வட மாகாணம், இலங்கை
இலங்கையின் மாகாணம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வட மாகாணம் (Northern Province) இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகும். இது நாட்டின் வட கோடியில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாடு, அதன் மேற்கிலுள்ள தீவுகள் மற்றும் தலை நிலத்தின் ஒரு பகுதியான வன்னி என அழைக்கப்படும் பகுதியும் சேர்ந்து இம்மாகாணத்தை உருவாக்குகின்றன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்கள் இந்த மாகாணத்துள் அடங்கியுள்ளன. வட மாகாணத்தின் தலைநகரம் யாழ்ப்பாணம் ஆகும்.
இலங்கை மாகாணங்கள் 19ம் நூற்றாண்டு முதலே நடைமுறையில் உள்ளன. ஆனாலும், 1987 ஆம் ஆண்டில் இலங்கை யாப்பின் 13வது திருத்தத்தின் மூலம் மாகாண சபைகள் நிறுவப்பட்டதை அடுத்து மாகாணங்கள் சட்டபூர்வ அந்தஸ்தைப் பெற்றன.[4][5] ஈழப் போர் இம்மாகாணத்திலேயே ஆரம்பித்தது. இது இலங்கையின் தமிழ் நாடு எனவும் அழைக்கப்படுகிறது.[6]
Remove ads
யாழ்ப்பாண அரசு காலத்தில் தற்போதைய வடமாகாணத்துக்கு உட்பட்ட பகுதிகள் அனைத்தும் பெரும்பாலும் அவ்வரசின் மேலாதிக்கத்தின் கீழேயே இருந்துவந்தது. எனினும் வன்னிப்பகுதி பல வன்னியச் சிற்றரசுகளாகவே செயற்பட்டுவந்தது. யாழ்ப்பாண அரசு ஆரியச் சக்கரவர்த்திகளிடமிருந்து ஐரோப்பியரான போர்த்துக்கீசரிடமும் பின்னர் ஒல்லாந்தரிடமும் கைமாறியபோதும் கூட வன்னிப்பகுதியில் இவ் வன்னியர்கள் ஓரளவு அதிகாரத்துடனேயே இருந்து வந்தார்கள். ஆங்கிலேயர் காலத்திலேயே வன்னிப்பகுதி முற்றிலுமாக மத்திய அரசின் நேரடியான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
Remove ads
புவியியல்

வட மாகாணம் இலங்கையின் வடக்கே இந்தியாவில் இருந்து 35 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இது இந்தியத் துணைக்கண்டத்துடன் தொன்மை வாய்ந்த ஆதாம் பாலம் (சேது பாலம், அல்லது இராமர் பாலம்) ஊடாக இணைக்கப்பட்டுள்ளது. இம்மாகாணத்தின் பரப்பளவு 8884 கி.மீ.2 ஆகும்.[1] இம்மாகாணம் மேற்கே மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகியவற்றாலும், வடமேற்கே பாக்கு நீரிணையாலும், வடக்கு மறூம் கிழக்கே வங்காள விரிகுடாவினாலும், தெற்கே கிழக்கு, வடமத்திய, வடமேல் மாகானங்களினாலும் சூழப்பட்டுள்ளது.
வட மாகாணம் யாழ்ப்பாணக் குடாநாடு, வன்னி ஆகிய இரண்டு வெவ்வேறு நிலப்பரப்புகளால் பிரிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் நீர்ப்பாசனம் கிணறுகளின் உதவியுடன் நிலத்தடி நீர்ப்படுகையில் இருந்து பெறப்படுகிறது. வன்னிப் பகுதியில், குளங்கள், மற்றும் வற்றா ஆறுகள் உள்ளன. உங்குள்ள் முக்கிய ஆறுகள்: அக்கராயன் ஆறு, அருவி ஆறு, கனகராயன் ஆறு ஆகியனவாகும்.
இம்மாகாணத்தில் கடற் காயல்கள் பல உள்ளன. இவற்றில் கச்சாய் கடல் நீரேரி, நந்திக் கடல் போன்றவை முக்கியமானவை ஆகும்.
இலங்கையின் பெரும்பாலான தீவுகள் இம்மாகாணத்தின் மேற்கே அமைந்துள்ளன. இவற்றில் பெரியவை: ஊர்காவற்துறை, நெடுந்தீவு, காரைதீவு, புங்குடுதீவு, மண்டைதீவு ஆகியனவாகும்.
முக்கிய நகரங்கள்

வடமாகாணத்தின் மிக முக்கியமானதும், பெரியதுமான நகரம் யாழ்ப்பாணமாகும். இது யாழ்ப்பாண மாவட்டத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது. இதைவிட வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி நகரங்களும் மாவட்டத் தலைநகரங்களாகும். பின்வரும் நகரங்களும் வடமாகாணத்திலுள்ள முக்கிய சேவை மையங்களாகத் திகழ்கின்றன.
குடித்தொகை பரம்பல்
வட மாகாணத்தின் மொத்த மக்கள் தொகையில் 55% ஆனோர் 11% நிலப்பரப்பைக்கொண்ட யாழ்ப்பாணக் குடாநாட்டிலேயே செறிந்து வாழ்ந்து வந்தார்கள். 1995 இல் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை காரணமாக பெருமளவில் மக்கள், குடாநாட்டை விட்டு வெளியேறி வன்னிப் பகுதியிலும், நாட்டின் வேறு பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் சென்று குடியேறிவிட்டதனால் இந்த விகிதாசாரம் இன்று பெருமளவு மாற்றமடைந்துள்ளது.
வடமாகாணத்தின் பெரும்பான்மை மக்கள் தமிழர்களாவர். இவர்களைவிட முஸ்லிம்களும், சிங்களவர்களும் சிறுபான்மையாக உள்ளனர். வட மாகாணத்தில் மன்னார் மாவட்டத்திலேயே முஸ்லிம்கள் செறிந்து வாழ்கிறார்கள். யாழ்ப்பாண நகரப்பகுதியிலும் குறிப்பிடத்தக்க அளவில் அவர்கள் வாழ்கிறார்கள். இம் மாகாணத்தின் தெற்கு எல்லைப் பகுதிகளிலேயே சிங்களவர்கள் வாழ்கின்றனர். வவுனியாவிலும், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் அவர்கள் குடியேற்றங்கள் உண்டு.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads