தியாகத் திருநாள்
இசுலாமிய சமய பண்டிகைகளில் ஒன்று From Wikipedia, the free encyclopedia
Remove ads
தியாகத் திருநாள் ( அரபு: عيد الأضحى ஈத் அல்-அழ்ஹா) அல்லது ஹஜ் பெருநாள், உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் இசுலாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது.
வசதியுள்ள முஸ்லிம்கள், 'ஹஜ்' செய்வது என்பது, இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஐந்தாவது கடமையாகும்.[1]. ஹஜ் செய்வது என்பது, புனிதப் பயணமாக மக்கா செல்வதாகும். இப்புனிதப் பயணக் கிரியைகள்/கடமைகளில் கடைசியானது இறைவனுக்காகப் பலியிடுதலாகும். இது ஹஜ் மாதம் பத்தாம் நாள் நடைபெறும். இந்தப் பெருநாள் தொழுகை நடைபெற்றபின் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிட்டுக் கொடுக்கப்படுகிறது. பெரும்பாலும் உலகம் முழுவதும் இந்தப் பண்டிகை, தியாகப் பெருநாள் என பொருள்படும் அரபிய பதமான ஈத் அல்-அழ்ஹா என்றே அழைக்கப்பட்டாலும், இந்திய நாட்டில் ஆட்டைப் பலியிடுவதை அடிப்படையாக கொண்டு பக்ரீத் (பக்ரா + ஈத்) என்ற உருது பதத்தில் அழைக்கப்படுகின்றது.
Remove ads
பண்டிகை வரலாறு

இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்றாஹீம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார்.[2] நெடுநாட்களாக, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இவரின் இரண்டாவது மனைவி ஹாஜரா மூலம் ஓர் ஆண் மகவு பிறந்தது. இஸ்மாயீல் எனப் பெயரிடப்பட்ட அந்தக் குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அராபியர்கள்.[3] இஸ்மாயீல், பால்யப் பருவத்தை எட்டியிருந்த பொழுது, அவரைத் தனக்குப் பலியிடுமாறு, கடவுள், இப்ராஹிம் அவர்களுக்குக் கனவின் மூலம் கட்டளையிட்டார். இதைப்பற்றி இஸ்மாயீலிடம் கூறிய இப்ராஹிம், அவரின் அனுமதியுடன் பலியிடத் துணிந்தபொழுது, ஜிப்ரயீல் எனப்படும் வானவரை அனுப்பி, இறைவன் அதைத் தடுத்தார். மேலும், ஓர் ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இஸ்மாயீலுக்குப் பதில் அந்த ஆட்டை அறுத்துப் பலியிடுமாறு இப்ராஹிமிற்கு கட்டளையிட்டார்.
மேற்கூறிய இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே, தியாகத் திருநாள் கொண்டாடப்படுகின்றது. இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடுகளைப் பலியிட்டு, இந்த பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.
Remove ads
திருநாள் கொண்டாட்டம்
சிறப்புத் தொழுகை
சிறப்புத் தொழுகைகள் நடத்தப்படுவது, தியாகத் திருநாளின் முக்கிய அம்சம் ஆகும். உலகம் முழுவதும் இசுலாமியர்கள், இந்த நாளில் புத்தாடை அணிந்து இந்தத் தொழுகைகளில் கலந்து கொள்கின்றனர். பெரும்பாலும் இந்தத் தொழுகை, 'திடல்' போன்ற திறந்த வெளிகளிலேயே நடத்தப்படுகின்றன.[4]
பலியிடல்
பலியிடல், தியாகத் திருநாளின் ஒரு சிறப்பம்சம் ஆகும். இந்த நாளில் இசுலாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிடுகின்றனர். பின்னர், அதன் இறைச்சியை மூன்று சம பங்குகளாகப் பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டார் மற்றும் நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு, மூன்றாவது பங்கை, தங்கள் தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பலியிடப்படும் விலங்கு, ஊனம் இல்லாமலும், குறைந்தபட்சம் ஒரு வயது பூர்த்தியானதாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படுகின்றது.[5]
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads