நவீன மனிதரின் ஆப்பிரிக்கத் தோற்றக் கோட்பாடு

From Wikipedia, the free encyclopedia

நவீன மனிதரின் ஆப்பிரிக்கத் தோற்றக் கோட்பாடு
Remove ads

தொல்மானிடவியல் அடிப்படையில், நவீன மனிதரின் ஆப்பிரிக்கத் தோற்றக் கோட்பாடு என்பது, உடற்கூற்றியல் அடிப்படையிலான நவீன மனிதர் தோன்றிய இடம், அவர்களின் தொடக்ககாலப் புலப்பெயர்வு என்பவை தொடர்பில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடு ஆகும். "ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேற்றம்" கோட்பாடு, "அண்மை ஒற்றைத் தோற்றுவாய்க் கருதுகோள்", "மாற்றீட்டுக் கோட்பாடு", "அண்மை ஆப்பிரிக்கத் தோற்றுவாய் மாதிரி" போன்ற பெயர்களாலும் இது குறிப்பிடப்படுகின்றது.[2][3][4][5][6] ஆப்பிரிக்காவில் தோன்றிய நவீன மனிதர், ஒற்றைப் புலப்பெயர்வு அலையொன்றின் மூலம் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி ஏற்கெனவே வாழ்ந்த பிற மனித இனங்களை மாற்றீடு செய்து உலகம் முழுதும் பரவினர் என்று இக்கோட்பாடு கூறுகின்றது.[7],[8] [9]

Thumb
நிலப்படம் - தொடக்க மனிதப் புலப்பெயர்வு[1]
1. ஓமோ சப்பியன்சு
2. நீன்டர்தால்கள்
3. தொடக்க ஒமினிட்டுகள்

முதற் பரம்பல், 130,000 - 115,000 ஆண்டுகளுக்கு முன்னர், வடக்கு ஆப்பிரிக்கா ஊடாக இடம்பெற்றதாயினும், அவர்கள் முற்றாக அழிந்துவிட்டனர் அல்லது மீண்டும் திரும்பிச் சென்றுவிட்டனர் என்று கருதப்படுகிறது.[10].[11][12][13][14] ஆனால், இந்த அழிவு குறித்து ஐயம் வெளியிட்டுள்ள சீன ஆய்வாளர்கள், நவீன மனிதர் 80,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தாவது சீனாவில் வாழ்ந்து வருகின்றனர் என்கின்றனர். இரண்டாவது பரம்பல் மூலம், ஆசியாவின் தெற்குக் கடற்கரையூடான தெற்குப் பாதையூடாகச்[15] சென்ற மனிதர் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆசுத்திரேலியாவரை சென்று குடியேறினர். இதிலிருந்து பிரிந்த ஒரு குழுவினர் அண்மைக் கிழக்கு, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் குடியேறினர்.[16][8][9][10]

இந்த ஒற்றைத் தோற்றக் கோட்பாட்டுக்குப் போட்டியாக உள்ள முக்கியமான இன்னொரு கருதுகோள் நவீன மனிதரின் பல்பிரதேசத் தோற்றம் என்னும் கருதுகோள் ஆகும். இக்கருதுகோள், ஆப்பிரிக்காவிலிருந்து அலையாக வெளியேறிய ஓமோ சப்பியன்சு உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த ஓமோ இரெக்டசுக் குழுக்களோடு இனக்கலப்புற்றனர் என்கிறது.[17][18]

Remove ads

முந்திய ஓமோ சப்பியன்சு

தோற்றமும் வளர்ச்சியும்

Thumb
நவீன மனிதன் (இடது), ஓமோ நீன்டர்தால் (வலது) ஆகியோருக்கு உரிய மண்டையோடுகளின் ஒப்பீடு.

உடற்கூற்றியல் அடிப்படையிலான நவீன மனிதர் மூன்று இலட்சம் (3,00,000) ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் தோன்றினர்.[19] ஏறத்தாழ 250,000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து, 400,000 ஆண்டுகளுக்கு முன்னர் வரையிலான காலப்பகுதியில் ஏற்பட்ட மண்டையோட்டு விரிவு, கற்கருவித் தொழில்நுட்பங்களின் தழும்பழி தொடர்பான வளர்ச்சி என்பன, ஓமோ இரக்டசு இனம் ஓமோ சப்பியன்சு இனமாக மாறி வந்ததற்கான சான்றுகளைத் தருகின்றன.[20] அண்மை ஆப்பிரிக்கத் தோற்றக் கொள்கையின்படி, ஆப்பிரிக்காவுக்கு உள்ளும், அதற்கு வெளியிலும் ஏற்பட்ட நவீன மனிதரின் புலப்பெயர்வு, உலகின் பல பகுதிகளிலும் பரந்திருந்த ஓமோ இரட்டசு இனத்தைக் காலப்போக்கில் மாற்றீடு செய்துவிட்டது.

எத்தியோப்பியாவின் நடு அவாசு என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டஓமோ சப்பியன்சு இடல்ட்டு (Homo sapiens idaltu) 160,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு இனம்.[21] இதுவரை அறியப்பட்டவற்றுள் மிக முந்திய, உடற்கூற்றியல் அடிப்படையிலான நவீன மனித இனம் இதுவே. இது ஒரு அழிந்துபோன துணை இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[22]

100,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து கூடுதல் சிக்கல்தன்மை கொண்ட தொழில்நுட்பங்கள், கலைப்பொருட்கள் போன்றவை உருவானதற்கான சான்றுகள் கிடைக்கின்றன. அத்துடன் 50,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து முழுமையான நவீன நடத்தைகள் கூடுதல் சிறப்புப் பெறுவதையும் காணமுடிகிறது. கற்கருவிகள் ஒழுங்குத் தன்மை கொண்டவையாகவும், துல்லியமாக உருவாக்கப்பட்டவையாகவும் காணப்படுகின்றன. எலும்பு, கொம்பு ஆகியவற்றிலிருந்து உருவாக்கப்பட்ட கருவிகளும் முதல் தடவையாகக் காணக்கிடைக்கின்றன.[23][24]

ஆப்பிரிக்காவுக்கு வெளியே கண்டெடுக்கப்பட்ட புதைபடிவங்கள்

முந்திய ஓமோ சப்பியன்சு இனத்தின் புதைபடிவங்கள் இசுரேலில் உள்ள கஃப்சா குகையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் காலம் 80,000 தொடக்கம் 100,000 வரை எனக் கணக்கிடப்பட்டுள்ளது.[25] 54,700க்கு முந்தியது எனக் கணிக்கப்பட்ட மானோத் 1 எனப் பெயரிடப்பட்ட நவீன மனிதனின் புதைபடிவம் இசுரேலில் உள்ள மானோத் குகையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.[26][27] ஆயினும், இக்காலம் குறித்து ஐயங்களும் நிலவுகின்றன.[28] ஆசுத்திரேலியாவில் முங்கோ ஏரிப் புதைபடிவங்கள் 42,000 ஆண்டுகளுக்கு முந்தியவை.[29][30] சீனாவின் லியுசியாங் பகுதியில் எடுக்கப்பட்ட தியான்யுவான் மனிதன் எனப்படும் தியான்யுவான் குகை எச்சங்கள் 38,000 - 42,000 காலப்பகுதிக்கு உரியவை என்கின்றனர். தியான்யுவான் மாதிரிகள், சப்பானின், ஒக்கினாவாத் தீவில் எடுக்கப்பட்ட 17,000 - 19, 000 ஆண்டுக் காலப்பகுதியைச் சேர்ந்த மினத்தோகவா மனிதனுடன் உருவவியல் அடிப்படையில் நெருக்கமாக உள்ளன.[31][32]

Remove ads

ஆப்பிரிக்காவுக்கு வெளியேயான நகர்வு

Thumb
மத்திய ஆப்பிரிக்காவில் Y-நிறப்புரி ஆடம் அமைவிடத்தில் இருந்து தொடங்கி இடம்பெற்ற ஓமோ சப்பியன் புலப்பெயர்வின் நிலப்படம்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாட்டின்படி இரண்டு பரம்பல்கள் இருந்துள்ளன. முந்தியது வட ஆப்பிரிக்கா வழியானது, இடண்டாவது தெற்குப் பகுதியூடானது. இரண்டாவது பரம்பல், முந்திய ஒமின் இனங்களை மாற்றீடு செய்தது. 130,000 - 115,000 ஆண்டுகளுக்கு முந்திய காலப் பகுதியில் இடம்பெற்ற முதல் பரம்பல் முற்றாக அழிந்துவிட்டது அல்லது பழைய இடத்துக்கு மீண்டுவிட்டது. சீன ஆய்வாளர்கள், 80,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சீனாவில் நவீன மனிதர்கள் இருந்ததாகக் கூறி மேற்படி அழிவு குறித்து ஐயம் வெளியிட்டுள்ளனர்.

இரண்டாவது பரம்பல், 69,000க்கு முன்பிருந்து, 77,000க்கு முன்பு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற, மிகப்பெரிய எரிமலை வெடிப்பு நிகழ்வான, தோபா நிகழ்வுக்கு முன்னர் அல்லது பின்னர், தெற்கு வழி என்று சொல்லப்படுகின்ற வழியூடாக இடம் பெற்றது. இவ்வழி ஊடாகச் சென்றோர் ஆசியாவின் தென் கடற்கரையோரமாகச் சென்று, 250 கிலோமீட்டர் கடலைக் கடந்து ஏறத்தாழ 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசுத்திரேலியாவில் குடியேறினர். இக்கோட்பாட்டின்படி ஐரோப்பாவில் நவீன மனிதரின் குடியேற்றம், தோபா நிகழ்வுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தோரால் (முன்-தோபா கருதுகோள்), அல்லது ஆப்பிரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்தோரில் ஒரு பகுதியினர் தோபா நிகழ்வுக்குப் பின்னர் அண்மைக் கிழக்கிலும், ஐரோப்பாவிலும் குடியேறினர் (பின்-தோபா கருதுகோள்).

முந்திய வட ஆப்பிரிக்கப் பரம்பல்

முந்திய வட ஆப்பிரிக்கப் பரம்பல் தற்காலத்துக்கு 130,000 - 115,000 ஆண்டுகள் முந்திய (தமு) காலப்பகுதியில் இடம்பெற்றது. 2011ல் ஐக்கிய அரபு அமீரகத்தில் கண்டெடுக்கப்பட்ட கற்கருவிகள், நவீன மனிதர்கள் தமு 100,000 - 125,000 காலப் பகுதியிலேயே அங்கு வாழ்ந்ததைக் காட்டுகிறது.[11][33] பல ஆய்வாளர்கள் நவீன மனிதர்கள் வட ஆப்பிரிக்காவிலேயே[12][34] தோற்றம் பெற்று வெளியே புலம்பெயர்ந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர்.[13][14]

இசுரேலின் கஃபாசு குகையில் கண்டெடுக்கப்பட்ட முந்திய ஓமோ சப்பியன்களின் புதைபடிவங்கள் தமு 80,000 - 100,000 காலப்பகுதியைச் சேர்ந்தவையாகக் கணிப்பிடப்பட்டுள்ளன. இம்மனிதர்கள் தமு 70,000 - 80,000 காலப்பகுதியில் முற்றாக அழிந்திருக்கலாம் அல்லது ஆப்பிரிக்காவுக்குத் திரும்பிச் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. உறைபனிக்கால ஐரோப்பாவின் குளிர்ப் பகுதிகளிலிருந்து தப்புவதற்காக தெற்கு நோக்கி வந்த நீன்டர்தால்களால் இவர்கள் மாற்றீடு செய்யப்பட்டிருக்கக்கூடும்.[35] உவா லியூவும் மற்றவர்களும், 56,000±5,700 ஆண்டுகளுக்கு முந்திய "எம்டி டிஎன்ஏ" (mtDNA) சான்றுகளின் "தன்மெய் நுண்மரபணு வரிசைமுறைக் குறிப்பான்"களைப் (autosomal microsatellite markers) பகுப்பாய்வு செய்தனர். கஃபாசு குகையில் எடுக்கப்பட்ட தொல்லுயிரியல் புதைபடிவம், தொடக்க காலத்தில் தனியாகப் பிரிந்து சென்ற ஒரு குழுவினரைக் குறிப்பதாகவும் இவர்கள் ஆப்பிரிக்காவுக்கே திரும்பிவிட்டனர் என்றும் விளக்குகிறார்.[25]

குல்வில்ம் (Kuhlwilm) ஆகியோரின் ஆய்வுகளின்படி, நவீன மனிதர்களிடம் இருந்து தமு 200,000 ஆண்டளவில் பிரிந்த ஒரு குழுவினரிடம் இருந்து தமு 100,000 ஆண்டளவில் அல்தாய் நீன்டர்தால்கள் மரபணுக்களைப் பெற்றுள்ளனர்.[36][37] இதுவரை எண்ணியதற்குப் பல ஆயிரம் ஆண்டுகள் முன்பாகவே அல்தாய் மலைகளிலிருந்து வந்த நீன்டர்தால்களும், தொடக்க நவீன மனிதர்களும் சந்தித்து இனக்கலப்புற்றனர் என்பது குல்வில்ம் ஆகியோரின் முடிவு. இது அண்மைக் கிழக்கில் இடம்பெற்றிருக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர்.[36]

தெற்கு வழிப் பரம்பல்

கரையோரப் பாதை

இற்றைக்கு 70,000 ஆண்டுகளுக்கு முன்,[15] மிட்டோகொன்ட்ரிய ஒருமடியக்குழு (mitochondrial haplogroup) L3 யைக் கொண்டவர்களில் ஒரு பகுதியினர் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து அண்மைக் கிழக்குக்குப் புலம் பெயர்ந்தனர். ஆப்பிரிக்காவில் இருந்த 2,000-5,000 வரையானோரில்[38] 150 - 1,000 வரையிலான சிறு குழுவினரே செங்கடலைக் கடந்திருப்பர் எனக் கணிக்கப்படுகிறது.[39] இவர்கள் அரேபியா, பாரசீகம் ஆகியவற்றின் கடற்கரைகளை உள்ளடக்கிய கரைப்பாதை ஊடாக இந்தியாவை அடைந்தனர். இதுவே முதல் முக்கியமான குடியேற்றப் பகுதியாக இருந்ததாகத் தெரிகிறது.[40] மரபியலாளர் இசுப்பென்சர் வெல்சு (Spencer Wells), முந்திய பயணிகள் ஆசியாவின் தென் கரையோரமாகச் சென்று, 250 கிலோமீட்டர் கடலைத் தாண்டி இற்றைக்கு 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசுத்திரேலியாவை அடைந்தனர் என்கிறார். இவரது கருத்துப்படி இன்றைய ஆசுத்திரேலியத் தொல்குடியினர், முதல் அலைப் புலம்பெயர்ந்தோரின் வழித்தோன்றல்கள் ஆவர்.[41]

காலம்: தோபாவுக்கு முன் அல்லது தோபாவுக்குப் பின்

தென்பகுதி ஊடான பரம்பலின் காலம் சர்ச்சைக்கு உரியதாக உள்ளது. இது தற்கால தோபா ஏரிப் பகுதியில் அமைந்திருந்த எரிமலை தற்காலத்துக்கு முன் 69,000-77,000 ஆண்டுக் காலப்பகுதியில் வெடித்தபோது ஏற்பட்ட பேரழிவுக்கு முன்னரா அல்லது பின்னரா இடம்பெற்றது என்பதே பிரச்சினை. இந்தியாவில், இந்த வெடிப்பினால் உருவான சாம்பல் படைகளுக்குக் கீழே கற்கருவிகள் காணப்பட்டது இப்பரம்பல் தோபா வெடிப்புக்கு முன்னர் ஏற்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டுவதாக உள்ளது. ஆனால் இக்கருவிகளின் உண்மையான மூலம் குறித்துக் கருத்து வேறுபாடுகள் உள்ளன.

இற்றைக்கு முன் 60,000-70,000 காலப்பகுதியில் ஏற்பட்டதாகக் காலம் கணிக்கப்பட்ட ஒருமடியக்குழு L3, மனிதர் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறுமுன்னர் உருவானது என்பது, இரண்டாவது பரம்பல் தோபா வெடிப்புக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரே நிகழ்ந்தது என்பதற்குச் சான்றாக உள்ளது. இருந்தும், முன்னர் எண்ணியதிலும் குறைந்த வேகத்துடனேயே மனிதரில் மரபணுச் சடுதி மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதைக் காட்டும் அண்மைக்கால ஆய்வுகள், இரண்டாம் புலப்பெயர்வுக்கான காலத்தை தற்காலத்துக்கு முன் 90,000 - 130,000 ஆண்டுகள் வரை பின்கொண்டு செல்ல உதவுகின்றன.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads