திருமழபாடி வைத்தியநாதர் கோயில்
அரியலூரில் உள்ள சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருமழபாடி வைத்தியநாதர் கோயில் என்பது தமிழ்நாடு, அரியலூர் மாவட்டம், திருமழபாடி என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1] சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்றது. இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதசுவாமி, தாயார் சுந்தராம்பிகை ஆவர். தல விருட்சமாக பனை மரம் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 54வது சிவத்தலமாகும்.

Remove ads
தல வரலாறு
கயிலைநாதன் எழுந்தருளியுள்ள திருக்கோவிலை கண்டு வழிபட எண்ணிய நம்பியாரூரராம் சுந்தரமூர்த்தி சாமிகள் திருவாரூரிலிருந்து புறப்பட்டு நன்னிலம், திருவாஞ்சியம், ஆவடுதுறை, நாகேச்சரம், கண்டியூர் போன்ற தலத்தை தரிசித்து திருவாலம் பொழிலையைடைந்து இறைவனை வழிபட்டு அன்றிரவு தங்கியிருந்த போது அவர் கனவில் சிவபெருமான் தோன்றி "மழபாடிக்கு வருவதற்கு மறந்தாயோ" என்று வினவி மறைந்தார். பின் வடகரையை அடைந்து திருமழபாடி ஈசனாரை தரிசித்து,
"பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கு அசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னை அல்லால் இனியாரை நினைக்கேனே"
என்ற தேவார திருப்பதிகத்தை பாடிப்போற்றினர்.
இந்த மழப்பாடி ஈசனை சுந்தரர் காலத்துக்கு முன்பே திருஞானசம்பந்தர் கண்டு "காச்சிலாத பொன்னோக்கும் கனகவயிரத்தின் ஆச்சிலதா பளிங்கினன் மழப்பாடி வள்ளல்" என்று போற்றியுள்ளார். திருநாவுக்கரசரோ "மரு சுடரின் மாணிக்கக்குன்று கண்டாய் மழப்பாடி மண்ணும் மணாளன் தானே " என்று மழப்பாடி ஈசனை போற்றியுள்ளார்.
Remove ads
ஆவணம் காத்த கங்கை கொண்ட சோழன்
திருமழபாடி என்னும் இத்திருத்தலம் கொள்ளிடம் ஆற்றின் வடக்கு மற்றும் மேற்கு கரைகளில் திகழ்வதாகும். இந்த கோவில் கிழக்கு நோக்கி ஏழு நிலைகளையுடைய ராஜகோபுரம் இரண்டு திருசுற்றுகள் உடன் கோபுரம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் பல்லவ வேந்தர்களின் பாடல் இடம்பெற்றுள்ளதால் இவ்வாலயம் கி.பி 7 ஆம் நூற்றாண்டு காலத்திய ஆலயம் என்பதில் ஐயமில்லை. ஆதித்தசோழன் காலம் தொடங்கி பல்வேறு சோழ அரசர்களின் கல்வெட்டு சாசனங்கள் சுந்தரபாண்டியன் போன்ற பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுகள், போசன அரசர்கள், கோனேரிராயன் காலத்து மற்றும் விஜய நகர நாயக்க மன்னர்கள் கல்வெட்டுகளை இந்த கோவிலில் காணலாம். சோழர் கல்வெட்டுகளில் வடகரை ராஜராஜ வளநாட்டுப் பொய்கை நாட்டு உட்பிரிவான மிய்பிலாற்று திருமழபாடி என்றும் ராஜேந்திர சிம்ம வளநாட்டுப் பொய்கை நாட்டுத் திருமழபாடி என்றும் இவ்வூர் குறிப்பிடப்பெற்றுள்ளது. இவ்வூரோடு இணைந்து ஸ்ரீ கண்டராதித்தர் சதுர்வேதிமங்கலம் என்ற பேரூரும் இருந்துள்ளது. தற்போது இவ்வூர் கண்டராதித்தம் என்ற பெயரோடு மழபாடியோடு இணைந்து திகழ்கின்றது. இங்குள்ள செம்பியன் மாதேவிப் பேரேரி என்ற பெயரால் சோழர்கள் வெட்டுவிக்கப்பெற்றதோடு எந்த ஏரியில் பிரிந்து செல்லும் வாய்க்காலுக்கு ராஜராஜன் வாய்க்கால், குலமணிக்க வாய்க்கால், சுந்தரசோழன் வாய்க்கால் உத்தமசோழன் வாய்க்கால் என்ற பெயரில் இருந்தமையும் குலோத்துங்கசோழப் பெருவழி என்ற நெடுஞசாலை இவ்வூர் வழி சென்றமையும் சோழசமாதேவி வீதி, கண்டராதித்தர் வீதி என்ற இரண்டு வீதிகள் இருந்தமையும் கல்வெட்டு சொல்லும் செய்திகளாகும். இத்திருக்கோவிலில் மிக தலையாய சிறப்புடைய கல்வெட்டு முதலாம் ராஜேந்திர சோழனின் 14ஆம் ஆண்டு 70 ஆம் நாளில் வெட்டுவிக்கப்பெற்ற சாசனமேயாகும். ராஜராஜ சோழனின் காலத்தில் சிதைந்த திருமழபாடி கோவிலை புதுப்பிக்க விரும்பி ஓர் ஆணை பிறப்பித்தான் அதன்படி கோவில் விமானத்தை பிரித்து மீண்டும் கற்றளியாக புதுப்பிக்கவேண்டி இருப்பதால் விமானத்தில் உள்ள கல்வெட்டு சாசனங்களை படியெடுத்து புத்தகத்தில் பதிவு செய்யவேண்டும். புதிய கற்கோவில் எடுத்த பிறகு மீண்டும் அக்கல்வெட்டுகளை அங்கு பொறிக்கவேண்டும் என்பதேயாகும். திருமழபாடி கோயில் திருப்பணியை மன்னன் ராஜேந்திர சோழன் கி.பி 1026 இல் நிறைவுசெய்ததாக கல்வெட்டுகள் சொல்கின்றது. புத்தகத்தில் பதிவு செய்யப்பெற்ற பழைய கல்வெட்டு செய்திகளை நகல்களை தன்னுடைய தண்டநாயக்கர்(சேனாதிபதி) ராமன் அருள்மொழியான உத்தமசோழ பிரம்மராயன் மேற்பார்வையில் ஓலை அனுப்பி திருமழபாடி கோயிலின் அலுவலரான குளவன் சோழன் அரங்கலமுடையன் பட்டலாகன், திருமழபாடி பிச்சன் கண்டராதித்த சதுர்வேதிமங்கள சபையோர் பெரும்புலியூர் சபையோர் ஆகியோர் முன்னிலையில் கல்வெட்டுகள் ஒப்பிட்டு பார்த்தபின் கல்வெட்டில் பொறிக்கவேண்டும் என்பது ராஜேந்திர சோழரின் ஆணை மேலும் இந்த ஆணை திருமழபாடிமூலவரின் கருவறைச் சுவற்றில் 83 வரிகளில் பதிவு செய்யப்பெற்றுள்ளது. அதில் 73 வரிகள் ராஜேந்திர சோழனின் ஆணையும் 74 ஆம் வரிகளில் ராஜ ராஜ சோழரின் ஆணையும் இடப்பெற்றுள்ளது சிறப்பு செய்தியாகும். இந்த அனைத்து செய்திகளையும் தற்போது உள்ள கல்வெட்டுகளில் காணலாம்.
Remove ads
சிறப்பு
இத்தலம் புருஷாமிருகம் மகரிஷியால் பூஜிக்கப் பெற்றதும் திருமால், இந்திரன் ஆகியோரால் வழிபடப் பெற்ற பெருமையும் உடையதாகும். சந்திரனுக்குள்ள கய நோயை போக்கியதால் இறைவன் வைத்தியநாதர் எனப் பெறுகிறார்.புருஷாமிருக முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பெற்ற சிவலிங்கத்தைப் பிரம்மன் பெயர்த்தெடுக்க முயன்றபோது வச்சிரத்தம்பமாக இறைவன் விளங்கிய காரணத்தால் "வச்சிரதம்பேசுவரர்' எனவும் அழைக்கப்படுகின்றார். இத்தல அம்பிகைக்கு சுந்தரராம்பிகை, அழகம்மை, பாலாம்பிகை என்ற திருநாமங்கள் உண்டு. இத்தல தீர்த்தம் இலக்குமியின் பெயரால் "இலக்குமி தீர்த்தம்' என அழைக்கப்படுகிறது. சோமாஸ்கந்த வடிவம் ஒரே கற்சிலையில் அமையப் பெற்றுள்ள அற்புதமான தலம்.[2]
நந்திதேவர் விழா
சிலாதமுனிவரின் புதல்வராய்த் தோன்றியவர் திருநந்தி தேவராவார். நந்தீஸ்வரருக்கும் சுயசாம்பிகைக்கும் திருமணம் நடந்த இத்தலத்தில் அதனைக் குறிக்கும் விதத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நந்திதேவர் விழா பெருவிழாவாக நடைபெற்று வருகின்றது. அன்றைய நாளில் திருவையாற்று இறைவன் ஐயாறப்பர் இங்கு எழுந்தருளுவதும் திருவையாற்றில் நடைபெறும் சப்தஸ்தான விழாவிற்கு இங்கிருந்து நந்திதேவர் புறப்பட்டுச் செல்லுவதும் மரபாக இருந்து வருகின்றது. இந்த திருமண வைபவத்தை நேரில் காணும் கல்யாணமாகாத வரன்களுக்கு உடனடியாக திருமண பிராப்தி வாய்க்கும் என்பதும் அக்காரணத்தில்தான் இப்பகுதியில் "நந்தி கல்யாணம் முந்தி கல்யாணம் என்ற சொல் வழக்கும் நிலவி வருகிறது என்பதும் சிறப்புத் தகவலாகும்.[2]
Remove ads
கும்பாபிஷேகம்
இக்கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி 5.2.2015 காலை விக்னேஸ்வர பூஜையுடன் யாக சாலை பூஜைகள் நடந்தன. 8.2.2015 காலை 5.00 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கி பரிவார பூர்ணாஹூதி நடந்தது. தொடர்ந்து யாக சாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு கோயிலை சுற்றி வந்து ராஜகோபுர கலசங்கள், வைத்தியநாத சுவாமி, அம்பாள் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 4.00 மணிக்கு மஹா அபிஷேகம், 6.00 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.[3]
Remove ads
படத்தொகுப்பு
- கொடிமரம்
- மண்டபம்
- திருச்சுற்று வலப்புறம்
- திருச்சுற்றில் தல மரம்
- திருச்சுற்று இடப்புறம்
- அம்மன் சன்னதி நுழைவாயில்
- அம்மன் சன்னதி விமானம்
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads