பயன்-உல்கீ மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பயன்-உல்கீ என்பது மங்கோலியாவின் 21 ஐமக்குகளில் ஒன்றாகும். இது மேற்கு திசையில் கடைசியாக உள்ளது. முஸ்லிம்கள் மற்றும் கசக் இனத்தவர் பெரும்பான்மையாக உள்ள மங்கோலியாவின் ஒரே ஐமக் இதுவேயாகும். 1940 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இது உருவாக்கப்பட்டது. இதன் தலைநகரம் உல்கீ.

புவியியல்
இந்த ஐமக் மங்கோலியாவின் மேற்கு கடைக்கோடியில் உள்ளது. உருசியா மற்றும் சீனாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இதற்கும் கசகஸ்தானின் கிழக்குப் பகுதிக்கும் இடைவெளி வெறும் 40 கிலோமீட்டரே ஆகும். இந்த ஐமக்கிற்கு வடகிழக்கே உவ்ஸ் மற்றும் தென்கிழக்கே கோவ்ட் ஆகியவற்றை அண்டை ஐமக்குகளாக கொண்டுள்ளது.
மங்கோலியாவில் உள்ள ஐமக்குகளிலேயே உயரமான ஐமக் பயன்-உல்கீ தான். ஐமக்கின் பெரும்பாலான பகுதிகள் மங்கோலிய ஆல்டாய் மலைத்தொடர்களில் அமைந்துள்ளது. இதன் 10 சதவீத பகுதிகள் காடுகளால் மூடப்பட்டுள்ளன. இக்காடுகள் பெரும்பாலும் சைபீரிய லார்ச் மரங்களை கொண்டுள்ளன.
மங்கோலியாவின் அண்டைய மூன்று நாடுகளின் மூலையை நைரம்டால் சிகரம் (நட்பு சிகரம்) அடையாளப்படுத்துகிறது.
Remove ads
மக்கள்தொகை
இந்த ஐமக்கின் பெரும்பாலான குடிமக்கள் கசக் (93%) இனத்தை சேர்ந்தவர் ஆவர்.[1]) எஞ்சிய மக்கள் தொகையில் உள்ள இனங்கள் உரியாங்கை, டோர்வோட்[2], கல்கா, துவன்கள் மற்றும் கோசூட் ஆகியோராவர். பெரும்பாலானவர்கள் தங்களது தாய்மொழியாகக் கசக் மொழியை பேசுகின்றனர். இரண்டு மொழி பேசுபவர்கள் இருப்பாராயின், அவர்களே மங்கோலிய மொழியை இரண்டாவது மொழியாக பேசுகின்றனர்.
மங்கோலியா ஜனநாயக பாதைக்கு திரும்பிய பின்னர் பல குடிமக்கள் தங்களது வரலாற்று தாயகமான கசகஸ்தானிற்கு சென்று குடியேறினர். அங்கு சென்றால் தங்களுக்கு சிறந்த எதிர்காலம் கிடைக்கும் என்று எண்ணி அங்கு சென்றனர். இதன் காரணமாக 1991-1993 ஆகிய காலத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு மக்கள் தொகை இழப்பு இந்த ஐமக்கில் ஏற்பட்டது. அந்நேரத்தில் சுமார் 80 ஆயிரம் மக்கள் கசகஸ்தானுக்கு சென்று குடியேறினர். தற்போது குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னால் குடிமக்கள் மீண்டும் மங்கோலியாவிற்கு திரும்ப தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக மக்கள் தொகை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
Remove ads
கலாச்சாரம்

இங்கு பெரும்பான்மையாக வாழும் கசக் மக்களின் கலாச்சாரம் மீது இஸ்லாமிய பழக்கவழக்கங்களின் தாக்கமானது வலுவாக உள்ளது. உல்கீ மசூதி ஆனது மங்கோலியாவின் இஸ்லாமிய மையத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த மசூதியானது வழக்கத்திற்கு மாறான கோணத்தில் இந்நகரில் கட்டப்பட்டுள்ளது. ஏனெனில் இக்கட்டடம் சரியாக மெக்காவை நோக்கி உள்ளவாறு கட்டப்பட்டுள்ளது. இங்கு ஒரு மதராசாவும் உள்ளது.
பழக்கப்படுத்தப்பட்ட கழுகுகளைக் கொண்டு வேட்டையாடும் மரபார்ந்த பழக்கத்திற்காக இந்த ஐமக் பிரபலமானதாக உள்ளது.[8][9][10][11][12] வேட்டை வல்லூறுகள் எவ்விதத்தில் செயல்படுகின்றனவோ அதே விதத்தில் இந்த பிடிக்கப்பட்ட கழுகுகளும் செயல்படுகின்றன. உலகத்தின் மற்ற பகுதிகளிலும் கழுகுகள் வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படுகின்றன. முக்கியமாக கசகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தானில். எனினும் பயன்-உல்கீயில்தான் இந்த பழக்கம் மிக பொதுவானதாக உள்ளது. கழுகை பயன்படுத்தி வேட்டையாடுபவர்களில் உலகின் 80 சதவிகிதத்தினர் இங்கு தான் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[13] ஆண்டுதோறும் உல்கீயில் ஒவ்வொரு அக்டோபர் மாதமும் பொன்னாங் கழுகு விழா கொண்டாடப்படுகிறது. கழுகுகளைக் கொண்டு வேட்டையாடுபவர்களின் திறமையை காட்டுவதற்காக இவ்விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 70 வேட்டைக்காரர்கள் கலந்து கொள்கின்றனர்.[14][15]
தேசிய பூங்கா
இந்த ஐமக்கில் அல்டாய் டவன் போக்ட் தேசிய பூங்கா உள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 6,362 சதுர கிலோமீட்டர் ஆகும். மங்கோலியாவின் உயர்ந்த மலைக்கு தென்பகுதியில் இந்த பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் சிவப்பு மான், ஐரோவாசியக் காட்டுமான் மற்றும் பொன்னாங்கழுகு ஆகியவை காணப்படுகின்றன.
உசாத்துணை
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads