எஸ். ஆர். பொம்மை எதிர் இந்திய ஒன்றியம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

எஸ். ஆர். பொம்மை எதிர் இந்திய ஒன்றியம் (S. R. Bommai V. Union of India, வழக்கு எண் 1994 AIR 1918) என்பது இந்திய உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு முக்கிய வழக்கு. இவ்வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினால் ஒன்றிய அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 356 ஆவது பிரிவை பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைக்கும் நிகழ்வுகள் வெகுவாகக் குறைக்கப்பட்டன. மாநில அரசுகளைக் கலைப்பதில் ஒன்றிய அரசின் உரிமைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டன.[1]

Remove ads

பிரிவு 356

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 356, ஒன்றிய அரசுக்கு மாநில அரசுகளைக் கலைத்து குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமல்படுத்த உரிமை அளிக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் இயற்றப் பட்டபோது, இப்பிரிவு அடிக்கடி பயன்படுத்தப்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அரசியல் சாசனத்தின் சிற்பி என்று கருதப்படும் அம்பேத்கர் இப்பிரிவினை ஒரு செல்லாப் பிரிவாகத் தான் கருதினார். இப்பிரிவு மாநிலங்களில் சட்டஒழுங்கு மிகவும் சீர்குலையும் போதோ அல்லது மாநில அரசால் கையாள முடியாத நெருக்கடி நிகழும் போதோ மட்டும் பயன்படுத்தப் படவேண்டும் என்பதே அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் நடைமுறையில் இச்சட்டம், ஒன்றிய அரசால், தனது அரசியல் எதிராளிகளைப் பழிவாங்கவும், சாதகமான அரசை மாநிலங்களில் அமைக்கவுமே பயன்படுத்தப்பட்டது. 1959 இல் முதல் முறையாக கேரளத்தில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்தைக் கலைக்க இப்பிரிவு பயன் படுத்தப்பட்டது. அடுத்த முப்பது ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாநில அரசுகள் இப்பிரிவினைக் கொண்டு கலைக்கப்பட்டன.

Remove ads

எஸ். ஆர். பொம்மை

எஸ் ஆர் பொம்மை ஜனதா கட்சியை சேர்ந்தவர். ஆகஸ்ட் 1988 இல் கர்நாடக மாநிலத்தின் முதல்வரானார். செப்டம்பர் 1988 இல் ஜனதா கட்சியும், லோக் தளம் கட்சியும் இணைந்து ஜனதா தளம் என்ற புதிய கட்சியை உருவாக்கின. ஏற்கனவே சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு பெற்றிருந்த பொம்மைக்கு மேலும் 13 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். சில நாட்கள் கழித்து கே. ஆர். மொலகேரி என்னும் ஜனதா தள உறுப்பினர் மாநில ஆளுனரை சந்தித்து, தன்னை 19 உறுப்பினர்கள் ஆதரிப்பதாகவும், தன்னை ஆட்சியமைக்க அழைக்க வேண்டுமெனக் கூறினார். அதனை ஏற்ற ஆளுனர் குடியரசுத் தலைவருக்கு, பொம்மை, சட்டசபையில் பெரும்பான்மையை இழந்து விட்டதால், அவரது ஆட்சியை கலைத்து விடலாம் என்று பரிந்துரைத்தார். ஆனால் மொலகேரி குறிப்பிட்ட உறுப்பினர்கள் தாங்கள் கட்சி மாறவில்லை என மறுத்தனர்; பொம்மை சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு கேட்டார். ஆனால் அதனை கண்டுகொள்ளாமல், 1989 ஏப்ரல் 19 ஆம் நாள், பிரதமர் ராஜீவ் காந்தியின் பரிந்துரையின் பேரில், குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன், பொம்மையின் அரசைக் கலைத்தார். கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து பொம்மை தொடர்ந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. பொம்மை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.[2][3]

Remove ads

பிற ஆட்சி கலைப்புகள்

  • இதே போல் 1988 இல் நாகாலாந்து அரசும்
  • 1991 இல் மேகாலய அரசும், கலைக்கப்பட்டிருந்தன.
  • அதே 1991 ஆம் வருடத்தில் தமிழ்நாட்டில் முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் விடுதலை புலிகளிடம் இந்திய அரசின் அரசியல் ரகசிய செயல்பாடுகளை கூறியதாகவும், இலங்கை அகதிகளை தமிழ்நாட்டில் ஆதரித்ததால். அவரது ஆளும் திமுக அரசு ஆட்சி கலைப்பு சட்டம் 356ல் (அதர்வைஸ்) சட்டத்தின் மூலம் இந்தியா சுதந்திரத்திற்கு பிறகு முதல் முறையாக கலைக்கப்பட்டது.
  • 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப் பட்ட சம்பவத்திற்குப் பின் நிகழ்ந்த கலவரங்களுக்கு காரணமான இந்துத்வ அமைப்புகளை தடை செய்யாததை காரணம் காட்டி மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேசத்தின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி அரசுகள் கலைக்கப்பட்டன. இத்தகைய நீக்கங்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் பொம்மையின் வழக்குடன் சேர்க்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.[3]

வழக்கும் தீர்ப்பும்

1994 ஆம் வருடம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இவ்வழக்கை நீதிபதி குல்தீப் சிங் தலைமையில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்புச் சட்ட பெஞ்சு விசாரித்தது. பொம்மையின் அரசைக் கலைத்தது செல்லாது என்று அறிவித்த நீதிபதிகளின் தீர்ப்பில் பின்வரும் முக்கிய சட்ட விளக்கங்கள் இடம் பெற்றிருந்தன:[4][5]

  1. குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது, நீதிமன்றத்தின் மேற்பார்வைக்கு உட்பட்ட செயல்; தீய உள்நோக்குடன் (malafide) ஆட்சி கலைக்கப் பட்டிருக்குமெனில் நீதிமன்றங்களுக்கு கலைக்கப்பட்ட ஆட்சியை மீண்டும் அமல்படுத்த அதிகாரம் உண்டு
  2. பிரிவு 356 இல் குடியரசுத் தலைவருக்கு வழங்கப் பட்டிருக்கும் அதிகாரம் கட்டற்றதல்ல. நிபந்தனைகளுக்கும், மேற்பார்வைக்கும் உட்பட்டதே.
  3. மத்திய அமைச்சரவை, குடியரசுத் தலைவருக்கு செய்யும் பரிந்துரை நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் வராவிட்டலும், அப்பரிந்துரை எந்தச் சான்றுகளின் அடிப்படையில் செய்யப்பட்டதோ அவற்றை நீதிமன்றங்கள் ஆராயலாம்.
  4. ஆட்சி கலைப்பு அரசியலமைப்புச் சட்டத்தின் துஷ்பிரயோகம் என்று நீதிமன்றங்கள் கருதினால், கலைக்கப்பட்ட அரசை மீண்டும் பதவியிலமர்த்தும் உரிமை அவற்றிற்கு உண்டு.
  5. இந்தியக் குடியரசின் மதச்சார்பின்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படும் மாநில அரசுகளை கலைக்கும் உரிமை ஒன்றிய அரசுக்கு உண்டு.
Remove ads

விளைவுகள்

இத்தீர்ப்பின் பலனாக, பிரிவு 356 னை பயன்படுத்தி மாநில அரசுகள் கலைக்கப்படும் சம்பவங்கள் வெகுவாக குறைந்து விட்டன. தீர்ப்பு வெளியான பின் இதுவரை பத்துக்கும் குறைவான ஆட்சி கலைப்புகளே நடைபெற்றுள்ளன. இத்தீர்ப்பு, மத்திய-மாநில அரசுகள் உறவில், மாநில அரசுகளின் நிலையை பலப்படுத்தியதன் மூலம் இந்தியக் குடியரசில் கூட்டாட்சியை (federalism) பலப்படுத்தியுள்ளது.[1][6]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads