நந்தி திருமண விழா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நந்தி திருமண விழா என்பது தமிழ்நாட்டின், அரியலூர் மாவட்டம், திருமழபாடியில் நடைபெறுகின்ற ஒரு சைவ சமய விழாவாகும். அப்போது நந்தியெம்பெருமானுக்கும், சுயசாம்பிகைக்கும் வைத்தியநாதசாமி முன்னிலையில் திருமண விழா நடக்கும்.

நந்தியெம்பெருமான் பிறப்பு
தொன்மக் கதைகளின் படி திருவையாறு அருகே அந்தணபுரம் தற்போது (அந்தணர்குறிச்சி) என்று அழைக்கப்படுகிறது, அச்சிற்றூரில் வசித்துவந்தார் சிலாத முனிவர். குழந்தைப் பேறு இல்லாமல் இருந்த அவர் குழந்தைப்பேற்றிற்காக திருவையாறு ஐயாறப்பரை நோக்கித் தவம் செய்தார். அவர் முன் தோன்றிய ஐயாறப்பர், ‘சிலாதனே! நீ புத்திரகாமேஷ்டி யாகம் செய்து, யாகபூமியை உழும் போது பெட்டகம் ஒன்று தோன்றும். அதில் ஒரு புத்திரன் காணப்படுவான். அவனை எடுத்துக் கொள்வாயாக. அவன் 16 வயது வரை உன்னுடன் இருப்பான்’ என அருளினார். உழுத நிலத்திலிருந்து பெட்டகம் ஒன்று கிடைக்க, அதிலிருந்து குழந்தையையும் பெற்றார் சிலாத முனிவர். அக்குழந்தைக்கு செப்பேசன் என்று பெயர் சூட்டி வளர்த்தார். 14 வயதிற்குள் அனைத்து வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தான் செப்பேசன். [1]
Remove ads
கடுந்தவம்
தந்தை, தன் மகன் இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் இருப்பான் என்பதை அறிந்து கவலையடைந்தார். அதே சமயத்தில் தன் ஆயுளின் உண்மையைத் தெரிந்த செப்பேசன், ஐயாறப்பர் கோயிலின் குளத்தில் இறங்கி சிவபெருமானை வேண்டி ஒற்றைக் காலில் கடுந்தவம் புரிந்தார். [2] அப்போது காட்சி தந்த இறைவன், 16 பேறுகளையும் கொடுத்தருளினார். பின்னர் செப்பேசன், ஐயாறப்பர் மீது கொண்ட பற்றினால் பல்வேறு உபதேசங்களை கேட்டறிந்து சிவகணங்களுக்கு (பாதுகாவலர்) தலைவராகும் பதவியையும், ஈசனின் வாசலில் இருந்து காவல் காக்கும் உரிமையையும் பெற்றார். இவரே நந்தியெம்பெருமான் ஆவார். உரிய நேரத்தில் பரமேஸ்வரன் நந்தீஸ்வரருக்கு திருமணம் செய்ய முடிவு செய்கிறார். திருமழபாடி வைத்தியநாத சுவாமியை சாட்சியாக வைத்து ஐயாறப்பரே நந்தியெம்பெருமானுக்கும் திருமழபாடியில் ஆசிரமம் அமைத்துத் தவம் செய்துவரும் வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயசாம்பிகைக்கும் பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருமணத்தை நடத்தி வைக்கிறார். [1]
Remove ads
அந்தணர்குறிச்சியில் விழா
தற்போது அந்தணர்குறிச்சி என அழைக்கப்படுகின்ற அவ்விடத்தில் நந்தியெம்பெருமான் பிறப்பு விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. விழாவின்போது சந்தனம், மஞ்சள், தயிர், தேன், பால், இளநீர் போன்ற திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நந்தியெம்பெருமானுக்குச் செய்யப்படுகிறது. அதே நாள் மாலையில் ஐயாறப்பர் கோயிலில் அவருக்குப் பட்டாபிஷேகம் நடத்தப்பெறுகிறது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறல். சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெறுகிறது. மறுநாள் காலையில் ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் கண்ணாடிப் பல்லக்கிலும், நந்தியெம்பெருமான் பட்டு வேட்டி, பட்டுச்சட்டை அணிந்து மாப்பிள்ளைக் கோலத்தில் குதிரை வாகனத்திலும் அமர்ந்து வாண வேடிக்கை, இன்னிசைக் கச்சேரியுடன் புறப்பட்டு தில்லைஸ்தானம், கடுவெளி, வைத்தியநாதன்பேட்டை வழியாக கொள்ளிடம் ஆற்றில் இறங்கி அன்று மாலை திருமழபாடி வந்து சேர்கிறார். [3]
மழபாடியில் திருமணம்
திருமழபாடியில் இறைவன் வைத்தியநாதரும், இறைவி சுந்தராம்பிகையும் மங்கல வாத்தியங்கள் முழங்க மாப்பிள்ளை வீட்டாரை எதிர்கொண்டு அழைக்கின்றனர். அவர்களை வரவேற்று கோயில் முன் அமைக்கப்பட்டுள்ள திருமண மேடைக்கு அழைத்து வருகிறார். [4] திருமண மேடையில் சுயசாம்பிகை தேவியருக்கும், நந்தியெம்பெருமானுக்கும் மஞ்சள், சந்தனம், விபூதி, மாவுப்பொடி, திரவியப்பொடி, தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், பழச்சாறு, தயிர், பால் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வர இன்னிசையுடன் கோயிலின் முன்பு கண்ணாடிப்பல்லக்கில் வீற்றிருக்கும் சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமி மற்றும் திருவையாறு அறம் வளர்த்த நாயகி உடனாய ஐயாறப்பர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு முன்னிலையில் மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்ட பக்தர்கள் அட்சதை தூவ திருமணம் நடைபெறுகிறது. தாலி கட்டும் நிகழ்ச்சியுடன் திருமணம் நிறைவுறுகிறது. திருமணம் முடிந்ததும் மணமக்களுக்கு தீபாராதனை காட்டப்படுகிறது. தொடர்ந்து இருவரும் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்ற பக்தர்களுக்குக் காட்சியளிக்கின்றார்கள். [5] ஆண்டுதோறும் புனர்பூச நட்சத்திரத்தில் நந்தியெம்பெருமானுக்கும், சுயசாம்பிகைக்கும் வைத்தியநாதசாமி முன்னிலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது சிறப்புக்குரிய ஒன்றாகும்.
Remove ads
நந்திக்கல்யாணம் முந்திக்கல்யாணம்
இறைவனே முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்ததால் நந்தியெம்பெருமான் திருமணத்தைக் காணும் இளைஞர்களுக்கும் கன்னியர்களுக்கும் திருமணத் தடைகள் நீங்கிக் காலத்தே திருமணம் கைகூடி வரும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. ‘நந்தி’ கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம் நடக்கும்’ என்ற சொல் வழக்கு இன்றளவும் மக்களிடம் செல்வாக்குடன் இருக்கிறது.[2]
இவற்றையும் காண்க
16 மார்ச் 2019இல் நடைபெற்ற திருமண விழா படத்தொகுப்பு
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads