போடன்பிளாட் நடவடிக்கை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

போடன்பிளாட் நடவடிக்கை (Operation Baseplate, இடாய்ச்சு: Unternehmen Bodenplatte) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு வான்படைச் சண்டை. இது பல்ஜ் சண்டையின் ஒரு பகுதியாகும். இதில் நாசி ஜெர்மனியின் வான்படையான லுஃப்ட்வாஃபே வடமேற்கு ஐரோப்பாவில் நிறுத்தப்பட்டிருந்த நேச நாட்டு வான்படைகளை அழிக்க இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

விரைவான உண்மைகள் போடன்பிளாட் நடவடிக்கை, நாள் ...

மேற்குப் போர்முனையில் நேசநாட்டுப் படைகளை முறியடிக்க டிசம்பர் 16, 1944ல் ஜெர்மனி பல்ஜ் தாக்குதலை மேற்கொண்டது. ஆனால் இரு வாரங்களில் படை முன்னேற்றம் தடைபட்டு இழுபறி நிலை உருவானது. இந்த மந்த நிலையை மாற்றி தடைபட்ட தரைப்படை முன்னேற்றத்தை மீண்டும் தொடங்க ஜனவரி 1, 1945 அன்று லுஃப்ட்வாஃபே போடன்பிளாட் நடவடிக்கையை மேற்கொண்டது. பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளில் நிறுத்தப்பட்டிருந்த நேசநாட்டு வான்படைப்பிரிவுகளைத் தாக்கி அழித்து பல்ஜ் போர்முனையின் வான்வெளியில் வான் ஆதிக்கம் அடைவதே இத்தாக்குதலின் நோக்கம். மிக ரகசியமாக இத்தாக்குதலுக்கான ஆயத்தங்கள் நடைபெற்றதால், நேச நாட்டு உளவுத்துறைகளால் இது நடைபெறப் போகிறதென்று கண்டுபிடிக்கமுடியவில்லை. மேல்நிலை மற்றும் கீழ்நிலை உத்திகள் அளவில் இத்தாக்குதல் நேசநாட்டுப் படைகளை வியப்பில் ஆழ்த்தினாலும், நினைத்த இலக்குகளை அடைய முடியவில்லை.

இத்தாக்குதலில் லுஃப்ட்வாஃபே விமானங்கள் நூற்றுக்கணக்கான நேசநாட்டு விமானங்களை அவற்றின் ஓடுதளங்களில் அழித்தன. ஆனால் நேசநாட்டு விமான எதிர்ப்பு பீரங்கிகளால் ஜெர்மானிய விமானங்கள் பலவும் சுட்டு வீழ்த்தப்பட்டன. தாக்குதலுக்கான ஆயத்தங்கள் வெகு ரகசியமாக இருந்தபடியால் ஜெர்மானிய விமான எதிர்ப்பு பீரங்கிக் குழுமங்களுக்கும் தாக்குதலைப் பற்றிய முன்னறிவிப்பு செய்யப்படவில்லை. இதனால் லுஃப்ட்வாஃபே விமானங்களை எதிரி விமானங்கள் என்று தவறாகக் கருதி அவை தாக்கியதால், லுஃப்ட்வாஃபேக்கு மேலும் பல இழப்புகள் ஏற்பட்டன. எதிர்பார்த்தபடி பல்ஜ் போர்முனையில் லுஃப்ட்வாஃவேவினால் வான் ஆதிக்கம் பெற இயலவில்லை. நேசநாட்டு விமானங்கள் ஜெர்மானியத் தரைப்படைகளைத் தாக்குவது நிற்கவில்லை.

நேசநாட்டு விமானங்கள் ஓடு தளங்களில் நிறுத்தப்பட்டிருந்த போது அழிக்கப்பட்டதால், அவற்றின் விமானிகள் உயிர் தப்பினர். போரினால் பாதிக்கப்படாத நேசநாட்டு தொழிற்சாலைகள் எளிதில் புதிய விமானங்களைத் தயாரித்து இழப்புகளை ஈடுகட்டி விட்டன. ஆனால் போரினால் கடும் பாதிப்புக்குள்ளாகியிருந்த ஜெர்மானியத் தொழில் துறையால் லுஃப்ட்வாஃபே இழந்த விமானங்களுக்குப் பதில் புதிய விமானங்களைத் தயாரிக்க முடியவில்லை. மேலும், லுஃப்ட்வாஃபே விமானங்கள் நடுவானில் அழிக்கப்பட்டபடியால் உயிரிழந்த தேர்ந்த விமானிகளுக்கும் ஏனைய வான்படை வீரர்களுக்கும் பதில் குறுகிய காலத்தில் புதிய விமானிகளுக்கு ஜெர்மனியால் பயிற்சி அளித்து தயார் செய்ய முடியவில்லை. இத்தாக்குதல் மேல்நிலை உத்தியளவில் ஜெர்மனிக்குப் பெரும் தோல்வியில் முடிவடைந்தது. வெகுவாக பலவீனமடைந்த லுஃப்ட்வாஃபே இதற்குப் பின் போர் முடியும்வரை எந்தவொரு பெரும் தாக்குதல் நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

Remove ads

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads