ஜராசந்தன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜராசந்தன் இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தின் கதைமாந்தர்களில் ஒருவனாவான். மகாபாரதத்தின்படி இவன் மகத நாட்டின் அரசனாக இருந்தவன். இந்த இதிகாசத்தின் இன்னொரு பாத்திரமும், திருமாலின் அவதாரமாகக் கருதப்படுபவனுமான கண்ணனுக்கு எதிரியாக இருந்த இவன் இறுதியில் பீமனால் கொல்லப்பட்டான்.

பிறப்பு
ஜராசந்தனின் பிறப்புப் பற்றி மகாபாரதம் பின்வருமாறு கூறுகிறது:
பிருகத்ரதன் என்பான் மகத நாட்டை ஆண்டு வந்தான். இவன் உடன்பிறந்தவர்களான இரு இளவரசிகளை மணந்து இல்லறம் நடத்திவந்த புகழ் பெற்ற அரசன். தனது இருமனைவிகளையும் சமமாகவே பாவித்து நடத்தி வருகிறான். எல்லா வசதிகளும் பெற்று வாழ்ந்து வந்தாலும் அவனுக்குப் பிள்ளையில்லாதது பெருங்குறையாக இருந்தது. காலப்போக்கில் வாழ்வில் வெறுப்புற்ற அவன் காட்டுக்குச் சென்று அங்கே சந்திரகௌசிகர் என்னும் முனிவரை அணுகி அவருக்குப் பணிவிடைகள் செய்து வாழ்ந்திருந்தான். பிருகரதனுக்கு பிள்ளையில்லாத குறையை அறிந்த முனிவர் அவன்மீது இரக்கப்பட்டு, மாம்பழம் ஒன்றை அவனிடம் கொடுத்து அதனை அவனுடைய மனைவியிடம் உண்ணக் கொடுக்குமாறு கூறினார். அதை எடுத்துக்கொண்டு நாட்டுக்குச் சென்ற பிருகத்ரதன், அதைத் தனது இரண்டு மனைவியருக்கும் பகிர்ந்து கொடுத்தான். இதனால் இருவரும் கர்ப்பமுற்றனர். ஆனாலும் பாதிப் பழத்தையே ஒவ்வொருவரும் உண்டதால் அவர்கள் இருவருக்கும் ஒரே பிள்ளை பாதி பாதி பிள்ளைகளாக இறந்து பிறந்தான். அதைக் கண்டு திகிலுற்ற பிருகத்ரதன் அவ்விரு பாதிப் பிள்ளைகளையும் நகருக்கு வெளியே எறிந்துவிடுமாறு ஆணையிட்டான்.
மனிதர்களைத் தின்னும் இராட்சசியான ஜரா என்பவள், பாதி பாதி பிண்டங்களை கண்டு அவற்றை எடுத்துச் செல்வதற்காக இரண்டையும் சேர்த்தபோது அவ்விரண்டும் இணைந்து ஒரு ஆண்பிள்ளையானது. அதன் அழுகுரல் கேட்டு இரக்கப்பட்ட அந்த இராட்சசி அக்குழந்தையை எடுத்துச்சென்று அரசனிடம் கொடுத்து, அது தனக்குக் கிடைத்த கதையையும் சொன்னாள். அது தன்னுடைய குழந்தையே என்று அறிந்த அரசன் அதற்கு, ஜரா என்ற அந்த ராட்சசியின் பெயரை அடியொற்றி ஜராசந்தன் என்று பெயரிட்டான். அரசவைக்கு வந்த சந்திரகௌசிகர், ஜராசந்தனைப் பார்த்துவிட்டு, அவன் ஒரு புகழ் பெற்ற சிவபக்தனாக விளங்குவான் என்று கூறிச் சென்றார்.
Remove ads
வாழ்க்கை
ஜராசந்தன், மகத நாட்டின் ஆற்றல் மிக்க மன்னனாகிப் பெரும் புகழ் ஈட்டினான். மகத நாட்டைப் பல திசைகளிலும் விரிவுபடுத்தினான். பல மன்னர்களை அடக்கி மகதப் பேரரசனாக முடிசூட்டிக் கொண்டான். தனது மகளொருத்தியின் கணவனான கம்சனைக் கொன்ற கிருஷ்ணன் (கண்ணன்) மீது வெறுப்பைக்கொண்ட அவன், கண்ணன் ஆண்ட மதுராவைப் பதினெட்டுமுறை முற்றுகையிட்டுத் தாக்கியதாக மகாபாரதம் கூறுகிறது. ஒவ்வொரு முறையும் ஜராசந்தன் தோல்வியையே தழுவிய போதும், கண்ணன் மதுராவை விட்டுத் துவாரகைக்குச் சென்றான்.
Remove ads
இறப்பு
ஜராசந்தன் பல அரசர்களைப் பிடித்துச் சிறையிட்டிருந்தான். பீமன், அருச்சுனன் ஆகியோரோடு மதுராவுக்கு மீண்டுவந்த கண்ணன், ஜராசந்தனைக் கொன்று அரசர்களை விடுவிக்கும் நோக்குடன் அவன் அரண்மனைக்குச் சென்றான். பிராமணர்கள்போல மாறுவேடமிட்டுச் சென்ற அம்மூவரும், தங்களுள் ஒருவனுடன் போருக்கு வருமாறு அவனை அழைத்தனர். அதற்கு ஒப்புக்கொண்ட ஜராசந்தன் போர்புரிவதற்காக பீமனைத் தேர்ந்தெடுத்தான். 27 நாட்கள் நடைபெற்ற இச் சண்டையில், கண்ணனின் ஆலோசனைப்படி, ஜராசந்தனை பீமன் நெடுக்குவாட்டில் இரு பாதிகளாகக் கிழித்து எறிந்து கொன்றான்.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads