சியாட்டில்

From Wikipedia, the free encyclopedia

சியாட்டில்
Remove ads

சியாட்டில் (Seattle /siˈætəl/ (கேட்க) ) அமெரிக்காவின் மேற்குக் கடலோரத்தில் உள்ளதோர் துறைமுக நகரம் ஆகும். வாசிங்டன் மாநிலத்தில் கிங் கவுண்டியின் தலைமையிடமாகவும் விளங்குகின்றது.

விரைவான உண்மைகள் சியாட்டில் நகரம், நாடு ...

இந்த நகரத்தில் 2017 கணக்கெடுப்பின்படி, 713,700 பேர் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[2] வாசிங்டன் மாநிலத்திலும் வட அமெரிக்காவின் பசிபிக்பகுதியின் வடமேற்குப் பகுதியிலும் உள்ள மிகப்பெரிய நகரமாக விளங்குகின்றது. 2018இல் ஐக்கிய அமெரிக்க கணக்கெடுப்புத் துறை வெளியிட்ட தரவுகளின்படி சியாட்டில் பெருநகரப் பகுதியின் மக்கள்தொகை 3.87 மில்லியனாக, நாட்டின் 15வது மிகப்பெரும் நகரமாக விளங்குகின்றது.[5] சூலை 2013இல் ஐக்கிய அமெரிக்காவில் மிக விரைவாக வளர்ந்து வரும் பெருநகரங்களில் ஒன்றாகவும் விளங்கிற்று.[6] மே 2015இல் ஆண்டு வளர்ச்சி வீதம் 2.1% கொண்டிருந்த சியாட்டில் நகரம் முதல் ஐந்து நகரங்களில் ஒன்றாக இருந்தது.[7] சூலை 2016இல் ஆண்டு வளர்ச்சி வீதம் 3.1% எட்ட மீண்டும் விரைவாக வளரும் நகரங்களில் ஒன்றானது.[8]

அமைதிப் பெருங்கடலின் கடற்காயல் புசே சவுண்டிற்கும் வாசிங்டன் ஏரிக்கும் இடையேயுள்ள பூசந்தியில் சியாட்டில் அமைந்துள்ளது. மேலும் கனடா-ஐக்கிய அமெரிக்க எல்லைக்கு தெற்கே சுமார் 96 மைல்கள் (154 கி.மீ.) தொலைவில் அமைந்துள்ளது. ஆசியாவுடனான முதன்மை வாயிலாக விளங்கும் சியாட்டில் துறைமுகம் சரக்குக் கொள்கலன்களை கையாளும் திறனில் வட அமெரிக்காவின் நான்காம் மிகப்பெரிய துறைமுகமாக (2015 நிலவரப்படி) விளங்குகின்றது.[9]

சியாட்டில் பகுதியில் முதல் நிரந்தர ஐரோப்பிய குடியேறிகள் குடியேறும் முன்னரே தொல்குடி அமெரிக்கர் கிட்டத்தட்ட குறைந்தது 4,000 ஆண்டுகள் வசித்து வந்துள்ளனர்.[10] எனினும், ஐரோப்பியரின் குடியேற்றம் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியிலிருந்தே தொடங்குகிறது. முதல் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களான, ஆர்தர் ஏ. டென்னி என்பவரும் அவரது குழுவினரும் 1851 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி இவ்விடத்தை அடைந்தனர்.[11]

தொடக்கத்தில் ஐரோப்பியரால் நியூ யார்க்-ஆல்க்கி அன்றும் டுவாம்ப் என்றும் இவ்விடம் அழைக்கப்பட்டது. 1853 ஆம் ஆண்டில் இப் பகுதியின் முக்கிய குடியேற்றத்துக்கு, உள்ளூர்ப் பழங்குடித் தலைவனின் பெயரைத் தழுவி சியாட்டில் எனப் பெயரிடவேண்டும் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.

சியாட்டிலின் முதன்மைத் தொழிலாக மரம் வெட்டுதலும் வெட்டுமர வணிகமும் இருந்தன. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிளோன்டிகே தங்க வேட்டைக் காலத்தில் அலாஸ்காவிற்கான வாயிலாகவும் கப்பல் கட்டுதலும் சந்தையிடமாகவும் மாறியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் போயிங் நிறுவனம் சியாட்டிலில் தனது வானூர்தி தயாரிப்பைத் துவங்கியது; இதையொட்டி சியாட்டில் வானூர்திகள் மற்றும் உதிரிகள் தயாரிக்கும் மையமாக உருமாறிற்று. 1980களில் தொழில்நுட்ப நகரமாக உருவெடுத்தது; இப்பகுதியில் மைக்ரோசாப்ட் நிறுவனமும் இணைய வணிக முன்னோடி அமேசானும் நிறுவப்பட்டன. மைக்ரோசாப்டின் நிறுவனர் பில் கேட்ஸ் சியாட்டிலில் பிறந்தவர். வளர்ச்சி வீதம் உயர, போக்குவரத்து வசதிகளாக அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவப்பட்டது; புதிய சியாட்டில்-டகோமா பன்னாட்டு வானூர்தி நிலையம் கட்டமைக்கப்பட்டது. புதிய மென்பொருள், உயிரித் தொழில்நுட்பம், இணைய நிறுவனங்கள் நிறுவப்பட்டன. பொருளியல் வளர்ச்சியும் முன்னேற்றமும் நகரத்தின் மக்கள்தொகையை 1990க்கும் 2000க்கும் இடையே 50,000 வரை கூட்டியது.

சியாட்டிலுக்கு இசைத்துறையிலும் சிறப்பான வரலாறு உண்டு. 1918இலிருந்து 1951 வரை ஜாக்சன் தெருவில் கிட்டத்தட்ட 24 ஜாஸ் இரவு விடுதிகள் இருந்தன. இங்கிருந்தே புகழ்பெற்ற ரே சார்ல்ஸ், குயின்சி ஜோன்சு, எர்னெஸ்டைன் ஆண்டர்சன் போன்ற ஜாஸ் இசைக்கலைஞர்கள் தம் இசைவாழ்வில் முதன்மை பெற்றனர். ராக் இசைக் கலைஞர் ஜிமி ஹென்றிக்ஸ் இங்குதான் பிறந்தார். நிர்வானா, பேர்ல் ஜெம், சவுன்டுகார்டன், ஃபூ ஃபைட்டர்சு, மாற்று ராக்கிசை கிரஞ்சு ஆகியோரும் இங்கேத்தவர்களே.[12]இயர் கம்சு தி பிரைட்சு, பிரேசியர், கிரேஸ் அனாடமி போன்றத் தொலைக்காட்சித் தொடர்களில் நிகழிடமாக சியாட்டில் உள்ளது.

சியாட்டில் விளையாட்டுத் துறையிலும் சிறப்பாக உள்ளது. சியாட்டில் மாரினர்சு (அடிபந்தாட்டம்), சியாட்டில் சீஹாக்சு (அமெரிக்கக் கால்பந்தாட்டம்), சவுண்டர்சு காற்பந்துக் கழகம் (கால்பந்து கூட்டமைப்பு) போன்ற பல சிறந்த விளையாட்டு அணிகளின் தாயகமாக உள்ளது. மேற்கிலுள்ள பூஜே சவுண்டும் அமைதிப் பெருங்கடலும் கிழக்கேயுள்ள வாசிங்டன் ஏரியும் to நீர் விளையாட்டுக்களுக்கு களமாக விளங்குகின்றன.

சியாட்டிலில் பல கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் உள்ளன. இவற்றில் முதன்மையானவை வாசிங்டன் பல்கலைக்கழகமும் சியாட்டில் பல்கலைக்கழகமும் ஆகும்.

சியாட்டிலின் வானிலை வேனிற்காலத்தில் மிதமானதாக (நடுக்கடல் வானிலை) உள்ளது.

Remove ads

வரலாறு

உருவாக்கம்

தொல்லியல் அகழ்வாய்வுகள் இங்கு தொல்குடி அமெரிக்கர்கள் 4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.[10] துவாமிச குடிகள் என அறியப்படுகின்ற தொல்குடிகள் எலியட் விரிகுடாவைச் சுற்றி பதினேழு சிற்றூர்களில் வாழ்ந்து வந்தனர்.[13][14][15]

இங்கு வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஜார்ஜ் வான்கூவர் ஆகும். இவர் மே, 1792இல் பசுபிக் வடமேற்கில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டபோது இங்கு வந்தார்.[16] 1851இல் லூதர் காலின்சு இங்குள்ள துவார்னிச ஆற்று முகத்துவாரத்தில் வந்திறங்க ஓர் இடம் தேடினார்.[17] அதே நேரத்தில் ஆர்தர் ஏ டென்னியின் குழுவினரும் இப்பகுதிக்கு குடியேற வந்தனர்; செப்டம்பர் 28, 1851இல் அவர்கள் சியாட்டிலின் அல்க்கி முனைக்கு உரிமை கோரினர்.[18]

துவாம்ப்சு 1852–1853

Thumb
சியாட்டில் சண்டை (1856)

அல்கி முனையில் மிகுந்த கடுமையான குளிர்காலத்தை எதிர்கொண்ட டென்னிக் குழுவினர் அங்கிருந்து இடம் பெயர்ந்து எலியட் விரிகுடாற்கு எதிரே தற்போதைய பயனீர் சதுக்கம் அருகே முகாமிட்டு அங்கு உரிமை கோரினர்.[18] புதிய இடத்திற்கு துவாம்ப்சு எனப் பெயரிட்டனர். ஆனால் அவருடன் வந்த சார்லசு டெர்ரியும் ஜான் லாவும் பழைய இடத்திலேயே தங்கி விட்டனர். தாங்களிருந்த இடத்தை நியூ யார்க் என்றும் பின்னர் நியூயார்க் அல்க்கி என்றும் பெயரிட்டனர்.[19] அடுத்த சில ஆண்டுகளுக்கு இவர்களிருக் குழுவினரும் தத்தம் இடங்களை முன்னெடுக்க முயன்றனர். ஆனால் நாளடைவில் அல்க்கி கைவிடப்பட்டு துவாம்ப்சிற்கு அனைவருமே குடியேறத் தொடங்கினர்.[20] இங்கு துவக்கத்தில் குடியேறியவர்களில் ஒருவரான டேவிட் சுவின்சன் உள்ளூர் குடிகளின் தலைவனாக இருந்தவரின் பெயரான சியாட்டிலை புதிய குடியேற்றத்திற்கு பெயராகப் பரிந்துரைத்தார்.[21][22][23]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads