சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1926
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சிமுறை அமல்படுத்தப்பட்ட பின் சட்டமன்றத்திற்கான மூன்றாம் தேர்தல் 1926ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை, தனிப்பெரும் கட்சியான சுயாட்சி கட்சி ஆட்சியமைக்க மறுத்துவிட்டது. சுயேட்சை உறுப்பினர் பி. சுப்பராயன் சுயேட்சைகள் மற்றும் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் ஆதரவுடன் புது அரசமைத்தார்.
Remove ads
இரட்டை ஆட்சி முறை
1919 ஆம் ஆண்டு மொன்டேகு-கெம்ஸ்ஃபோர்ட் சட்ட சீர்திருத்தங்களின் விளைவாக, இந்திய அரசாங்கச் சட்டம் (1919) பிரித்தானிய அரசாங்கத்தால் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் பலனாக, இந்தியாவில் மத்திய அரசிலும், மாகாணங்களிலும், இரட்டை ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாட்சி முறையில், நிர்வாகத் துறைகள் இரு வகையாக பிரிக்கப்பட்டன. சட்டம், நிதி, உள்துறை முதலிய முக்கிய துறைகள் பிரித்தானிய ஆளுனரின் நிர்வாகக் குழுவின் நேரடிக் கட்டுப்பாட்டிலும், கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி, விவசாயம், தொழில் முதலியவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய சட்டமன்றங்களின் கட்டுப்பாட்டிலும் இயங்கின. அதுவரை ஆளுனருக்கு பரிந்துரைகள் மட்டுமே செய்யக் கூடிய சட்ட மன்றம் விரிவு படுத்தப்பட்டு சட்டங்கள் இயற்றும் அதிகாரமும் அதற்கு வழங்கப்பட்டது.[1][2][3][4]
Remove ads
தொகுதிகள்
1926 இல் ஒருங்கிணைந்த சென்னை மாகாணம், தற்கால தமிழ் நாடு, தெலுங்கானா தவிர்த்த ஆந்திரப் பிரதேசம், கேரளத்தின் மலபார் மாவட்டம், கர்நாடகத்தின் தெற்கு கனரா மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசமாக இருந்தது. இந்திய அரசாங்கச் சட்டம், 1919 இன் படி, சென்னை மாகாணத்தின் சட்ட சபையில் ஒரு அவை மட்டும் இருந்தது. கவுன்சில் என்றழைக்கப்பட்ட அந்த அவையில் 1926 வரை மொத்தம் 127 உறுப்பினர்கள் இருந்தனர். இத்தேர்தலில் இருந்து, பெண்களின் பிரதிநிதிகள் ஐந்து பேர் புதிதாக சேர்க்கப்பட்டதால் உறுப்பினர் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்தது. இவர்கள் தவிர ஆளுனரின் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் சட்ட மன்ற உறுப்பினர்களாகவே கருதப் பட்டனர். 127 உறுப்பினர்களில் 98 பேர் 61 தொகுதிகளில் இருந்து மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர் (சில தொகுதிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தன). இத்தொகுதிகளுக்குள் பிராமணர்கள், பிரமணரல்லாத இந்துக்கள், முஸ்லீம்கள், கிருத்துவர், ஐரோப்பியர், ஆங்கிலோ இந்தியர், நிலச்சுவான்தார்கள், பண்ணையார்கள், வர்த்தக குழுமங்ககள் என பல்வேறு பிரிவினருக்கு வகுப்பு வாரியாக இட ஒதுக்கீடு இருந்தது. மீதமுள்ள 29 உறுப்பினர்கள் ஆளுனரால் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுள் 19 பேர் அரசாங்க ஊழியர்கள்; 5 பேர் தலித்துகள். வயது வந்தோர் அனைவரும் வாக்குரிமை பெற்றிருக்கவில்லை. ஒருவரின் சொத்து மதிப்பு அல்லது அவர் கட்டியுள்ள சொத்து வரியைப் பொறுத்தே வாக்குரிமை அளிக்கப் பட்டது.[1][2][3][5][6]
Remove ads
அரசியல் நிலவரம்
சென்னை மாகாணத்தில் அப்போது இரு முக்கிய கட்சிகள் இருந்தன – இந்தியாவிற்கு சுதந்திரம் அல்லது சுயாட்சி வழங்கப் பட வேண்டும் என்று கோரிய இந்திய தேசிய காங்கிரசு, மற்றும் பிராமணரல்லாதோர் நலனுக்காகத் தொடங்கப் பட்ட நீதிக்கட்சி எனப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம். தேசியவாதக் கட்சியான காங்கிரசு, இரட்டை ஆட்சி முறையில் இந்தியர்களுக்கு வழங்கப் பட்ட அரசியல் உரிமைகளால் திருப்தி அடையவில்லை. எனவே தேர்தலில் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்தது. ஆனால் காங்கிரசின் ஒரு பிரிவினர் அதை ஏற்காமல் தனியே பிரிந்து சென்று சுவராஜ் (சுயாட்சி) கட்சி என்ற பெயரில் தனி கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டனர். தமிழகத்தில் சீனிவாச சாஸ்திரி, சத்தியமூர்த்தி ஆகியோர் சுயாட்சி கட்சிக்கு தலைமை வகித்தனர். ஆறு ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த நீதிக்கட்சி உட்கட்சிப் பூசல்களால் பாதிக்கப் பட்டிருந்தது. கட்சி தொடங்கியதிலிருந்து தலைவராக இருந்த தியாகராய செட்டி 1925 ஆம் ஆண்டு இறந்தார். அவருக்குப் பின் முதல்வர் பனகல் அரசர் கட்சித் தலைவரானார். அவரது தலைமையை ஏற்காத பல கட்சித் தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறி சுயேட்சைகளாகப் போட்டியிட்டனர். காங்கிரசிலும் பிளவு ஏற்பட்டிருந்தது. பிராமணரல்லாதோருக்காக வகுப்புவாரி இட ஒதுக்கீடு கோரி வந்த பெரியார் ஈ. வெ. ராமசாமி, தனது தீர்மானங்களை காங்கிரசு ஏற்றுக் கொள்ளாததால், 1925 இல் கட்சியை விட்டு வெளியேறி சுய மரியாதை இயக்கத்தை தொடங்கினார். ஆனால் அவ்வியக்கம் தேர்தலில் போட்டியிடவில்லை - பிராமணரல்லாத வேட்பாளர்களுள் தகுதியானவரை ஆதரிப்பதாக மட்டும் அறிவித்தது. பெரியார் தனது குடியரசு இதழின் மூலம் சுயாட்சி கட்சி வேட்பாளர்களை கடுமையாகத் தாக்கி பிரச்சாரம் செய்தார். தேர்தல் நடைபெற்ற காலத்தில் சென்னை மாகாணம் பொருளாதாரச் சரிவினால் பாதிக்கப் பட்டிருந்தது. பருவ மழை பொய்த்ததால் விவசாயம் பாதிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே அரசின் வரிகளாலும், கடன் சுமையாலும் பாதிக்கப்பட்டிருந்த விவசாயத் தொழிலாளர்கள் பலர் இதனால் வாழ்விழந்தனர். பலர் வேலைதேடி நகரங்களுக்கு குடி பெயர்ந்தனர். ஆளும் நீதிக்கட்சிக்கும் ஆளுனர் ஜார்ஜ் கோஷனின் நிர்வாகக் குழுவுக்கும் இடையே நல்லுறவு இல்லை. பல விஷயங்களில் இரு குழுவினரும் மோதிக் கொண்டன.
தேர்தல் முடிவுகள்
ஆளும் நீதிக்கட்சி தேர்தலில் 21 தொகுதிகளில் மட்டும் வென்று தேர்தலில் தோற்றது. 41 உறுப்பினர்களுடன் சுயாட்சிக் கட்சி தனிப்பெரும் கட்சியானது. நீதிக்கட்சியின் கோட்டையென கருதப்பட்ட சென்னையின் நான்கு தொகுதிகளையும் கூட அது கைப்பற்றியது. நடேச முதலியார், ஓ. தணிகாசலம் செட்டியார், கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு, ஆற்காடு ராமசாமி முதலியார் போன்ற முன்னணி நீதிக்கட்சித் தலைவர்கள் தேர்தலில் தோற்றனர்.[7] தேர்தல் முடிவுகள்:[8]
சுயாட்சி கட்சி தலைவர்களின் புதுமையான பிரச்சார உத்திகளும், நீதிக்கட்சியின் உட்கட்சி பூசல்களும் சுயாட்சி கட்சியின் வெற்றிக்காண காரணங்களாகக் கருதப்படுகின்றன.[9] மாகாணத்தில் இதுவரை கண்டிராத ஆர்ப்பாட்டங்கள், வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தல், பஜனை ஊர்வலங்கள் போன்ற உத்திகளை சுயாட்சி கட்சியினர் கையாண்டனர். நீதிக்கட்சி ஓவ்வொரு ஊரிலும் செல்வாக்கு மிகுந்த பெரிய மனிதர்களின் ஆதரவை மட்டும் நம்பியது. ஆனால் சுயாட்சியினர் பொது மக்களின் ஆதரவைப் பெற முனைந்தனர். திரு.வி.க, ம.பொ.சி போன்ற காங்கிரசு தலைவர்கள் சுயாட்சி கட்சியின் வெற்றிக்கு பாடுபட்டனர். ஆனால் மற்றொரு தலைவரான சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி தேர்தலை புறக்கணித்தார். காங்கிரசில் பிராமணர் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்ற பெரியாரின் குற்றச்சாட்டை சமாளிக்க சுயாட்சி கட்சி வழக்கத்துக்கு அதிகமான பிராமணரல்லாத வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தியது.[7][8]
வகுப்பு வாரியாக வெற்றி பெற்றவர்களின் பட்டியல்:[8]
Remove ads
ஆட்சி அமைப்பு
ஆளும் நீதிக்கட்சி தோற்று பதவி விலகியது. ஆளுனர் கோஷன் தனிப்பெரும் கட்சியான சுயாட்சி கட்சியின் தலைவர் சி. வி. எஸ். நரசிம்ம ராஜூ வை ஆட்சியமைக்க அழைத்தார். இரட்டை ஆட்சிமுறையின் கீழ் ஆட்சியமைக்க விருப்பமில்லாமல் மறுத்து விட்டது. நீதிக்கட்சியும் சிறுபான்மை அரசமைக்க மனமில்லாமல் எதிர்க் கட்சியாக செயல்படப் போவதாக அறிவித்தது. பின்னர் கோஷன் பி. சுப்பராயனை முதல்வராக நியமித்தார். சுப்பராயனுக்கு சுயேட்சைகள் பலரும், ஆளுனரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களும் ஆதரவளித்தனர். சுப்பராயன் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர்கள் - ஆற்காடு ரங்கநாத முதலியார் (சுகாதாரம், சுங்கவரித் துறைகள்) மற்றும் ஆரோக்கியசாமி முதலியார் (வளர்ச்சித் துறை). இந்த அரசு ஆளுனரின் கைப்பாவையாக செயல்பட்டது.[7][8][10]
Remove ads
தாக்கம்
சுப்பராயன் அரசில் ஆளுனரின் தலையீடு இரட்டை ஆட்சி முறையின் குறைகளைத் தெளிவாக்கியது. முதலில் நீதிக்கட்சியும், சுயாட்சி கட்சியும் அரசை எதிர்த்து செயல்பட்டன. சைமன் கமிஷனை எதிர்க்க வேண்டும் என இரண்டுமே கருதின. ஆனால் கோஷன் நீதிக்கட்சித் தலைவர்களுக்கு பதவிகளை அளித்து அவர்களை அரசு ஆதரவாளர்களாக மாற்றி விட்டார். 1927 இல் சுப்பராயனின் அமைச்சர்கள் இருவரும் பதவி விலகினர். அவர்களுக்கு பதிலாக முத்தையா முதலியார் மற்றும் சேதுரத்தினம் அய்யர் அமைச்சர்களாகினர். நீதிக்கட்சி இப்புதிய அமைச்சரவைக்கு ஆதரவளித்தது. ஆளுனரின் இந்த உள்ளடி வேலைகள் காங்கிரசுக்கு ஒரு எச்சரிக்கையாக செயல்பட்டது. பின்னாளில் 1937 தேர்தலின் பின் இது போன்ற ஒரு நிலை (நீதிக்கட்சி ஆதரவுடன் சுயேட்சை ஆட்சி) உருவான போது காங்கிரசு எச்சரிக்கையுடன் செயல்பட்டு ஆளுனரின் திட்டங்களை முறியடித்தது.[8][11][12][13][14]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads