திருக்கேதீச்சரம்

From Wikipedia, the free encyclopedia

திருக்கேதீச்சரம்map
Remove ads

திருக்கேதீச்சரம் அல்லது திருக்கேதீசுவரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள ஒரு சிவன் கோயிலாகும். இது மன்னார் மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ளது. நாயன்மார்களின் தேவாரப் பாடல் பெற்ற இரண்டு இலங்கைத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் இத்தலத்தின் மீது பதிகம் பாடியுள்ளார்கள். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஈழ நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.

விரைவான உண்மைகள் திருக்கேதீச்சரம், ஆள்கூறுகள்: ...
Remove ads

வரலாற்றுச் சுருக்கம்

கேது வழிபட்ட தலமாதலால் திருக்கேதிச்சரமாயிற்றென ஆய்வாளர்கள் கூறுகின்றனர்[மேற்கோள் தேவை]. இக்கோயில் மாதோட்டம் நகரில் அமைந்துள்ளது. சூரபதுமனின் மனையாளின் பேரனார் துவட்டா துவட்டா பிள்ளைப் பேறின்றித் திருக்கேதீச்சரத்தில் உள்ள பாலாவித் தீர்த்ததில் நீராடிக் கேதீச்சரத்தானை வழிபட்டமையால் திருவருள் கைகூடிப் பிள்ளைப் பேறு பெற்றார்.[2] பின் இத்தலத்தில் வாழத்தலைப்பட்டு அவ்விடத்தைப் பெருநகராக்கினார். துவட்டாவில் உருவாகியமையால் துவட்டாவெனவும் காலப் போக்கில் பெருநகரமாய் திகழ்ந்தமையால் மாதுவட்டாவெனவும் வழங்கிவந்தது.

இத்தலதிலமைந்துள்ள பாலாவித் தீர்த்தத்தில் நீராடி இறுதிக்கடன் புரிவோர்க்கு புண்ணியம் கிட்டுமெனவும், இத்தீர்த்ததில் நீராடுவோர்க்குப் பிரமகத்தி போன்ற பாவங்கள் தீருமென்பதும் ஐதீகம்.

இந்நாட்டுப் பழங்குடியினராய நாகர்களது முக்கிய வழிபாட்டுத் தலமாதலால் இத்திருக்கோயிலிற்கு நாகநாதர் எனவும் பெயர் வழங்கி வந்துள்ளது. சோழ, பாண்டிய மன்னர்கள் பல திருப்பணிகளை இத்திருக்கோயிலிற்காற்றிய பெருமையும், வன்னி, யாழ்ப்பாண அரசர்கள் நித்திய நைமித்தியங்கள் இடையறாது செய்த பெருமையுங் கொண்ட திருத்தலம் இதுவாகும்.

கிபி ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்த மூர்த்தி நாயானாராலும், சுந்தர மூர்த்தி நாயனாராலும் போற்றிப் புகழ்ந்து திருப்பதிகம் பாடப் பெற்ற சிறப்புடைய தலமிதுவாகும். அருள்மிகு திருநாவுக்கரசு சுவாமிகள் அவர்களின் திருதாண்டகத்திலும், சேக்கிழார் பெருமானின் பெரியபுராணத்திலும் இத்திருத்தலம் சுட்டப்பட்டிருக்கிறது.

இத்திருத்தலத்தை அண்டிய பகுதிகளில் பல சிவாலயங்களிருந்தமையை அகழ்வாய்வுத் தரவுகள் மூலமறிய முடிகின்றது. அன்றியும் இத்திருவிடம் உலகப் புகழ்பெற்ற பெருநகரமாகவும் பல்துறைத் தொழில் வல்லவர்கள் வாழ்ந்த நகரமாகவும் சிற்பம் கலை நுணுக்கம் நிறைந்த ஆற்றல் மிக்க கலைஞர்களைக் கொண்டு திகழ்ந்த அழகு நகரமாகவும் மிளிர்ந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்[மேற்கோள் தேவை].

திருக்கேதீச்சரத் திருதலத்திற்கணித்தாய் வங்காலை என்னும் நகரமிருந்தமையும், பண்டங்கள் ஏற்றியிறக்கும் துறைமுகமாகவும வங்கமெனும் பெருங்கப்பல்கள் கட்டுமிடமாகவுமிருந்துள்ளமையயும், வேறு மாளிகைத் திடல் என்னும் பாப்பாமோட்டையென்றும் இன்றும் அழைக்கப்படும் ஊர்கள் இருப்பதையும் காணலாம். அந்தணர்கள் வாழ்விடமாய் இருந்தமையால் அது பாப்பாமோட்டையெனவும் மாடமாளிகைகள் மிளிர்ந்தமையால் மாளிகைத் திடலெனவும் அமைந்திருந்தன

ஆர்வலர் ஒருவர் பகைவரால் கவரப்படாதிருத்தற் பொருட்டு கலிங்கத்தேயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட புத்த தந்தத்துடன் மாதோட்டத்தின் கண்ணிறங்கி அன்று இரவினை அங்கேயே கழித்ததாகவும் வரலாறுண்டு.

பத்தாம், பதிரோராம் நூற்றாண்டில் இக் கோயில் சோழமன்னர்களால் இராசராசேச்சர மாகாதேவன் கோயிலென அழைக்கப் பட்டது.[3]

வரலாற்று ரீதியாக இலங்கையின் நான்கு திசைகளிலும் நான்கு ஈச்சரங்கள் இருந்து இலங்கையைக் காவல் காத்ததாகக் கூறப்படும் நான்கு ஈச்சரங்கள்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads