நிறக்கோலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிறக்கோலம் அல்லது வண்ணக்கோலம்(Rangoli) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் பல பகுதிகளிலும் பயிலப்பட்டு வரும் மரபுவழிக் கலைகளுள் ஒன்றாகும்.[1] தரையில் கோட்டுருக்கள் அல்லது கோலங்களை வரைந்து அதற்குப் பல்வேறு நிறப் பொடிகள் அல்லது பிற பொருட்களைக் கொண்டு நிறமூட்டி அழகுபடுத்துவர். நிறக்கோலத்தின் ஒரு பகுதியாகத் சிறு விளக்குகளையும் ஏற்றி வைப்பதும் உண்டு. தமிழ்நாட்டில் கோலம் என்று வழங்கப்படும் மரபுவழிக் கலை இதற்கு நெருங்கியதாயினும், தமிழ்நாட்டுக் கோலங்களுக்கு நிறமூட்டுவது இல்லை. இவை கோட்டுருக்களாகவே வரையப்பட்டு வருவதுடன் கோலமிடும் நுட்பங்களிலும் சில வேறுபாடுகள் உண்டு


Remove ads
பெயர்கள்
தமிழரிடையே கோலம் என வழங்கப்படும் கலையுடன் உள்ள தொடர்பு காரணமாகவும், முக்கிய வேறுபாடாக நிறம் இருப்பதாலும், இதை நிறக்கோலம் அல்லது வண்ணக்கோலம் எனலாம். இந்தி மொழியில் இதனை "ரங்கோலி" என்பர். இது ரங்க, ஆவலி என்னும் இரு சமசுக்கிருதச் சொற்களின் இணைப்பால் உருவானது. இங்கே ரங்க என்பது நிறம் என்னும் பொருளையும், ஆவலி என்பது வரிசை அல்லது கொடி என்னும் பொருளையும் தருவன. தமிழ்நாட்டுக் கோலத்தையும் ரங்கோலி என்பதற்குள் அடக்கும் வழக்கமும் உண்டு. இது சரியானது அல்ல. இந்த நிறக்கோலத்தை இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு பெயரிட்டு அழைக்கின்றனர். இராசத்தானில் இதை மதானே என்பர். வட இந்தியாவின் சில பகுதிகளில் சவுக்பூர்ணா என்றும், வங்காளத்தில் அல்பனா என்றும், பீகாரில் அரிப்பனா என்றும், உத்தரப் பிரதேசத்தில் சவுக் பூஜன் உத்தராகண்டத்தில் எய்பபன் என்றும் இதற்குப் பெயர்கள் உண்டு[2]. .
Remove ads
பயன்பாடு
தற்காலத்தில் நிறக்கோலங்கள் அழகுக்காகவும், மரபுகளைப் பேணுவதற்காகவுமே வரையப்பட்டு வந்தாலும், பழைய காலத்தில் இதன் பின்னணியில் பல்வேறு நம்பிக்கைகளும், சமய, பண்பாட்டு முக்கியத்துவங்களும் இருந்தன. பொதுவாக வாசலில் வரையப்படும் நிறக்கோலங்கள் வீட்டுக்கு வருபவர்களை வரவேற்பதற்கான அடையாளமாகவும், வீட்டில் வசிப்பவர்களுக்கு அதிட்டத்தைக் கொண்டுவரும் ஒன்றாகவும் கருதப்படுகின்றது. இந்தியாவின் சில பகுதிகளில் செல்வத்துக்கு அதிபதியாக இந்து மக்கள் நம்பும் "இலட்சுமி"யை வரவேற்பதற்காக வாசலில் "நிறக்கோலம்" இடுவர். இந்நிறக்கோலத்தை இலட்சுமியின் பாதங்களின் வடிவில் வரைவதும் உண்டு. பண்டிகைகள், சமய நிகழ்வுகள், திருமணம் போன்ற விழாக்கள், பண்பாட்டு நிகழ்வுகள் போன்றவற்றில் நிறக்கோலங்கள் வரையப்படுகின்றன. அத்துடன் இவ்வாறான பண்டிகைகளை அண்டியும் அவற்றுக்குப் புறம்பாகவும் நிறக்கோலப் போட்டிகளை நடத்திப் பரிசுகள் வழங்குவதும் உண்டு. முற்காலத்தில் பெண்களே நிறக்கோலங்களை வரைந்தனர். ஆனால் தற்காலத்தில் ஆண்களும் இக் கலையில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழ்நாட்டில் பொதுவாக மார்கழி மாதத்தில் வீட்டு வாசலில் பெரிய கோலங்கள் போடும் மரபு இன்றும் இருக்கிறது. விடியற்காலையில் எழுந்து கோலம் போடுவதால் உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி மற்றும் மன ஆரோக்கியம் மேம்படுகிறது.
வடிவங்கள்
நிறக்கோலத்துக்கான வடிவங்கள் எளிமையானவை ஆகவோ அல்லது சிக்கலானவையாகவோ இருக்கலாம். கடவுளர், பூக்கள், இலைகள், விலங்குகள் போன்றவற்றைக் குறிக்கும் எளிமையான வடிவங்களும், பண்பியல் தன்மை கொண்ட எளிமையான வடிவவியல் வடிவங்களும் உள்ளன. இக்கலையில் குறிப்பிடத்தக்க அனுபவமும், திறமையும் கொண்டவர்கள் சிக்கலான வடிவங்களுடன் கூடிய வடிவங்களைப் பயன்படுத்துவர். அளவும் வசதிக்கு ஏற்ப மாறுபடும். நிறக்கோலங்களுக்கான வடிவங்களின் எண்ணிக்கைக்கு எல்லை கிடையாது. திறமை உள்ளவர்கள் சில அடிப்படைகளை முன்வைத்துப் புதிது புதிதாக வடிவங்களை உருவாக்கிக் கொள்வர். தற்காலத்தில், நிறக்கோலம் இடுபவர்களுக்கு உதவுவதற்காகப் புதிய வடிவங்களை உள்ளடக்கிய நிறக்கோலப் புத்தகங்கள் பல வெளியாகின்றன. அதோடு, பொதுவான, இதழ்களிலும் நிறக்கோலங்களுக்கான சிறப்புப் பகுதிகள் இடம்பெறுவது உண்டு.
Remove ads
நிறக் கோலமிடப் பயன்படும் பொருட்கள்
முற்காலத்தில், இயற்கையில் கிடைக்கும் பொருட்களிலிருந்து பெறப்படும் நிறப்பொடிகள் நிறக்கோலம் இடுவதற்குப் பயன்பட்டன. மஞ்சள் தூள், பல நிறங்களிலான மண், செங்கற் பொடி, அரிசி மாவு, சுண்ணாம்புக்கற் பொடி போன்றவை பயன்பட்டன. தற்காலத்தில் செயற்கைச் சாயங்களைக்கொண்டு நிறமூட்டிய பொடிகள் பயன்படுகின்றன. பல்வேறு நிறங்களில் கிடைக்கும் தானியங்கள், பருப்பு வகைகள் போன்றவையும் நிறக்கோலம் வரைவதற்குப் பயன்படுவதுண்டு. பயறு, மசூர்ப் பருப்பு, உழுந்து, அரிசி போன்றவை இத்தகையவை. அரிசி, ரவை, மரத்தூள், பயன்படுத்திய தேங்காய்த் துருவல் போன்றவற்றுக்கு விரும்பிய நிறமூட்டியும் பயன்படுத்துவர். பல்வேறு நிறங்களிலான பூக்களின் இதழ்களையும், இலைகளையும் பயன்படுத்தியும் அழகிய நிறக்கோலங்களை இடுவதுண்டு. இவ்வாறானவை "பூக்கோலங்கள்" என அழைக்கப்படுகின்றன.
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
பல்வகை நிறக்கோலங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads