சி. இலக்குவனார்

தமிழறிஞர், தமிழ்ப் பேராசிரியர், செயற்பாட்டாளர் From Wikipedia, the free encyclopedia

சி. இலக்குவனார்
Remove ads

பேராசிரியர் சி. இலக்குவனார் (நவம்பர் 17, 1909[1] - செப்டம்பர் 3, 1973) தமிழறிஞர்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவர். மொழியியல், இலக்கணம், தொல்காப்பிய ஆராய்ச்சி, திருக்குறளாராய்ச்சி, சங்க இலக்கிய ஆராய்ச்சி எனப் பல்வேறு பொருள்களில் நிறைய நூல்கள் இயற்றியுள்ளார்.

விரைவான உண்மைகள் சி. இலக்குவனார், பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைச் சுருக்கம்

திருவள்ளுவராண்டு 1940, கார்த்திகைத் திங்கள், முதல் நாள் (ஆங்கில ஆண்டு 1909 நவம்பர் 17ம் நாள்) தமிழ்நாட்டின் அன்றைய தஞ்சாவூர் மாவட்டம் (இன்றைய நாகப்பட்டிணம் மாவட்டம்), திருத்துறைப்பூண்டிக்கு அருகில், வாய்மைமேடு என்னும் சிற்றூரில், குறுநிலக்கிழாராகவும் ஒரு மளிகைக்கடை உரிமையாளராகவும் விளங்கிய சிங்காரவேலர்-இரத்தினத்தாச்சி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். தமது நான்கு வயதிலேயே தந்தையை இழந்தார்.

Remove ads

கல்வி

தொடக்கக் கல்வி

வாய்மேட்டில் சுப்பையா ஆசிரியர் நடத்திய திண்ணைப்பள்ளியிலும் கண்ணுசாமி ஆசிரியர் நடத்திய திண்ணைப்பள்ளியிலும் பயின்றார். பின்னர் வாய்மேட்டில் இருந்த அரசு தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்திருந்த இலக்குவனாரின் பள்ளிப்படிப்பு தடைப்பட்டது. தமது அண்ணன் நல்லபெருமாளுக்கு உதவியாக வயல்வேலைகளைக் கவனிப்பதும் மாடுகளை மேய்ப்பதுமே அவரது வேலையாயிற்று.

நடுநிலைக் கல்வி

தன் பிள்ளை படிக்க வேண்டும் என்று அவரது தாயார் விழைந்தமையால் தஞ்சாவூர் சரபோஜி மன்னரின் அறக்கட்டளை சார்பில் இராசாமடம் என்னுமிடத்தில் இருந்த நடுநிலைப் பள்ளியில் 1924ஆம் ஆண்டில் ஐந்தாம் வகுப்பில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். இங்கு இவர் எட்டாம் வகுப்புப் படித்தபொழுது இலட்சுமணன் என இவரது பெற்றோர் இட்ட பெயரை, இவர்தம் தமிழாசிரியர் சாமி சிதம்பரனார், "இலக்குவன்" என மாற்றச் செய்தார். அப்பொழுது முதலே தனித்தமிழ் மீது நாட்டமும் தமிழில் பிறமொழிக்கலப்பைத் தவிர்க்கும் முனைப்பும் இலக்குவனார்க்கு ஏற்பட்டது.

உயர்நிலைப் பள்ளிக் கல்வி

பின்னர் 1924ஆம் ஆண்டில் சரபோஜி மன்னரின் அறக்கட்டளை சார்பில் ஒரத்தநாட்டில் இருந்த உயர்நிலைப்பள்ளிகளில் பயின்று தமது ஆசிரியர்களின் நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றார். அங்கு பொன்னண்ணா களத்தில்வென்றார் என்பவரிடம் பயின்று பள்ளி இறுதி வகுப்பில் சிறப்புடன் தேர்ச்சி பெற்றார்.[2]

புலவர் பட்டக் கல்வி

திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று 1936ஆம் ஆண்டில் புலவர் பட்டம் பெற்றார்.[3] அங்கு பயிலும்பொழுது அக்கல்லூரியின் திருவள்ளுவர் மாணவர் கழகச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

கீழைமொழி இளவர் பட்டம்

அன்னாளைய சென்னைப் பல்கலைக் கழகம் வகுத்திருந்த விதியின்படி வித்துவான் பட்டம் பெற்றவர் இடைநிலை வகுப்பிலும் கலை இளவர் வகுப்பிலும் இரண்டாம் பிரிவில் இருந்த ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெற்றால், அவருக்கு கீழைமொழிகளில் இளவர் (BOL) பட்டம் வழங்கப்பட்டது. இப்பட்டம் கலைமுதுவர் பட்டத்திற்கு இணையாகக் கருதப்பட்டது. இலக்குவனார் ஆசிரியப்பணி ஆற்றிக்கொண்டே ஆங்கிலத் தேர்வுகளில் வெற்றிபெற்று கலைமுதுவர் ஆனார்.

கீழைமொழி முதுவர் பட்டம்

பின்னர் தமிழ்மொழியின் தோற்றமும் வளர்ச்சியும் (Origin and Growth of Tamil Language) என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து கீழைமொழிகளில் முதுவர் (MOL) பட்டமும் பெற்றார்.

முனைவர் பட்டம்

இலக்குவனார், மதுரைத் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, விரிவாக ஆய்வும் நிகழ்த்தித் தமது முனைவர் பட்டப்பேற்றிற்கான ஆய்வேட்டை அளித்தார். 1963-இல் முனைவர் பட்டப்பேற்றிற்காக Tholkappiyam in English with critical studies என்னும் ஆய்வேட்டை அளித்து 1963 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார். தமது பல்வேறு பணிகளின் காரணமாகவும், பணியிழப்புகளின் காரணமாகவும் காலந்தாழ்த்து 53 அகவையில் இப்பட்டத்தை இவர் பெற்றாலும் தமிழ்நெஞ்சங்கள் மகிழ்ந்துபோற்றின. குமரி முதல் சென்னை வரை இவருக்குத் தமிழ்நாடெங்கும் பாராட்டுவிழாக்கள் நடந்தன. ஒரு பேராசிரியர் முனைவர் பட்டம் பெற்றமைக்காகத் தமிழ்நாடெங்கும் பாராட்டுவிழாக்கள் நடந்த நிகழ்வு இதற்கு முன்புமில்லை:பின்புமில்லை. இவரது தொல்காப்பிய ஆங்கில நூலுக்கு அறிஞர் அண்ணா அவர்கள் அணிந்துரை வழங்கிப் பாராட்டியுள்ளார். பின்னர் அண்ணா தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றபோது, தமது அயல்நாட்டுச் சுற்றுப்பயணத்தில், இந்நூலைப் போப் ஆண்டவர் அவர்களுக்கும், அமெரிக்க நூகலகங்களுக்கும் தமிழக அரசின் சார்பில் அன்பளிப்பாக அண்ணா வழங்கினார்.

Remove ads

ஆசிரியப் பணி

திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றபின், அக்கல்லூரியிலேயே சிலகாலம் பணியாற்றினார்.

1936 சூன் மாதம் முதல் 1942ஆம் ஆண்டு வரை தஞ்சை மாவட்ட நாட்டாண்மைக் கழக உயர்நிலைப்பள்ளிகளில் (Tanjore District Board High Schools) தமிழாசிரியப் பணிபுரிந்தார்.

Thumb
தமிழறிஞர் கா. அப்பாதுரையுடன் இலக்குவனார்

கலைஞர் மு. கருணாநிதி திருவாரூரில் பள்ளி இறுதி வகுப்புப் பயின்றபோது அவரது ஆசிரியராகத் திகழ்ந்தவர். தமக்குத் தமிழுணர்வுடன் சுயமரியாதைப் பண்பையும் ஊட்டியவர்' என்று இவரைப் பற்றித் தமது தன்வரலாற்று நூலாகிய 'நெஞ்சுக்கு நீதி'யில் கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின்னர் 1942 முதல் 1945 வரை திருவையாறு அரசர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்த இலக்குவனார், அன்றைய சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் ஒருவராகிய செ.தெ.நாயகம், குலசேகரன்பட்டினத்தில் தொடங்கிய தமிழ்க்கல்லூரியில் முதல்வராகப் பணியமர்த்தம் பெற்றார். பின்னர் திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும், 1947-இல் விருதுநகரில் தொடங்கப்பெற்ற வி.இ.செந்திற்குமாரநாடார் கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராகவும் பணிபுரிந்தார். 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் விருதுநகர் தொகுதியில் கு. காமராசரை எதிர்த்துப் போட்டியிட்ட கோ. து. நாயுடு (ஜி. டி. நாயுடு)வை ஆதரித்துப் பரப்புரை செய்தார். இதனால் விருதுநகர் கல்லூரியில் இருந்து துரத்தப்பட்டார்.[5]

பின்னர் 1952 முதல் 1955 வரை புதுக்கோட்டையில் பி.ஏ. சுப்பிரமணியனார் உருவாக்கிய திருக்குறள் கழகத்தில் ஞாயிறுதோறும் திருக்குறள் வகுப்புகள் நடத்தினார்.[6]

1955 – 56 ஆம் கல்வியாண்டில் திருவெறும்பூர் முக்குலத்தோர் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர், 1956 முதல் 1958 வரை ஈரோடு காசனக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர் , 1958 முதல் 1961 வரை நாகர்கோயில் தெ.தி. இந்துக்கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவர், 1961 முதல் 1965 வரை மதுரை தியாகராசர் கலைக்கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவர், சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவர், ஐத்திராபாத்தில் உள்ள உசுமானியா பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவர், 31.12. 1970 வரை நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு என இவர் பணியாற்றிய கல்லூரிகளின் பட்டியல் பெரிதாகும். இவரது அஞ்சாநெஞ்சமும், தன்மான உணர்வும் எவ்விடத்தும் இவர் தொடர்ந்து பணிபுரிய இடமளிக்கவில்லை. மாணவரிடையே தமிழுணர்வை இவர் ஊட்டியமை, இவர் மாணவர்களைப் புரட்சிக்குத் தூண்டுவதாகக் கல்லூரிப் பொறுப்பாளர்களைக் கருதச் செய்தது.

1944-இல் இவர் திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது இவரிடம் தமிழ் பயின்ற, இன்றைய இந்தியப் பொதுவுடைமைக் கட்சித்தலைவர்களில் ஒருவராகிய தோழர் நல்லகண்ணு இவரது அஞ்சாநெஞ்சத்தையும் தமிழுணர்வையும் சிறப்பாகப் பாராட்டுகிறார். அன்றைய தமிழ் வகுப்புகளில் வருகைப்பதிவை ஆங்கிலத்தில் மாணவர்கள் கூறிவந்த நிலையை மாற்றி உளேன் ஐயா எனக் கூறவைத்தவரும் பிற்காலத்தில் தமிழகமெங்கும் இம்மாற்றம் ஏற்படவும் காரணமாக இருந்தவர் இலக்குவனாரே என நல்லுகண்ணு அவர்கள் கூறுகிறார்.

Remove ads

இதழ்கள் வெளியிடல்

இலக்குவனார் தாம் பணியாற்றச் சென்ற இடமெல்லாம் தமிழ்மன்றங்களை நிறுவியும் இதழ்களை நடத்தியும் மக்கள் மனத்தில் தமிழ் எழுச்சியும் ஆர்வமும் ஏற்படப் பாடுபட்டார். 1944 முதல் 1947 வரை இவர் நடத்திய "சங்க இலக்கியம்" வார இதழ் புலவருக்கு மட்டுமே உரியதாகக் கருதப்பட்டுவந்த சங்க இலக்கியங்களை மக்களிடையே பரவ வழிவகுத்தது. சிறுகதை வடிவிலும் ஓரங்க நாடகங்களாகவும் சங்கப்பாடல்களை அறிமுகம் செய்த இலக்குவனாரின் முயற்சியே பின்னாளில் மு. வரதராசன், மு. கருணாநிதி ஆகியோரின் முயற்சிகளுக்கு முன்னோடி என்பது வரலாறு.

Thumb
இலக்குவனாரின் நடைப்பயணம்

விருதுநகரில் இருந்தபோது இலக்கியம் (மாதமிருமுறை), தஞ்சாவூரில் இருந்தபோது திராவிடக்கூட்டரசு மதுரையிலிருந்த போது குறள்நெறி எனப் பல்வேறு இதழ்களை நடத்தினார். 1965-இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது இருமுறை கைது செய்யப்பட்டு சிறைவாழ்வும் பணிநீக்கமும் பெற்ற இலக்குவனார், 1965 மே முதல் திசம்பர் வரை ஏழு மாதங்கள் தமது ஏட்டை நாளிதழாகவும் நடத்தினார். விற்பனையாளர்கள் உரியமுறையில் பணம் கொடுக்காத ஒரே காரணத்தாலேயே இவ்விதழ் நிறுத்தப்பட்டது.

வள்ளுவர் நெறியில் வையகம் வாழ்க என்னும் குறிக்கோளோடு குறள்நெறி என்னும் இதழை 15.1.1964ஆம் நாள் சி. இலக்குவனார் தொடங்கினார்.[7]

Dravidan Ferderation, Kurnlneri என்னும் இரண்டு ஆங்கில இதழ்களையும் நடத்தினார்.

Remove ads

நூல்கள்

  1. எழிலரசி அல்லது காதலின் வெற்றி (செய்யுள்) (1933)
  2. மாணவர் ஆற்றுப்படை (செய்யுள்)
  3. துரத்தப்பட்டேன் (1952) (செய்யுள்)
  4. தமிழிசைப் பாடல்கள் (செய்யுள்)
  5. என் வாழ்க்கைப் போர் (ஆராய்ச்சி) (1972)
  6. அமைச்சர் யார்? (ஆராய்ச்சி) (1949)
  7. அம்மூவனார் (ஆராய்ச்சி)
  8. எல்லோரும் இந்நாட்டு மன்னர் – பகுதி 1 (ஆராய்ச்சி) (>1956)
  9. எல்லோரும் இந்நாட்டு மன்னர் – பகுதி 2 (ஆராய்ச்சி) (>1956)
  10. திருக்குறள் எளிய பொழிப்புரை (விளக்கவுரை)
  11. தொல்காப்பிய விளக்கம் (விளக்கவுரை)
  12. மாமூலனார் காதற் காட்சிகள் (விளக்கவுரை) (>1956)
  13. வள்ளுவர் வகுத்த அரசியல் (ஆராய்ச்சி)
  14. வள்ளுவர் கண்ட இல்லறம் (ஆராய்ச்சி)
  15. இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (ஆராய்ச்சி)
  16. கருமவீரர் காமராசர் (வரலாறு)
  17. அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து (செய்யுள்)
  18. பழந்தமிழ்
  19. தமிழ் கற்பிக்கும் முறை (ஆராய்ச்சி)
  20. தொல்காப்பிய ஆராய்ச்சி (1961) (ஆராய்ச்சி)
  21. சங்க இலக்கியச் சொல்லோவியங்கள் (1990)
  22. Tholkappiyam in English with Critical Studies
  23. Tamil Language (1959)
  24. The Making of Tamil Grammar
  25. Brief Study of Tamil words
Remove ads

சிறைவாழ்க்கை

முதற் சிறை வாழ்க்கை

25 – சனவரி – 1965ஆம் ஆண்டில் தொடங்கிய இந்தி எதிர்ப்புப் போரின் பொழுது ‘அமைச்சர்களைக் கொல்ல முயற்சி செய்தார்’ என்பது உட்பட பதினான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 1.2.1965 ஆம் நாள் சி. இலக்குவனார் கைது செய்யப்பட்டார். அவரது வீடும் அச்சகமும் சோதனைக்கு உள்ளாயின. ஒரு மாதமும் ஒரு வாரமும் சிறை வாழ்க்கைக்குப் பின்னர் திருநகரைவிட்டு எங்கும் செல்லக்கூடாது என்னும் கட்டளையோடும் ‘எப்பொழுதும் சிறைப்படுத்தப்படலாம்’ என்னும் ஆணையோடும் விடுவிக்கப்பட்டார்.[7]

இரண்டாம் சிறை வாழ்க்கை

உயர்நிலைப் பள்ளிகளில் ஒரே நேரத்தில் தமிழைப் பயிற்று மொழி ஆக்கியதைப் போல கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் எல்லாத் துறைகளிலும் எல்லா நிலைகளிலும் தமிழைப் பயிற்றுமொழி ஆக்க வேண்டும் என்னும் கோரிக்கையோடு 5.5.1965ஆம் நாள் கன்னியாகுமரி முதல் சென்னை வரை தமிழ் உரிமைப் பெருநடை செல்ல இலக்குவனார் திட்டமிட்டார். எனவே 1.5.1965ஆம் நாள் நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இலக்குவானார் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் மூன்றரை மாதங்கள் அடைக்கப்பட்டார். இதனால் மதுரை தியாகராசர் கல்லூரியில் இவர் ஆற்றிவந்த தமிழ்ப் பேராசிரியர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.[7]

Remove ads

வெளிநாட்டுப் பயணம்

2.10.71 முதல் 25.12.1971 முடிய சிங்கப்பூர், மலேசியா முதலிய நாடுகளில் சொற்பொழிவுப் பயணம் மேற்கொண்டார்.

தமிழ்க் காப்புக் கழகம்

மதுரையை அடுத்த திருநகரில் 6. 8. 1962 ஆம் நாள் தமிழ்மொழி வாழ்ந்தால் தமிழகம் வாழும் என்னும் நோக்கத்தை முன்வைத்து தமிழ்க் காப்புக் கழகத்தை சி. இலக்குவனார் தொடங்கினார். இக்கழகத்திற்கு அவர் தலைவராகவும் புலவர் இரா. இளங்குமரன் பொதுச் செயலாளராகவும் அமைந்தனர். இக்கழகம் தமிழில் பேசுக! தமிழில் எழுதுக! தமிழில் பெயரிடுக! தமிழில் பயில்க! என்னும் நான்கு செயல் திட்டங்களை முன்வைத்துப் பணியாற்றியது.[7]

குடும்பம்

இவர் திருத்தணியில் ஆசிரியராகப் பணியாற்றிய பொழுது மலர்க்கொடி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். பின்னர் தம்மை விரும்பியவரும் தம் மனைவி மலர்க்கொடிக்குத் தங்கையுமான நீலகண்டேசுவரியை மணந்துகொண்டார்.[2]

திருவேலன், மறைமலை, திருவேங்கடம், திருவள்ளுவன், மதியழகி, நல்லபெருமாள், செல்வமணி, நாகவல்லி, அங்கயற்கண்ணி, அருட்செல்வி, அம்பலவாணன் ஆகிய பதினொரு மக்களை இலக்குவனார் பெற்றனர்.[4]

இறுதிக் காலம்

1967-இல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றபின்னர் அறிஞர் அண்ணா அவர்களால், மீண்டும் இலக்குவனார் பணிபுரியும் வாய்ப்பைப்பெற்றார். சென்னை மாநிலக்கல்லூரியில் தலைமைத் தமிழ்ப்பேராசிரியராகப் பணியேற்ற இவரால் ஓராண்டுக்கு மேல் அப்பணியிலும் நீடிக்கமுடியவில்லை. அன்றைய கல்வியமைச்சரிடம் தமிழைப் பயிற்சிமொழியாக்குமாறும் ஆங்கிலத்துக்குச் சார்பாக நடக்கவேண்டாமெனவும் இவர் கூறியமையே இவரது வேலைக்கு உலைவைத்த செய்தி தமிழ்நாடு அறிந்த ஒன்றே. அதன்பின்னர் ஐதராபாது உசுமானியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இரண்டாண்டுகள் பணியாற்றியபின்னர் தமது நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க நாகர்கோயில் இந்துக்கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிந்து 1970 திசம்பரில் ஓய்வு பெற்றார். மீண்டும் குறள்நெறி இதழைத் தொடங்கி நடத்தியும் நாடெங்கும் சென்று சொற்பொழிவாற்றியும் தமது தமிழ்ப்பணியைத் தொடர்ந்த இலக்குவனார் நீரிழிவு நோய் காரணமாக 1973-ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் நாள் காலமானார்.

Remove ads

சி. இலக்குவனாரின் மாணவர்கள் சிலர்

பின்னாளில் பல்வேறு துறைகளில் புகழ்பெற்ற பலர் சி. இலக்குவனாரிடம் தமிழ் பயின்று உள்ளார்கள். அவர்களில் சிலர்: மு. கருணாநிதி, முனைவர் கி. வேங்கடசுப்பிரமணியன், நல்லகண்ணு, முனைவர் க. காளிமுத்து, நா. காமராசன், பா.செயபிரகாசம், இன்குலாப், முனைவர் பூ. சொல்விளங்கும்பெருமாள், சேடபட்டி முத்தையா

புகழ்மொழிகள்

  • பேராசிரியர் இலக்குவனார் ஒரு மாபெரும் தமிழ் இயக்கம் – முனைவர் கி. வேங்கடசுப்பிரமணியன், முன்னாள் துணைவேந்தர், புதுவை பல்கலைக்கழகம் [8]

பெற்ற பட்டங்கள்

முத்தமிழ்க் காவலர், செந்தமிழ் மாமணி, பயிற்சிமொழிக் காவலர், தமிழர் தளபதி, தமிழ் காத்த தானைத் தலைவர், இலக்கணச் செம்மல், தமிழ் அரிமா, தமிழ்ப் போராளி, 20ஆம் நூற்றாண்டுத் தொல்காப்பியர், இரண்டாம் நக்கீரர், பெரும் பேராசிரியர், தன்மானத் தமிழ் மறவர், இந்தி எதிர்ப்புப் படைத் தளபதி, செந்தமிழ்ப் படையின் மானச் செம்மல்

நூற்றாண்டு விழா

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறையினரால் 26 நவம்பர் 2009 அன்று தமிழறிஞர் சி.இலக்குவனாருக்கு எடுக்கப்பட்ட நூற்றாண்டு விழாவில் சிறப்புக் கருத்தரங்கம், கவியரங்கம் ஆகியவை நடத்தப்பட்டன; தமிழகத்தின் நிதியமைச்சரான பேராசிரியர் க.அன்பழகன் சிறப்பித்த, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் ஔவை நடராசன் தலைமையேற்ற இந்த விழாவில் பேசப்பட்ட இலக்குவனாரின் நற்பணிகளின் விபரம்:

  • இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வும் மொழிபெயர்ப்பும்
  • இலக்குவனாரின் சங்க இலக்கிய ஆய்வு
  • இலக்குவனாரின் குறளுரையும் குறள் பரப்புப் பணியும்
  • இலக்குவனாரின் கவிதைப் படைப்புகள்
  • இலக்குவனாரின் இதழியற்பணி
  • இலக்குவனாரின் தமிழ் வளர்ச்சிப் பணிகள்.

ஆதாரங்கள்

Maraimalai, சி.இலக்குவனார், சாகித்திய அக்காதெமி.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads