சுந்தர சண்முகனார்

எழுத்தாளர், தமிழாசிரியர் From Wikipedia, the free encyclopedia

சுந்தர சண்முகனார்
Remove ads

சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழ்நாட்டுத் தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர். நூல்தொகுப்புக்கலை, அகராதியியல்கலை ஆகிய துறைகள் பற்றி முதன்முறையாக முறையியல் (Methodology) நூல்களைப் படைத்தவர். இவர் ஆற்றுப்படுகை அணுகுமுறையில் (River basin approach) பண்பாட்டு ஆய்வைத் தொடங்கி வைத்த முன்னோடி. மற்றும் இவர் தமிழாசிரியர்களுக்கு தமிழ் தவிர வேறு எதுவும் தெரியாது என்னும் மாயத்தோற்றத்தைத் தகர்த்தவர்களில் ஒருவர்.

விரைவான உண்மைகள் புதுப்படைப்புக் கலைஞர்சுந்தர சண்முகனார், பிறப்பு ...
Remove ads

பிறப்பு

கடலூர் நகரில் உள்ள புதுவண்டிப்பாளையம் பகுதியில் செங்குந்தர் கைக்கோள முதலியார்[1] மரபில் அன்னபூரணி அம்மாள் - சுந்தரம் இணையருக்கு மகனாக 13 சூலை 1922 அன்று இவர் பிறந்தார். இவரது இயற்பெயர் சண்முகம். பின்னாளில் தன் தந்தையின் பெயரைத் தன் பெயருக்கு முன்னர் இணைத்துச் சுந்தர சண்முகனார் ஆனார்.[2]

கல்வி

சுந்தர சண்முகனார் கடலூரை அடுத்த திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தூய வளனார் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றார். அதே வேளையில் திருப்பாதிரிப்புலியூர் சிவத்திரு ஞானியார் மடலாயத்தில் ஐந்தாம் பட்டத்து அடிகளுக்கு மாணவராகச் சேர்ந்தார். அவ்வடிகளின் அறிவுரையின்படி 1936ஆம் ஆண்டில் தனது பதினான்காம் அகவையில் திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் வித்துவான் வகுப்பில் சேர்ந்தார். .[2] 1939ஆம் ஆண்டில் வித்துவான் பட்டம் பெற்றார். பின்னர் தனியே படித்து இடைநிலை வகுப்பையும் இளங்கலைப் பட்டத்தையும் நிறைவு செய்தார்.

1952 ஆம் ஆண்டில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் தேர்ந்தார்.[3]

இவைதவிர பின்வரும் கல்விச் சான்றிதழ்களையும் சுந்தர சண்முகனார் பெற்றிருந்தார்:[4]

  • 1958ஆம் ஆண்டில் கோயமுத்தூர் பீளைமேட்டில் தமிழக பொதுக்கல்வித்துறை நடத்திய முதியோர் இலக்கியப்பண்ணைச் சான்றிதழ்.
  • சென்னை சைவ சிந்தாந்தப் பெருமன்றத்தின் சைவ சித்தாந்தச் சான்றிதழ்
  • தருமபுர ஆதீனம் வழங்கிய சமயக் கல்விப் பயிற்சிச் சான்றிதழ்
  • புதுச்சேரி பிரஞ்சு இன்சுடிடியூட் வழங்கிய பிரஞ்சு பட்டயம்
Remove ads

பணி

ஞானியார் அடிகளின் பரிந்துரையைப் பெற்று மயிலம் சிவஞானபாலைய அடிகள் தமிழ்க் கல்லூரியில் தனது பதினெட்டாம் அகவையில் 1940 ஆம் ஆண்டு தமிழ் விரிவுரையாளராகப் பணியேற்றார்.[2] 1946 ஆம் ஆண்டில் கல்லூரியின் துணை முதல்வராகப் பணியாற்றிய நிலையில் தனக்கு ஏற்பட்ட மூளைக்கட்டியின் (Brain Tumor ) காரணமாகப் பணியிலிருந்து விலகினார்.[5] & [4]

1947 ஆம் ஆண்டில் புதுச்சேரியில் தன் ஓரகத்தான் (தன் மனைவிக்கு உடன்பிறந்தவர்க்குக் கணவர்) சிங்கார குமரேசன் உதவியுடன் பைந்தமிழ் பதிப்பகம் என்னும் நூல் வெளியீட்டு நிறுவனத்தைத் தொடங்கினார். இந்நிறுவனம் 1997 ஆம் ஆண்டு வரை செயற்பட்டது.[3] [ஓரகத்தான் = சகலன்]

1948 ஆம் ஆண்டு முதல் 1958ஆம் ஆண்டு வரை புதுச்சேரி பெத்திசெமினார் பள்ளியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார். பின்னர் 1958ஆம் ஆண்டு முதல் 1980ஆம் ஆண்டு வரை புதுச்சேரி அரசினர் ஆசிரியர் பயிற்சி நடுவத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றார்.

தமிழ்நூல் தொகுப்புக்கலை என்னும் நூலின் வழியே தமிழ்நூல் தொகுப்பு முறையியலை சுந்தர சண்முகனார் வரையறுத்திருந்தார். அதனைக் கண்ட தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வ. ஐ. சுப்பிரமணியம் அப்பல்கலைக் கழகத்தின் தொகுப்பியல் துறைத்தலைவர் பதவியை வகிக்குமாறு 1982 ஆம் ஆண்டில் அழைப்பு விடுத்தார். சுந்தர சண்முகர் அவ்வழைப்பையேற்று அப்பணியில் சேர்ந்தார். ஆனால் மூளைக்கட்டி நோய்க்கொடுமை காரணமாக 1983 ஆம் ஆண்டு அப்பணியிலிருந்து விலகினார். பின்னர் தனது இறுதிநாள் வரை புதுவையில் தங்கி நூலாக்கப் பணிகளில் ஈடுபட்டார்.[5]

மேலும் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் கல்விக் குழுவில் வாழ்நாள் உறுப்பினராகப் பணியாற்றினார்.[6]

படைப்புகள்

சுந்தர சுந்தரனார் இடையறாது தொல்லை கொடுத்த நோய்க்கு இடையிலும் நுண்மான் நுழைபுலம் துலங்கப் பல்வேறு துறைகளில் தொடர்ந்து நூல்கள் எழுதினார். அவற்றின் பட்டியல் வருமாறு:

மேலதிகத் தகவல்கள் வ.எண், ஆண்டு ...

மேற்கண்டவை தவிர பல்வேறு சூழ்நிலைகளில் இயற்றப்பட்ட தனிப்பாடல்களும் பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளும் இருக்கின்றன.

இவருடைய இப்படைப்புகள் அனைத்தும் 2010 ஆம் ஆண்டில் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டு உள்ளன.[7]

Remove ads

இதழ்கள்

1949, சனவரி 23 ஆம் நாள் தொடங்கி சில ஆண்டுகள் திருக்குறள் தெளிவு என்னும் திங்களுக்கு இருமுறை இதழை வெளியிட்டார். ஒவ்வொரு இதழிலும் திருக்குறள்கள் சிலவற்றிற்கு ஆராய்ச்சி விரிவுரை எழுதினார்.[8] & [9] இவ்வுரை இதழ்கள் தொகுக்கப்பட்டு 1963ஆம் ஆண்டில் வள்ளுவர் இல்லம் என்னும் நூலாக வெளியிடப்பட்டது. இவ்விதழில் இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், மக்கள் பேறு ஆகிய மூன்று அதிகாரங்களில் உள்ள முப்பது குறட்பாகளுக்கு எழுதிய ஆராய்ச்சி விரிவுரைகள் முழுமையாகப் பேராசிரியர் சு. ச. அறவணனால் தொகுக்கப்பட்டு 2004 ஏப்ரல் 26 ஆம் நாள் வள்ளுவர் கண்ட மனையறம் என்னும் நூலாக வெளியிடப்பட்டுள்ளன.[10]

1958 அக்டோபர் 22 ஆம் நாள் தொடங்கி சில ஆண்டுகள் தெவிட்டாத திருக்குறள் என்னும் திங்களுக்கு இருமுறை இதழை வெளியிட்டார். ஒவ்வொரு இதழிலும் திருக்குறளின் காமத்துப்பால், பொருட்பால், அறத்துப்பால் என்னும் வைப்புமுறையில் ஒவ்வொரு பாலிலும் உள்ள சில குறள்களுக்கு ஆராய்ச்சி விரிவுரை எழுதினார்.[8] & [11] அவ்வாறு எழுத்தப்பட்ட உரைகளில் 51 குறள்களுக்கான உரைகளைத் தொகுத்து 1991 நவம்பர் 5 ஆம் நாள் ஆழ்கடலில் சில ஆணிமுத்துக்கள் என்னும் நூலாக வெளியிட்டார்.[12]

Remove ads

திருவள்ளுவர் தமிழ்ப் பல்கலைக் கழகம்

1966 சூன் 2 ஆம் நாள் திருவள்ளுவர் தமிழ்ப் பல்கலைக் கழகம் என்னும் அமைப்பை உருவாக்கினார். இவ்வமைப்பிற்கு அரசின் பதிவையும் பெற்றார். இவ்வமைப்பின் வழியே திருக்குறள், யாப்பிலக்கண வகுப்புகளை நடத்தினார். அவ்வகுப்பில் பங்கேற்ற மாணவர்களுக்குத் தேர்வுகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்குப் பட்டங்கள் வழங்கினார்.[8]

வானொலி உரைகள்

சண்முக சுந்தரனார் வாய்ப்புக் கிடைத்த பொழுதெல்லாம் வானொலியில் இலக்கியப் பேருரைகள் ஆற்றினார். அவற்றுள் சில:

  • குற்றாலக் குறவஞ்சி, 1949 மே 10ஆம் நாள், இரவு 7:30 மணி முதல் 7:45 மணி வரை, திருச்சி வானொலி நிலையம்.[13]

குடும்பம்

சுந்தர சண்முகனார் தனது இருபத்திரண்டாவது அகவையில் 1944 மே 26 ஆம் நாள் புதுச்சேரியைச் சேர்ந்த விருத்தாம்பிகை அம்மையாரை மணந்தார்.[3] இவ்விணையர்களுக்கு சு. ச. அறவணன் என்னும் மகனும் அங்கயற்கண்ணி என்னும் மகளும் பிறந்தனர்.

பெற்ற பட்டங்களும் விருதுகளும்

சுந்தர சண்முகனார் 1951 ஆம் ஆண்டில் செந்தமிழாற்றுப்படை என்னும் நூலை இயற்றி அரங்கேற்றிய பொழுது, நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் அந்நூலிற்கு எழுதிய சிறப்புப் பாயிரத்தில் “சுதை இயற்கவி சுந்தர சண்முகர்” எனக் குறிப்பிட்டார்.[14] பின்னர் சோமசுந்தர பாரதியாரின் பரிந்துரையை ஏற்று, புதுக்கல்விக் கழகம் இயற்கவி எனப் பட்டம் வழங்கியது.[15]

இவர் திருக்குறள் தெளிவுரை, திருக்குறள் தெளிவு, தெவிட்டாத திருக்குறள் ஆகிய வெளியீடுகளின் வழியாகவும் தன்னுடைய நூல்கள் பலவற்றிலும் திருக்குறளின் மேன்மையை எடுத்துரைத்தார். இத்தகு திருக்குறள் பரப்பும்பணியைப் பாராட்டித் தமிழக அரசு 1991 சனவரி 15 ஆம் நாள் இவருக்குத் திருவள்ளுவர் விருது வழங்கியது.[6]

இவர் பல துறைகளிலும் நூல்கள் எழுதிய சான்றாண்மையைப் பாராட்டி மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 1991 அக்டோபர் 17ஆம் நாள் இவருக்குத் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்னும் பட்டத்தை வழங்கியது.[6]

இவைதவிர பின்வரும் பட்டங்களையும் விருதுகளையும் பெற்றிருக்கிறார்:[4]

ஆண்டுவிருதுவழங்கியோர்
செந்தமிழ்ச் செம்மல்புதுவைத் தமிழ்ச் சங்கம்
1972புதுப்படைப்புக் கலைஞர்தமிழ்நூல் தொகுப்புக் கலை வெளியீட்டுவிழாவில் அன்றைய புதுவை ஆளுநரைக்கொண்டு திரு. கு. கா. இராசமாணிக்கம் வழங்கினார்.
செந்தமிழ்க் கொண்டல்புதுவை சுப்பிரதீபக் கவிராயர் மன்றம்
ஆராய்ச்சி அறிஞர்சிவத்திரு ஞானியார் மடாலயம், திருப்பாதிரிப்புலியூர்
தமிழ்ச் சான்றோர்சேலம் தமிழ்ச் சங்கம் (தமிழகப் புலவர் குழுவின் வெள்ளி விழாவின் பொழுது)
திருக்குறள் நெறித்தென்றல்தமிழக அரசு
குறளாயச் செல்வர்ஈரோடு குறளாய இயக்கத்தின் புதுவைக் கிளை வழங்கியது
தமிழ் ஆய்வுக்கடல்தமிழகச் செங்குந்தர் பெருமன்றம்
முனைவர்உலகப் பல்கலைக் கழகம், அமெரிக்கா.

மறைவு

1946 ஆம் ஆண்டு முதலே மூளைக்கட்டி நோயோடு போராடிக்கொண்டிருந்த சுந்தர சண்முகனார் 1997 அக்டோபர் 30 ஆம் நாள் புதுச்சேரியில் காலமானார் [5]

நினைவேந்தல்கள்

சுந்தர சண்முகனாரின் மாணாக்கர்களான சொல்லாய்வுச் செல்வர் சு. வேல்முருகன், பாட்டறிஞர் இலக்கியன், புலவர் திருவேங்கடம், பாவலர் ஆ. மு. தமிழ்வேந்தன் ஆகியோர் இணைந்து 1998 மார்ச் 22 ஆம் நாள் சுந்தர சண்முகனார் நினைவுக் கருத்தரங்கம் ஒன்றை புதுச்சேரியில் நடத்தினர்.[16]

இவர்தம் மாணாக்கர்களும் மகன் சு. ச. அறவணனும் இணைந்து சுந்தர சண்முகனார் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி புதுச்சேரியில் திங்கள்தோறும் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.[17] இந்த அறக்கட்டளையினர் 2009 நவம்பர் 12 ஆம் நாள் சுந்தர சண்முகனார் நினைவுக் குறுந்தகடு ஒன்றினை புதுச்சேரியில் வெளியிட்டனர் [18]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads