எண்ணாயிரம்
தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
எண்ணாயிரம் (ஆங்கிலம்: Ennayiram) என்பது தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுக்காவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். எண்ணாயிரம் என்பது தமிழில் எட்டு ஆயிரம் என்று பொருள்படும். மேலும், கி.பி. 1025ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்று எண்ணாயிரம் என்பது இராஜராஜ சோழனின் பெயரைக் குறிக்கிறது என்ற தகவலைத் தருகிறது. இந்தப் பெயரானது சமண வணிகர்களின் ஒரு குலப்பெயரைக் குறிப்பதாய் உள்ளது.
அஷ்டசகஸ்ரம் (சமசுகிருதம்: अष्टसहश्रम) (தமிழ்: எட்டாயிரம்) என்றழைக்கப்படுவோர் ஐயர் சமூகத்தின் ஒரு பிரிவினர் ஆவர். நம் தமிழகத்தினைச் சார்ந்து வடபாலுள்ள சில நாடுகள் ‘இரட்டப்பாடி ஏழரையிலக்கம் எனவும், ‘கங்கபாடி தொண்ணூற்றாயிரம்’ ‘நுளம்பாடி முப்பத்தீராயிரம் எனவும், வனவாசி பன்னீராயிரம் எனவும் ‘இடதுறைநாடு இரண்டாயிரம்’ எனவும், வேங்கை நாடு ஆறாயிரம்’ எனவும் முற்காலத்தில் வழங்கப் பெற்று வந்தமை கல்வெட்டுக்களாலும் செப்பேடுகளாலும் அறியக் கிடக்கின்றது. இங்ஙனம் நாட்டின் பெயரோடு இணைத்து வழங்கப்பெற்றுள்ள எண்கள் அந்நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களின் தொகையைக் குறிக்குமென்று கூறினோரும் உண்டு. அஃது உண்மையாயிருப்பின், அந்நாட்டரசர்கள் முற்காலத்தில் தம் நாடுகளிலிருந்த மக்களின் தொகையைக் கணக்கிட்டுக் கண்டிருத்தல் வேண்டும். அந்நாடுகளோடு அரசியல் தொடர்பு பூண்ட சோழர்களும் தம் நாடுகளில் அவ்வாறு செய்திருத்தல் வேண்டும்.இவ்வாறு எண்ணாயிரம் என்பது தமிழில் இவ்வூருக்கு ஏற்பட்டிருக்கலாம், இவையிரண்டும் நிகழ்ந்தமைக்கு யாண்டும் ஆதாரங்கள் காணப்படவில்லை. எனவே, அன்னோரின் கூற்று உண்மைக்கு முரண்பட்டதொன்றே எனலாம். திருக்கோவலூர் கல்வெட்டொன்றில் ‘மலாடு இரண்டாயிரம் பூமியும்’ என்ற தொடரும் மைசூர் நாட்டில் கோலார் ஜில்லாவிலுள்ள இரண்டு கல்வெட்டுக்களிற் ‘ஜெயங்கொண்ட சோழ மண்டலம் நாற்பத்தொண்ணாயிரம் பூமியும்’ என்ற தொடரும் காணப்படுகின்றன. இவற்றை கூர்ந்து நோக்குங்கால், பண்டை காலத்தில் நாட்டின் பெயரோடு இணைந்து வழங்கப்பட்டு வந்த எண், பூமியின் தொகையேயாம் என்பதும், அஃது அந்நாட்டிலிருந்த மக்களின் தொகையன்று என்பதும் நன் தெளியப்படும். எனவே, நம் நாட்டில் மக்களை எண்ணிக் கணக்கெடுக்கும் வழக்கம் அன்னியர் ஆட்சியில் தோன்றியது என்று கூறலாம்.[1]
Remove ads
அமைவிடம்
எண்ணாயிரம் விழுப்புரத்திலிருந்து வடக்கு பக்கமாக 20 கிலோ மீட்டர் தொலைவிலும்,செஞ்சிக்கு தென்கிழக்காக 16 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
போக்குவரத்து
விழுப்புரம் நகரப்பேருந்து நிலையத்திலிருந்து நகரப்பேருந்துகள் பேருந்து எண்20,21 பிடாரிப்பட்டுக்கு எண்ணயிரம் வழியாக செல்கிறது இதில் செல்லலாம்,அல்லது நேமூர் கூட்டு சாலையில் இருந்து செல்லும் அனைத்து விழுப்புரம் செஞ்சி பேருந்துகள்எண்ணாயிரம் செல்லும்.
எண்ணாயிரம் கிராமம்
எண்ணாயிரம் கிராமமானது 1000 ஆண்டுகள் பழம்பெருமை வாய்ந்த பாரம்பரியத்தை தன்னகத்தே கொண்டது.இஃது இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஒரு நகரம் ஆகும், இராமானூஜர் வருகைக்கு முன்பு இங்கு சமணர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்,இராமானூஜர் இங்கிருந்த 8000 சமணர்களை வைஷ்ண்வர்களாக மாற்றினார் என்று நம்பப்படுகிறது.அக்காலத்தில் இது இராஜராஜ சத்ருவிமங்கலம் என்று அழைக்கப்பட்டது.
அழகிய நரசிம்ம பெருமாள் கோவில்
எண்ணாயிரத்தில் அழகிய நரசிங்கப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள முதலாம் இராசேந்திரன் கல்வெட்டு ஸ்ரீமூலஸ்தானம் உடையார், இராஜராஜ விண்ணகர் ஆழ்வார், குந்தவை விண்ணகர் ஆழ்வார், சுந்தர சோழ விண்ணகர் ஆழ்வார், ஆகிய கோயில்களைக் குறிக்கின்றது. இராசராச விண்ணகர் ஆழ்வார் கோயில் தற்பொழுது அழகிய நரசிங்கப் பெருமாள் கோயில் என்று வழங்குகிறது. முதலாம் இராசேந்திரன் காலத்தில் எண்ணாயிரத்தின் ஒரு வேதக்கல்லூரி வேதம், வியாக்கரணம், மிமாம்சம், வேதாந்தம் ஆகியவை கற்பிக்கப்பட்டன. இக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்குத் தனியாக விடுதியொன்றும் இருந்துள்ளது. [2]
இக்கோயில் மற்ற கோயில்களிலிருந்து தனித்து விளங்குகிறது. நான்கு அடி உயரமுள்ள பீடத்தின் மீது இக்கோயில் உயர்ந்து நிற்கிறது. கிடந்த நிலையில் பெருமான் காட்சியளிக்கின்றார், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் உள்ள இராமசாமி கோயில் அமைப்பினை இது ஒத்துள்ளது.
Remove ads
எண்ணாயிரம் கல்வெட்டுகள்
சோழர் காலத்தில் எண்ணாயிரம், திருப்பாதிரிப்புலியூர், திருப்புவனை, திருமுக்கூடல், திருவாவடுதுறை, திருவெற்றியூர், பாகூர் உள்ளிட்ட இடங்களில் உயர்கல்விக் கூடங்கள் இருந்ததாக கல்வெட்டுத் தகவல்கள் கூறுகின்றன. எண்ணாயிரத்தில் இருந்த கல்லூரியில் 3 வேதங்கள் உட்பட 11 வகையான பாடங்கள் கற்பிக்கப்பட்டுள்ளன. இங்கு பிரம்மசாரியம் என்று அழைக்கப்படும் இளநிலை மாணவர்கள் 270 பேர், சாத்திரம் என்று அழைக்கப்படும் முதுநிலை மாணவர்கள் 70 பேர் என ஒருகல்வி ஆண்டுக்கு 340 மாணவர்கள் பயின்றுள்ளனர். பாடங்களைப் போதிக்க இளநிலைக்கு 12 பேர், முதுநிலைக்கு 3 பேர் என மொத்தம் 15 ஆசிரியர்கள் இருந்துள்ளனர். இளநிலை ஆசிரியர்கள் தலா 3 பேருக்கு நாளொன்றுக்கு அரை கழஞ்சு (ஒரு கழஞ்சு 5.33 கிராம்), 2 குறுணி, 4 நாழி (20 படி) நெல் ஊதியமாகத் தரப்பட்டுள்ளது. முதுநிலை ஆசிரியர் ஒருவருக்கு நாளொன்றுக்கு அரை கழஞ்சு பொன், 2 குறுணி, 4 நாழி நெல் ஊதியமாகத் தரப்பட்டது. இளநிலை மாணவர்களுக்கு நாளொன்றுக்கு 6 படி நெல், முதுநிலை மாணவர்களில் தலா 25 பேருக்கு நாளொன்றுக்கு அரை காசு (5.33 கிராம் பொன்), 10 படி நெல் கல்வி ஊக்கப்படியாக வழங்கப்பட்டுள்ளது .எண்ணாயிரம் உயர்கல்விக் கூடத்தின் நிர்வாகச் செலவினங்களுக்காக 45 வேலி (247.5 ஏக்கர்) நிலத்தை முதலாம் ராசேந்திரசோழன் மானியமாக எழுதி வைத்திருக்கிறான். இந்தத் தகவல்கள் அனைத்தும் எண்ணாயிரம் கல்வெட்டு வாயிலாகத் தெரிய வருகின்றன.
Remove ads
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads