கபிலர் (சங்ககாலம்)

From Wikipedia, the free encyclopedia

கபிலர் (சங்ககாலம்)
Remove ads

கபிலர் சங்க காலத்து தமிழ்ப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர். சங்க இலக்கியப் பாடல்களுள் மிக அதிக எண்ணிக்கையில் பாடல்களை இயற்றியவர்.[1]; திருவாதவூரில் பிறந்தவர் எனத் திருவிளையாடல் புராணம் கூறுவது கபிலதேவ நாயனார் என்னும் சைவப் புலவர்.

Thumb
கபிலரை சித்தரிக்கும் தற்கால ஓவியம்
Thumb
கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்த இடமான திருக்கோயிலூரிலுள்ள கபிலர் குன்று

இவர் அகத்திணைகள் பலவற்றைப் பாடும் திறமுடையவராயினும் குறிஞ்சித் திணை பற்றிப் பாடுவதில் தேர்ந்தவர். கலித்தொகையில் குறிஞ்சிக் கலி, பத்துப் பாட்டில் குறிஞ்சிப் பாட்டு, ஐங்குறு நூற்றில் குறிஞ்சித் திணை பற்றிய நூறு பாடல்களைப் பாடியதோடு, இத்திணை பற்றி அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய நூல்களிலும் மிகுதியான பாடல்களைப் பாடியுள்ளதால் குறிஞ்சி பாடிய கபிலர் என்றே இவரைக் கூறலாம்.

கபில முனிவர், தொல்காப்பியர், கபிலதேவ நாயனார் ஆகியோர் இவரினும் வேறானவர் ஆவார். இன்னா நாற்பது என்ற பதினெண் கீழ்க்கணக்குத் தொகுதியில் உள்ள நூலின் ஆசிரியரான ”கபிலரும்” இவரும் ஒருவரல்லர். சங்க காலப் புலவர் கபிலரின் காலம் கி.மு 3-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலமாகும்.

Remove ads

வரலாறு

இவர் தன்னை அந்தணர் என்று கூறுகிறார் [2]. "புலனழுக்கற்ற அந்தணாளன்" என இவரை மாறோக்கத்து நப்பசலையாரும் பாராட்டிக் கூறுவார் [3].

இவர் இயற்றிய பாடல்களுள் மிகச்சிறந்து விளங்குவது பத்துப்பாட்டிலுள்ள குறிஞ்சிப் பாட்டு ஆகும். "ஆரிய அரசன் பிரகத்தன்" என்பவனுக்குத் தமிழ் அறிவித்தற்கு இப்பாட்டினைப் பாடினார். இதில் குறிஞ்சி நிலத்தில் பூத்துக் கிடந்த 99 பூக்களையும், சிறப்பாகப் பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூவையும் குறிப்பிட்டுப்பாடியுள்ளார்.

Remove ads

கபிலர் பாடிய பாடல்கள்

கபிலரின் பாடல்களில்,

  • புறநானூற்றுப் பாடல்கள் - 28
  • பதிற்றுப்பத்து பாடல்கள் - 10

ஆக 38 பாடல்கள் புறப்பொருள் பற்றியவை. அகத்திணையில் பாடிய பாடல்கள் 197. ஆக மொத்தம் 235 பாடல்கள் இவர் பாடியனவாகச் சங்கநூல்களில் இடம் பெற்றுள்ளன. கிடைத்துள்ள 2381 சங்கப்பாடல்களில் இவரது பாடல்களின் பங்கு 10-இல் ஒரு பங்குக்கு மேல் உள்ளது. பெயர் தெரிந்த 473 புலவர்களில் இவர் ஒருவரின் பாடல்கள் மட்டும் 10-இல் ஒரு பங்குக்கு மேல் என்று காணும்போது இவரது செல்வாக்கினை நன்கு உணரமுடிகிறது.[4]

Remove ads

கபிலரால் பாடப்பட்டோர்

இவரால் பாடப்பெற்றோர் அகுதை, இருங்கோவேள், செல்வக் கடுங்கோ வாழியாதன், சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, ஓரி, நள்ளி, மலையமான் திருமுடிக்காரி, மலையன், விச்சிக்கோன், வையாவி கோபெரும் பேகன், வேள் பாரி என்போர் ஆவர். இவர்களுள் பாரியின் பண்பைப் பற்றி இவர் பாடிய பாடல்களே அதிகம். இவர் பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்தினைப் பாடிச் சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்பானிடம் நூறாயிரம் காணமும் அவனது "நன்றா" என்னும் மலையின் மீது ஏறித் தனது கண்பட்ட அளவும் கொடுத்த நாட்டையும் பரிசிலாகப் பெற்றார்.

பேகன் தன் மனைவியைப் பிரிந்து இன்னொருத்தியுடன் கூடி வாழ்ந்த போது பாணர், அரிசில் கிழார் போன்ற புலவர்களுடன் சென்று பேகனை நல்வழிப் படுத்த முயன்றார் [5] எனவும் அறியலாம். இவரது பாட்டால், இருங்கோவேளின் முன்னோர்கள் நாற்பத்தி ஒன்பது தலைமுறையாகத் துவரை என்னும் நகரை ஆண்டு வந்தனர் [2] என்ற சேதி தெரிய வருகிறது.சங்க கால புலவர்களில் கபிலரே முதன்முதலில் துவரை (துவாரகை)நகரம் பற்றிக் கூறுகிறார்.

கபிலர் வேள்பாரியின் உற்ற நண்பராக விளங்கினார். அவன்பால் மட்டுமின்றி அவனது பறம்பு மலையினிடத்தும் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தார். பாரி பற்றிய இவரது பாடல்கள், இவரது சால்பையும் பாரியின் வள்ளல் தன்மையையும் தமிழகத்தே என்றென்றும் நிலைக்கச் செய்தவை. இவர், மூவேந்தரும் வஞ்சகமாகப் பாரியைக் கொன்றது கண்டு உள்ளம் வெதும்பி வெதும்பி பாடிய செய்யுட்கள், கற்போரைத் துயரக்கடலுள் சேர்த்துவன ஆகும். பாரிக்குப் பின் பாரியின் மகளிரான அங்கவை, சங்கவை இருவருக்கும் நல்வாழ்வு அமைக்க இவர் அடைந்த துயரங்கள் பல. பாரியின் மகளிரைத் தம் மகளிராகவே கருதித் தக்க அரசர்களை நாடி இப்பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார் கபிலர். அவ்வகையில் விச்சிகோன், இருங்கோவேள் என்ற இரண்டு அரசர்களைச் சென்று கபிலர் வேண்டியதைப் புறநானூறு [6] தெரிவிக்கிறது. இறுதியில், பாரி மகளிரைத் தக்க சான்றோரிடம் அடைக்கலம் தந்துவிட்டு, தாமும் வடக்கிருந்து உயிர் நீத்து. [7] தன் நண்பனான பாரியுடன் விண்ணகம் சேர்ந்தார்.

கபிலர் குன்று

திருக்கோவலூரில் தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள கபிலர் குன்று என்னும் பெயர் 'கபிலர்' பெயரைக் கொண்டுள்ளது.கபிலர்குன்று தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் நகராட்சியில் அமைந்துள்ளது.

கபிலர்மலை தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். இங்குப் புகழ்பெற்ற பாலசுப்ரமணியர் கோவில் உள்ளது.

கபிலரைப் பாராட்டியுள்ள சங்கப்பாடல்கள்

சங்ககாலக் கபிலரைச் சங்ககாலப் புலவர்களே பாராட்டிப் பாடியுள்ளர். இதனால் இவரது பெருமை இனிது விளங்கும்.

புலன் அழுக்கற்ற அந்தணாளன் [8]

பரிசில் பெறவேண்டிப் புலவர்கள் பாட ஆரும் அல்லாத அளவுக்கு எல்லாப் புரவலர்களையும் கபிலன் பாடிவிட்டானாம்[9] குட்டுவன் குடகடலில் பொன்னைக் கொண்டுவரும் நாவாய் ஓட்டினான். அப்போது பிற கலங்கள்(நாவாய்க் கப்பல்கள்) செல்லவில்லை. அதுபோலக் கபிலர் பாடும்போது பிற புலவர்கள் பாடுவதில்லையாம்.

வாய்மொழிக் கபிலன் [10]

பலரும் புகழும் நல்ல பாடல்களை இசையோடு பாடிக்கொண்டு ஊர்மக்கள் சூழ ஊர் ஊராகத் திரியும் கபிலன்.என்கிறார் நக்கீரர்.[11]

செறுத்த செய்யுட் செய்செந் நாவின்,
வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலர் [12]

  • செறு என்பது நன்செய் வயல். செறு என்பது செறிவு. கபிலர் பாடும் செய்யுள்கள் நன்செய் வயலில் நீர் தேங்குவது போலச் சமனிலை கொண்டவை. செறிந்த பொருளாழம் கொண்டவை.
  • அவருடைய நாக்கு செவ்விய செந்தண்மை கொண்டவை.[13]
  • கேள்வி என்பது கேட்டுக் கேட்டுப் பெறும் அறிவையும், எழுதப்படாமல் கேட்டுக் கேட்டு ஓதிவந்த வேதத்தையும் குறிக்கும். கபிலர் வேதம் கற்றவர். பிறர் சொல்வதைக் கேட்டுக்கொள்ளும் செவிச் செல்வம் பெற்றவர்.
  • வெறுத்த கேள்வி என்பதிலுள்ள 'வெறுத்த' என்னும் சொல் 'விரும்பிய' என்னும் பொருளைத் தரும்.[14] இப்படிப் போற்றத்தக்க புகழைக் கபிலர் பெற்று விளங்கினார்.

அரசவை பணிய அறம் புரிந்து வயங்கிய,
மறம் புரி கொள்கை வயங்கு செந் நாவின்,
உவலை கூறாக் கவலை இல் நெஞ்சின்,
நனவில் பாடிய நல்லிசைக், கபிலர் பெற்ற ஊர் [15]

  • ஒன்பதாம் பதிற்றுப்பத்தின் தலைவன் இளஞ்சேரல் இரும்பொறையைச் சோழ அரசன் பெரும்பூண் சென்னி தாக்கினான். அப்போது சேரன் எதிர்த்துத் தாக்கியதைத் தாங்கமுடியாமல் சென்னியின் படை தன்னிடமிருந்த வேல்களையெல்லாம் போர்களத்திலேயே போட்டுவிட்டு ஓடிவிட்டது. இதனைக் கூறுவதற்குப் பெருங்குன்றூர் கிழார் காட்டும் உவமையில்தான் கபிலர் காட்டப்படுகிறார்.[16]
  • அரசவை கபிலரைப் பணிந்தது. காரணம் அவரது அறம் புரிந்த நெஞ்சமும். மறம் புரி கொள்கையையும் என அறிகிறோம்.
  • இவர் ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ்நெறி அறிவிக்கக் குறிஞ்சிப்பாட்டுப் பாடியது இவரது அறம்புரி நெஞ்சத்தைக் காட்டுகிறது.
  • ‘செந்நா’ என்பது இவரது செந்தண்மை பிறழாத நாவண்மையைப் புலப்படுத்தும்.
  • கவலை என்பதன் எதிர்ச்சொல் உவலை. உவலை = மகிழ்ச்சி. அவருக்குக் கவலையும் இல்லை. மகிழ்ச்சியும் இல்லை.
  • கனவு = கற்பனை எண்ணங்களின் ஓட்டம். நனவில் பாடுதல் என்பது எண்ணி எண்ணித் திட்டமிட்டுக் கற்பனைகளைச் சேர்த்துப் பாடாமல் இயல்பாக நனவு நிகழ்ச்சி போல் பாடுவது இவரது பாடல் பாங்கு.
Remove ads

பாரியைப் பாடியவை

  • வேட்கை உடையோருக்கு நீர் போலப் பாரி இனிய சாயலை உடையவன். விறலியருக்குப் பொன்னணிகள் வழங்குவான் [17]
  • எருக்கம் பூவையும் கடவுள் ஏற்றுக்கொள்வது போலப் பாரி எளியோரையும் ஏற்றுக்கொள்வான் [18]
  • பாரியின் வள்ளணமைக்கு இணை மழை மட்டுமே.[19]
  • பரிசிலாகக் கேட்டால் தன்னையே கொடுத்துவிடுவான்.[20]
  • பெரும் யானைப் படையுடன் நாட்டைக் கைப்பற வந்திருக்கும் வேந்தர் விறலியர் போல ஆடிப் பாடிக்கொண்டு வந்தால் பெற்றுக்கொள்ளலாமே.[21]
  • பறம்பு நாட்டு 300 ஊர்களையும் பரிசிலர் பெற்றுக்கொண்டனர். அப்படியிருக்க மூவேந்தர்கள் இதனை எதற்காக முற்றுகை இட்டுள்ளனர்? [22]
  • பறம்பு நாட்டை வேலால் வெல்ல இயலாது. கிணையுடன் பாடிவந்தால் பெற்றுக்கொள்ளலாம் [23]

பாரி இறந்த பின் பாடியது

  • இவன் மலையில் ஒருபக்கம் அருவி ஒழுகும். மற்றொரு பக்கம் பாணர்க்கு ஊற்றிய தேறல் வழியும். இது வேந்தர்க்கு இன்னா நிலை [24]
  • கோள்நிலை மாறினாலும் பாரியின் கோல்நிலை சாயாது [25]
  • நீர் நிரம்பிய குளம் உடைந்தது போல ஆகிவிட்டதே, பாரியின் நாடு.[26]
  • நிழலில்லாத வழியில் தழைத்திரும் தனிமரம் போல விளங்கிய பாரி தன்னிடம் பொருள் இல்லை என்றாலும் மூவேந்தரிடம் சென்று இரந்து வாங்கிவந்து வழங்கினான்.[27]
  • பகைவரை ஓடச்செய்தவன [28]
Remove ads

பாரி மகளிர் திருமணம்

  • பாரி மகளிர் விளையாட்டுச் சிறுமியர். சுரைக்கொடி படர்ந்திருந்த தம் வீட்டுக் கூரைமீது ஏறி உப்பு விற்க வரும் உமணர்களின் வண்டியை ஒன்று, இரண்டு, என எண்ணிக்கொண்டு விளையாடுவார்களாம். பாரியின் பறம்பு மலையை மூவேந்தர் முற்றுகை இட்டிருந்தபோது, அவர்கள் மழை போன்ற கண்களுடன் படைக் குதிரைகளை எண்ணி விளையாடிக் கொண்டிருந்தனராம்.[29]
  • வளையல் அணிந்த கைகளும், மணக்கும் கூந்தலும் உடையவர்கள்.[30]
  • களிறு போலத் தோன்றிய மலையில் வாழ்ந்தனர். போருக்குப் பின்னர் அது களிறு மென்று தள்ளிய கவளம் போல ஆன பின் கபிலர் அவர்களுக்கு மணமகனைத் தேடி அழைத்துச் சென்றார்.[31]
  • விச்சிக்கோன் அவர்களைத் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டான்.[32] இருங்கோவேளும் மறுத்துவிட்டான்.[2] எனவே திருமுடி காரி மலையமான் எனும் ஒருவனுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டுக் கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்தார்.[33]
Remove ads

கபிலர் பேகனுக்கு அறிவுரை கூறியது

பேகன் தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து வேறொருத்தியுடன் வாழ்ந்துவந்தான். அவனைத் தன் மனைவியிடம் செல்லுபடி கபிலர் நயமாக எடுத்துரைக்கிறார். “நேற்று உன் அரண்மனை வாயிலில் நின்று உன்னையும் உன் மலையையும் வாழ்த்திப் பாடினேன். அப்போது உள்ளே இருந்து வாயிலுக்கு வந்து தன் மார்பை நனைக்கும் கண்ணீரை நிறுத்த முடியாமல் அழுதுகொண்டு ஒருத்தி நின்றாளே, அவள் உனக்கு யார்? இரங்கத் தக்கவள்.[34]

Remove ads

கபிலரும், செல்வக்கடுங்கோவும்

சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் கபிலரின் கைகளைப் பற்றி அவை மென்மையாக உள்ளன என்றான். படைக்கருவிகளைத் தாங்கி அரசன் கைகள் காப்புக் காய்த்து வன்மையாக உள்ளன. அவன் அளித்த விருந்தை உண்டு தம் கைகள் மென்மையாக உள்ளன என அவனது வள்ளண்மையைப் புலவர் பாராட்டினார்.[35] ஒரு பாடலில் செல்வக் கடுங்காவுக்கு வானத்திலுள்ள ஈடாகாது எனச் சிலேடையாகப் பாடியுள்ளார்.[36]

பதிற்றுப்பத்து தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஏழாம் பத்துப் பாடல்களிலும் இவர் இவனைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

கபிலரின் குறிஞ்சிப்பாட்டு

ஆரிய அரசன் பிரகத்தன் திருமண முறையில் தமிழரின் களவு-நெறி தீது என்றான். அவனுக்குத் தமிழ்நெறி இத்தகைய மேன்மை உடையது என்பதை எடுத்துக்காட்ட இந்தக் குறிஞ்சிப்பாட்டு நூலைக் கபிலர் பாடினார். தமிழரின் களவுநெறி கற்புநெறியாக முடியும் என்பதை இது விளக்குகிறது. தினைப்புனம் காக்கும் மகளிர் பூக்களைக் குவித்து விளையாடியதைக் கூறுமிடத்து 99 மலர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார்.

Remove ads

கபிலரின் குறிஞ்சிக்கலி (கலித்தொகை)

கலித்தொகை நூலில் குறிஞ்சித்திணைப் பாடல் கள் 31 உள்ளன. அவற்றைப் பாடியவர் கபிலர். இவற்றைக் குறிஞ்சிக்கலி எனக் குறிப்பிடுவது வழக்கம். இவற்றில் தோழியும் தலைவியும் மாறி மாறிப் பாடும் வள்ளைப்பாட்டு உரையாடல், முதுபார்ப்பான் காதல் முதலான செய்திகள் இடம்பெற்றுள்ளன. ஒரு பாடலில் அமைந்துள்ள மாலை-உவமை சுவையாக உள்ளது.

கபிலரின் குறிஞ்சி நூறு (ஐங்குறு நூறு)

ஐங்குறுநூறு என்னும் தொகைநூலில் 500 பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு திணைக்கும் நூறு என்று ஐந்து திணைக்கும் ஐந்நூறு பாடல்கள். ஒவ்வொரு திணையின் நூறு பாடல்களும் ஒவ்வொரு புலவரால் பாடப்பட்டவை. இந்த வகையில் குறிஞ்சித் திணைப் பாடல்களைப் பாடியவர் கபிலர்.

கபிலரின் பிற பாடல்கள்

அகநானூற்றில் 18 பாடல்கள் [37], குறுந்தொகையில் 29 பாடல்கள் [38], நற்றிணையில் 20 பாடல்கள் [39] என்று 67 அகத்திணைப் பாடல்களைப் பாடியுள்ளார். இந்த 67.ல் ஒன்று பாலைத்திணைப் பாடல். மற்றொன்று நெய்தல் திணைப் பாடல். ஏனையவை குறிஞ்சித்திணைப் பாடல்கள்.

கபில நெடுநகர்

வேந்தர்க்குப் பெண் தர மறுத்த மகட்பாற் காஞ்சிப் பாடல் ஒன்றில் [40] கபிலர், கபில நெடுநகர் என்னும் ஊரைக் குறிப்பிட்டுள்ளார். பெண் தர மறுக்கப்பட்ட மறவர் மகளைப் பற்றிக் குறிப்பிடும்போது அவள் பாரியின் பனிச்சுனை போலக் காண்பதற்கு இனியவள் என்றும், (அச் சுனையில் நீராடிய பின்) அவள் தன் கூந்நலைப் புலர்த்தும் அகில் நறும்புகை கபில நெடுநகர் வரையில் கமழும் என்றும் கபிலர் குறிப்பிடுகிறார்.

இதனால் இவ்வூர் பாரியின் பனிச்சுனைக்குப் பக்கத்தில் இருந்தது என்பதை உணரமுடிகிறது. கபிலர் வாழ்ந்த இந்த ஊரை மக்கள் கபில நெடுநகர் என்றனர். இது கபிலருக்குப் பாரி வழங்கிய ஊர் எனலாம்.

கபிலர் பெயர் கொண்டவர்கள்

  • கபிலதேவர் - பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இன்னாநாற்பது நூலைப் பாடியவர் கபிலதேவர்.
  • கபிலதேவ நாயனார் - பதினோராம் திருமுறையில் கபிலதேவ நாயனார் பாடியனவாக மூத்த பிள்ளையார் இரட்டைமணிமாலை, சிவபெருமான் திருவிரட்டைமணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி என்னும் மூன்று சிற்றிலக்கியங்கள் உள்ளன.
  • கபிலர் பதினொருவர் - திருமால் தனக்குள் உள்ளடக்கமாகக் கொண்டுள்ளவற்றில் 'பதினொரு கபிலரும்' அடக்கம் என்று கடுவன் இள எயினனார் தம் பரிபாடலில் குறிப்பிட்டுள்ளார்.[41]
  • சமயாசிரியர் கபிலர் - சங்கம் மருவிய காலத்து ஆறு சமயங்களில் ஒன்றான சாங்கிய சமயத்தின் ஆசிரியர் கபிலர்.[42]

கபிலை - சொல் விளக்கம்

தொல்காப்பியர் பாடாண் திணைப் பாடல்களின் துறைகளை விரித்துக் கூறும்போது 'கபிலை கண்ணிய வேள்வி நிலை' என்னும் துறை ஒன்றைக் குறிப்பிடுகிறார்.[43]

இங்குக் கபிலை என்பது பசுவைக் குறிக்கும். தொல்காப்பியரின் இந்தத் தொடர் கோதானத்தைக் குறிப்பிடுகிறது.

வெண்மையும் செம்மையும், வெண்மையும் கருமையும், கருமையும் செம்மையும் என்று நிறம் கலந்த தோற்றம் கொண்ட பசுக்களைக் கபிலைப்பசு என்பது நாட்டுப்புற வழக்கு.

இந்தக் கபிலையைக் கபிலரோடு பொருத்திப் பார்க்கலாம்.

இதனையும் காண்க

அடிக்குறிப்பு

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads