பிராங்க் பெ. மெக்டொனால்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிராங்க் பெத்தூன் மெக்டொனால்டு (Frank Bethune McDonald) ( மே 28, 1925 – ஆகத்து 31, 2012) என்பவர் ஓர் அமெரிக்க வானியற்பியல் அறிஞர் ஆவார். இவர் விண்வெளி ஆராய்ச்சி விமானங்களுக்குத் தேவையான உபகரணங்களை வடிவமைப்பதற்கு உதவியாக இருந்தார். அமெரிக்காவின் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் பல திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகளுக்கு பின்னணியில் ஒரு மிகப்பெரிய சக்தியாக விளங்கினார். குறிப்பிட்டுச் சொல்வதென்றால் இத்திட்டங்களுக்கு தலைமை விஞ்ஞானியாகச் செயல்பட்டார்.[1]
இவருடைய பணிக்காலத்தில் நாசாவின் ஒன்பது தன்னேற்புத் திட்டங்களுக்கு திட்ட விஞ்ஞானியாகவும், பதினைந்து விண்வெளி சோதனைகளுக்கு முதன்மை ஆய்வாளராகவும் இருந்துள்ளார். முந்நூறுக்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். 1986 ஆம் ஆண்டில் தேசிய அறிவியற் கழகத்தின் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார்.
Remove ads
வாழ்க்கை வரலாறு
இளமையும் கல்வியும்
மெக்டொனால்டு, பிராங்க் பி மெக்டொனால்டு மற்றும் லூசி கைல் மெக்டொனால்டு ஆகியோருக்கு மகனாக, சியார்சியாவில் உள்ள கொலம்பசு நகரில் பிறந்தார்.[2] 1948 ஆம் ஆண்டில் டியூக் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த மெக்டொனால்டு 1951 ஆம் ஆண்டில் மின்னசொட்டா பல்கலைக் கழகத்தில் தன்னுடைய முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். எட்வார்டு பி.நெய் அவர்களின் மேற்பார்வையில் 1955 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். தனது ஆய்வறிக்கைக்காக அவர், அயனிக் கதிரியக்க அளவியால் தூண்டப்பட்ட முகிலறையுடன் வளிமண்டலத்திற்கு மேலே பலூன் பயணம் செய்தார். முதலண்டக் கதிர்வீச்சின் மின்சுமைப் பகிர்வுகள் குறித்த ஆய்வை இப்பயணத்தில் மேற்கொண்டார்.
அயோவா
1956 ஆம் ஆண்டு, அயோவா பல்கலைக்கழகத்தில் மெக்டொனால்டு தனது ஆராய்ச்சிப் பணியைத் தொடங்கினார். சேம்சு ஏ வான் ஆலனுடன் இணைந்து ராக்கூன் எனப்படும் சிறியவகை ராக்கெட்டுகளை பலூன்களின் உதவியால் 70000 அடி உயரம் வரை கொண்டு சென்றார். இவ்வுயரத்தில் ராக்கெட்டுகளைப் பற்றவைத்து மேலும் 3,50,000 அடி உயரம் வரை பறக்கச் செய்தார். அண்டக் கதிர்களையும் பூமியின் காந்தப்புலத்தில் சிக்கியுள்ள துகள்களை ஆய்வு செய்யவும் உதவும் கருவிகளை ராக்கெட்டில் பொருத்தி அனுப்பினார். இதே ஆண்டில், தனது ஆய்வறிக்கையை மேலும் மேம்படுத்த அயனிக் கதிரியக்க அளவியுடன் செரன்கோவ் உணரியையும் பலூனில் வைத்து அனுப்பினார். முதன்மை அண்டக்கதிர் வீச்சின் ஈலியம் உட்கருவின் ஆற்றல் நிழற்பட்டையை புதியதாக அளவிடுவதோடு மட்டுமின்றி விண்கலன்கள் எடுத்துச்செல்லும் பலவிதமான கருவிகளுக்கு இது முன்வடிவமாகவும் விளங்கியது..[3]
கோடார்டு விண்வெளிப் பயண மையம்
1959 ஆம் ஆண்டில், மேரிலாந்து மாநிலத்தில் உள்ள கிரீன்பெல்ட் நகரில் அமைந்துள்ள நாசாவின் புதிய கோடார்ட் விண்வெளிப் பயண மையத்தில் முதலாவதாக சேர்ந்த விஞ்ஞானிகளில் மெக்டொனால்டும் ஒருவர் ஆவார்[4] .அடுத்த 11 ஆண்டுகள் இவர் அங்கு ஆற்றல் துகள்கள் பிரிவின் தலைவராகப் பணிபுரிந்து அண்டக்கதிர் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அச்சமயத்தில், சர்வதேச கண்காணிப்புத் தளங்களாக சிறிய விண்வெளியூர்திகளுக்கான கருத்துரு கட்டமைப்பைத் தொடர்ச்சியாக வரையறுத்தார்.
1970 முதல் 1982 வரை உயர் ஆற்றல் வானியற்பியல் துறையின் கோடார்ட் ஆய்வகத்திற்கு மெக்டொனால்ட் தலைவராக செயல்பட்டார். எக்சு கதிர், காமாகதிர் மற்றும் அண்டக்கதிர் முதலியனவற்றை ஆய்வு செய்யக்கூடிய கருவிகளுடன் செல்லக்கூடிய செயற்கைக் கோள் திட்டத்தை வடிவமைத்தார். இவை மட்டுமின்றி சூரியக் குடும்பத்திற்கு வெளியே செல்லக்கூடிய ஆளில்லா விண்ணாய்விகள் தொடர்பான சோதனைகளிலும் ஈடுபட்டார். குறிப்பாக பையோனீர் 10, பையோனீர் 11, வொயேஜர் 1[5] மற்றும் வொயேஜர் 2[6] விண்வெளி ஆய்விகளை வடிவமைத்து, உருவாக்கி அவற்றில் அண்டக் கதிர்களை அளக்கும் கருவிகளைப் பொருத்தினார்.[7]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads