பிரிஞ்சாங்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரிஞ்சாங் (ஆங்கிலம், மலாய் மொழி: Brinchang) என்பது மலேசியா, பகாங், கேமரன் மலையில் உள்ள ஒரு நகரம் ஆகும். தாப்பா நகரில் இருந்து 62.5 கி.மீ. தொலைவிலும், கோலாலம்பூரில் இருந்து 209.8 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது. மலேசியாவில் மிக உயரமான மலைகளில் ஒன்றான பிரிஞ்சாங் மலை (2032 மீ), இங்கு தான் உள்ளது.[2] பிரிஞ்சாங் நகரின் பெயரே இந்த மலைக்கும் வைக்கப்பட்டது.[3]
கடல் மட்டத்தில் இருந்து 1,540 மீ. (5,050 அடி) உயரத்தில் இருக்கிறது. தானா ராத்தாவிற்கு அடுத்து சுற்றுப்பயணிகள் அதிகம் வருகை தரும் நகரமாகவும் இந்த நகரம் விளங்குகிறது. போ (BOH) தேயிலை நிறுவனத்திற்குச் சொந்தமான சுங்கை பாலாஸ் தேயிலைத் தோட்டம் இங்குதான் உள்ளது[4]
Remove ads
பொது
இங்கு நூற்றுக்கணக்கான மலர்த் தோட்டங்கள் உள்ளன. புகழ்பெற்ற கீ (Kea) மலர்த் தோட்டத்தில் ஆயிரக் கணக்கான மலர் வகைகளைக் காண முடியும். பிரிஞ்சாங் நகருக்கு மிக அருகாமையில் இருப்பது தானா ராத்தா நகரம். இரண்டு கி.மீ. தொலைவில் இருக்கிறது.
கேமரன் மலையில் உள்ள மற்ற நகரங்கள் ரிங்லெட், தானா ராத்தா, திரிங்காப், கோலா தெர்லா, கம்போங் ராஜா.
வரலாறு
எந்தக் காலகட்டத்தில் இந்த நகரம் உருவானது எனும் தகவல்கள் கிடைக்கவில்லை. இருந்தாலும் ரிங்லெட், தானா ராத்தா நகரங்கள் தோற்றுவிக்கப் பின்னரே இந்த நகரம் தோன்றி இருக்க வேண்டும். 1920-1930களில் தாப்பாவில் இருந்து தானா ராத்தாவிற்குச் சாலை வசதிகள் அமைக்கப்பட்ட பின்னரே, பிரிஞ்சாங் நகரத்திற்கு போக்குவரத்து வசதிகள் உண்டாகி இருக்க வேண்டும்.
பிரித்தானியர்களும், உள்ளூர் மக்களும் இங்கு குடியேறுவதற்கு முன்னர், பழங்குடி மக்கள் இங்கு வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. இங்கு செனோய் எனும் மலேசியப் பழங்குடியின மக்களில் சில நூறு பேர் இன்றும் வாழ்கின்றனர். அவர்களைப் பற்றிய சரியான புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை.
மலேசியப் பழங்குடியின மக்களில் மூன்று பெரும் பிரிவுகள் உள்ளன. அவற்றில் செனோய் (Senoi) என்பது மலாய் தீபகற்பத்தில் உள்ள ஒரு பிரிவினர் ஆகும். இவர்கள் தீபகற்ப மலேசியாவின் மத்திய பகுதியான பகாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களில் வாழ்கின்றனர்.
Remove ads
அமைவு
பிரிஞ்சாங் நகரம் மிக உயரமான இடத்தில் இருப்பதால், மூடுபனிகள் அடிக்கடி இந்த நகரை மூடிவிடுவது வழக்கம். குறிப்பாக, மழை பெய்ததும் மூடுபனிகள் நகரம் முழுமையும் மூடி நிற்கும். தொடுவானத்துடன் இணைந்து கலந்து நிற்பது போன்ற ஒரு பிரமையையும் ஏற்படுத்தும்.
பிரிஞ்சாங் நகருக்கு அருகாமையில் பல அழகிய குன்றுகள் உள்ளன. நகரின் மையப் பகுதியில் இருந்து பல குறுக்குப் பாதைகள் அந்த குன்றுகளுக்கு செல்கின்றன. குன்றுச் சரிவுகளில் எண்ணற்ற காய்கறித் தோட்டங்கள், மலர்ப் பண்ணைகள், பழத் தோட்டங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
பெரும்பாலான பண்ணைகள் பிரிஞ்சாங் முதன்மைச் சாலையின் நெடுகிலும் அமைந்துள்ளன. சுற்றுப் பயணிகளைக் கவரும் செம்புற்றுப் பழங்கள் (strawberry), கள்ளிச் செடிகள் பயிர் செய்யப்படுகின்றன. கள்ளிச் செடிகள் பள்ளத்தாக்கு (Cactus Valley), வேளாண்மைச் சுற்றுலா மையம் (Big Red Strawberry Farm) போன்றவற்றை எடுத்துக் காட்டாகச் சொல்லலாம்.[5]
சுங்கை பாலாஸ் தேயிலை தோட்டம்
போ (BOH) தேயிலை நிறுவனத்திற்குச் சொந்தமான சுங்கை பாலாஸ் தேயிலை தோட்டத்தில், பெருமளவில் தேயிலை உறபத்தி செய்யப்படுகிறது. பாரத் தேயிலை தோட்டத்தைக் காட்டிலும் இங்கு அதிகமான சுற்றுப்பயணிகள் வருகை தருகின்றனர். அதற்கு காரணமும் உண்டு. மலேசியாவில் அதிகமானோர் இந்த சுங்கை பாலாஸ் போ தேயிலையையே அதிகமாக விரும்பி நுகர்கின்றனர்.[6]
சுங்கை பாலாஸ் தேயிலை தோட்டம், பிரிஞ்சாங் நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவிலும் கீ பண்ணைச் சந்தையில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது. இந்தத் தோட்டம் 1929-இல் ஜே.ஏ. ரஸ்ஸல் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. மலேசியாவில் திறக்கப்பட்ட முதல் தேயிலை தோட்டமும் இதுதான். 1,200 ஹெக்டர் நிலப்பரப்பில் தேயிலை பயிர் செய்யப்படுகிறது.[7]
தட்பவெப்ப நிலை
பிரிஞ்சாங் நிலப்பகுதி மிதமான வெப்பச் சூழ்நிலையில், மிதவெப்பமண்டல தட்பவெப்ப நிலையைக் கொண்டது. ஆண்டு முழுமையும் மழை பெய்கிறது. சராசரி வெப்பநிலை 17.6 செல்சியஸ்.[8][9]
Remove ads
படத் தொகுப்பு
- பிரிஞ்சாங் நகரத்தின் ஒரு பகுதி
- பிரிஞ்சாங் நகரின் மையப் பகுதி
- 1950களில் பிரிஞ்சாங்
- சுங்கை பாலாஸ் தேயிலைத் தோட்டம்
- பிரிஞ்சாங் மலைக்காடு
- பிரிஞ்சாங் விவசாயத் தோட்டங்கள்
- நவீனமயமாகி வரும் பிரிஞ்சாங் நகரம்
மேற்கோள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads