நாதிர் ஷா
ஈரானின் ஷா (ஆட்சி. 1736-1747) மற்றும் அப்சரிய அரசமரபைத் தோற்றுவித்தவர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாதிர் ஷா அப்சர் (Nader Shah Afshar) (Persian: نادر شاه افشار, நாதெர் கோலி பெய்க் என்றும் அறியப்படுகிறார் نادرقلیبیگ அல்லது தமஸ்ப் கோலி கான் تهماسبقلی خان; ஆகத்து 1688[6] – 19 சூன் 1747) என்பவர் ஈரானின் அப்சரிய அரசமரபை நிறுவியவர் ஆவார். ஈரானிய வரலாற்றில் மிகுந்த சக்தி வாய்ந்த ஆட்சியாளர்களில் ஒருவராவார். 1736 முதல் 1747 வரை ஈரானின் ஷாவாக இவர் ஆட்சி செய்தார். ஒரு கிளர்ச்சியின் போது இவர் அரசியல் கொலை செய்யப்பட்டார். மத்திய கிழக்கு, காக்கேசியா, நடு ஆசியா மற்றும் தெற்காசியா முழுவதும் பல்வேறு படையெடுப்புகளில் இவர் சண்டையிட்டுள்ளார். ஹெறாத், மிகமந்துசுது, முர்ச்சே கோர்து, கிருகுக்கு, எகெவர்து, கைபர் கணவாய், கர்னால், மற்றும் கர்சு ஆகியவை இவர் சண்டையிட்ட சில யுத்தங்களாகும். இவரது இராணுவ அறிவு[14] காரணமாக சில வரலாற்றாளர்கள் இவரைப் பாரசீகத்தின் நெப்போலியன், பாரசீகத்தின் வாள்[15] அல்லது இரண்டாம் அலெக்சாந்தர் என்று குறிப்பிட்டுள்ளனர். நாதிர் துருக்கோமென்[16] அப்சர் என்ற பழங்குடியினத்தை சேர்ந்தவர் ஆவார். வடகிழக்கு ஈரானில்[17] குராசானில் குடியமர்ந்த ஒரு பகுதியளவு நாடோடிப் பழங்குடியினமாக அப்சர்கள் இருந்தனர். இவர்கள் ஷா முதலாம் இசுமாயிலின் காலம் முதல் சபாவிய அரசமரபுக்கு இராணுவ சக்தியை வழங்கியவர்களாக இருந்தனர்.[18]
பலவீனமான ஷ சொல்தான் ஒசெய்னை கோதாகி பஷ்தூன் மக்கள் ஒரு கிளர்ச்சிக்குப் பிறகு பதவியில் இருந்து தூக்கி எறிந்ததை அடுத்து ஈரானில் குழப்பமான சூழ்நிலை நிலவியது. இக்காலத்தின் போது நாதிர் ஷா அதிகாரத்திற்கு வந்தார். சபாவியரின் பரம எதிரிகளான உதுமானியர்கள், மேலும் உருசியர்கள் ஆகியோர் ஈரானின் நிலப்பரப்பைத் தங்களுக்கு கைப்பற்றிக் கொண்டனர். ஈரான் நாட்டை நாதிர் மீண்டும் ஒன்றிணைத்தார். ஊடுருவியவர்களை அகற்றினார். சபாவிய அரசமரபின் கடைசி உறுப்பினர்களை அகற்றுமாறு முடிவெடுக்கக் கூடிய அளவுக்கு இவர் மிகுந்த சக்தி வாய்ந்தவராக உருவானார். சபாவிய அரசாங்கமானது ஈரானை 200க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்தது. 1736இல் ஷாவாக தனக்குத் தானே நாதிர் முடி சூட்டிக் கொண்டார். இவரது ஏராளமான படையெடுப்புகள் ஒரு பேரரசை உருவாக்கின. இது அதன் உச்சபட்ச விரிவாக்கத்தின் போது ஈரான், ஆர்மீனியா, அசர்பைஜான், சியார்சியா, வட காக்கேசியா, ஈராக், துருக்கி, துருக்மெனித்தான், ஆப்கானித்தான், உசுபெக்கிசுதான், பாக்கித்தான், ஓமன் மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகள் ஆகியவற்றை முழுவதுமாகவோ அல்லது அவற்றின் பகுதிகளையோ குறுகிய காலத்திற்குத் தன் பகுதிகளாகக் கொண்டிருந்தது. இவருடைய இராணுவச் செலவினங்கள் ஈரானியப் பொருளாதாரம் மீது சிதிலமடைய வைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தின.[19]
நாதிர் ஷா செங்கிஸ் கான் மற்றும் தைமூரைப் பின்பற்றினார். இவர்கள் நடு ஆசியாவின் முந்தைய துரந்தரர்களாக இருந்தனர். இவர்களது இராணுவ செயலாற்றலை இவரும் பின்பற்றினார். குறிப்பாக இவரது ஆட்சியின் பிற்காலத்தில் அவர்களது குரூரத் தன்மையைப் பின்பற்றினார். இவரது படையெடுப்புகளின் போது இவர் பெற்ற வெற்றிகள் குறுகிய காலத்திற்கு இவரை மேற்கு ஆசியாவின் மிகுந்த சக்தி வாய்ந்த இறையாண்மையுள்ள ஆட்சியாளராக மாற்றின. விவாதத்திற்குரிய வகையில் இருந்தாலும், உலகின் மிகுந்த சக்தி வாய்ந்த பேரரசு மீது இவர் ஆட்சி செய்தார்.[20]:84 1747இல் இவர் அரசியல் கொலை செய்யப்பட்டதற்குப் பிறகு இவர் தோற்றுவித்த பேரரசு மற்றும் அரசமரபானது சீக்கிரமே வீழ்ச்சியடைந்தது.[21]
"ஆசியாவின் மகா இராணுவத் துரந்தரர்களில் கடைசியானவராக" நாதிர் ஷா குறிப்பிடப்படுகிறார்.[22]
Remove ads
பூர்வீகமும், மொழியும்
துருக்கோமென் அப்சர் பழங்குடியினத்தின்[23][24] பகுதியளவு நாடோடிகளான கிர்க்லு இனத்தைச் சேர்ந்த ஒரு கிசில்பாசு நாதிர் ஆவார். 13ஆம் நூற்றாண்டின் மங்கோலியப் படையெடுப்பின் விளைவாக நடு ஆசியாவிலிருந்து அசர்பைஜானுக்கு இப்பழங்குடியினத்தவர் இடம் பெயர்ந்தனர்.[25] பேரரசர் அப்பாசின் ஆட்சிக் காலத்தின் போது குராசான் பகுதியை உசுப்பெக்கியர்களின் தாக்குதலிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு இப்பழங்குடியினத்தவரில் ஒரு பகுதியினர் அசர்பைஜானில் இருந்து குராசனுக்கு இடம் மாற்றப்பட்டனர். குராசானில் தான் நாதிர் பிறந்தார்.[23][26][27]
நாதிரின் தாய்மொழி ஒரு தெற்கு ஒகுஸ் கிளை மொழியாகும். இது "அசர்பைஜான் துருக்கிய மொழி" என்று அழைக்கப்படுகிறது.[28] இவர் பிற்காலத்தில் பாரசீக மொழியைக் கற்று இருந்தாலும் தன் தினசரி பேச்சு வழக்கில் துருக்கிய மொழியைப் பயன்படுத்துவதையே விரும்பினார். ஓர் இளைஞராக இவர் படிப்பதற்கும், எழுதுவதற்கும் கற்றுக் கொண்டார்.[29]
Remove ads
ஆரம்ப வாழ்க்கை
ஈரானியப் பேரரசின் வட கிழக்கில் ஒரு மாகாணமாக இருந்த குராசானின் வடக்குச் சமவெளிகளில் இருந்த தசுதகெர்து[7] கோட்டையில் நாதிர் ஷா பிறந்தார். இவரது தந்தை எமாம் கோலி ஒரு மேய்ப்பாளர் ஆவார்.[30] இவரது தந்தை மேற்சட்டை தயாரிப்பாளராகவும் இருந்திருக்க வாய்ப்பு இருந்துள்ளது. [5]இவர்களது குடும்பம் நாடோடி வாழ்க்கை முறையை வாழ்ந்தது. இவரது குடும்பத்தில் நீண்ட காலமாக காத்திருந்து பெற்ற மகனாக நாதிர் திகழ்ந்தார்.[31]
இவரது 13ஆம் வயதில் இவரது தந்தை இறந்து விட்டார். இவர் தனக்கும், தன்னுடைய தாய்க்கும் ஆதரவாக இருப்பதற்கு ஒரு வழி தேட வேண்டியிருந்தது. நெருப்பு எரிப்பதற்காக இவர் சேகரித்த குச்சிகளைத் தவிர இவருக்கு வருமானத்திற்கு வேறு எந்த வழியும் இல்லை. இக்குச்சிகளை இவர் சந்தைக்கு அனுப்பி வைப்பார். பல ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியை வென்றதற்குப் பிறகு வெற்றிகரமாக திரும்பி வந்த பொழுது தன்னுடைய இராணுவத்தைத் தான் பிறந்த இடத்திற்கு நாதிர் அழைத்துச் சென்றார். தன்னுடைய வறுமையான ஆரம்ப வாழ்க்கை குறித்து தன்னுடைய தளபதிகளிடம் உரையாற்றினார். இவர் அங்கு, "எல்லாம் வல்ல இறைவன் எந்த உயரத்திற்கு என்னை உயர்த்தியுள்ளார் என்பதை நீங்கள் இப்பொழுது காண்கிறீர்கள்; இன்று முதல் வறுமையுடைய மனிதர்களை வெறுக்காதீர்கள்" என்றார். எனினும், நாதிரின் ஆரம்பச் செயல்கள் ஏழைகளுக்கு இவரைக் குறிப்பாகப் பரிவிரக்கம் கொண்டவராகக் காட்டவில்லை. இவரது வாழ்நாள் முழுவதும் இவர் தன்னுடைய சொந்த முன்னேற்றத்தில் மட்டுமே விருப்பம் கொண்டிருந்தார். ஒரு கதையின் படி, 1704இல் இவருக்கு 17 வயதாக இருக்கும் போது சூறையாடும் எண்ணமுடைய ஓர் உசுப்பெக்கியர்களின் குழு குராசான் மாகாணம் மீது படையெடுத்தது. அங்கு நாதிர் தன் தாயுடன் வாழ்ந்து வந்தார். அவர்கள் பல விவசாயிகளைக் கொன்றனர். அடிமைகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்களில் நாதிரும், அவரது தாயும் இருந்தனர். சிறைப்படுத்தப்பட்ட நிலையிலேயே இவரது தாய் இறந்தார். மற்றொரு கதையின் படி, எதிர்காலத்தில் உதவி அளிப்பதாக உறுதி அளித்ததன் மூலம் துருக்மெனியர்களை நாதிர் இணங்க வைத்தார். 1708இல் குராசான் மாகாணத்திற்கு நாதிர் திரும்பி வந்தார்.[32]
15ஆம் வயதில் இவர் ஓர் ஆளுநருக்கு ஒரு மசுகெத்தியராக பணியில் சேர்ந்தார். படிப்படியாக உயர்ந்த இவர் ஆளுநரின் வலது கை மனிதரானார்.[33]
Remove ads
இந்தியா மீதான படையெடுப்பு
1738 ஆம் ஆண்டு கந்தகாரை கைப்பற்றிய நாதிர் ஷா சிந்து ஆற்றை கடந்து, கைபர் கணவாய் வழியாக இந்தியாவில் புகுந்து, தில்லி மொகலாய மன்னர் [[முகம்மது ஷாவின் படைக்கும், நாதிர் ஷாவின் படைக்கும் 1739 ல் அரியானாவின் கர்னால் பகுதியில் போர் நடைபெற்றது. இப்போரில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை நாதிர் ஷாவின் படை கொன்று குவித்தது. தோல்வியடைந்த முகம்மது ஷா, நாதிர் ஷாவுடன் மேற்கொண்ட உடன்படிக்கையின் விளைவாக கோஹினூர் வைரமும், விலை மதிப்பு மிக்க மயிலாசனமும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும் நாதிர் ஷாவுக்கு கொடுக்கப்பட்டன. முகமது ஷாவின் மகளை, தன் மகனுக்கு திருமணம் செய்வித்தான்.[34]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads