தர்மன் சண்முகரத்தினம்
சிங்கப்பூர் குடியரசு தலைவர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தர்மன் சண்முகரத்தினம் (Tharman Shanmugaratnam, பிறப்பு: 25 பெப்ரவரி 1957) சிங்கப்பூர் அரசியல்வாதியும், பொருளியலாளரும், சிங்கப்பூரின் குடியரசுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டவரும் ஆவார். இவர் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதற்கு முன்னர் 2019 முதல் சிங்கப்பூரின் மூத்த அமைச்சராகவும், 2015 முதல் சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும், 2011 முதல் சிங்கப்பூரின் நாணய ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றி வந்துள்ளார். முன்னதாக 2011 முதல் 2019 வரை துணைப் பிரதமராகவும், 2003 முதல் 2008 வரை கல்வி அமைச்சராகவும், 2007 முதல் 2015 வரை நிதி அமைச்சராகவும்[2] பணியாற்றியிருந்தார். ஆளும் மக்கள் செயல் கட்சியின் உறுப்பினராக உள்ள இவர், 2001 முதல் தமா சுரோங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார்.[1][3]
பொருளாதார நிபுணரான தர்மன், சிங்கப்பூருக்கான அரசு சேவையில், முக்கியமாக பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளுடன் தொடர்புடைய பணிகளில் பெரும் பங்காற்றியுள்ளார். பல்வேறு உயர்மட்டப் பன்னாட்டுப் பேரவைகளுக்குத் தலைமை தாங்கி செயற்பட்டார். தர்மன் தற்போது முப்பது நாடுகள் அடங்கிய பொது மற்றும் தனியார் துறைகள் மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த பொருளாதார மற்றும் நிதித் தலைவர்களின் உலகளாவிய பேரவையின் தலைவராக உள்ளார். ஐ.நா. தண்ணீரின் பொருளாதாரத்திற்கான உலகளாவிய ஆணையத்தின் இணைத் தலைவராகவும் உள்ளார். அத்துடன் ஐக்கிய நாடுகளின் பன்முகத்தன்மைக்கான உயர்மட்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.[4]
தர்மன் 2021 இல் ஜி-20 உயர்மட்ட சுயாதீனக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். அனைத்துலக நாணய நிதியத்தின் முக்கிய கொள்கை மன்றமான பன்னாட்டு நாணய மற்றும் நிதிக் குழுவின் தலைவராக நான்கு ஆண்டுகள் இருந்த முதலாவது ஆசியத் தலைவராக ஆனார். கூடுதலாக, இவர் தற்போது ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் மனித மேம்பாட்டு அறிக்கைக்கான ஆலோசனைக் குழுவின் இணைத் தலைவராகவும், உலகப் பொருளாதார மன்றத்தின் அறங்காவலர் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.
2001 பொதுத் தேர்தலில் தர்மன் அரசியலுக்கு அறிமுகமானார். 2006, 2011, 2015, 2020 ஆகிய ஆண்டுகளில் நடந்த பொதுத் தேர்தல்களில் நான்கு முறை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2023 சூன் 8 அன்று, தர்மன் 2023 செப்டம்பரில் நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தனது வேட்புமனுவை அறிவித்தார். அதைத் தொடர்ந்து, அரசாங்கத்தில் உள்ள அனைத்து பதவிகளிலிருந்தும், மக்கள் செயல் கட்சியில் இருந்தும் 2023 சூலை 7 முதல் விலகுவதாக அறிவித்தார்.[5][6] 2023 செப்டம்பர் 1 இல் இடம்பெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் தர்மன், தனக்கெதிராகப் போட்டியிட்ட எங் கோக் சாங், டான் கின் லியான் ஆகியோரைத் தோற்கடித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[7] இதன்மூலம், குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு சிறுபான்மை இனத்திலிருந்து நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் ஆனார். 1993 ஆம் ஆண்டு ஓங் டெங் சியோங்கிற்குப் பிறகு பெரும்பான்மையான மக்களின் வாக்குகளைப் பெற்ற முதல் குடியரசுத் தலைவரும் ஆவார். மேலும் இவரது 70.4% மற்றும் 1,746,427 வாக்குகள் சிங்கப்பூர் வரலாற்றில் குடியரசுத் தலைவர் வேட்பாளரின் மிகப்பெரிய வாக்குப் பங்கும் வாக்கு எண்ணிக்கையும் ஆகும்.[8]
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
தர்மன் 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் பூர்வீகம் கொண்ட குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை சிங்கப்பூரர் ஆவார்.[9][10] சிங்கப்பூர் புற்றுநோய்ப் பதிவேட்டை நிறுவி, புற்றுநோய், நோயியல் ஆய்வு தொடர்பான பல பன்னாட்டு அமைப்புகளுக்குத் தலைமை தாங்கிய "சிங்கப்பூரில் நோயியலின் தந்தை" என்று அழைக்கப்படும் மருத்துவ அறிவியலாளர் பேராசிரியர் கனகரத்தினம் சண்முகரத்தினத்தின்[10] மூன்று பிள்ளைகளில் ஒருவர் தர்மன்.[11][12][13] 1957 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் பிறந்தவர் தர்மன். இவரது தாய்-வழிப் பாட்டனார் ஆறுமுகம் விசுவலிங்கம் ஒரு பிரபலமான மருத்துவரும், அறிவியலாளரும் ஆவார். இலங்கை, யாழ்ப்பாண மாவட்டம், ஊரெழு என்ற ஊரில் இருந்து மலாயாவுக்குக் குடிபெயர்ந்தவர்.[14] ஆங்கிலோ-சீனக் கல்லூரியில் கல்வி கற்ற தர்மன் லண்டன் பொருளியல் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார். பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளியலில் முதுமாணிப் பட்டமும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொதுப்பணித் துறையில் முதுமாணிப் பட்டமும் பெற்றார். தர்மன் சப்பானிய-சீன வழக்கறிஞரான ஜேன் யுமிக்கோ இட்டோகி என்பவரைத் திருமணம் புரிந்தார்.[15] மனைவி ஜேன் சிங்கப்பூரில் சமூக நிறுவனங்களிலும், இலாப நோக்கற்ற கலைத் துறையிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இவர்களுக்கு மூன்று ஆண்களும் ஒரு பெண்ணுமாக நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
Remove ads
அரசியலில்
தர்மன் சண்முகரத்தினம் பன்னாட்டு நாணய நிதியம், பன்னாட்டு நாணய மற்றும் நிதிக்குழு என்பவற்றின் பணிப்பாளராகவும் இருந்து வருகின்றார். 2001 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் அரசியலில் நுழைந்த தர்மன் முதலில் வணிகத்துறை அமைச்சில் மூத்த மாநில அமைச்சராக நியமனம் பெற்றார். பின்னர் 2003 முதல் 2008 வரை கல்வி அமைச்சராக இருந்த இவர், 2006 மே முதல் கூடுதல் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார் [16].
டிசம்பர் 2007 இல் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட இவர் கல்வி அமைச்சராகவும் மார்ச் 2008 வரையில் இருந்தார்[2]. 2002 ஆம் ஆண்டில் இவர் மக்கள் செயல் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராகத் தெரிவானார்.
தர்மன் ஜுரொங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads