மகா சிவராத்திரி
இந்துக்கள் விழா, சிவனுக்கான விரதம் இருக்கும் ஒரு திருநாள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மகா சிவராத்திரி (Maha Shivaratri) இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். இதன் நோன்பு முறைகளைக் கூறும் நூல் மகா சிவராத்திரி கற்பம் என்னும் சிறிய நூல்.

உலகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிவராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அன்று ஒருநாள் இரவு சிவ பக்தர்கள் கண்விழித்திருந்து இறைவனை வழிபாடு செய்வார்கள். எனினும் இலங்கையின் கிழக்கே உள்ள திருக்கோணமலை மாவட்டத்திலுள்ள தென் கயிலை என்று போற்றப்படும் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் இவ்விழா ஆறு நாட்கள் இரவு கொண்டாடப்படுகின்றது. சிவராத்திரி இரவிற்கு மறுநாள் இரவு தொடங்கி ஐந்து நாட்கள் இரவு முழுவதும் கோணேஸ்வரர் (கோணநாதர்) அன்னை மாதுமையாளுடன் திருக்கோணமலை நகரை வலம் (நகர்வலம்/ஊர்வலம்) வந்து அருள் புரிவார். இரவு முழுவதும் திருகோணமலை மக்கள் கண் விழித்திருந்து எம்பெருமானை வரவேற்று பூரண கும்பங்களை வைத்து வழிபடுவர். இத்தினங்களில் திருகோணமலை நகரம் முழுவதும் வாழை, தோரணம், மாவிலை, நந்திக்கொடி முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்டு வர்ண விளக்குகளால் ஜொலிக்கும். எங்கும் சிவபெருமானின் பக்தி பாடல்கள் ஒலிக்கும். பட்டாசுகள் வானவேடிக்கைகள் நிகழ்த்தி இறைவனை வழிபடுவர். நடன, இசை நிகழ்ச்சிகளும் ஆங்காங்கே நடைபெறும்.
தென் தமிழகத்தில் குறிப்பாக கன்னியாகுமரி , நாகர்கோவில் போன்ற இடங்களில் சிவராத்திரி தினமன்று சிவனடியார்களால் சிவாலய ஓட்டம் நிகழ்த்தப்படும். அன்றைய தினம் அடியவர்கள் பன்னிரு சிவாலயங்களை கால்நடையாக ஓடி தரிசிக்கின்றனர். ஏறத்தாழ ஓரே நாளில் நூறு கிலோமீட்டரிற்கு மேலாக ஓடி இறைவனை வழிபடுகின்றனர்.
Remove ads
சிவராத்திரி விரத வகைகள்
சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.
- நித்திய சிவராத்திரி
- மாத சிவராத்திரி
- பட்ச சிவராத்திரி
- யோக சிவராத்திரி
- மகா சிவராத்திரி
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.
விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.
சிவாலயங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்ப பொருள்களைக் கொடுத்து உதவலாம்.
Remove ads
இவ்விரதம் பற்றிய ஐதீகங்கள்
இவ்விரத்தைப் பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன. ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் "சிவராத்திரி" என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடைய வேண்டும் என்றும் பிராத்தித்தார். இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார். அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப் பெற்றார்.
Remove ads
விரத காலங்களில் ஓதக் கூடிய தேவாரங்கள்
- திருக்கேதீச்சரப் பதிகங்கள்
- திருவண்ணாமலைப் பதிகங்கள்
- திருக்கோணேச்சரப் பதிகங்கள்
- கோயில் (சிதம்பரம்) பதிகங்கள்
- திருவாசகம் முற்றும் ஓதுதல்
உசாத்துணைகள்
- விரத விதிகள் - திருக்கேதீச்சரத் திருக்கோயில் மகாசிவராத்திரி மட பரிபாலன சபை, மன்னார். இலங்கை
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads