புர்க்கினா பாசோ

From Wikipedia, the free encyclopedia

புர்க்கினா பாசோ
Remove ads

புர்க்கினா பாசோ (Burkina Faso)[9] என்பது மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நிலம்சூழ் நாடு ஆகும். இது ஏறத்தாழ 274,200 சதுரகிமீ பரப்பளவைக் கொண்டது. இதன் எல்லைகளாக வடமேற்கில் மாலி, வடகிழக்கில் நைஜர், தென்கிழக்கில் பெனின், தெற்கில் டோகோ, கானா, தென்மேற்கில் கோட் டிவார் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. ஐக்கிய நாடுகள் அவையின் சூலை 2019 மதிப்பீட்டின் படி இதன் மக்கள்தொகை 20,321,378 ஆகும்.[10] முன்னர் மேல் வோல்ட்டா குடியரசு (1958–1984) என அழைக்கப்பட்ட இந்நாடு, 1984 ஆகத்து 4 இல் அரசுத்தலைவர் தோமசு சங்காராவினால் "புர்க்கினா பாசோ" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. வாகடூகு இதன் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும் ஆகும்.

விரைவான உண்மைகள் புர்க்கினா பாசோBurkina Faso, தலைநகரம் ...
Thumb
புர்கீனா பாசோவில் பாரம்பரியக் குடிசைகள்

இன்றைய புர்கினா பாசோவில் உள்ள மிகப் பெரிய இனக்குழுவானது 11 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளில் இப்பகுதியில் குடியேறிய மோசி இனத்தவர் ஆவர். இவர்கள் ஊகடோகோ, தெங்கோடோகோ, யாத்தெங்கா போன்ற பலம்வாய்ந்த இராச்சியங்களை நிறுவினர். 1896-இல், இது பிரான்சிய மேற்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியாக பிரான்சின் குடியேற்றநாடாக்கப்பட்டது. 1958 திசம்பர் 11 இல், மேல் வோல்ட்டா பிரான்சிய சமூகத்திற்குள் ஒரு சுயமாக ஆளும் குடியேற்ற நாடாக மாறியது. 1960 ஆகத்து 5 அன்று முழுமையான விடுதலை அடைந்து மோரிசு யமியோகோ அரசுத்தலைவரானார். இதன் ஆரம்ப ஆண்டுகளில், நாடு உறுதியற்ற தன்மை, வறட்சி, பஞ்சம் மற்றும் ஊழல்களுக்கு உட்பட்டிருந்தது. நாட்டின் வரலாற்றில் 1966, 1980, 1982, 1983, 1987, 1989, 2015, 2022 ஆம் ஆண்டுகளில் பல்வேறு இராணுவப் புரட்சிகளும் ஆட்சிக்கவிழ்ப்புகளும் நடந்துள்ளன. தோமசு சங்காரா 1982 முதல் 1987 ஆம் ஆண்டு பிலாசே கொம்போரே தலைமையிலான ஆட்சிக் கவிழ்ப்பில் கொல்லப்படும் வரை நாட்டை ஆண்டார். கொம்போரே 2014 அக்டோபர் 31 அன்று பதவியிலிருந்து நீக்கப்படும் வரை நாட்டை ஆட்சி செய்தார். சங்காராவின் தலைமையின் கீழ், அவர் நாட்டின் பெயரை புர்கினா பாசோ என்று பெயரிட்டார், அத்துடன் தேசிய அளவிலான எழுத்தறிவு பிரச்சாரம், விவசாயிகளுக்கு நிலம் மறுபங்கீடு, தொடருந்துப் பாதை, சாலைக் கட்டுமானம் மற்றும் சட்டத்திற்கு புறம்பான பெண் உறுப்பு சிதைப்பு, கட்டாயத் திருமணம், பலதுணை மணம் ஆகியவற்றை நீக்கல் உள்ளடக்கிய சமூக பொருளாதார திட்டங்களைத் தொடங்கினார்.[11][12][13][14][15][16][17]

2010களின் நடுப்பகுதியில் இருந்து இசுலாமியத் தீவிரவாத எழுச்சியால் புர்கினா பாசோ கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. "இசுலாமிய அரசு" (IS) அல்லது அல் காயிதாவுடன் ஓரளவு இணைந்த பல போராளிகள், மாலி, நைஜர் வரையிலான எல்லைகளைத் தாண்டி செயல்படுகின்றனர். நாட்டின் 21 மில்லியன் மக்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளார்கள். 2022 சனவரி 24 அன்று இராணுவமும் அதன் "பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்புக்கான தேசபக்தி இயக்கம்" அதிகாரத்தில் இருப்பதாக அறிவித்தது. முன்னதாக, அரசுத்தலைவர் ரோச் மார்க் கபோரேயிற்கு எதிராக இராணுவம் சதிப்புரட்சியை நடத்தியது.

16.226 பில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் புர்கினா பாசோ உலகின் மிகக் குறைந்த வளர்ச்சியடைந்த நாடாக உள்ளது. அதன் மக்கள்தொகையில் 63% இசுலாத்தையும், 22% கிறித்தவத்தையும் பின்பற்றுகிறார்கள். பிரான்சியக் குடியேற்றம் காரணமாக, நாட்டின் அரசு மற்றும் வணிக மொழி பிரான்சியம் ஆகும். புர்கினாவில் 59 பூர்வீக மொழிகள் பேசப்படுகின்றன, இவற்றில் மிகவும் பொதுவான மொழியான மூரே நாட்டின் 50% மக்களால் பேசப்படுகிறது.[18][19] நாடு நிறைவேற்று, சட்டமன்ற மற்றும் நீதித்துறை அதிகாரங்களைக் கொண்ட அரை-சனாதிபதிக் குடியரசாக ஆளப்படுகிறது. புர்கினா பாசோ ஐக்கிய நாடுகள் அவை, மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம், ஆப்பிரிக்க ஒன்றியம், பிரான்கோபோனி, இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது.

Remove ads

2022 இராணுவப் புரட்சி

2022 சனவரி 24 அன்று நடத்தப்பட்ட ஒரு வெற்றிகரமான இராணுவப் புரட்சியில், கலகம் செய்த இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து அரசுத்தலைவர் ரோச் மார்க் கிறித்தியான் கபோரே கைது செய்யப்பட்டார்.[20] இராணுவமும், அதன் "பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்புக்கான தேசபக்தி இயக்கமும்" (MPSR) லெப்டினன்ட் கர்னல் பால்-என்றி தமீபா தலைமையிலான[21][22] அதிகாரத்தில் இருப்பதாக அறிவித்தது.[23] இவ்வாட்சிக் கவிழ்ப்பிற்கு ஐக்கிய நாடுகளும் அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்தன.[24]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads