டைனமோ நடவடிக்கை

From Wikipedia, the free encyclopedia

டைனமோ நடவடிக்கை
Remove ads

டைனமோ நடவடிக்கை (Operation Dynamo) என்றழைக்கப்படும் டன்கிர்க் காலிசெய்தல் (Dunkirk Evacuations) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு காலிசெய்தல் நடவடிக்கை. மே 27-ஜூன் 4, 1940 காலகட்டத்தில் நடைபெற்ற இந்த நடவடிக்கை மூலம் பிரான்சில் போரிட்டுக் கொண்டிருந்த பிரிட்டனின் தரைப்படைகள் நாசி ஜெர்மனியின் படைகளிடமிருந்து தப்பி இங்கிலாந்து திரும்பின. இவர்களுடன் பிரான்சு படைவீரர்கள் ஆயிரக்கணக்கானோரும் ஆங்கிலக் கால்வாய் வழியாக இங்கிலாந்துக்குத் தப்பினர். பத்து நாட்கள் நடந்த இந்த நடவடிக்கையில் சுமார் 850 கப்பல்கள், படகுகள் மற்றும் தோணிகள் பயன்படுத்தப்பட்டன. மொத்தம் 338,226 வீரர்கள் இவ்வாறு ஜெர்மனி படைகளிடமிருந்து தப்பினர். இந்த காலி செய்யும் நடவடிக்கை பிரான்சின் டன்கிர்க் துறைமுகத்திலிருந்தும் அதன் அருகிலுள்ள கடலோரப் பகுதிகளிலிருந்தும் மேற்கொள்ளப்பட்டது.

Thumb
படகுகளில் ஏறக்காத்திருக்கும் பிரித்தானிய படைகள்
Remove ads

பின்புலம்

1940ல் நாசி ஜெர்மனியின் படைகள் மேற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியைக் கைப்பற்றி விட்டன. பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், நார்வே பொன்ற நாடுகள் நாசி போர் எந்திரத்தின் வலிமையின் முன்னால் ஈடுகொடுக்க முடியாமல் ஒன்றன்பின் ஒன்றாக சரணடைந்தன. மே 1940ல் பிரான்சு சண்டையில் ஜெர்மனி படைகள் பிரான்சு நாட்டு படைகளை முறியடித்து வேகமாக முன்னேறி வந்தன. பிரான்சின் பெரும்பகுதி ஜெர்மனியால் கைப்பற்றப்பட்டது. பிரான்சின் சார்பில் போரிட வந்திருந்த பிரிட்டன் படையினரும் எஞ்சியிருந்த பிரெஞ்சுப் படையினரும் டன்கிர்க் துறைமுகத்தருகே ஜெர்மன் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டனர். கடைசியாக நடந்த டன்கிர்க் சண்டையில் தோல்வியடைந்த பின்னர் எஞ்சியிருந்த படைகளைக் காலி செய்து இங்கிலாந்துக்கு கொண்டு வரவேண்டும் என்று நேச நாட்டுத் தலைவர்கள் முடிவு செய்தனர்.

Remove ads

காலி செய்தல்

Thumb
டன்கிர்க்கிலிருந்து காப்பாற்றப்பட்ட பிரித்தானிய வீரர்கள்

மே 1940 இறுதி வாரத்தில் பிரானிசிலிருந்த பிரித்தானிய படைகள் டன்கிர்க் துறைமுகத்தருகில் ஜெர்ன்மனி படையினரால் சுற்றி வளைக்கப்பட்டன. அவர்களை காப்பாற்றி இங்கிலாந்துக்கு பத்திரமாக கொண்டு வர ஆங்கிலக் கால்வாயை கடக்க வேண்டும். ஜெர்மன் யு-போட்டுகள் (நீர்மூழ்கிகள்), லுஃப்ட்வாஃபே (விமானப்படை) விமானங்கள் ஆகியவற்றின் இடையறாத தாக்குதல்களுக்கிடையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் இங்கிலாந்தில் இருந்த அனைத்து வகை படகுகளும் ஈடுபட்டன. பிரித்தானிய கடற்படை கப்பல்களைத் தவிர தனியார் படகுகள், மீன்பிடிக் படகுகள், சொகுசுப் படகுகள், சிறு படகுகள், உயிர்காப்புப் படகுகள் என கடலில் செல்லக்கூடிய அனைத்து வகைக் கப்பல்களும் பிரித்தானிய படைகளை ஏற்றிச் சென்றன. டன்கிர்க் துறைமுகத்திலும், அதைச் சுற்றியுள்ள கடற்கரைகளிலும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வீரர்கள் படகுகளிலேறி இங்கிலாந்து திரும்பினர். எந்நேரமும் ஜெர்மனி படைகள் டன்கிர்கைத் தாக்கிக் கைப்பற்றலாம் என்ற அச்சுறுத்தலுக்கிடையே இந்த நடவடிக்கை நடந்தேறியது. மேற்கு போர்முனையில் மாதக்கணக்கில் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டிருந்த ஜெர்மன் படைக்கு சற்றே ஓய்வு அளிப்பதற்காக ஜெர்மன் தளபதிகளும் ஹிட்லரும் டன்கிர்கைத் தாக்க வேண்டாம் என்று உத்தரவிட்டனர். ஜெர்மனி தரைப்படைப் பிரிவுகள் டன்கிர்க்கும் சில கிலோமீட்டர் தொலைவில் தங்கள் முன்னேற்றத்தை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டன. இதனால் நேசநாட்டுப் படைகளுக்கு மேலும் சில நாட்கள் அவகாசம் கிடைத்தது. பத்து நாட்கள் நடந்த இந்தப் நடவடிக்கையில் மொத்தம் 338,226 (198,229 பிரித்தானிய மற்றும் 139,997 பிரெஞ்சு) படைவீரர்கள் காப்பாற்றப்பட்டனர்.

மேலதிகத் தகவல்கள் தேதி, கடற்கரையிலிருந்து காபாற்றப்பட்டவர்கள் ...
Remove ads

விளைவுகள்

டன்கிர்க் காலிசெய்தல் நடந்துகொண்டிருக்கும் போது பிரித்தானிய கடல் மற்றும் வான் படையினருக்கும் ஜெர்மன் கடல், வான் படையினருக்கும் நடந்த தொடர் சண்டையில் இரு தரப்புக்கும் இழப்புகள் ஏற்பட்டன. இருநூறுக்கும் மேற்பட்ட பிரித்தானிய கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. இவற்றுள் ஆறு டெஸ்ட்ராயர் வகைக் கப்பல்களும் அடக்கம். பிரித்தானிய வான்படை 177 விமானங்களையும் லுஃப்ட்வாஃபே 240 விமானங்களையும் இழந்தன. மூன்று பிரெஞ்சு டெஸ்டிராயர் கப்பல்களும் மூழ்கடிக்கப்பட்டன. மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட நேச நாட்டு வீரர்கள் ஜெர்மனி படைகளின் பிடியிலிருந்து தப்பினாலும் அவர்கள் தங்களது தளவாடங்களை பிரான்சிலேயே விட்டுவிட்டு வர நேர்ந்தது. டாங்கிகள், கவச வண்டிகள், கள பீரங்கிகள், மோட்டார் வாகனங்கள் பிற வகைத் தளவாடங்கள் என பலவகைக் கருவிகளும் சாமான்களும் ஜெர்மானியர் வசம் சிக்கிக்கொண்டன. காலிசெய்தல் நடவடிக்கையைப் பாதுகாக்க முன்வந்த பல்லாயிரக்கணக்கான பிரெஞ்சு பின்களகாப்புப் படைகள் (rear guard) ஜெர்மானியர்களால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பலர் அடுத்த ஐந்தாண்டுகள் நாசி ஜெர்மனியின் தொழிற்சாலைகளில் அடிமைத் தொழிலாளிகளாகப் பணியாற்ற நிர்பந்திக்கப்பட்டனர். பெரும்பாலான பிரித்தானிய படைகள் தப்பினாலும் அவர்களது போர்க்கருவிகளும் தளவாடங்களும் ஜெர்மானியர் வசம் சிக்கிக் கொண்டதால் அமெரிக்காவிடம் உதவி கேட்கும் நிலை பிரிட்டனுக்கு ஏற்பட்டது. நேச நாட்டுப் படைகளை அழிக்காமல பிரான்சிலிருந்து தப்பவிட்டது, ஜெர்மனி மேற்குப் போர்முனையில் செய்த பெரிய உத்தி வகைத் தவறுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்

Remove ads

வெளி இணைப்புகள்

விரைவான உண்மைகள்
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads