நகுலேச்சரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நகுலேச்சரம் அல்லது நகுலேசுவரம் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம் கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப் பெற்ற சிவாலயமாக இது விளங்குகின்றது. அதனாலேயே உலகில் உள்ள பிரசித்தி பெற்ற ஆயிரத்தெட்டு சிவத்தலங்களுள் இதுவும் ஒன்றாக உள்ளது.[1][2][3]
காலத்தால் முந்திய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. நகுல முனிவர், இராமன், சோழவேந்தன், நளன், அருச்சுனன், மாருதப்புரவீகவல்லி, ஆதி சோழ மன்னன் முசுகுந்தன் போன்றோரால் தொழப்பெற்ற தீர்த்தத் திருத்தலம் இதுவாகும். இவ்வாலயம் பிதிர்க்கடன் செய்ய மிகப் பிரசித்தி பெற்றும் விளங்குகின்றது. ஆரம்ப காலத்தில் திருத்தம்பலை கோயில் கொண்ட பெருமான் என்றும், திருத்தம்பலேசுவரர் ஆலயம் என்றும் பெயர் கொண்ட இக்கோயில் பின்னர் கீரிமலைக் கோயில் என்றும் நகுலேச்சரம் என்றும் அழைக்கப்பட்டது.
இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் நகுலேச்சரப் பெருமான் என்றும் அம்பாள் நகுலாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன ஒருங்கே அமையப்பெற்ற இத்திருத்தலத்தின் தல விருட்சமாகக் கல்லால மரமும், தீர்த்தமாக கீரிமலையும் விளங்குகின்றது.
Remove ads
வரலாறு
முன்னொரு காலத்தில் ஈழத்தின் வடகரை முழுவதும் மலைத் தொடராகவிருந்து, பின் கடலரிப்பினால் அழிந்துபோக எஞ்சியுள்ள அடிவாரமே இப்போதுள்ள கீரிமலை என்பது ஆய்வாளர்களின் கருத்து[சான்று தேவை].

முன்னொரு போது மேரு மலையில் ஒரு பக்கத்தில் தவம் செய்து கொண்டிருந்த சுதாமா என்னும் பெயருடைய முனிவரால் தனது தவத்திற்கு இடையூறு செய்தமைக்காகச் சாபமிடப்பட்ட யமத்கினி என்ற வேடன் கீரிமுகம் வாய்க்கப் பெற்றான். அவ் வேடன் இங்கு நீராடி சாப விமோசனத்தைப் பெற்றான். கீரிமுகம் நீங்கியதால் அவ்வேடன் நகுல முனிவர் எனப்பட்டார். இதனையடுத்தே இப்பிரதேசம் கீரிமலை என்றும் நகுலகிரி என்றும் பெயர் பெற்றதாகக் கூறப்படுகின்றது. நகுலம் என்ற வடமொழிச்சொல் கீரி என்று பெயர் பெறுவதால் இவ்வாலயம் நகுலேச்சரம் என்றும் பெயர் பெற்றுள்ளது.
9ம் நூற்றாண்டில் சோழ இளவரசி மாருதப் புரவீகவல்லி குதிரை முகத்துடனும் குன்மநோயுடனும் இருந்து பின்னர் சந்நியாசி ஒருவரால் வழிநடத்தப்பட்டு கீரிமலைச் சாரலில் வந்திறங்கி நகுல முனிவரிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கீரிமலைத் தலத்தின் விசேடத்தையும் தீர்த்தத்தின் மகிமையையும் முனிவர் வாயிலாக அறிந்து கொண்டதாகவும், கீரிமலைப் புனித்த தீர்த்தத்தில் நீராடி சிவாலய தரிசனமும் செய்து வந்த மாருதப்புரவீக வல்லியின் குன்ம நோயும் தீர்ந்து குதிரை முகமும் மாறியது என்பது ஐதீகம்.
Remove ads
போத்துக்கேயரால் அழிக்கப்பட்ட ஆலயம்
போத்துக்கீசியரால் இடிக்கப்பட்ட ஆலயம் மூன்று பிரகாரங்களுடன் ஐந்து கோபுரங்களும் உடைய பெரிய ஆலயமாக இருந்தது. கி.பி 1621 இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசர் நல்லூர்க் கந்தசுவாமி கோயில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில், நகுலேசுவரம் ஆகிய ஆலயங்களை இடித்தழித்தனர். அப்போது பரசுரபாணி ஐயரெனும் பிராமணர் கீரிமலைச் சாரலிலுள்ள தேவாலயங்களின் சில பொருட்களையும் விக்கிரகங்களையும் கிணறுகளுள் போட்டு மூடி வைத்தார் என யாழ்ப்பாண வைபவ மாலை குறிப்பிடுகின்றது.
Remove ads
திருத்தி அமைக்கப்பட்ட நகுலேச்சரம் ஆலயம்
போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட இக்கோவிலை உருவாக்குவதற்கு ஆறுமுக நாவலர் முயற்சி எடுத்தார். 1878 ஆம் ஆண்டுக் காலத்தில் அவரது முயற்சியைத் தொடர்ந்து திருப்பணி வேலைகள் நடந்தேறி, நித்திய, நைமித்திய கிரியைகள் ஒழுங்காக நடைபெற்று வந்தன. 1895 ஆம் ஆண்டு மன்மத ஆண்டு ஆனி மாதம் மகாகும்பாபிசேகம் நடைபெற்றது. இங்கு ஆறுகாலப் பூசைகளும் நித்திய கிரியைகளாக இடம்பெற்று வருகின்றன. இவ்வாலய மகோற்சவம் மாசி மாதத்தில் பதினைந்து நாட்கள் நடைபெறுகின்றது. மாசி மகா சிவராத்திரியில் தீர்த்தோற்சவம் நடைபெறுகிறது.
இன்றைய நிலை
இலங்கையில் 1980களில் ஆரம்பமான உள்நாட்டுப் போரில் சிக்கியிருந்த யாழ்ப்பாணத்தின் கடலோரப்பகுதியில் அமைந்துள்ள இவ்வாலயம், போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் திருத்தலங்களின் நிலைபற்றி வெளிப்படுத்த இத்திருத்தலத்தின் அழிவுகள் காணப்படுகின்றன.
1983 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் ஆக்ரமித்த சமயத்திலிருந்து பக்தர்களும் அர்ச்சகர்களும் சிறப்பு அனுமதியின்றி அனுமதிக்கப்படவில்லை.
அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள இவ்வாலயம் யுத்த காலத்தின் போது பல்வேறு குண்டு வீச்சுக்களையும் தாக்குதல்களையும் எதிர்கொண்டுள்ளது. 1990 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள் கேதாரகௌரி விரத்தின் போது கோயிலின் மேல் விமானத்திலிருந்து குண்டுகள் வீசப்பட்டன. மூலத்தானம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் பெரும் சேதத்திற்குள்ளாயின. பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.
உள்நாட்டு யுத்தம் காரணமாக பல வருடங்கள் ஆலயம் நித்திய பூசை வழிபாடுகள் இன்றி அழிவடைந்த நிலையில் காணப்பட்டது. ஆலய ஆதீனகர்த்தா நகுலேசுவரக் குருக்களினது அயராத முயற்சியின் பயனாக 2009ம் ஆண்டு முதல் ஆலயத்திற்கு சென்றுவர அடியவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
2012ம் ஆண்டு தை மாதம் சிவ சிரீ நகுலேச்சர குருக்கள் பொறுப்பில் ஆலயத்தில் குடமுழுக்கு இடம்பெற்றது.
Remove ads
நகுலேசுவரம் பற்றிக் கூறும் நூல்கள்
நகுலேசுவரத்தின் வரலாறுகள் தொடர்பில் தட்சிண கைலாசபுராணம், யாழ்ப்பாண வைபவமாலை, சீர்பாதகுலவனாறு, கைலாசமாலை, நகுலேச்சர புராணம், நகுலகிரிப்புராணம் என்பனவும் நகுலேசுவரர் விநோத விசித்திரக் கவிக்கொத்து, நகுலாம்பிகை குறவஞ்சி, நகுலமலைச் சதகம் என்பனவும் இக்கோயிலின் சிறப்பைக் கூறுகின்றன.
இவற்றையும் பார்க்கவும்
வரலாற்று அடிப்படையில் இலங்கையின் நான்கு திசைகளிலும் நான்கு ஈச்சரங்கள் இருந்து இலங்கையைக் காவல் காத்ததாகக் கூறப்படும் நான்கு ஈச்சரங்கள். மற்றும் பஞ்ச ஈச்சரமாக முன்னேச்சரமும் சேர்த்து அழைக்கப்படுகிறது.
வெளியிணைப்புகள்
- கோயில் இணையதளம்
- புதுப்பொலிவு பெறும் நகுலேஸ்வரம், தமிழ்மிரர், ஏப்ரல் 7, 2011
- http://www.thinakaran.lk/2010/03/12/_art.asp?fn=f1003121 பரணிடப்பட்டது 2012-04-10 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads