கலாபாக்கான் மாவட்டம்
மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கலாபாக்கான் மாவட்டம்; (மலாய்: Daerah Kalabakan; ஆங்கிலம்: Kalabakan District) என்பது மலேசியா, சபா மாநிலம், தாவாவ் பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். இந்தக் கலாபாக்கான் மாவட்டத்தின் தலைநகரம் கலாபாக்கான் நகரம் (Kalabakan Town) ஆகும்.
சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலு மாநகரத்தில் இருந்து சுமார் 235 கிலோமீட்டர்கள் (146 mi)) தொலைவில் அமைந்துள்ளது. 2020-ஆம் ஆண்டு மலேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்த மாநிலத்தில் 48,195 மக்கள் வசிக்கின்றனர்.
Remove ads
பொது
சபா மாநிலத்தின் தாவாவ் பிரிவில் உள்ள மாவட்டங்கள்:
- கலாபாக்கான் மாவட்டம் (Kalabakan District)
- கூனாக் மாவட்டம் (Kunak District)
- லகாட் டத்து மாவட்டம் (Lahad Datu District)
- செம்பூர்ணா மாவட்டம் (Semporna District)
- தாவாவ் மாவட்டம் (Tawau District)
மாவட்ட எல்லைகள்
கலாபாக்கான் மாவட்டத்தின் மேற்கில் நாபாவான் மாவட்டம் (Nabawan District); வடக்கில் தொங்கோட் மாவட்டம் (Tongod District); வடகிழக்கில் லகாட் டத்து மாவட்டம் (Lahad Datu District) மற்றும் கூனாக் மாவட்டம் (Kunak District); கிழக்கில் தாவாவ் மாவட்டம் (Tawau District); ஆகிய சபா மாவட்டங்கள் எல்லைகளாக உள்ளன.
கலாபாக்கான் மாவட்டத்தின் தெற்கில், இந்தோனேசியா மாநிலமான வடக்கு கலிமந்தானின் நுனுக்கான் துணை மாநிலம் எல்லையாக உள்ளது.
கோவி விரிகுடா


இந்த மாவட்டத்தின் தென்கிழக்கில், கோவி விரிகுடா (Cowie Bay) சூழ்ந்துள்ளது. சுலாவெசி கடலின் (Celebes Sea) ஒரு பகுதி; மற்றும் வாலஸ் விரிகுடா (Wallace Bay); ஆகியவை மேற்கு கடற்கரையில் இருந்து கலாபாக்கனைப் பிரிக்கின்றன. கலாபாக்கான் மாவட்டம் 3,885 சதுர கிலோமீட்டர்கள் (1,500 sq mi) பரப்பளவைக் கொண்டது; மற்றும் சபா மாநிலத்தின் 5.28% பரப்பளவைக் கொண்டுள்ளது.
கலாபாக்கானின் உட்புற மேற்குப் பகுதியியில் குவாமுட் உயர்நிலமும் (Kuamut Highlands); மற்றும் வடகிழக்கில் தாவாவ் உயர்நிலமும் (Tawau Highlands); கரடுமுரடான நிலப்பரப்பைக் கொண்டுள்ளன.
குவாமுட் உயர்நிலம்
குவாமுட் உயர்நிலம் 26,880 எக்டேர்கள் (66,400 ஏக்கர்கள்) பரப்பளவு கொண்டது. இந்தக் குவாமுட் உயர்நிலத்தில் மிகப்பெரிய வனப் பகுதி உள்ளது. மற்றும் அதன் மேற்கில் உள்ள மலியாவ் படுகை (Maliau Basin) காப்பு மண்டலமாகவும் செயல்படுகிறது.[3]
செருடோங் ஆறு (Serudong River), கலாபாக்கான் ஆறு (Kalabakan River), பிராந்தியான் ஆறு (Brantian River) போன்ற ஆறுகள் மலைப்பகுதிகளில் இருந்து கோவி விரிகுடாவிற்குள் பாய்கின்றன. இங்குள்ள ஆற்றுப் படுகை (Kalabakan Valley) சதுப்பு நிலங்களால் சூழப்பட்டுள்ளது. இப்பகுதியில் போர்னியோ யானைகளின் வேட்டையாடுதல் நடைபெறுகிறது. அத்துடன் முதலை தாக்குதல்களும் நடைபெறுகின்றன.[4]
கலாபாக்கானில் வெப்பமண்டல மழைக்காட்டு காலநிலை உள்ளது. சராசரி ஆண்டு மழைப்பொழிவு சுமார் 2100 மி.மீ. சூன் மற்றும் அக்டோபர் மாதங்களில் மழைப்பொழிவு உச்சம்.[5]
Remove ads
வரலாறு
கலாபாக்கான் என்ற இடத்தின் பெயர் தீடோங் மொழியில் இருந்து வந்தது. கலாபாக்கான் என்றால் "சாப்பிடலாம்" என பொருள்படும். இந்தப் பகுதியில் மூருட் மற்றும் திடோங் பழங்குடியின மக்கள் மிகுதியாய் வாழ்கின்றனர்.
1905-ஆம் ஆண்டு தொடங்கி 1932-ஆம் ஆண்டு வரை, இலண்டனை தளமாகக் கொண்ட கோவி ஆர்பர் நிலக்கரி நிறுவனம் (Cowie Harbour Coal Company) சிலிம்போபோன் (Silimpopon) எனும் இடத்தில் ஒரு நிலக்கரி சுரங்கத்தை இயக்கி வந்தது. சுரங்கத்தின் தொழிலாளர்களில் பெரும்பாலோர் சீனர்களாய் இருந்தனர். அவர்களின் எண்ணிக்கை 3000-க்கும் அதிகமாக இருந்தது. அந்தச் சுரங்கம் 1.5 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்தது.[6]
இரயில் மற்றும் கப்பல் மூலமாக நிலக்கரி கனிமம், செபாடிக் தீவுக்கு (Sebatik Island) கொண்டு செல்லப்பட்டு; பின்னர் ஏற்றுமதி செய்வதற்காக அங்கு கப்பல்களில் ஏற்றப்பட்டது.[7]
இந்தோனேசியா - மலேசியா மோதல்

இந்தோனேசியா - மலேசியா மோதல் (Indonesia–Malaysia confrontation) என்பது 1963-ஆம் ஆண்டு தொடங்கி 1966-ஆம் ஆண்டு வரையில் இந்தோனேசியாவுக்கும் - மலேசியாவுக்கும் இடையே நடைபெற்ற ஓர் ஆயுத மோதலைக் குறிப்பிடுவதாகும்.
இந்த மோதல் 1960-ஆம் ஆண்டுகளில் மலேசியா உருவாக்கப் படுவதில் இந்தோனேசியாவின் எதிர்ப்பில் இருந்து உருவானது. இந்தோனேசியா மற்றும் கிழக்கு மலேசியா - போர்னியோ கலிமந்தான் எல்லைப் பகுதிகளில் பெரும்பாலான மோதல்கள் நடைபெற்றன.
கலாப்பாகான் தாக்குதல்
இந்தோனேசியா-மலேசியா மோதலின் போது, 29 டிசம்பர் 1963-இல் கலாப்பாகான் பகுதியில் இந்தோனேசியப் படைகளால் தாக்குதல்கள் நடைபெற்றன. இந்த மோதல்கள், பெரும்பாலும் குறிப்பிட்ட இடங்களில் நடைபெற்ற மோதல்களாகும். தனிமைப் படுத்தப்பட்ட தரைப் போர் என வகைப்படுத்தப் படுகிறது.
1965-இல் இந்தோனேசிய அதிபர் சுகர்ணோ பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, இந்தச் சர்ச்சை அமைதியாக ஒரு முடிவுக்கு வந்தது.
பொருளாதார நடவடிக்கைகள்
தவாவ் மாவட்டத்தின் ஒரு பகுதியாக 1 ஜனவரி 2019 வரை கலாபாக்கான் நிர்வகிக்கப்பட்டது. பின்னர் அது ஒரு சுதந்திர மாவட்டமாக நிறுவப்பட்டது. தாவாவ் மாவட்டம் முன்பு காலத்தில் நெகிரி செம்பிலான் மாநிலத்தைப் போல பெரியதாக இருந்தது.
இருப்பினும் சபா அரசாங்கம் அதன் நிர்வாகத்தையும் வளர்ச்சியையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் இரண்டு மாவட்டங்களாகப் பிரித்தது. தற்போதைய மாவட்ட அதிகாரி ரசீத் பின் அப்துல் அரூன் (Rashid bin Abdul Harun)[8][9]
கலாபகனின் முக்கிய பொருளாதார நடவடிக்கைகளில் எண்ணெய் பனை உற்பத்தி; உள்ளூர் பழங்கள் உற்பத்தி; மற்றும் இறால் மீன்பிடித்தல் ஆகியவை அடங்கும். இந்த மாவட்டத்தில் சபா மெதுபலகை தயாரிப்பு நிறுவனம் (Sabah Softwoods Bhd) 60,000 எக்டேர்கள் (150,000 ஏக்கர்கள்) பழ மரங்கள் மற்றும் எண்ணெய் பனை தோட்டங்களை வைத்து இருக்கிறது.[10]
Remove ads
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
மேலும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads