மகாராட்டிரிப் பிராகிருதம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மகாராட்டிரி அல்லது மகாராட்டிரிப் பிராகிருதம் (Mahārāṣṭrī Prākṛta), என்பது பண்டைய மற்றும் நடுக்கால இந்தியாவில் வழங்கி வந்த ஒரு மொழியும் மராத்தி மற்றும் கொங்கணி மொழியின் மூதாதை மொழியுமாகும்.[6][2]

விரைவான உண்மைகள் மகாராட்டிரி, பிராந்தியம் ...

மகாராட்டிரிப் பிராகிருதம் பொ.ஊ. 875 வரை பொது மொழியாகப் பேசப்பட்டு வந்ததோடு,[1][2][3] சாதவாகன மரபின் அலுவல் மொழியாகவும் செயற்பட்டுள்ளது.[7] கர்பூரமஞ்சரி மற்றும் கக சட்டசை (பொ.ஊ.மு. 150) போன்ற படைப்புக்களும் இம்மொழியிலேயே எழுதப்பட்டன. சமண ஆச்சாரியரான ஏமச்சந்திரர் மகாராட்டிரிப் பிராகிருதத்தின் இலக்கண அறிஞராவார். மேற்கு மற்றும் தென்னிந்தியாவில் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட பிராகிருத மொழி மகாராட்டிரிப் பிராகிருதமாகும்.

Remove ads

வரலாறு

பிராகிருதங்களின் எழுச்சி பொ.ஊ.மு. இரண்டாம் ஆயிரவாண்டின் நடுப்பகுதியில் நிகழ்ந்ததாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் வேத சமசுகிருதமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப் பிராகிருத மொழிகள் பின்னர் நன்கு வளர்ச்சிபெற்ற இலக்கிய மொழிகளாக உருப்பெற்றன.[8] சமக்கிருதம் மற்றும் பிராகிருதம் ஆகியவற்றில் பழமையானது எது என்பதில் அறிஞர்களிடையே கருத்துவேறுபாடு உள்ளது. பிராகிருதங்களிலிருந்தே சமசுகிருத மொழி பிறந்ததாகச் சில அறிஞர்கள் வாதிடுகின்றனர்.[9] ராசாராம்சாசுதிரி எனும் சமக்கிருத அறிஞரின் கூற்றின் படி, மகாராட்டிரி சமசுகிருதத்திலும் பழையதும் மிகவும் துடிப்பானதுமான மொழியாகும்.[10]

பிராகிருத மொழியின் அறியப்பட்ட மிக முந்தைய இலக்கண அறிஞரான வரூச்சி, தனது "பிராகிருத-பிரகாசம்" (ப.ச.ரோ.அ: Prákṛta-Prakāśa) எனும் நூலில் நான்கு படலங்களை மகாராட்டிரிப் பிராகிருத இலக்கணம் பற்றி விவரிக்க ஒதுக்கியுள்ளார். ஏனைய புகழ்பெற்ற பிராகிருத மொழிகளான சௌரசேனி, அர்த்தமாகதி மற்றும் பைசாசி ஆகியவை ஒவ்வொன்றுக்கும் ஒரு படலமே ஒதுக்கப்பட்டுள்ளது.[11] தண்டி (புகழ் நிலை, 6ம்-7ம் நூற்றாண்டு) தனது காவியதரிசத்தில், பிராகிருத மொழிகளிலேயே மிகவுயர்ந்த நிலையை வழங்கியிருப்பதன் மூலம், மகாராட்டிரிக்கு வழங்கப்பட்ட இம் முன்னுரிமை உறுதிப்படுத்தப்படுகிறது.[9]

Remove ads

மக்கள்தொகையியல்

பிராகிருத மொழிகளிலேயே பெருமளவில் குறிப்பிடப்பட்ட மொழி மகாராட்டிரியாகும்.[12] இம்மொழி வடக்கே மால்வா மற்றும் இராசபுதனப் பகுதிகளிலிருந்து தெற்கே கிருட்டிணை ஆறு மற்றும் துங்கபத்திரை ஆற்றுப் பகுதிகள் வரை பேசப்பட்டுள்ளது. தற்போதைய மகாராட்டிராப் பகுதிகளில் மகாராட்டிரி மற்றும் ஏனைய பிராகிருத மொழிகள் தழைத்தோங்கியிருந்ததாக வரலாற்றாய்வாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.[1] மேற்கு இந்தியா மற்றும் தெற்கே கன்னட மொழி பேசும் பகுதிகள் வரையிலும் மகாராட்டிரி மொழி பரந்தளவில் பேசப்பட்டது.[13]

Remove ads

முற்கால இலக்கியங்கள்

"கக சட்டசை" எனும் நூல் ஆலன் (ஆட்சிக்காலம் பொ.ஊ. 20-24) எனும் மன்னனால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. கர்பூர மஞ்சரி, சிறீகரிவிசயம் மற்றும் 2ம் பிரவரசேனரால் எழுதப்பட்ட சேதுபந்தம் ஆகிய படைப்புக்கள் குறிப்பிடத்தகுந்த ஏனைய மகாராட்டிரிப் பிராகிருத மொழிப் படைப்புக்களாகும். வாக்குபதி, "கௌடவாகோ" எனும் தனது பாவை இம்மொழியிலேயே எழுதியுள்ளார்.[2][3] சமசுகிருத நாடகங்கள், குறிப்பாக புகழ்மிக்க நாடகாசிரியரான காளிதாசனின் நாடகங்களில், கீழ்-நிலையிலுள்ள பாத்திரங்களின் உரையாடல்கள் மற்றும் பாடல்களில் இம் மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது.[2]

அரசு ஆதரவு

பொது ஊழியின் முன்னைய நூற்றாண்டுகளில் சாதவாகன அரசமரபின் அலுவல் மொழியாக மகாராட்டிரி பயன்படுத்தப்பட்டுள்ளது.[14] சாதவாகனப் பேரரசின் ஆதரவினால், மகாராட்டிரி அக்காலப்பகுதியில் மிகப்பரவலாகப் பயன்படுத்தப்பட்ட பிராகிருத மொழியாக உருவெடுத்தது. மேலும், மூன்று "நாடகப்" பிராகிருத மொழிகளான, மகாராட்டிரி, சௌரசேனி மற்றும் மாகதி ஆகியவற்றுள் இலக்கியப் பண்பாட்டில் மிகுந்த செல்வாக்குச் செலுத்திய மொழியாகவும் இருந்தது. மகாராட்டிரியின் ஒரு வடிவமான "சைன மகாராட்டிரி", சமண நூல்களை எழுதப் பயன்படுத்தப்பட்டது.[சான்று தேவை]

Remove ads

மேலும் பார்க்க

  • மால்வானி கொங்கணி

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads