சண்டக்கான் போர்க்கைதிகள் முகாம்
சண்டக்கான் நகரில் சப்பானியர்களால் நிறுவப்பட்ட போர்க் கைதிகள் முகாம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சண்டக்கான் போர்க்கைதிகள் முகாம் அல்லது சண்டக்கான் முகாம் (ஆங்கிலம்: Sandakan POW Camp அல்லது Sandakan camp; மலாய்: Kem Tawanan Perang Sandakan; இடச்சு மொழி: Kriegsgefangenenlager Sandakan) என்பது இரண்டாம் உலகப் போரின் போது மலேசியா சபா மாநிலத்தின் சண்டக்கான் நகரில் சப்பானியர்களால் நிறுவப்பட்ட போர்க் கைதிகள் முகாம் ஆகும்.

சண்டக்கான் மரண அணிவகுப்புகள் (Sandakan Death Marches) எனும் துர்நிகழ்வு, இதே இந்த சண்டக்கான் போர்க்கைதிகள் முகாமில் இருந்து தொடங்கியதால், இந்த இடம் புகழ் பெற்றது. இப்போது இந்தத் தளத்தின் ஒரு பகுதியில் சண்டக்கான் போர்க்கைதிகள் நினைவு பூங்கா (Sandakan Memorial Park) உள்ளது.[1]
Remove ads
வரலாறு




இரண்டாம் உலகப் போரின் போது பெரிய அளவிலான இராணுவ வெற்றிக்குப் பிறகு, சப்பானிய படைகள் ஏராளமான நேச நாட்டு வீரர்களை போர்க் கைதிகளாகச் சிறை பிடித்தன. இந்தக் கைதிகள் தென்கிழக்கு ஆசியாவில் இருந்த பல்வேறு தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.
1942 சூலை மாதம், சண்டக்கானில் இருந்த போர்க் கைதிகள் முகாம்களுக்கு ஏறக்குறைய 1,500 ஆத்திரேலிய படைவீரர்கள் கொண்டு வரப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் சிங்கப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள். சப்பானிய படையினருக்கு இராணுவ வானூர்தி நிலையம் கட்டும் நோக்கத்திற்காக அவர்கள் அங்கு கொண்டு வரப்பட்டனர்.[2]
2,500 போர்க்கைதிகள்
1943-இல், மேலும் 770 பிரித்தானிய போர்க்கைதிகளும்; 500 ஆத்திரேலிய போர்க்கைதிகளும் சண்டக்கான் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். 1943-இன் இறுதியில் ஏறக்குறைய 2,500 போர்க்கைதிகள் அந்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தனர்.
அக்டோபர் 1944-இல், போரின் இறுதிக் கட்டத்தில் சப்பானியர்கள், நேச நாட்டுப் படைகளின் குண்டுவீச்சுகளில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர். சண்டக்கான் நகரில் இருந்த வானூர்தி நிலையம் நேச நாட்டுப் படைகளால் தொடர்ந்து கடுமையான குண்டுவீச்சுக்கு உள்ளானதே அதற்கு முக்கியக் காரணியாகும்.[3]
முதல் அணிவகுப்பு
1945 சனவரி மாதத்தில், நேச நாட்டுப் படைகளின் குண்டுவீச்சுகளினால், சப்பானியத் தரப்பினருக்குச் சேதங்கள் மிக அதிகமாக இருந்தன. சண்டக்கான் வானூர்தி ஓடுபாதையைச் சப்பானியர்களால் சரி செய்ய முடியவில்லை. 1945 சனவரி 10-ஆம் தேதி, வானூர்தி ஓடுதளத்தின் பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. அதே மாதத்தில், ஏறக்குறைய 455 கைதிகள் கொண்ட ஒரு குழு சப்பானியர்களால் கட்டாய அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டது.[4]
1945 மே மாதம் இறுதியில், சண்டக்கான் போர்க்கைதிகள் முகாமை மூடுவதற்கு சப்பானியர்கள் முடிவு செய்தனர். 1945 மே மாதம் 17-ஆம் தேதி, தக்காகுவா தக்குவோ (Takakuwa Takuo) என்பவர் முகாமின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.[5]
2434 போர்க்கைதிகள் உயிரிழப்பு
1945 மே மாதம் 29-ஆம் தேதி, 536 கைதிகள் இரானாவுக்கு அணிவகுத்துச் செல்ல உத்தரவிடப்பட்டனர். பின்னர் முகாம்களின் ஒரு பகுதிக்கு தீ வைக்கப்பட்டது. அதனால் அந்தத் தளத்தைப் பற்றிய அனைத்துப் பதிவுகளும் தீயில் அழிக்கப்பட்டன. அதன் பின்னர் மற்ற கைதிகள் காட்டுக்குள் அனுப்பப்பட்டனர். அங்கு அவர்களில் பலர் உணவு இல்லாமல், நோய்வாய்ப்பட்டு இறந்தனர்; அல்லது சப்பானிய காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.[5]
சண்டக்கான் போர்க்கைதிகள் முகாமில் விடப்பட்ட போர்க்கைதிகள் எவரும் உயிர் பிழைக்கவில்லை. இரானாவுக்கு அணிவகுத்துச் செல்ல உத்தரவிடப்பட்ட போர்க்கைதிகளில் ஆறு பேர் மட்டுமே உயிர்பிழைத்தனர். இந்தச் உசண்டக்கான் மரண அணிவகுப்பில் 2,434 நேச நாட்டு வீரர்கள் உயிர் இழந்தனர்.[6]
Remove ads
சப்பானிய படைத் தலைவர்கள்


சுசுமி ஒசிசிமா
சப்பானிய ஆக்கிரமிப்பின் போது, சண்டக்கான் போர்க்கைதிகள் முகாமின் நிர்வாகத் தலைவராகப் பொறுப்பு வகித்தவர் சுசுமி ஒசிசிமா (Susumi Hoshijima). அவர் சப்பானிய இராணுவத்தில் பொறியாளராகச் சேவை செய்தவர்.[7]
நேர்மையற்ற மனிதர்
சண்டக்கான் வானூர்தி நிலையத்தை நிறுவும் பணி இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. போரின் முடிவில் அவர் ஒரு கேப்டனாக பதவி உயர்வு பெற்றார். புதிதாக வந்த போர்க் கைதிகளுக்கு இவர் ஒரு கொடுமைக்காரராகவும், நேர்மையற்ற மனிதராகவும் விளங்கினார் என்று அறியப்படுகிறது.
ஏப்ரல் 1943-இல் அவர் புதிதாக வந்த போர்க் கைதிகளிடம் கூறியது:
| “ | "போர்னியோவின் வெப்பமண்டல சூரியனின் கீழ் உங்கள் எலும்புகள் அழுகும் வரை நீங்கள் வேலை செய்வீர்கள். நீங்கள் சப்பானியப் பேரரசருக்காக வேலை செய்வீர்கள். உங்களில் யாராவது தப்பித்தால், நான் மூன்று அல்லது நான்கு பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களைச் சுடுவேன். இந்தப் போர் 100 ஆண்டுகள் நீடிக்கும்". | ” |
தக்காகுவா தக்குவோ
மே 1945-இல், சப்பானிய இராணுவத் தலைமையகம், சண்டக்கான் போர்க் கைதிகள் முகாமைக் கைவிட உத்தரவிட்டது. 1945 மே 17-ஆம் தேதி, கேப்டன் தக்காகுவா தக்குவோ மற்றும் சுசுமி ஒசிசிமா ஆகியோர் போர்க் கைதிகளின் மரண அணிவகுப்பிற்குப் பொறுப்பு வகித்தனர்.[2]
போர் முடிந்த பின்னர் சுசுமி ஒசிசிமா (Susumi Hoshijima) மற்றும் தக்காகுவா தக்குவோ (Takakuwa Takuo) இருவரும் லபுவான் போர்க் குற்ற விசாரணைக்கு (Labuan War Crimes Trials) கொண்டு வரப்பட்டனர். அங்கு அவர்கள் குற்றவாளிகள் எனக் கண்டு அறியப்பட்டனர். 1946 ஏப்ரல் 6-ஆம் தேதி பப்புவா நியூ கினி (Papua New Guinea), ரபாவுல் (Rabaul) நகரில் மரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர்.[8][9]
Remove ads
மேற்கோள்கள்
மேலும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
