பொழில்

From Wikipedia, the free encyclopedia

பொழில்
Remove ads

பொழில் (Rainforest, மழைக்காடு) என்பது அதிக மழை வளத்தால் செழித்து இருக்கும் காடுகள் ஆகும்[1]. பொழிதல் என்றால் மழை பெய்தல் என்னும் பொருள்வழி பொழில் என்றாயிற்று. இச்சொல் இன்றைய அறிவியலில் மழைக்காடு என்று அழைக்கப்படுவதுதான். பொதுவாக ஆண்டு மழை பொழிவானது 1750 மில்லி மீட்டருக்கும், 2000 மிமீ க்கும் இடையில் உள்ள காடுகளே இன்றைய அறிவியலில் மழைக்காடுகள் என்னும் வரைவிலக்கணத்துக்குள் அடங்குகின்றன.

Thumb
ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள ஒரு மழைக்காடு
Thumb
மழைக்காடு

உலகிலுள்ள விலங்குகள், தாவரங்களில் 40% தொடக்கம் 75% வரையானவை மழைக்காடுகளுக்கு உரியவை.[2] பெருமளவான மருத்துவக் குணம் கொண்ட இயற்கைப் பொருட்கள் காணப்படுவதால், ஈரவலய மழைக்காடுகள், உலகின் மிகப் பெரிய மருந்துச் சாலைகளாகக் கருதப்படுகின்றன.[3] உலகின் Oxygen உருவாக்கத்தின் 28% பொழிகளினாலேயே ஏற்படுகின்றது.[4]

பெருமளவில் தாவர இனங்கள் வளர்ந்தாலும் கூட, மழைக்காடுகளின் மண் மிகவும் தரக் குறைவானதாகும். பாக்டீரியா சார்ந்த உக்கல் விரைவாக நடைபெறுவது இதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றது. லட்டரைட்டாக்கம் (laterization) மூலம் இரும்பு மற்றும் அலுமினியம் ஆக்சைட்டுகளின் செறிவு அதிகரிப்பதனால் மண் பிரகாசமான சிவப்பு நிறம் கொண்டதாக மாறுகின்றது.

மழைக் காடுகளின் பெரும்பாலான பகுதிகளில், நிலமட்டத்தில் போதிய அளவு சூரிய ஒளி கிடைக்காமையினால் சிறுதாவர வளர்ச்சி குறைவாகவே காணப்படுகிறது. இது மனிதரும், விலங்குகளும் காட்டினூடாக இலகுவில் நடந்து செல்வதற்கு வசதியாக அமைகிறது.

மழைக்காடுகள் பூமியின் பழமையான வாழும் சுற்றுச்சூழல் அமைப்புகளாகும், அவற்றின் தற்போதைய வடிவத்தில் குறைந்தது 70 மில்லியன் ஆண்டுகளாக உயிர்வாழ்கின்றன. அவை நம்பமுடியாத அளவிற்கு மாறுபட்டவை மற்றும் சிக்கலானவை, உலகின் தாவர மற்றும் விலங்கு இனங்களில் பாதிக்கும் மேலானவை - அவை பூமியின் மேற்பரப்பில் வெறும் 6% மட்டுமே என்றாலும். இது மழைக்காடுகளை தாவரங்கள் மற்றும் விலங்கினங்களால் வியக்க வைக்கிறது; 10 சதுர கிலோமீட்டர் (4 சதுர மைல்) பேட்சில் 1,500 பூக்கும் தாவரங்கள், 750 வகையான மரங்கள், 400 வகையான பறவைகள் மற்றும் 150 வகையான பட்டாம்பூச்சிகள் இருக்கலாம்.

அண்டார்டிகாவைத் தவிர ஒவ்வொரு கண்டத்திலும் மழைக்காடுகள் செழித்து வளர்கின்றன. பூமியில் மிகப்பெரிய மழைக்காடுகள் தென் அமெரிக்காவின் அமேசான் நதியையும் ஆப்பிரிக்காவின் காங்கோ நதியையும் சுற்றி வருகின்றன. தென்கிழக்கு ஆசியாவின் வெப்பமண்டல தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகள் அடர்த்தியான மழைக்காடு வாழ்விடங்களை ஆதரிக்கின்றன. வட அமெரிக்காவின் பசிபிக் வடமேற்கு மற்றும் வடக்கு ஐரோப்பாவின் குளிர்ந்த பசுமையான காடுகள் கூட ஒரு வகை மழைக்காடுகள்.

மழைக்காடுகளின் வளமான பல்லுயிர் நமது நல்வாழ்வுக்கும் நமது கிரகத்தின் நல்வாழ்வுக்கும் நம்பமுடியாத அளவிற்கு முக்கியமானது. மழைக்காடுகள் எங்கள் காலநிலையை சீராக்க உதவுகின்றன.

Remove ads

வெப்பமண்டலம்

Thumb
அயன மண்டல மழைக்காடுகளின் புவியியற் பரம்பல்

வெப்பமண்டல மழைக்காடுகள் அதிகமான வெப்பத்தையும் மழைவீழ்ச்சியையும் கொண்டுள்ள மழைக்காடுகளாகும். இதன் சராசரி வெப்பநிலை 18 °C தொடக்கம் 27 °C வரை காணப்படும்.[5] இதன் வருட சராசரி மழைவீழ்ச்சி 1680mmஐ விடக்குறையாமல் காணப்படும். இது சில பிரதேசங்களில் 10000mmஐ விட அதிகமாகும். பொதுவாக மழைவீழ்ச்சி 1750mm(175 cm) தொடக்கம் 2000mm(200 cm) வரை இருக்கும்.[6]

உலகின் பெரும்பாலான பொழில்கள், வெப்பமண்டலங்களிடை ஒருங்கல் வலயம் எனப்படும் பருவக்காற்றுத் தாழ்பகுதிகளுடன் தொடர்புடையவை.[7] வெப்பமண்டலப் பொழில்கள், கடகக்கோட்டுக்கும், மகரக்கோட்டுக்கும் இடைப்பட்ட புவிநடுக்கோட்டுப் பகுதியில் காணப்படும் பொழில்கள் ஆகும். வெப்பமண்டலப் பொழில்கள், மியன்மார், பிலிப்பைன்சு, மலேசியா, இந்தோனீசியா, பப்புவா நியூகினியா, வடகிழக்கு ஆசுத்திரேலியா ஆகியவற்றை உள்ளடக்கிய தென்கிழக்காசிய, ஆசுத்திரேலியப் பகுதிகளிலும், இலங்கை, கமெரூனில் இருந்து கொங்கோ வரையான பகுதிகளிலும், தென்னமெரிக்கா, நடு அமெரிக்கா, பல பசிபிக் தீவுகள் ஆகியவற்றிலும் காணப்படுகின்றன. வெப்பமண்டலப் பொழில்கள் புவியின் மூச்சுப்பை என அழைக்கப்பட்டு வந்தன. எனினும், தாவரங்களின் ஒளித்தொகுப்பு மூலம் வெப்பமண்டலப் பொழில்கள், புவியின் வளிமண்டலத்துக்கு அளிக்கும் ஒட்சிசனின் அளவு மிகவும் குறைவே என்று தற்காலத்தில் அறியப்பட்டு உள்ளது.[8][9]

Remove ads

மிதமானவெப்ப மண்டலம்

Thumb
மிதவெப்பமண்டல மழைக்காடுகளின் புவியியற் பரம்பல்

மிதவெப்பமண்டல மழைக்காடுகள் புவிக்கோளத்தின் பெருமளவு பகுதிகளை மூடியுள்ளன. எனினும் இவை உலகின் சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன.

வட அமெரிக்காவில் பசிபிக் வடமேற்கு, பிரித்தானியக் கொலம்பியாக் கரையோரங்கள், பாறை மலைத் தாழ்பகுதிகளின் உட்பகுதிகள், பிரின்சு சார்ச்சுக்குக் கிழக்கேயுள்ள பகுதிகள் ஆகியவற்றிலும், ஐரோப்பாவில் அயர்லாந்து, இசுக்காட்லாந்து ஆகியவற்றின் கரையோரங்களை உள்ளடக்கிய பிரித்தானியத் தீவுகளின் சில பகுதிகளிலும், தெற்கு நார்வே, அட்ரியாட்டியக் கரையை ஒட்டிய மேற்குப் பால்க்கன் பகுதிகளிலும், வடமேற்கு இசுப்பெயின், ஜார்ஜியா, துருக்கி ஆகியவற்றை உள்ளடக்கிய கிழக்குக் கருங்கடலின் கரையோரப் பகுதிகளிலும் இக்காடுகள் உள்ளன.

அத்துடன், கிழக்காசியாவில் தென் சீனா, தாய்வான், சப்பான், கொரியா ஆகியவற்றின் பெரும்பாலான பகுதிகள், சக்காலின் தீவு, அருகில் அமைந்துள்ள உருசியத் தூர கிழக்குக் கரையோரம் என்னும் இடங்களிலும், தென்னமெரிக்காவில் தெற்குச் சிலியிலும், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆகிய நாடுகளிலும் மிதவெப்ப மண்டலப் பொழில்கள் காணப்படுகின்றன. இக்காடுகளின் வெப்பநிலை வெப்பமண்டல மழைக்காடுகளின் வெப்பநிலையை விடக் குறைவானதாகும்.

Remove ads

அடுக்குகள்

வெப்பமண்டலப் பொழில்கள் பொதுவாக நான்கு அடுக்குகளாகப் பிரிக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றிலும் அந்தந்த அடுக்குகளுக்கு இசைவாக்கம் பெற்ற விலங்குகளும், தாவரங்களும் காணப்படுகின்றன. இந்நான்கு அடுக்குகள் வெளிப்படு அடுக்கு, மரக்கவிகை அடுக்கு, மரக்கீழ் அடுக்கு, காட்டுத்தரை என்பன.

வெளிப்படு அடுக்கு

வெளிப்படு அடுக்கில் குறைந்த எண்ணிக்கையிலான மிகப் பெரிய மரங்கள் இருக்கும். இவை பொதுவான மரக் கவிகைக்கு மேலாக வளர்ந்து 45-55 மீட்டர் உயரத்தை எட்டுகின்றன. சில வேளைகளில் சில மரங்கள் 70-80 மீட்டர் உயரத்துக்கு வளர்வதும் உண்டு.[10][11] மரக்கவிகைகளுக்கு மேல் இருக்கக்கூடிய உயர்ந்த வெப்பநிலைகளையும், கடுங் காற்றையும் தாக்குப்பிடிக்க வேண்டிய நிலை இவற்றுக்கு உண்டு. கழுகுகள், வண்ணத்துப் பூச்சிகள், வௌவால்கள், சிலவகைக் குரங்குகள் போன்றவை இந்த அடுக்கில் வாழுகின்றன.

மரக்கவிகை அடுக்கு

.

Thumb
மலேசியக் காட்டு ஆய்வு நிறுவனத்தில் காணப்படும் மரக்கவிகை

30 மீட்டர் (98 அடி) முதல் 45 மீட்டர் (148 அடி) வரை வளரக்கூடிய மிகப்பெரிய மரங்களிற் பெரும்பாலானவை மரக்கவிகை அடுக்கிலேயே காணப்படுகின்றன. மரங்களின் மேற்பகுதிகள் ஏறத்தாழத் தொடர்ச்சியாகக் காணப்படுவதால், உயிரிப்பல்வகைமையின் அடர்த்தி கூடிய பகுதிகள் இந்த அடுக்கிலேயே உள்ளன. சில மதிப்பீடுகளின்படி உலகின் 50% அளவான தாவர வகைகளின் வாழிடம் மரக்கவிகை அடுக்கே எனத் தெரியவருகிறது. இதிலிருந்து, உலகின் மொத்த உயிரினங்களில் அரைப்பங்கு இந்த அடுக்கிலேயே வாழக்கூடும் என்பதும் சாத்தியமே. மழையில் இருந்தும், தாங்கும் மரத்தில் சேரும் சிதைபொருட்களில் இருந்தும் நீரையும், கனிமங்களையும் பெறும் மேலொட்டித் தாவரங்கள் அடிமரங்களிலும் மரக்கிளைகளிலும் பற்றிக்கொண்டு வாழுகின்றன. வெளிப்படு அடுக்கில் உள்ளது போன்ற விலங்குகளே இங்கும் வாழ்ந்தாலும், இங்கு கூடிய பல்வகைமை காணப்படுகின்றது. இந்த அடுக்கு ஒரு வளம்மிக்க வாழிடம் என அறிவியலாளர்கள் நீண்டகாலமாகவே கருதி வந்தாலும், நடைமுறையில் இதை ஆராய்வதற்கான வழிமுறைகள் அண்மையிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. 1917 ஆம் ஆண்டிலேயே வில்லியம் பீபே என்னும் இயறை ஆய்வாளர், உயிர்கள் வாழும் இன்னொரு கண்டம் கண்டுபிடிக்கப்பட வேண்டி இருப்பதாகவும், அது புவியில் அன்றி, அதிலிருந்து 100 தொடக்கம் 200 அடிகளுக்கு மேல் பல ஆயிரம் சதுர மைல்களுக்குப் பரந்துள்ளது என்றும் கூறியிருந்தார். இந்த வாழிடம் தொடர்பான உண்மையான ஆய்வுகள் 1980களிலேயே தொடங்கின. கயிறுகளை அம்புகள் மூலம் மரக்கவிகைகளுக்கு எய்து அவற்றை எட்டுவது போன்ற வழிமுறைகளை அறிவியலாளர்கள் உருவாக்கிய பின்னரே இது சாத்தியம் ஆயிற்று.

மரக்கீழ் அடுக்கு

Thumb
ஆசுத்திரேலியாவின் நீல மலைகளில் உள்ள பொழில்கள்

மரக்கீழ் அடுக்கு, மரக்கவிகை அடுக்குக்கும், காட்டுத்தரைக்கும் இடையில் அமைந்துள்ளது. மரக்கீழ் அடுக்கு பறவைகள், பாம்புகள், பல்லிவகைகள் ஆகியவற்றுடன், சிறுத்தை முதலிய கொன்றுண்ணிகளுக்கும் வாழிடமாக உள்ளது. இந்த அடுக்கில் இலைகள் பெரிதாக இருக்கும். பூச்சி வகைகளும் பெருமளவில் காணப்படுகின்றன. மரக்கவிகை அடுக்குக்கு வளரவுள்ள மரக்கன்றுகள் பலவும் இந்த அடுக்கில் காணப்படும். இந்த அடுக்கைச் செடி அடுக்கு என்றும் சொல்லலாம். செடி அடுக்கை இன்னொரு அடுக்காகவும் கொள்வது உண்டு.

காட்டுத்தரை

எல்லா அடுக்குகளுக்கும் கீழாக அமைந்திருப்பது காட்டுத்தரை. இது 2% ஆன சூரிய ஒளியையே பெறுகிறது. குறைவான சூரிய ஒளிக்கு இயைபு பெற்ற தாவரங்கள் மட்டுமே இந்த அடுக்கில் வளர முடியும். அடர்த்தியான நிலமட்டத்திலான தாவர வளர்ச்சிகளைக் கொண்ட ஆற்றங்கரைகள், சதுப்பு நிலங்கள், மரங்கள் வெட்டி அழிக்கப்பட்ட பகுதிகளுக்கு அப்பால், காட்டுத்தரை வளர்ச்சிகள் அற்ற வெளியாகவே இருக்கக் காணலாம். குறைவான சூரிய ஒளி கிடைப்பதே இதற்குக் காரணம். இந்த அடுக்கு சிதைவடைந்து கொண்டிருக்கும் தாவரப் பொருட்களையும் விலங்குப் பொருட்களையும் கொண்டிருக்கும். இளஞ்சூடான, ஈரப்பற்றுக்கொண்ட சூழலில் இவை விரைவாகவே சிதைந்து விடுவதால் விரைவாகவே மறைந்து விடுகின்றன.

Remove ads

தாவர விலங்கு வகைகள்

Thumb
தான்சானியாவின் உசம்பாரா மலைகளில் உள்ள மேற்கு உசம்பாரா இரட்டைக் கொம்பு ஓணான் (பிரடிபோடியன் பொசுக்கேரி).

உலகின் தாவர விலங்கு வகைகளில் அரைப் பங்குக்கு மேற்பட்டவை பொழில்களிலேயே காணப்படுகின்றன.[12] பாலூட்டிகள், ஊர்வன, பறவைகள், முதுகெலும்பிலிகள் போன்ற பல்வேறு வகைப்பட்ட விலங்கு வகைகளுக்குப் பொழில்கள் ஆதாரமாக விளங்குகின்றன. பாலூட்டிகளில் உயர் விலங்கினங்கள், பூனை வகை உயிரினங்கள் போன்ற பல வகைகள் அடங்குகின்றன. பொழில்களில் காணப்படும் ஊர்வனவற்றுள் பாம்புகள், ஆமைகள், ஓணான்கள் போன்றவையும், பறவைகளுள் வங்கிடா, குக்குலிடா போன்ற குடும்பங்களைச் சேர்ந்தனவும் அடங்குகின்றன. இங்கு காணப்படும் முதுகெலும்பிலிகளும் மிகப்பல. சிதைவடையும் தாவர விலங்குகளில் உணவுக்காகத் தங்கியிருக்கும் பூஞ்சண வகைகளும் பொழில்களில் மிகவும் பொதுவாகக் காணப்படுகின்றன. காடழிப்பு, வாழிட இழப்பு, வளிமண்டலம் மாசடைதல் போன்ற காரணங்களால் பொழில்வாழ் உயிரினங்கள் பல விரைவாக அழிந்து வருகின்றன.[13]

Remove ads

மண் வளம்

வெப்பமண்டலப் பொழில்களில் தாவர வகைகள் வளருகின்ற போதும் பெரும்பாலும் அங்குள்ள மண் தரம் குறைந்தது ஆகும். பக்டீரியாக்களினால் ஏற்படு சிதைவு விரைவாக நடைபெறுவதால் மக்கல்கள் சேர்வது தடுக்கப்படுகிறது. செறிவாகக் காணப்படும் இரும்பு, அலுமினியம் ஒட்சைட்டு என்பன செம்புரையாக்க வழிமுறை மூலம் கடுஞ் சிவப்பு நிறம் கொண்ட தீய்ந்த மண்ணை உருவாக்குவதுடன் சில வேளைகளில், போக்சைட்டு போன்ற கனிமப் படிவுகளையும் உருவாக்குகின்றன. ஆழத்தில் போதிய ஊட்டப் பொருட்கள் இல்லாமையால், பெரும்பாலான மரங்களின் வேர்கள் நில மட்டத்துக்கு அருகிலேயே காணப்படுகின்றன. மரங்களுக்குத் தேவையான கனிமங்கள் பெரும்பாலும் மேல் படையில் சிதைவடைகின்ற தாவர விலங்குப் பொருட்களில் இருந்தே கிடைக்கின்றன.

Remove ads

உலகத் தட்பவெப்பநிலையில் தாக்கங்கள்

இயற்கையான பொழில்கள் பெருமளவு காபனீரொட்சைட்டை வெளியேற்றுவதுடன், அதை உறிஞ்சவும் செய்கின்றன. உலக அளவில், குலைவுக்கு உள்ளாகாத பொழில்களில், நீண்ட கால நோக்கில், இதன் அளவு ஏறத்தாழச் சமநிலையிலேயே உள்ளது. அதனால், புவியின் வளிமண்டலத்தில் உள்ள காபனீரொட்சைட்டின் அளவில் பொழில்களின் தாக்கம் மிகவும் குறைவே.[14] ஆனாலும், முகில்களின் உருவாக்கம் போன்ற பிற விடயங்களில் பொழில்களின் தாக்கம் காணப்படுகின்றது. தற்காலத்தில் எந்தவொரு பொழிலுமே குலைக்கப்படாதது என்று சொல்ல முடியாது.[15] மனிதரால் தூண்டப்படும் காடழிவுகள், பொழில்கள் அதிகமான காபனீரொட்சைட்டை வளிமண்டலத்துக்குக் கொடுப்பதற்குக் குறிப்பிடத்தக்க காரணமாக அமைகின்றன.[16] அத்துடன், காடுகள் எரிதல், வறட்சி போன்ற மனிதனால் தூண்டப்படுவனவும், அல்லாதனவுமான நிகழ்வுகள் காடுகளில் மரங்கள் அழிவதற்குக் காரணமாகின்றன..[17] ஊடாடு தாவர வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட சில தட்பவெப்ப மாதிரிகள், 2050 ஆம் ஆண்டளவில், வறட்சியினாலும், காடுகள் கருகுவதாலும், தொடர்ந்த காபனீரொட்சைட்டு வெளியேற்றத்தினாலும் பெருமளவு அமேசன் பொழில்கள் அழிந்துவிடும் என்று எதிர்வு கூறுகின்றன.[18] இன்னும் 5 மில்லியன் ஆண்டுகளில் அமேசன் பொழில்கள் மரங்களற்ற வெப்பமண்டலப் புல்வெளிகளாக மாறி இறுதியில் தாமாகவே அழிந்துவிடும் எனக் கருதப்படுகின்றது.[19] மனிதர் இன்றே தமது காடழிப்பு நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டால் கூட இத்தகைய மாற்றங்கள் நடந்தே தீரும் என்று சொல்லப்படுகிறது. இன்று நமக்குத் தெரிந்த விலங்குகளின் வழிவந்த எதிர்கால விலங்குகள் வறண்ட காலநிலக்குத் தம்மைத் தகவமைத்துக் கொண்டு வாழக்கூடும்.[19]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads