பட்டடக்கல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பட்டடக்கல் என்பது, இந்தியாவின் தென்பகுதி மாநிலங்களுள் ஒன்றான கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது வட கர்நாடகத்தின் பாகல்கோட் மாவட்டத்திலுள்ள மலப்பிரபா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது பாதமியிலிருந்து 22 கிலோமீட்டர்கள் தொலைவிலும், அய்கொளெயில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இங்கு அமைந்துள்ள கிபி 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நினைவுச் சின்னங்கள் இந்துக் கோயில் கட்டிடக்கலையின் வேசர பாணிக் கட்டிடங்களின் தொடக்ககால வடிவங்களாக அமைந்துள்ளன. 1987 ஆம் ஆண்டில் இந்நினைவுச் சின்னங்களின் தொகுதி உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. இந் நகரத்தில் இந்தியக் கட்டிடக்கலைப் பாணிகளான நாகரப் பாணி, திராவிடப் பாணி என்பவற்றைச் சேர்ந்த கட்டிடங்களும் காணப்படுகின்றன.
Remove ads
வரலாறு
பட்டடக்கல், தென்னிந்தியாவின் ஒரு பகுதியை ஆண்ட சாளுக்கிய வம்சத்தினரின் தலைநகரமாக இருந்தது. இவர்கள் ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் இங்கிருக்கும் கோயில்களைக் கட்டினர்[3][4][5] . இங்கே மொத்தம் பத்துக் கோயில்கள் உள்ளன. இவற்றுள் ஒன்று சமணர்களுடையது. நான்கு கோயில்கள் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியிலும், இன்னொரு நான்கு நாகரப் பாணியிலும் அமைந்துள்ளன. மிகுதி ஒன்று இரண்டும் கலந்த பணியைச் சேர்ந்தது. பட்டடக்கல்லைப் புண்ணிய தலமாகக் கருதிய வாதாபி சாளுக்கிய அரசர்கள் இங்கு முடிசூட்டிக் கொண்டனர். இங்கு முடிசூட்டிக்கொண்ட சாளுக்கிய அரசர்களில் முதலாமவன் விசயாதித்தன் ஆவான்.
இராட்டிரகூடர் மற்றும் கல்யாணிச் சாளுக்கியர் ஆட்சி காலத்திலும் பட்டடக்கல் முக்கிய நகரமாக இருந்துள்ளது.
Remove ads
சாளுக்கியர் பாணிக் கட்டிடக்கலை
கட்டிடக்கலையில் அய்கொளெ ஒரு பள்ளி என்றால், பாதாமியை ஒரு கட்டிடக்கலைக் கல்லூரியாகவும், பட்டடக்கல்லை ஒரு கட்டிடக்கலைப் பல்கலைக் கழகமாகவும் கருதலாம். சாளுக்கியர் பாணி ஐகொளெயில் (கிபி 450) உருவாகியது. அக்காலத்துச் சிற்பிகள் பல்வேறு கட்டிடக்கலைப் பாணிகளை வைத்துச் சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் நாகரப் பாணியையும், திராவிடப் பாணியையும் கலந்து இன்னொரு தனித்துவமான பாணியை உருவாக்கினர். ஏழாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கோயில் கட்டும் நடவடிக்கைகள் பாதாமியில் இருந்து பட்டடக்கல்லுக்கு மாறின.
கல்வெட்டுகள்
பட்டடக்கல்லில் பல கன்னடக் கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானவை: ஒன்று விருபாட்சர் கோயில் வெற்றித் தூணில் கன்னடத்தில் பொறிக்கப்பட்டுள்ள எட்டாம் நூற்றாண்டு (733–745) இரண்டாம் விக்ரமாதித்தன் கல்வெட்டு. மற்றொன்று சங்கமேசுவரர் கோயிலில் உள்ளது. கிபி 1162 ஆம் ஆண்டில் கன்னடத்தில் பொறிக்கப்பட்ட அக்கல்வெட்டில் சங்கமேசுவரர் கோயிலைக் கட்டுவதற்கு சாளுக்கிய அரசன் விஜயாதித்தன் மானியம் வழங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Remove ads
உலக பாரம்பரியக் களம்
1987 இல் யுனெஸ்கோ பட்டடக்கல்லை உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியலில் இணைத்தது.[6] [7][8][9][10] பட்டடக்கல்லின் நினைவுச் சின்னத் தொகுதியுள் 10 நினைவுச் சின்னங்கள் அடங்கியுள்ளன:
- காளகநாதர் கோயில்
- காட சித்தேசுவரர் கோயில்
- சம்புலிங்கேசுவரர் கோயில்
- சங்கமேசுவரர் கோயில்
- சந்திரசேகரர் கோயில்
- விருபாட்சர் கோயில்
- மல்லிகார்ச்சுனர் கோயில்
- காசி விசுவநாதர் கோயில்
- பாபநாதர் கோயில்
- சமணர் கோயில்
இவற்றையும் பார்க்கவும்
- பாதமி
- பாதமி சாளுக்கியர் கட்டிடக்கலை
- பாதமி குகைக் கோயில்கள்
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads