புதிய கற்காலம்
மனிதரின் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு காலகட்டம். From Wikipedia, the free encyclopedia
Remove ads
புதிய கற்காலம் என்பது, மனிதரின் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு காலகட்டத்தைக் குறிக்கும். இக் காலகட்டமே கற்காலத்தின் இறுதிப் பகுதியாகும். இது, இடைக்கற்காலத்தை (Epipalaeolithic) அடுத்து, வேளாண்மைத் தொழில்நுட்பத்தின் எழுச்சியுடன் உருவானது. வேளாண்மைப் புரட்சியை உருவாக்கிய இக்காலம், செப்புக் காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம் ஆகிய காலப்பகுதிகளில் நிகழ்ந்த உலோகக் கருவிகளின் பயன்பாட்டின் அறிமுகத்துடன் முடிவடைந்தது. புதிய கற்காலம் எனும் சொல் சர் ஜான் லபாக் என்பவரால் உருவாக்கப்பட்டது.[1]


புதிய கற்காலம், பல்வேறு புவியியற் பகுதிகளில் வேறுபட்ட காலங்களில் நிலவியது. கி.மு 8500 இல் வளமான பிறை பிரதேசத்தில் இது காணப்பட்டது. இது, இப் பகுதியில் நிலவிய இடைக்கற்கால, நாத்தூபியன் (Natufian) பண்பாட்டிலிருந்து வளர்ச்சியடைந்தது. நாத்தூபியன் பண்பாட்டுக்குரிய மக்களே காட்டுத் தானியங்களை முதலில் உணவுக்காகப் பயன்படுத்தினர். இதுவே பின்னர் முறையான வேளாண்மையாக வளர்ச்சியடைந்தது. இதனால் நாத்தூபியன் பண்பாட்டு மக்களை முந்திய புதிய கற்காலப் (proto-Neolithic) பண்பாட்டினர் (கி.மு. 11,000-8500) எனலாம். நாத்தூபியர்கள் காட்டுத் தானியங்களில் தங்கியிருக்கத் தொடங்கியபோது, உடலுழைப்புக் குறைவான வாழ்க்கை முறை ஏற்பட்டது. உறைபனிக் காலத்தோடு தொடர்புடைய காலநிலை மாற்றம், அவர்களின் வேளாண்மை விருத்திக்குத் தூண்டியது. கி.மு. 8500 - 8000 அளவில், லெவண்ட்டில் உருவாகிய வேளாண்மைச் சமுதாயம், அனதோலியா, வட ஆபிரிக்கா, வட மெசொப்பொத்தேமியா ஆகிய இடங்களுக்கும் பரவியது.
புதிய கற்காலத் தொடக்கத்தில், வேளாண்மை பயிர்கள், காட்டுத் தானியங்களாயினும், நாட்டி வளர்க்கப்பட்டவை ஆயினும், குறைந்த அளவு வகையினவாகவே இருந்தன. இவை சில வகைக் கோதுமை, தினை, சாமை போன்ற தானியங்களை உள்ளடக்கியிருந்தன. கால்நடை வளர்ப்பிலும், செம்மறிகளும், ஆடுகளும் மட்டுமே வளர்க்கப்பட்டன. கி.மு. 7000 அளவில், இவற்றுடன், மாடுகளும், பன்றிகளும் சேர்க்கப்பட்டன. இக்காலத்திலேயே நிலையான அல்லது பருவ காலங்கள் சார்ந்த குடியிருப்புக்களும், மட்பாண்டங்களின் பயன்பாடும் தோன்றின. புதிய கற்காலப் பண்பாடு நிலவிய எல்லா இடங்களிலும், இதற்குரிய சிறப்பியல்புகள் ஒரே ஒழுங்கிலேயே தோன்றியதாகக் கூற முடியாது. அண்மைக் கிழக்குப் பகுதிகளின் வேளாண்மைச் சமூகங்களில், மட்பாண்டங்கள் பயன்படுத்தப்படவில்லை. பிரித்தானியாவில், புதிய கற்கால முற்பகுதியில், எந்த அளவுக்குப் பயிர் செய்தார்கள் என்றோ, நிலையான குடியிருப்புக்களுடன் கூடிய சமுதாயங்கள் இருந்தனவென்றோ நிச்சயமாகக் கூறமுடியாதுள்ளது. ஆபிரிக்கா, இந்தியா, தென்கிழக்கு ஆசியா போன்ற உலகின் ஏனைய பகுதிகளில், உள்ளூர் நிலைமைகளையொட்டியும், ஐரோப்பியப் பண்பாடுகளுடனோ அல்லது தென்மேற்கு ஆசியப் பண்பாடுகளுடனோ சம்பந்தப்படாமலும் புதிய கற்காலப் பண்பாடுகள் நிலவின. பண்டைய ஜப்பானியச் சமூகங்களில் மட்பாண்டப் பயன்பாடு இடைக் கற்காலத்திலேயே காணப்படுகின்றது.
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads