சுயஸ் கால்வாய்
எகிப்தில் உள்ள செயற்கை நீர் வழிப்பாதை From Wikipedia, the free encyclopedia
Remove ads
சூயெசு கால்வாய் (அல்லது சுயஸ் கால்வாய்; மிசிரி மொழி: قَنَاةُ ٱلسُّوَيْسِ, Qanāt el Sewes) எகிப்தில் உள்ள செயற்கைக் கால்வாய் ஆகும். இது மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கிறது. 193.30 km (120.11 mi) நீளமும் 300 மீ அகலமும் கொண்ட இக்கால்வாய் 1869 இல் திறக்கப்பட்டது. இக் கால்வாய் வெட்டப்பட்டமையால் ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையிலான கப்பற்போக்குவரத்து மிக இலகுவானது. அதன்முன்னர் கப்பல்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றியே பயணிக்க வேண்டியிருந்தது.
ஃபிரெஞ்சு நிறுவனம் ஒன்றால் 1859 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கால்வாய் வெட்டும் பணி பத்தாண்டு காலமாகத் தொடர்ந்து நடந்து, 1869 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. இந்தக் கால்வாயை வெட்டியவர் பிரெஞ்சுப் பொறியியல் நிபுணர் ஃபெர்டினார்ட் டி லெஸ்ஸிப்ஸ்[1] இக்கால்வாயின் வெற்றி பிரான்சு நாட்டினரை பனாமா கால்வாயை அமைக்கத் தூண்டியது.
ஓராண்டில் ஏறக்குறைய 15,000 கப்பல்கள் இக்கால்வாயைக் கடக்கின்றன. ஒவ்வொரு கப்பலும் இக்கால்வாயைக் கடக்க 16 மணி நேரம் வரை ஆகிறது. சைய்டின் துறைமுகத்தின் வடக்கு முனையிலிருந்து சூயெசு நகரத்தில் உள்ள போர்ட் ட்வெஃபிக்கின் தெற்கு முனைவரை இது நீட்டிக்கப்படுகிறது. இதன் வடக்கு மற்றும் தெற்கு அணுகல் கால்வாய்கள் உட்பட. இதன் நீளம் 193.30 கி.மீ. (120.11 மைல்), 2012 ஆம் ஆண்டில், 17,225 கப்பல்கள் கால்வாயை (நாள் ஒன்றுக்கு 47) கடந்து சென்றன.[2]
அசல் கால்வாயானது பலாஹ் புறவழி மற்றும் கிரேட் பிட்டர் ஏரி ஆகிய இடங்களைக் கடக்கும் ஒற்றைப் பாதை நீர்வழியாகும்.[3] இக்கால்வாயில் நீரை அடைக்கும் அமைப்பு இல்லை, கடல் நீர் இந்த கால்வாய் வழியே ஓடும். பொதுவாக, குளிர்காலத்தில் பிட்டர் ஏரிகளின் வடக்கிலிருந்து கால்வாயில் நீர்பாயும் ஆனால் கோடைக் காலத்தில் தெற்கிலிலுந்து வடக்கே பாய்கிறது.
இந்தக் கால்வாய் எகிப்து சூயெசு கால்வாய் ஆணையத்தால் (SCA) பராமரிக்கப்பட்டு வருகிறது.[4] கான்ஸ்டன்டினோபாலின் மாநாட்டின் முடிவின்படி, இக்கால்வாயை "சமாதான காலத்திலும் போர் காலத்திலும், ஒவ்வொரு கப்பலும் வர்தகத்துக்கோ அல்லது போர் பயன்பாட்டுக்கோ கொடி பாகுபாடு இல்லாமல்" பயன்படுத்தப்படலாம்.[5]
2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், கால்வாய் பயணத்தின் நேரத்தை குறைக்க 35 கி.மீ. (22 மைல்) க்கு பலாஹ் புறவழி விரிவுபடுத்தும் பணி தொடங்கப்பட்டது. சூயெசு கால்வாயின் திறனை ஒரு நாளைக்கு 49 என்பதிலிருந்து 97 கப்பல்கள் என இருமடங்காக விரிவாக்க திட்டமிடப்பட்டது.[6] $8.4 பில்லியன் செலவில், இந்த திட்டம் எகிப்திய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு பிரத்தியேகமாக வழங்கப்பட்ட வட்டி ஈட்டும் முதலீட்டு சான்றிதழ்களுடன் நிதியளிக்கப்பட்டது. இவ்வாறு "புதிய சூயெசு கால்வாய்", விரிவாக்கப் பட்டது, இது 2015 ஆகத்து ஆகஸ்ட் 6, அன்று ஒரு விழாவில் பெரும் ஆரவாரத்துடன் திறக்கப்பட்டது.[7]
Remove ads
சுருக்கமான வரலாறு
மிகப்பழைமையானது சூயெசு கால்வாய். பண்டைய எகிப்தின் பாரோக்கள் ஆட்சிக்காலத்திலேயே பல நீர்த்தேக்கங்கள் இணைக்கப்பட்டு இரு கடல்களை இணைக்கும் கால்வாய் வெட்டப்பட்டது. பிற்கால முகமதிய தளபதி ஆம்ரு எகிப்தை வென்ற பின்னர் இதிலிருந்த மணலை வெளியே அகற்றி பல மராமத்துப் பணிகள் செய்து ஏறக்குறைய அதன் அமைப்பை முழுமையாக மாற்றினார். அதன்பின் அதிகம் யாரும் இந்தக் கால்வாய் மீது கவனம் செலுத்தவில்லை. துருக்கி சுல்தானின் வைசிராயாக இருந்த எகிப்தைச் சேர்ந்த கேதிவ் இஸ்மாயில் பிரெஞ்சு நாட்டின் ஆலோசனையில் பிரெஞ்சு மூலதனத்தில் உருவாக்கியதே தற்போதைய கால்வாய். பாலைவனம் வழியே செல்வதால் திரும்பத் திரும்ப மண் சேர்ந்துவிடுவதே இந்தக் கால்வாயின் குறை[8]
Remove ads
வரலாறு
நைல் - செங்கடல் கால்வாய்
பண்டைய கிழக்கு-மேற்குக் கால்வாய்கள் நைல் நதிக்கும் செங்கடலுக்குமிடையிலான போக்குவரத்துக்குக் கட்டப்பட்டன.[9][10][11] எகிப்திய அரசர்களான இரண்டாம் செனுஸ்ரெட்[9][10][11] அல்லது இரண்டாம் ரமெசெஸ்[12] காலத்தில் ஒரு சிறிய கால்வாய் அமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இதன் பகுதியை உள்ளடக்கியதாகக் கருதப்படும் மேலும் ஒரு கால்வாய்[9][10] இரண்டாம் நெக்கோ மன்னன் காலத்தில் அமைக்கப்பட்டு தரியஸ் மன்னன் காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டது.[9][10][11]
பழைய எகிப்திய நகரங்களான புபாஸ்டிஸ், பை-ரமெசெஸ், பைத்தோம் என்பவற்றூடான கால்வாய் ஒன்றின் எச்சங்கள் நெப்போலியன் மற்றும் அவனது குழுவினரால் 1799இல் கண்டுபிடிக்கப்பட்டன.[10][13][14][15][16] வரலாற்றாளர் எரோடோட்டசின் வரலாற்றுக் குறிப்புகளின் படி,[17] ஏறத்தாழ கி.மு. 600 அளவில் புபாஸ்டிஸ் மற்றும் பைத்தோம் இடையே கிழக்கு-மேற்குக் கால்வாய் வெட்டும் பணி இரண்டாம் நெக்கோ மன்னனால் ஆரம்பிக்கப்பட்டது.[10] எனினும் இத்திட்டத்தை நெக்கோ மன்னன் பூர்த்தி செய்யவில்லை.[9][10].நெக்கோவின் மறைவையடுத்து இக்கால்வாய் வெட்டும் பணி இடைநிறுத்தப்பட்டது. பண்டைய எகிப்தை வெற்றி கொண்ட பேர்சிய மன்னன் முதலாம் தரியசினால் இப்பணி பூர்த்தி செய்யப்பட்டது.
சுயஸ் கால்வாய் நிறுவனத்தின் பணி
1854-1856 காலப்பகுதியில் பிரான்சைச் சேர்ந்த ஃபேர்டினன்ட் டி லெஸ்ஸெப்ஸ் என்பவர் சர்வதேசக் கப்பற் போக்குவரத்துக்காகக் கால்வாய் ஒன்றை அமைப்பதற்காக நிறுவனம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு எகிப்து மற்றும் சூடான் ஆட்சியாளரான முகமது சையத் பாஷாவிடமிருந்து அனுமதி பெற்றார். இவர் 1830களில் பிரெஞ்சு அரச அதிகாரியாக இருந்தபோது சையத் பாஷாவுடன் ஏற்படுத்திக்கொண்ட நட்பு இதற்கு உதவியாக அமைந்தது. இதன்படி, இந்நிறுவனம் 99 ஆண்டுகளுக்கு சுயஸ் கால்வாயை நிர்வகிக்கும் பொறுப்புடையது. இவ்வொப்பந்தத்திற்கு அமைவாக ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் சுயஸ் நிலப்பகுதியை வெட்டிக் கால்வாய் அமைப்பதற்கான சர்வதேச ஆணையகம் கூட்டப்பட்டது. இது ஏழு நாடுகளைச் சேர்ந்த 13 நிபுணர்களைக் கொண்டிருந்தது. இந்நிபுணர் குழு கால்வாய் அமைத்தல் தொடர்பான விபரங்கள் அடங்கிய ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்ட அறிக்கையை 1856 டிசம்பரில் தயாரித்தது. இதன் பின்னர் சுயஸ் கால்வாய் நிறுவனம் 1858 டிசம்பர் 15இல் ஆரம்பிக்கப்பட்டது. கால்வாய் அமைக்கும் பணி 1859 ஏப்ரல் 25இல் ஆரம்பிக்கப்பட்டது. கால்வாய் வெட்டும் பணி சுமார் 10 ஆண்டுகள் நீடித்தது.
Remove ads
கால்வாய் அமைப்பு
இந்தக் கால்வாய் சுமார் 20 மீட்டர் (66 அடி) வரையான நீரில் அமிழும் உயரம் அல்லது 240,000 இறந்தநிறைத் தொன் வரையான எடையும், 68 மீட்டர் (223 அடி) வரையான உயரமும், 77.5 மீட்டர் (254 அடி) வரையான அதிகபட்ச அகலமும் கொண்ட கப்பல்கள் பயணிக்கக் கூடியதாக அமைந்துள்ளது. இக்கால்வாயூடாக பனாமா கால்வாயூடாகப் பயணிக்கக் கூடியதை விட பெரிய கப்பல்கள் பயணிக்கக் கூடியதாகவுள்ளது. எனினும் சில மிகப்பெரிய கப்பல்கள் இக்கால்வாயூடாகப் பயணிக்க முடியாது. சில கப்பல்கள் பயணிக்க ஏதுவான முறையில் எடையைக் குறைக்கும் பொருட்டு, கால்வாய் நுழைவிடத்தில் கால்வாய்க்குச் சொந்தமான படகுகளில் தமது பொதிகளை இறக்கிவிட்டுக் கால்வாயூடாகப் பயணித்து மீண்டும் கால்வாய் முடிவிடத்தில் பொதிகளை ஏற்றிக்கொண்டு பயணத்தைத் தொடர்கின்றன.
பொதுவாக ஒரு நாளில் மூன்று கப்பற்றொகுதிகள் இக்கால்வாயைக் கடக்கின்றன. இவற்றில் ஒரு தொகுதி வடக்கு நோக்கியும் இரண்டு தொகுதிகள் தெற்கு நோக்கியும் பயணிக்கின்றன. இவை ஏறத்தாழ மணிக்கு 8 கடல்மைல் (மணிக்கு 15 கி.மீ) வேகத்தில் பயணிக்கின்றன. கால்வாயைக் கடக்கும் பயண நேரம் சுமார் 11 முதல் 16 மணித்தியாலங்கள் ஆகும். கப்பல்கள் குறைந்த வேகத்தில் பயணிப்பது கால்வாயின் கரைகளில் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்க உதவுகின்றது.
இக்கால்வாய் சிறியதாக இருப்பதால் சுதந்திரமான இருவழிப் போக்குவரத்துக்கு ஏற்றதாக இல்லை.
மாற்று வழிகள்

சுயஸ் கால்வாய்க்கு பிரதான மாற்று வழியாக ஆபிரிக்காவின் தென் முனையான கேப் அகுலாஸ் ஊடான கடல் மார்க்கம் விளங்குகின்றது. சுயஸ் கால்வாய் அமைப்பதற்கு முன்பாக ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையிலான ஒரேயொரு கடல்மார்க்கமாக இதுவே விளங்கியது. கால்வாயூடாகப் பயணிக்க முடியாதளவு பெரிய கப்பல்களுக்கான பாதையாக இப்பொழுதும் இதுவே விளங்குகின்றது. 21ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் சோமாலிய கடற்கொள்ளையர்களின் அச்சம் காரணமாக சுயஸ் காலவாயூடான கப்பற் போக்குவரத்தில் ஏறத்தாழ 10% இவ்வழியைப் பயன்படுத்தின. சவுதி அரேபியாவிலிருந்து அமெரிக்கா செல்லும் ஒரு எண்ணெய்க் கப்பல் சுயஸ் கால்வாயைப் பயன்படுத்தாமல் இவ்வழியைப் பயன்படுத்தினால் 2,700 மைல்கள் (4,345 கி.மீ) அதிகமாகப் பயணிக்க வேண்டும்.
அண்மைக் காலமாக ஆர்க்டிக் பெருங்கடலில் பனிமூடிய பகுதி சுருங்க ஆரம்பித்ததிலிருந்து, கோடைகாலத்தில் 6 முதல் 8 வார காலப்பகுதிக்கு வட கடலூடாக ஐரோப்பாவிலிருந்து கிழக்காசியாவுக்கான கப்பற் போக்குவரத்து நடைபெறுவது சாத்தியமாயிற்று. இது சுயஸ் கால்வாயூடான பயணத்தை விட பல்லாயிரம் மைல்கள் குறைவான தூரத்தைக் கொண்டது.
நெகெவ் பாலைவனத்தினூடாக ஒரு ரயில் பாதையை அமைக்கப் போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
Remove ads
சூழலில் ஏற்பட்ட தாக்கம்
சுயஸ் கால்வாயின் தோற்றம், மத்தியதரைக் கடலுக்கும் செங்கடலுக்குமிடையில் முதலாவது உவர்நீர் இணைப்பை ஏற்படுத்தியது. செங்கடலானது மத்தியதரைக்கடலை விட ஏறத்தாழ 1.2 மீட்டர் (4 அடி) உயர்ந்ததாக[18] இருந்த போதிலும், மத்தியதரைக் கடலுக்கும், கால்வாயின் நடுப்பகுயிலுள்ள கிரேட் பிட்டர் ஏரியில், நீரோட்டம் குளிர்காலத்தில் வடக்கு நோக்கியதாகவும் கோடைகாலத்தில் தெற்கு நோக்கியதாகவும் காணப்படுகின்றது. மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் நடுப்பகுதியிலுள்ள இந்த கிரேட் பிட்டர் ஏரி அலைகள் கூடியதாகவும், அலைகள் சுயசில் வேறுபட்டதாகவும் இருக்கும். இந்த கிரேட் பிட்டர் ஏரி ஆனது, மிகவும் உவரான இயற்கை ஏரியாக இருப்பதனால், உயிரினங்கள் இடப்பெயர்வு தடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது உவர்த்தன்மை ஓரளவு சமமானதாக வந்திருப்பதால், செங்கடலிலிருந்து உயிரினங்கள் மத்திய தரைக்கடலின் கிழக்குப் பகுதிக்குப் பரவ ஆரம்பித்தன.
Remove ads
சிக்கிய கப்பல்

சுயஸ் கால்வாயில் 23 மார்ச் 2021, சர்வதேச நேரப்படி 05:40 UTC (07:40 உள்ளூர் நேரம்) கால்வாயை கடக்க முயன்ற ஜப்பானின் ஷொய் கிஷன் காய்சா நிறுவனத்துக்கு சொந்தமானதும், தைவானின் `எவர் கிரீன் மரைன்` நிறுவனத்தின் கீழ் குத்தகைக்கு இயக்கப்படும் 400 மீட்டர் நீளமுள்ள மிகப்பெரிய சரக்கு போக்குவரத்துக்கான கொள்கலன் கப்பல் எவர் கிவன் பயணித்த போது எதிர்பாராத பலத்த புழுதி காற்றால் கப்பல் நிலை தடுமாறி கால்வாயின் பக்கவாட்டில் மோதியதன் காரணமாக கால்வாயை முழுமையாக அடைத்துள்ளது. எனவே, சுயஸ் கால்வாயில் சரக்கு போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. கப்பலை விடுவிப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது
கப்பலை மீட்பதற்கான முயற்சியில் திறமையான நெதர்லாந்து நாட்டின் போகாலிஸ் நிறுவனத்தை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். கால்வாய் மார்க்கத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், பல கோடி மதிப்புள்ள சரக்குகள் தேங்கும் அபாயமும், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
கடுமையான 6 நாட்களுக்குப் பிறகு கப்பலின் முன்பகுதியில் இருந்த மண் அகற்றப்பட்டு மார்ச் 29 அன்று, கப்பல் மீண்டும் மிதக்கும் நிலைக்கு வந்துள்ளதாக கடல்சார் சேவைகளை வழங்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. கால்வாய் சேவைகள் துவங்கப்பட்டுள்ளதால் அடுத்த சில நாட்களில் காத்திருக்கும் கப்பல்கள் பயணத்தை துவங்கும் என்பதனால் வழக்கமான போக்குவரத்து ஒரு வாரத்திற்குள் சீராகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Remove ads
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads