திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

சைவசமயக் குரவர் நால்வரில் ஒருவர் மற்றும் தேவாரம் பாடிய மூவரில் முதலாமவர் From Wikipedia, the free encyclopedia

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
Remove ads

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (Thirugnana Sambandar, தமிழில் அறிவுசேரர் என்று பொருள் தரும்) அல்லது சம்பந்தர் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் முதலில் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார். இவருடைய வேறு பெயர்கள் சம்பந்தர், காழி வள்ளல்,[1][2] ஆளுடைய பிள்ளையார், பாலாராவயர், பரசமய கோளரி என்பனவாகும். இவர் பொ.ஊ. 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.[3][4] சம்பந்தர் தனது பதினாறு வயதில் இறந்தார். இவரது பாடல்கள் திருமுறையின் முதல் மூன்று தொகுதிகளில் தொகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. சைவ சித்தாந்தத்தின் தத்துவ அடித்தளத்தின் ஒரு பகுதியாக அவை உள்ளன.[4][5]

விரைவான உண்மைகள் திருஞானசம்பந்தர், பிறப்பு ...
விரைவான உண்மைகள் நால்வர், தலைப்புகள்/விருதுகள் ...
Thumb
திருஞானசம்பந்தரைப் பல்லக்கில் சுமக்கும் அப்பர்

பொ.ஊ. ஆறாம் மற்றும் பத்தாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த அறுபத்து மூன்று நாயனார்களில் இவர் மிகவும் முக்கியமானவர். இவர் அப்பரின் சமகாலத்தவர்.[6]

Remove ads

வரலாறு

சம்பந்தரைப் பற்றிய தகவல்கள் முக்கியமாக சேக்கிழாரின், பெரியபுராணத்தில் 1256 பாடல்களாலும், சுந்தரரின் திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றின் வழியாக அறியப்படுகிறது. இவர் வரலாற்றை முதன்முதல் சுந்தரர் திருத்தொண்டத் தொகையில், பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயனார்களைப் பற்றிய தமிழ் நூலான திருமுறையின் கடைசித் தொகுதியான திருத்தொண்டர்தொகை, சுந்தரரின் கவிதைகள் மற்றும் நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றில் இருந்து வருகிறது.

பொ.ஊ. ஏழாம் நூற்றாண்டில், சோழ நாட்டில் சீர்காழி என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தையார் சிவபாதவிருதயர். தாயார் பகவதி அம்மையார்.

இவர் மூன்று வயது குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன் கோயிலுக்குச் சென்றதாகவும், அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை, அம்மா அப்பா என்று கூவி அழுததாகவும், அப்போது உமாதேவியார், சிவபெருமானுடன் இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பால் ஊட்டினார். அதனைப் பருகிய குழந்தை சிவஞானத்தைப் பெற்றது எனப்படுகிறது.

நீராடி முடித்து விட்டு வந்த தந்தை தன் குழந்தையின் வாயில் இருந்து பால் வடிவதைக் கண்டார். அது பற்றி வினவிய போது, குழந்தை கோயிலைச் சுட்டிக்காட்டித் தோடுடைய செவியன்... என்று தொடங்கும் தேவாரத்தைப் பாடியது என்றும் சொல்லப்படுகிறது. ஆச்சாள்புரக் கல்வெட்டுத் தகவல்படி, திருஞானசம்பந்தரின் மனைவி பெயர் சொக்கியார்.

இவர் தன் பதினாறு வயதில் வைகாசி மூல நாளில் நல்லூர் பெருமணம் என்று அறியப்படும் ஆச்சாள்புரத்தில் தன் திருமணத்தின்போது தன் மனைவி மற்றும் சுற்றத்தாரோடு இறந்தார் (சோதியில் கலந்தார்) எனப்படுகிறது.[3][4]

Remove ads

இயற்றிய பாடல்கள்

சம்பந்தர் இம்மண்ணில் வாழ்ந்த 16 ஆண்டு காலத்துள் 16,000 தேவாரப்பதிகங்கள் பாடினார். [7][8] ஆனால், இன்று நமக்குக் கிடைத்துள்ளவை 384 பதிகங்கள் மட்டுமே. பாடல் தொகை 4158. [9]

கோயில்

திருஞான சம்பந்த மூர்த்தி கோயில் ஒன்று தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் பேய்க்கரும்பன்கோட்டை என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருக்குச் சிறப்பாகக் கட்டப்பட்டது. இக்கோயிலில் சம்பந்தரே, மூலவராகவும் உற்சவ மூர்த்தியாகவும் உள்ளார். வருடாவருடம் வைகாசி மாதத்தில், இக்கோயிலில் இவ்வூர் மக்களால் சிறப்பாக திருவிழா நடத்தப்பட்டு, உற்சவ மூர்த்தி பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டு, வீதிகளில் உலாவருவார். மேலும், மார்கழி மாதத்தில் தினமும் அதிகாலையில் இவ்வூர் தேவார அடியார் குழுவால் தேவாரப் பாடல்களும், பதிகங்களும் பாடப்பெற்றுச் சம்பந்தருக்கு பூஜைகள் செய்யப்படுகின்றன.

இத்தலம், தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில், புலவன்காடு என்ற ஊரிலிருந்து கிழக்கே ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. தஞ்சையிலிருந்து 35 கிலோமீட்டர் தெற்கில் உள்ளது இவ்வூர். முற்றிலும் விவசாயத்தையே தொழிலாக கொண்ட உறந்தை வளநாட்டின் ஒரு பகுதியாகும்.

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் திருமேற்றளித் தெருவில் திருஞானசம்பந்தர் திருக்கோவில் ஒன்று உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் வடமதுரை கிராமத்தில் திருஞானசம்பந்தர் திருக்கோவில் ஒன்று உள்ளது. [10]

நம்பிக்கைகள்

அருணகிரிநாதர், வடலூர் வள்ளலார் முதலானோர் முருகப்பெருமானே திருஞானசம்பந்தராக அவதரித்தார் என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர்.[11]

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads