டி. கே. கோவிந்த ராவ்
கேரளத்தைச் சேர்ந்த கருநாடக இசைக்கலைஞர் (1929 - 2011) From Wikipedia, the free encyclopedia
Remove ads
டி. கே. கோவிந்த ராவ் (T. K. Govinda Rao பி: ஏப்ரல் 21[1], 1929[2] - இ: செப்டம்பர் 18, 2011[3]) என பிரபலமாக அறியப்படும் திருப்புனித்தர கிருஷ்ணன் எம்பிரந்திரி கோவிந்தராவ், கேரளா கொச்சியைச் சேர்ந்த ஒரு கருநாடக இசைக் கலைஞர் ஆவார்.
Remove ads
குடும்பம்
திருப்புனித்தர என்ற இடத்தில் அமைந்துள்ள பூர்ணாத்திரயீச கோயிலில் பூசகராக சேவையாற்றிக் கொண்டிருந்த சக்கலமுத்துங்கல் பள்ளிசேரி மடாத்தில் கிருஷ்ணன் எம்பிரந்திரி என்பவரின் மகனாகப் பிறந்தார்.
இவரது மனைவி பெயர், கண்ணன் குலங்கர கொணாத்து மடாத்தில் ஹைமவதி என்பதாகும். இவருக்கு ராஜ கோபால் என்ற மகனும், வசந்தி, பத்மஜா, உஷா ஆகிய மூன்று மகள்களும் பிள்ளைகள்[4].
இசைப் பயிற்சி
தொடக்கத்தில் செம்பை வைத்தியநாத பாகவதரிடம் இசை பயின்றார். 1949 ஆம் ஆண்டு சென்னை இசைக்கல்லூரியில் (அப்போது மத்திய இசைக் கல்லூரி) சேர்ந்து அங்கு முதல்வராகப் பணியாற்றிய முசிரி சுப்பிரமணிய ஐயரிடமும், டி. பிருந்தாவிடமும் இசை பயின்றார்[3]. அங்கு சங்கீத வித்துவான் பட்டம் பெற்றார். சுமார் 15 வருடங்கள் முசிரியிடம் குருகுல வாசம் செய்து அவரது பாணியை அப்படியே பின்பற்றி வந்தார்[5].
இசைப் பணி
சென்னை மியூசிக் அகாதமியின் ஆலோசனைக் குழு உறுப்பினராக பணியாற்றியதோடு இந்திய அரசின் சங்கீத நாடக அகாதமி, காசி, தில்லி, சென்னை, பெங்களூரு, தெலுங்கு பல்கலைக்கழகங்களிலும் பல தரப்பட்ட பணியாற்றியுள்ளார்[5].
சங்கீத மும்மூர்த்திகள் பற்றி புத்தகங்கள் எழுதியுள்ளார்[3].
பெரியசாமி தூரனின் கீர்த்தனைகள் உட்பட பல கீர்த்தனைகளுக்கு இசை அமைத்துள்ளார். தனது இசைக் கச்சேரிகளில் அவற்றை பாவங்களுடன் பாடி பரவச் செய்தார். புரந்தரதாசர் கீர்த்தனைகளை சிறப்பாகப் பாடுவார்[3].
அவர் பாடிய புரந்தரதாசரின் மிகப் பிரபலமான சிந்துபைரவி இராகத்தில் அமைந்த வெங்கடாசல நிலையம் பாடலை இங்கே கேட்கலாம்.
அகில இந்திய வானொலியின் சென்னை நிலையத்தில் இசை நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் பின்னர் தில்லி தலைமை நிலையத்தில் முதன்மை இசை நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் கடமையாற்றினார்[5].
அகில இந்திய வானொலியில் தலைமை தயாரிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றபின் வாய்ப்பாட்டு கருநாடக இசையின் பல்வேறு பாணிகளைப் பிரபலப் படுத்த, பல பெரும் வித்துவான்களின் குரல்கள் அடங்கிய ஒரு "குரல் வங்கி"யை உருவாக்குவதில் கவனம் செலுத்தினார்.[4].
கான மந்திர் நிதியம் என ஒரு அமைப்பை ஏற்படுத்தி, கருத்தரங்குகள், செயல்முறைப் பட்டறைகள் என்பவற்றை இந்தியாவிலும் வேறு இடங்களிலும் நடத்தினார். நிதியத்தின் ஒரு அங்கமாக கான மந்திர் ஒலிப்பதிவு கூடம் ஒன்றை நிறுவி இசை தொடர்பான காணொலி வட்டுக்கள், ஒலிப்பேழைகள் தயாரித்து வெளியிட்டார்[5].அகில இந்திய வானொலியில் பணியாற்றியபோதும், ஒலிப்பதிவுகளைச் சேகரித்தபோதும் இவர் ஒரு விடயத்தை அவதானித்தார். வெவ்வேறு பாணிகளில் பலப்பல பாடகர்கள் பாடியதைக் கேட்டபோது அவர்கள் இசையில் கவனம் செலுத்தியபோதிலும் சாகித்திய பாவம் எனப்படும் பாடல் வரிகளைப் பாடும்போது காட்டும் அசைவுகளில் போதிய கவனம் செலுத்துவதில்லை எனக் கண்டறிந்தார். இதற்கு மொழித் தடை ஒரு காரணம் என்பதை அறிந்தார்[6].
இவரின் மிகப் பெரிய பணியானது சங்கீத மும்மூர்த்திகளின் இதுவரை கிடைக்கப்பெற்ற, உறுதி செய்யப்பட்ட, கீர்த்தனைகளையும் சுவாதித் திருநாள் மகாராஜாவின் கீர்த்தனைகளையும் தொகுத்து உரோமன் வரிவடிவிலும் தேவநாகரி வரிவடிவிலும் எழுதி அவற்றின் கருத்தை ஆங்கில மொழியில் கொடுத்து, இசைக் குறியீடுகளுடன் வெளியிட்டார். இதன் மூலம் மொழித் தடை நீக்கப் பட்டதுடன் சந்ததி இடைவெளியும் நீக்கப்பட்டு எல்லோரும் கற்றுக் கொள்ள வழி சமைத்திருக்கிறார். ஆனால் கருநாடக இசையின் அடையாளமும் அதன் இந்திய மரபும் சிறிதும் கெடாமல் இதனைச் செய்துள்ளார்[5].
Remove ads
இசை ஆசிரியராக
சென்னை இசைக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியதுடன் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வருகை பேராசிரியராகப் பணியாற்றினார்[3]. மேலும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, கனடா, மஸ்கட் ஆகிய நாடுகளில் நூற்றுக் கணக்கான மாணவர்களுக்கு இசை கற்றுக் கொடுத்துள்ளார்[5].
மலையாளத் திரைப்படப் பின்னணிப் பாடகர்
மலையாளத் திரைப்பட உலகின் முதலாவது பின்னணிப் பாடலை இவரே பாடினார். பி. வி. கிருஷ்ண ஐயரின் இயக்கத்தில் 1948ஆம் ஆண்டு வெளியான நிர்மலா என்ற திரைப்படத்தில் இவர் பாடிய "சுப லீலா" என்ற பாடலே மலையாள மொழியில் முதலாவது திரைப்படப் பின்னணிப் பாடலாகும். பின்னர் இவர் பி. லீலாவுடன் இணைந்து பாடிய "பாடுக பூங்குயிலே" என்ற பாடல் மலையாளத் திரைப்பட உலகின் முதலாவது ஆண் பெண் இணைந்து பாடும் இரட்டையர் பாடலாக அமைந்தது[4].
Remove ads
விருதுகள்
- சங்கீத சூடாமணி விருது, 1988 வழங்கியது: ஸ்ரீ கிருஷ்ண கான சபா, சென்னை
- சங்கீத கலாநிதி விருது, 1999 வழங்கியது: மியூசிக் அகாதமி, சென்னை
- சங்கீத நாடக அகாதமி விருது, 1996 வழங்கியது: இந்திய அரசின் சங்கீத நாடக அகாதமி[7]
- சங்கீத சாஸ்திர இரத்னாகார (அமெரிக்கா)[5].
- கானகலா திலக[5].
- நாதக்கனல்[5].
- ஸ்வர சாம்ராட்[5].
- சங்கீத சாம்ராட்[5].
- சங்கீத ஆச்சாரியா[5].
- காயக சிகாமணி[5].
- காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்துவான்[5].
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads