந்து தான் இருக்கின்றன..... நோய்களின் தாக்கத்தில் இருந்து நம்மை காக்கும் மருந்துகளில் முக்கியப் பங்கு வகிப்பது இந்த உயிரினங்களில் இருந்து பெறப்படும் பொருட்கள் தான். இருப்பிடங்கள் மற்றும் ஆடைகள் உருவாக்குவதற்கும் தாவரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. இவ்வாறு நமக்கு இன்றியமையாத பொருட்களான உணவு, உடை, உறவிடம் என்ற காரணிகளுக்கு நாம் பல்லுயிர்களைச் சார்ந்தே வாழ வேண்டியுள்ளது. பல்லுயிர் பெருக்கம் இயற்கையாக கண்ணுக்கு தெரியாமல் நடைபெறும் பல பணிகளை செய்கின்றது. வளி மண்டலத்தில் நடைபெறும் வேதியியல் மற்றும் நீர் சுழற்சிகளை சமன்படுத்துகிறது. நீரை தூய்மை படுத்துதல்(மீன்கள்) மற்றும் மண்ணில் சத்துகளை மறுசுழற்சி செய்து(மண்புழு) வளமான நிலத்தை கொடுக்கிறது. பல்வேறு ஆய்வுகளின் படி இப்படிப்பட்ட இயற்கையான சூழ்நிலையை நம்முடைய அறிவியல் வளர்ச்சியின் மூலம் அமைத்து கொள்ள முடியாது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.[8]
சான்றாகப் பூக்களில் பூச்சிகள் மூலம் நடக்கும் மகரந்தசேர்க்கையை மனிதர்களான நம்மால் நடத்த முடியாது. தொழிற்சலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் பெரும்பாலும் உயிரியல் ஆதாரங்களில் இருந்தே எடுக்கப்படுகிறது. எனவேதான் இந்த உயிரியல் ஆதாரங்களை அழியாமல் பாதுகாப்பதுக்கு உலக அளவில் முக்கியத்துவம் தரப்படுகிறது.
Remove ads
பல்லுயிர் பெருக்கத்தினை அழிக்கும் காரணிகள்
பல்லுயிர் பெருக்கத்தினை அழிக்கும் காரணிகளை எட்வர்ட் ஓ வில்சன் என்ற ஆய்வாளர் ஆங்கிலத்தில் ஹிப்போ(HIPPO) என்று அழைக்கிறார். அதில் ஐந்து காரணிகளை குறிப்பிடுகிறார்.[9]
- வாழிடம் அழித்தல் (H-Habitat destruction)
- அறிமுகப்படுத்தப்படும் சிற்றினங்கள் (I-Invasive species)
- மாசுபாடு (P-Pollution)
- மனித மக்கள் தொகை அதிகரிப்பு (P-human over population)
- அதிகமான அறுவடை (O-Overharvesting)
வாழிடம் அழித்தல்

மக்களின் வாழ்க்கைத் தேவைகளுக்காகப் பல விளைநிலங்கள் கட்டிடங்களாகவும், காடுகள் தொழிற்சாலைகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. உயிரினங்களில் வாழிடங்களை அழித்து மனித வாழிடங்கள் பெருக்கி கொள்ளப்படுகிறது. கி.பி 1000 முதல் இன்றுவரை அழிவிற்கு உண்டான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் மனித நடவடிக்கையால் ஏற்பட்டதே ஆகும்.
அறிமுகப்படுத்தப்படும் சிற்றினங்கள்
உலகில் பல்வேறு பட்ட உயிரினங்கள் பல்வேறு இடங்களில் அந்த சூழலுக்குகேற்ப கூட்டமாக வாழ்கின்றன.. அவ்வாறு கூட்டமாக வாழ்வதற்கு காரணம் கண்டங்கள், கடல்கள், மலைகள், ஆறுகள் ஆகியவற்றால் ஒன்றோடு ஒன்று கலந்துவிடாமல் பிரித்துவைக்கப்படுவதால் தான். ஆனால் தற்போது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட போக்குவரத்து வசதிகளால் இவைகள் தங்களின் சூழலில் இருந்து எளிமையாக இடம்பெயர்கின்றன. இவ்வாறு இடம்பெயரும் சிற்றினங்கள் அந்த இடங்களில் உள்ள சிற்றினங்களின் வளர்ச்சியை தனதாக்கி தன்னுடைய இனத்தை பெருக்கச் செய்கின்றன. சான்றாக வெளிநாடுகளில் இருந்து கொண்டுவந்து நமது நாட்டில் பயிரிடப்படும் பழங்களை சொல்லலாம்.
மரபணு மாசுபாடு
தாவரங்கள் மற்றும் விலங்குகளில் நடத்தப்படும் மரபணு சோதனைகள் மூலம் உருவாக்கப்படும் கலப்பினங்கள். இதனால் உருவாக்கப்படும் கலப்பினத்தின் தாயக வகைகளில் (ரகங்களில்) மாசுபாடு ஏற்படுகிறது. இவ்வாறு மாசுபடும் வகைகள் தங்களின் தாயக வகைகளுடன் உட்கலப்பு செய்யும் போது பெரும் ஆபத்து விளைவிக்கும். இதனால் கலப்பினம் இல்லாத தாவரங்களைப் பார்ப்பது அரிதாகிவிடும்.
எந்தவொரு உயிரியிலும் வெளிப்புறத் தோற்றத்தை மட்டும் அடிப்படையாக வைத்து கலப்பினம் செய்யாமல், ஆழ்ந்து ஆராய்ந்து உட்புறத் தோற்றத்திலும் உள்ள மாற்றங்களை கருத்தில் கொண்டு ஆய்வு செய்வதே சிறந்தது. சான்றாக தற்போது சந்தையில் உள்ள மரபணு மாற்றப்பட்ட கத்திரியைக்(Genetically Modified Brinjal) குறிப்பிடலாம்.
மனித மக்கள்தொகை அதிகரிப்பு
ஆண்டுதோறும் அதிகரித்து வரும் மனித மக்கள்தொகை வளர்ச்சியும் பல்லுயிர் பெருக்கத்திற்கு தடையாக இருக்கின்றது. இந்த மக்கள்த்தொகை பெருக்கத்தால் சுற்றுப்புறச்சூழல் வெகுவாக பதிக்கப்படுகிறது அதனால் பூமி வெப்பமயமாதல் போன்ற நிகழ்வுகளும் நிகழ்கின்றன. பல்லுயிர் பெருக்கத்தின் முக்கிய தளமாக கருதப்படும் பவளப்பாறைகள், பூமி வெப்பமயமாதல்(Global Warming) நிகழ்வுகளால் இன்னும் 20 முதல் 40 வருடங்களில் முற்றிலும் அழிந்துவிடும் அபாயம் உள்ளது.
அதிகமான அறுவடை
தாவரங்களில் விளையும் பொருட்களை நுகர்வதற்காக (உணவு) என்று பெரும்பகுதியை நாம் எடுத்துவிடுகிறோம், அவைகளின் மரபுவழிகளை உருவாக்குவதற்கு முதன்மைத் தரப்படுவதில்லை. அதிக விளைச்சல் தரும் வீரிய ரகப் பயிர்களை பயிர்செய்து அதில் இயற்கைக்கு மீறிய அதிக மகசூலை பெறுகிறோம். இதனாலும் பல்லுயிர் பெருக்கம் பாதிப்படைகிறது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
