ஓமோ இரெக்டசு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

Euteleostomi

விரைவான உண்மைகள் உயிரியல் வகைப்பாடு, இருசொற் பெயரீடு ...

ஓமோ இரெக்டசு (Homo erectus) என்பது, ஒமினிட் குடும்பத்தைச் சேர்ந்த அழிந்துவிட்ட ஒர் இனம். பிளீசுட்டோசீன் நிலவியல் காலத்தின் பெரும் பகுதியூடாக இவ்வினம் வாழ்ந்திருந்தது. இதன் மிக முந்திய புதைபடிவச் சான்றுகள் 1.9 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தியவை. மிகப் பிந்திய சான்றுகள் 70,000 ஆண்டுகளுக்கு முந்தியவை. ஆப்பிரிக்காவில் தோன்றியதாகக் கருதப்படும் ஓமோ இரெக்டசு, ஜார்ஜியா, இந்தியா, இலங்கை, சீனா, இந்தோனீசியா ஆகியவை உள்ளடங்கலாக யூரேசியப் பகுதி முழுவதும் பரந்து குடியேறின.[1][2]

இதன் வகைப்பாடு, மூதாதைகள், சந்ததிகள் என்பன குறித்த விவாதங்கள் இன்னும் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக ஓமோ எர்காசுட்டர் இனத்துக்கும் இதற்கும் இடையிலான தொடர்பு குறித்து இரண்டு நிலைகள் உள்ளன. முதலாவது, ஓமோ இரெக்டசு, ஓமோ எர்காசுட்டர் ஆகிய இரண்டும் ஒரே இனத்தையே குறிக்கும் என்றும் அதனால், ஓமோ இரெக்டசு ஓமோ ஈடில்பேர்கென்சிசு, ஓமோ நீன்டர்தாலென்சிசு, ஓமோ சப்பியன்சு ஆகியவற்றின் நேரடி மூதாதை ஆகும் என்னும் நிலைப்பாடு. இரண்டாவது, ஓமோ இரக்டசு ஒரு ஆசிய இனம், ஆப்பிரிக்க ஓமோ எர்காசுட்டர் இனத்தில் இருந்து வேறுபட்டது என்ற நிலைப்பாடு.[1][3][4]

தொல்மானிடவியலாளர்களில் இன்னொரு பிரிவினர் இன்னொரு கருத்தை முன்வைக்கின்றனர். இது முன்னர் குறிப்பிட்ட முதலாவது நிலைப்பாட்டுக்கு மாற்றீடாக உள்ளது. இதன்படி, ஓமோ எர்காசுட்டர் என்பது, ஓமோ இரெக்டசுவின் ஆப்பிரிக்க வகை ஆகும். இவர்கள் ஆசிய வகைக்கு ஓமோ இரெக்டசு சென்சு இசுட்ரிக்டோ என்றும் ஆப்பிரிக்க, ஆசிய வகைகளை உள்ளடக்கிய பெரிய வகைக்கு ஓமோ இரெக்டசு சென்சு லாட்டோ என்றும் பெயர் இட்டுள்ளனர்.[5][6]

டிமானிசி மண்டையோடுகள் ஆவணப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து 2013ல் புதிய விவாதம் ஒன்று தொடங்கியது. டிமானிசி மண்டையோடுகளில் காணப்படும் பெரிய உருவவியல் வேறுபாடுகளைக் கருத்தில் எடுக்கும்போது, முன்னர் வெவ்வேறாக வகைப்படுத்தப்பட்ட மனித மூதாதைகளை, எடுத்துக்காட்டாக ஓமோ எர்காசுட்டர், ஓமோ ருடோல்பென்சிசு, ஓமோ அபிலிசு போன்றவற்றை, ஓமோ இரெக்டசு இனமாக வகைப்படுத்த வேண்டும் எனச் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[7][8]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads