செயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு
சொத்து வழக்கு From Wikipedia, the free encyclopedia
Remove ads
செயலலிதா சொத்து குவிப்பு வழக்கு என்பது 1991-96 தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த செயலலிதா வருமானத்திற்கு அதிகமாகச் சேர்த்த சொத்துக்கள் பற்றிய வழக்கைக் குறிக்கும். இவ்வழக்கின் முடிவில், சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது. 24, சூன், 1991 முதல் ஏப்ரல் 4, 1996 வரை முதன் முறையாக தமிழகத்தின் முதல்வராக அவர் இருந்தார். இந்த ஐந்து ஆண்டுகளில் அவர் தன் வருமானத்திற்கு கூடுதலாக சொத்துகளைச் சேர்த்துள்ளதாக அப்போது ஜனதா கட்சியின் தலைவராக இருந்த சுப்பிரமணியம் சுவாமி அப்போதைய தமிழக ஆளுநர் சென்னா ரெட்டியிடம் அனுமதி பெற்று, பிறகு 14, சூன், 1996இல் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.[1] அந்த மனுவை விசாரித்த சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி ராமமூர்த்தி, தமிழ்நாடு ஊழல் மற்றும் கண்காணிப்பு துறை இதனை புலனாய்வு செய்ய ஆணையிட்டார். இச்சொத்துக்களின் அன்றைய மதிப்பு ₹66.65 கோடியாகும். இவ்வழக்கு 1996ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசால் 1996 திசம்பர் அன்று அரசுத்தரப்பு வழக்காக மாற்றப்பட்டது.[2] 1996, டிசம்பர் மாதத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போயசு கார்டனில் உள்ள செயலலிதாவின் வீட்டை வண்ண தொலைக்காட்சி வழக்கிற்காகச்[3] சோதனையிட்டு அசையும் சொத்துக்களான 800 கிலோ வெள்ளி, 28 கிலோ தங்கம், 750 சோடி காலணிகள், 10,500 புடவைகள், 91 கைக்கடிகாரங்கள் மற்றும் சில மதிப்பு மிக்க பொருள்களைக் கைப்பற்றினர். அவை அனைத்தும் சென்னையிலுள்ள ரிசர்வ் வங்கியின் காப்பகத்தில் வைக்கப்பட்டன. 1997ஆம் ஆண்டு இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜெயலலிதா, சசிகலா, ஜெ. இளவரசி மற்றும் வி. என். சுதாகரன் ஆகியோர் கூட்டு சதியில் ஈடுபட்டு சொத்து சேர்த்ததாக குறிப்பிடப்பட்டது.[4]
குற்றம் சாட்டப்பட்டவர்களின் கோரிக்கைப்படி 1997ம் ஆண்டு தமிழக ஊழல் தடுப்பு காவல்துறை தயாரித்த குற்ற அறிக்கை தமிழ் மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது.[5] இந்த தீர்ப்பின் காரணமாக தமிழக முதலமைச்சர் மற்றும் திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பதவி இரண்டையும் இழந்தார். மேலும் மீண்டும் வி.கே.சசிகலா பரிந்துரைப்படி ஓ. பன்னீர்செல்வத்தை இரண்டாம் முறையாக முதலமைச்சராக ஆக்கினார்.
Remove ads
வழக்கின் காலவரிசை
1996
- ஜூன் 14 அன்று, 1991-1996 ஆம் ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துச் சேர்த்ததாக அப்போதைய ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடர்ந்தார்.
- ஜூன் 31ம் தேதி மனுவை விசாரித்த நீதிபதி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை டி.ஜி.பி.,யாக இருந்த லத்திகா சரணை விசாரிக்க உத்தரவிட்டார். அவ்விசாரணையின்படி செயலலிதா கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பிணையில் வெளியானார். வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
1997
- ஜூன்4, ஊழல் தடுப்புச் சட்டத்தில் செயலலிதா மீது வழக்குத் தொடரப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
- அக்டோபர் 1, தமிழக ஆளுநர் தொடர்ந்த மனுக்களை நீதிமன்றம் நிராகரித்தது.
2000
- ஆகஸ்டு மாதம் வழக்கின் விசாரணை தொடங்கியது. 250சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்
2001
- மூன்று அரசு வழக்கறிஞர்கள் ராஜினாமா செய்தனர்.
- விசாரணை அதிகாரி மாற்றப்பட்டார்.
- சிறப்பு நீதிமன்ற நீதிபதி மாற்றப்பட்டார்.
குறிப்பு: இக்காலகட்டத்தில் ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பணியாற்றினார்.
2002
- நவம்பர் மாதம் வழக்கு விசாரணை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
- 76 சாட்சிகள் குறுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டனர்.
- செயலலிதாவுக்கான கேள்விகள், அவரது வீட்டுக்கே அனுப்பப்பட்டன.
2003
- குறுக்கு விசாரணையின் போது 76 சாட்சிகளில் 64 பேர் பிறழ் சாட்சிகளாக மாறினர்
- பிப்ரவரி மாதம் வரை விசாரணை நடந்தது
- இவ்வழக்கு விசாரணையைவேறு மாநிலத்திற்கு மாற்றும்படி தி.மு.க. பொதுச் செயலர் அன்பழகன், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இவ்வழக்கில் சுப்ரமணியன் சாமியும் இணைந்து கொண்டார்.
- நவம்பர் 18ம் தேதி இந்த வழக்கு கர்நாடகாவிற்கு மாற்றப்பட்டது.
- கர்நாடக அரசு சார்பில் புதிய நீதிபதி மற்றும் அரசு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டனர்.
2005
- அரசு வழக்கறிஞராக பி. வி. ஆச்சார்யா நியமிக்கப்பட்டார்.
- வழக்கை மீண்டும் விசாரிக்க அவர் முயற்சித்த போது, தனக்கான கேள்விகளை வீட்டுக்கு அனுப்பும் படியும், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்கவும் செயலலிதா நீதிமன்ற உத்தரவைப் பெற்றார்.
- நீதிமன்றம், செயலலிதா நேரடிக் காணொளி மூலமும் எழுத்து மூலமாகவும் விளக்கமளிக்க அனுமதி வழங்கியது.
- செப்டம்பர், அரசு தரப்பில் 259 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக விளக்கமளிக்க செயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செயலலிதா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
- அக்டோபர், பெங்களூரு தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இந்த விசாரணையில், 567 கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
- நவம்பர், பெங்களூரு தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா நேரில் ஆஜராகி 192 கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.
2009
*ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட டி. டி. வி. தினகரன் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
2012
- ஆகஸ்ட், அரசு வக்கீல் பி. வி. ஆச்சார்யாவுக்கு, மாநில அட்வகேட் ஜெனரல் பதவியை கர்நாடக மாநில அரசு அளித்தது. இதனால் அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்யதார்.
2013
- பிப்ரவரி, புதிய சிறப்பு வழக்கறிஞராகப் பவானி சிங் பொறுப்பேற்றார்.
- செப்டம்பர், வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றார்.
- புதிய நீதிபதியாக ஜான் மைக்கேல் டி குன்ஹா நியமிக்கப்பட்டார்.
2014
- செப்டம்பர் 27, விசாரணை முடிந்து, ஜெயலலிதா குற்றவாளி என நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பு வழங்கினார்.
- செப்டம்பர் 29, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் மேலும் இவ்வழக்கின் தண்டனையிலிருந்து "பிணை" வழங்க வேண்டும் எனவும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் செயலலிதா தனது வழக்கறிஞர் மூலம் மனு தாக்கல் செய்தார்.
- செப்டம்பர் 30, பிணையின் மீதான வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என செயலலிதா சார்பாகத் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் படி அக்டோபர் 1 அன்று விசாரிக்கப்படும் என கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் அறிவித்தார்.
- அக்டோபர் 1, செயலலிதாவின் பிணை மனு மற்றும் மேல்முறையீட்டு மனுவை விடுமுறைக்கால நீதிபதி ரத்னகலா விசாரிக்க மறுத்தார்.
- அக்டோபர் 7, செயலலிதாவின் பிணை மனு நிராகரிக்கப்பட்டது .[6]
Remove ads
பெங்களூர் நீதிமன்றம்
விசாரணையும் குறுக்கு விசாரணையும் முடிந்த அரசு தரப்பு சாட்சிகள் 76 பேரை மீண்டும் விசாரித்ததில் 64 சாட்சிகள் பிறழ்ந்தன (மாற்றி கூறின) இதனால் வழக்கு பலவீனம் அடைந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் பிறழ் சாட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எதையும் எடுக்க முனையவில்லை.[7]. திமுகவின் பொதுச்செயலாளர் அன்பழகன் 2003ல் நியாயமான முறையில் இவ்வழக்கு நடைபெற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை கேட்டதால் இவ்வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டது.[8]
Remove ads
சர்ச்சைகள்
நீதிபதிகள்
சென்னை உயர் நீதிமன்றத்தில் முதலில் இவ்வழக்கை விசாரித்தவர் சம்பந்தம் அவர்கள் ஆவார். அவருக்கு அடுத்து ஆறுமுகப் பெருமாள் விசாரித்தார். இவ்வழக்கின் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக பாலகிருஷ்ணன் இருந்தார். அவரின் பணி காலம் முடிந்ததை அவருக்கு பணி நீடிப்பு செப்டம்பர் 30லிருந்து வழங்க உச்ச நீதிமன்றம் கேட்டும் அவருக்கு பணி நீடிப்பு வழங்காமல் கர்நாடக அரசு ஜான் மைக்கேல் டி'குன்ஹாவை நீதிபதியாக நியமித்தது. பாலகிருஷ்ணனும் அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங்கும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நடந்து கொள்கின்றனர் என அன்பழகன் குற்றம் சுமத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.[9]
அரசு சிறப்பு வழக்கறிஞர்
இவ்வழக்கின் முதல் சிறப்பு வழக்கறிஞர் பி. வி. ஆச்சாரியா 2012, ஆகத்து அன்று பதவி விலகியதை அடுத்து பவானி சிங் சிறப்பு வழக்கறிஞரானார். தன் பதவி விலகலுக்கு அப்போதைய கருநாடக பாசக அரசு தான் காரணம் என்று குற்றஞ்சாட்டினார். எதிர்காலத்தில் அதிமுகவுடன் பாசக அரசியல் உறவு கொள்வதற்காக பாசக அரசு அவ்வாறு நடந்து கொண்டதாக கூறினார்[10] 2013, ஆகத்தது 26 அன்று பவானி சிங்கை நீக்கியதை எதிர்த்து செயலலிதா தரப்பு உச்ச நீதிமன்றத்தை அணுகியதில் பவானி சிங்கை நீக்கியது தவறு என்றும் மீண்டும் அவரை அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆக ஆக்கும்படியும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.[11][12]
அன்பழகன்
அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங்கிற்கு தான் உதவ அனுமதிக்க கோரிய அன்பழகனின் மனுவை 2013, ஆகத்து 21 அன்று நீதிபதி பாலகிருஷ்ணன் ஏற்றுக்கொண்டார். அன்பழகன் தனக்கு உதவுவது வரவேற்கத்தக்கது என்றும், ஆனால் அவர் தனியாக நீதிமன்றத்தில் வாதாடுவதை தான் ஏற்கமுடியாது எனவும் பவானி சிங் கூறினார்.[13]
ஊடகங்கள் தந்த முக்கியத்துவம்
தமிழக முதல்வர் தொடர்புடைய இச்செய்திக்கு தமிழக ஊடகங்கள் முக்கியத்துவம் தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.[14]
தீர்ப்பு
1991-96 பதவிக் காலத்தில் வருமானத்துக்கு மீறிய அளவில் செயலலிதா சுமார் 66.65 கோடி சொத்து சேர்த்தார் என்ற வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 27, 2014 அன்று செயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்திருக்கிறது.[15][16][17] இதற்கு முன்னர், 18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இவ்வழக்கின் தீர்ப்பு 2014, செப்டம்பர் 20ந் தேதி அறிவிக்கப்படும் என பெங்களூரிலுள்ள சிறப்பு நீதி மன்றத்தின் நீதிபதி மைக்கேல் குன்கா அறிவித்திருந்தார். தீர்ப்பு நாளன்று குற்றஞ்சாட்டப்பட்ட செயலலிதா, வி. கே. சசிகலா, வி. என். சுதாகரன் மற்றும் ஜெ. இளவரசி ஆகிய நால்வரும் நீதிமன்றத்துக்கு வரவேண்டும் என்று உத்தரவிட்டார்.[18] பாதுகாப்புக் கருதி இந்த வழக்கின் மீதான தீர்ப்பு 2014 செப்டம்பர் 27 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டதாக பெங்களூரிலுள்ள சிறப்பு நீதி மன்றத்தின் நீதிபதி மைக்கேல் குன்கா அறிவித்திருந்தார். தீர்ப்பு செப்டம்பர் 27 அன்று பிற்பகல் மூன்று மணிக்கு அறிவிக்கப்பட்டது. செயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய அனைவரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டது. செயலலிதாவிற்கு ₹100 கோடியும், மற்ற மூவருக்கும் தலா ₹10 கோடியும் தண்டமாகவும் அனைவருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது [19]. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி குற்றம் இரண்டாண்டுகளுக்கு மேல் இருப்பதால் ஜெயலலிதா முதல்வர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை இழந்தார்.
இத்தீர்ப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆங்காங்கே சிற்சில வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.[20]
தீர்ப்பு விபரங்கள்
நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவின் தீர்ப்பில் உள்ள விபரங்களில் சில[21]. [22][23]
- 3 ஆயிரம் ஏக்கர் நிலம் உட்பட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் ஜெயலலிதா முதல்வராக இருந்தகாலத்தில் குவிக்கப்பட்டுள்ளன.
- நிலத்தை வாங்குபவரின் பெயர்களை பூர்த்தி செய்யாமலே பதிவாளரை வீட்டிற்கு அழைத்து சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நால்வரின் பெயரிலும் சொத்துக்கள் இருந்தாலும் அது முதல்வர் பதவியை பயன்படுத்தி சேர்த்த சொத்துக்கள்தான்.
- அந்த காலகட்டத்தில் தொடங்கப்பட்டதாகக் கூறப்படும் நிறுவனங்கள் எதுவும் செயல்படவில்லை. வெறும் காகிதத்தில் மட்டுமே அந்த நிறுவனங்கள் இருந்துள்ளன .
Remove ads
பிணை மனு
ஜெயலலிதாவுக்கான பிணை மனுவை பெங்களூரு நீதிமன்றம் 7-10-2014 மதியம் 2.30க்குப் பின்னர் நிராகரித்துவிட்டது. ஜெயலலிதாவுக்கு பிணை வழங்குவதற்கு எந்த வித முகாந்திரமும் இல்லை என்று நீதிபதி சந்திர சேகரன் தெரிவித்தார். ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட தண்டனையைத் தடை செய்யும் மனுவும் பிணை கேட்பு மனுவும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படுவதாக நீதிபதி சந்திரசேகரன் தனது தீர்ப்பில் கூறினார்.[24].
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இடைக்கால பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவருக்கு 2014, டிசம்பர் 18-ம் தேதி வரை இடைக்கால நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்திய உச்ச நீதிமன்றத்தில் செயலலிதாவின் பிணைக்காக வாதாடியவர் பாலி சாம் நரிமன். ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் பிணை வழங்கி உச்ச நீதிமன்றம்.2014, அக்டோபர் 17 (வெள்ளிக்கிழமை) அன்று உத்தரவிட்டது. மேலும், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நடைமுறைகளை நிறுத்திவைத்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.[25]
Remove ads
2015 (மேல் முறையீடு)
- ஜெயலலிதா மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க சிறப்பு அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அமர்வில் உயர்நீதிமன்ற நீதிபதியாக குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வகேலா அறிவித்துள்ளார்.
- சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 02 ஜனவரி 2015 அன்று விசாரணைக்கு வந்தது.
- ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில் தம்மையும் இணைக்க வேண்டுமென தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜனவரி 3, 2015 அன்று மனுத் தாக்கல் செய்தார்.[26]
- மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மதன் லோகூர், பானுமதி ஆகியோர் மாறுபாடான நிலை எடுத்ததால் மதன் லோகூர் இவ்வழக்கு பேரமர்வுக்கு மாற்றப்படுவதாக கூறினார் [27][28]
- செயலலிதாவின் பிணையை மே 12 வரை உயர் நீதிமன்றம் நீடித்துள்ளது. தீர்ப்பு வழங்கவும் மே 12 வரை தேதியை நீடித்துள்ளது. தலைமை நீதிபதி தத்து எ. கே. மிசுரா அடங்கிய அமர்வு அரசு வழக்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு பேரமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளதால் அதை கருத்தில் கொண்டு கருநாடக தலைமை நீதிபதி தீர்ப்பு வழங்கும் தேதியை மேலும் நீடிக்கவும் அனுமதி வழங்கியது. [29]
- மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தீபக் மிசுரா, ஆர் கே அகர்வால், பி சி பண்ட் அடங்கிய அமர்வு ஏப்பிரல் 21 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும். [30]
- இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு (3 நீதிபதிகள் உடையது) பவானி சிங் அரசு வழக்கறிஞராக வாதாடியது தவறு, சட்டத்திற்கு புறம்பானது என்றும், அதற்காக மீண்டும் வாதத்தை முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டியதில்லை என்றும் இவ்வழக்கில் ஏப்பிரல் 27ந் தேதி இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தது [31].
- இறுதி தீர்ப்பில் மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு பவானி சிங் அரசு வழக்கறிஞராக வாதாடியது தவறு என்றும் அதற்காக மீண்டும் வாதத்தை முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டியதில்லை என்றும் தீர்ப்பு வழங்கினர். சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது தமிழக அரசால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் பவானிசிங் ஆவார். இவரே அரசு சார்பாக வாதிட்டார். [32][33]
- பவானி சிங் மேல் முறையீட்டு மனுவில் அரசு சார்பாக வாதாடுவது தவறு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், கருநாடக அரசின் சார்பில் வழக்கறிஞர் ஆச்சார்யா தனது வாதத்தை எழுத்து மூலமாக தெரிவித்தார். கருநாடக அரசு இவ்வழக்கில் தன் சார்பாக (அரசு சார்பாக)வாதாடுவார் என தெரிவித்துள்ளது. இவர் முன்னமே கருநாடக அரசு வழக்கறிஞறாக இவ்வழக்கில் தோன்றியுள்ளார், 2012இல் ஆச்சாரியா அரசு வழக்கறிஞர் பதவியில் இருந்து விலகிக்கொண்டார். 2013 பிப்ரவரி அன்று ஆச்சாரியாவுக்கு பதிலாக பவானி சிங்கை கருநாடக அரசு அரசு வழக்கறிஞறாக அமர்த்தியது. [34]
மேல் முறையீட்டில் விடுதலை
மேல் முறையீட்டில் நீதிபதி குமாரசாமி செயலலிதா மீதான குற்றச்சாட்டை அரசு தரப்பு வழக்கறிஞர் நிரூபிக்கவில்லை எனக்கூறி விடுதலை செய்தார். [35][36][37]
Remove ads
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
- 23 சூன் 2015: ஜெ ஜெயலலிதா உள்ளிட்டோர் மீது தொடுக்கப்பட்டிருந்த வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை, கர்நாடக அரசு இந்திய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.[38][39]
- 16 சூலை 2015: ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.[40]
- 27 சூலை 2015: கர்நாடக அரசு மற்றும் திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது.[41]
மேல்முறையீட்டில் தீர்ப்பு
2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் திகதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சசிகலா உட்பட நான்குபேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இதில் நான்கு பேரில் செயலலிதா மட்டும் இறந்ததை அடுத்து வி. கே. சசிகலா, வி. என். சுதாகரன், ஜெ. இளவரசி ஆகிய மூன்று பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 10 கோடி அபராதமும் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. [42] உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி, வி. கே. சசிகலா, வி. என். சுதாகரன் மற்றும் ஜெ. இளவரசி ஆகியோர் பரப்பன அக்ரகார மத்தியச் சிறைச்சாலையில் 15 பிப்ரவரி 2017 அன்று அடைக்கப்பட்டனர்.
சீராய்வு மனு
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா இறந்துவிட்டாலும் ரூபாய் 100 கோடி அபராதத்தை வசூலிக்க வேண்டும் என கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் 22 மார்ச் 2017-இல் சீராய்வு மனு செய்துள்ளது. [43]
Remove ads
ஜெ. இளவரசி
ஜெ. இளவரசி, ஜெயலலிதாவின் தோழியான வி. கே. சசிகலாவின் மூத்த அண்ணன் ஜெயராமன் என்பவரின் மனைவி ஆவார். [44] ஜெயலலிதாவின் ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தில் இளவரசின் கணவர் ஜெயராமன் மேற்பார்வையாளராக இருந்த போது, டிசம்பர், 1991-ஆம் ஆண்டில் மின்சாரம் தாக்கி இறந்தார். எனவே விதவையான இளவரசியை ஜெயலலிதா தனது போயஸ் தோட்ட இல்லத்தில் தன்னுடன் இருத்தி அடைக்கலம் கொடுத்து வைத்துக் கொண்டார்.
சொத்து குவிப்பு வழக்கில்
ஜெயலலிதாவுடன் கூட்டுச் சதி செய்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த சொத்து குவிப்பு வழக்கில் நான்காவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட இளவரசி, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, பின்னர் மேல் முறையீட்டு வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். பின்னர் கர்நாடகா அரசு, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்து செய்யுமாறு இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 15 பிப்ரவரி 2017 அன்று உச்ச நீதிமன்றம், கர்நாடகா உயர்நீதிமன்ற தீர்ப்பை இரத்து செய்ததுடன், பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, இளவரசிக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு,[45] 16 பிப்ரவரி 2017 அன்று கர்நாடகா மாநில பரப்பன அக்ரகார மத்தியச் சிறைச்சாலையில் இளவரசியுடன் வி. கே. சசிகலா மற்றும் வி. என். சுதாகரனும் அடைக்கப்பட்டனர்.
Remove ads
சொத்து பறிமுதல் நடவடிக்கை
நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கையை முடிக்கி விட்டுள்ளது. [46]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads